தமிழ் விக்கி, கடிதங்கள்

தமிழ் விக்கி 

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி அறிவிப்பு வந்தது முதல் நான் இணையத்தில் எழுந்த சழக்குகளை கவனித்துக்கொண்டிருக்கிறேன். என் பேராசிரியரிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அவர் சொன்னது இது. பெருஞ்செயல்கள் சாமானியர்களை மேலும் சிறியவர்கள் ஆக்குகின்றன. அவர்களால் அதை தாங்கமுடியாது. அப்பெருஞ்செயலை சிறிதாக்காமல் அவர்களால் ஓய முடியாது. ஆனால் தவளை கத்தி மலைகள் கரைவதில்லை. அதுவும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவர்கள் சிறியவர்கள் என்பதனால் கத்தாமல் இருக்கவும் முடிவதில்லை.

நான் சொன்னேன். ஐயா பெருந்தன்மைகளும் உயரிய உணர்வுகளும் நமக்கு வர இன்னும் ஒருநூற்றாண்டு ஆகலாம். ஆனால் குறைந்தது சிறுமைகளை பொதுவெளியில் மறைத்துக்கொள்வதையாவது நம்மாட்கள் கற்றுக்கொள்ளலாம் என்று. பேராசிரியர் சிரித்தார். (அவருடைய வாழ்த்தை அனுப்பியிருக்கிறேன்)

இரா.அறிவுடைநம்பி

***

அன்புள்ள ஜெ,

தமிழ் விக்கி -அறிவிப்பு தளத்தில் வந்ததும்  சிலிர்த்தது. தமிழ் இலக்கியத்திற்காக முன்னெடுக்கப்படும் மாபெரும் நிகழ்வு இது.

எப்போதும் ஆச்சர்யம் கொடுக்கும் ஒன்று, மிகப்பெரிய அமைப்பைக் கட்டமைக்கும் பெரும்பாலானோர், எந்த அமைப்பிற்கும் கொஞ்சம் வெளியே இருப்பவர்கள் என்பது. இன்றைய அரசியல்பட்ட தமிழ்ச் சூழலில் அரசு சார்ந்த ஒரு அமைப்பு இத்தகைய ஒன்றைத் தொடங்கி நடத்துவது கனவிலும் என்ன முடியாதது. ஏனென்றால் அது வரலாற்றையும், மொழியையும் அரசியல் சார்ந்தே புரிந்துகொள்கிறது.

“சேப்பியன்ஸ்” வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு எல்லா விலங்கினங்களைப் போலவே ஆப்ரிக்காவில் தோன்றிய “சேப்பியன்ஸ் மனித இனம்”, 70,000 ஆண்டுகளுக்கு முன் கிளைவிரித்து உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது “அறிவுப் புரட்சியின்” காரணமாக என்று “யுவால் நோவா ஹராரி” கூறுகிறார்.

மற்ற விலங்கினங்களைப் போலல்லாமல் “சேப்பியன் மனித” மூளை, மொழியைப் பயன்படுத்தி எப்போதும் இருந்திராத வழிகளில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதே காரணம் என்கிறார்.

அதிலும் இங்கு இருந்துகொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றிய தகவல்களைவிட தங்கள் ஒருபோதும் பார்த்திராத, தொட்டிராத மற்றும் முகர்ந்திராத விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு சேம்பியன்களால் மட்டுமே முடிந்தது, அதுதான் இந்த மனித விலங்கை மற்றைய விலங்கினங்களிலிருந்து வேறுபடுத்தி இழுத்துவந்தது என்கிறார். அதன்படி கற்பனைப் புனைவுகளையும், யதார்த்தத்தில் இல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுவது நாம் வெறுமனே கற்பனை செய்வதற்கு வழி வகுத்துள்ளதோடு நின்றுவிடாமல் நாம் எல்லோருமாகச் சேர்ந்து கூட்டாகச் செயல் படுத்துவதை உறுதி செய்துள்ளது என்கிறார்.

இந்தக் கருத்தின்படி கற்பனை நிறைந்த சமூகம் இயல்பாகவே மற்ற சமூகத்தைவிட  தன் திறனால் கூட்டக செயல்புரிந்து மேலெழுகிறது.இந்த நோக்கில் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளுமே சமூகத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். அவர்களே இந்த மாபெரும் சமூகக் கட்டுமானத்தின் பொறியாளர்கள்.

கற்பனையை உருவாகும் ஒரு கவிஞரும், இலக்கியவாதியும் அது சார்ந்த ஒவ்வொருவரும், ஒவ்வொரு செயலும் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் இங்கு பொறியாளர்களே சுமப்பவர்களாக இருக்கிறார்கள்.  பிரார்த்தனைகளையும் சிறிய கூழாங்கற்களையும்,  தனிமனிதனாக இயலும், அதையே செய்கிறோம்.

அன்புடன்,

சி. பழனிவேல் ராஜா.

***

முந்தைய கட்டுரைகிறிஸ்தவத்தில் சூஃபி மரபு?
அடுத்த கட்டுரைகோதுமை ஏற்றுமதிக்குத் தடை- கடிதம்