அடிப்படைகளில் அலைதல்-பதில்

அடிப்படைகளில் அலைதல்

அன்புள்ள சோழராஜா

உங்களுடைய நீண்ட கடிதத்தை ஒட்டி நீண்ட பதிலை எழுதவேண்டும் என்ற தேவை இல்லை என்று தோன்றியது. பொதுவாக மிக நீண்ட கடிதங்கள் கேள்விகளல்ல. அவை ஒருவகையான சிந்தனைத் தொடர்கள். கேள்வியில்  தொடங்கி இயல்பாக அவை ஒரு சிந்தனையில் சென்று முடிகின்றன. கண்டடைவில்லாத ஒரு நீண்ட பதிவிருக்க முடியாது ஒருவர்  எதன்பொருட்டேனும் ஓரிரு  ஆயிரம் வார்த்தைகளை எழுதிவிட்டார்கள் என்றால் அந்த ஆழ்ந்த தீவிரச் செயல்பாடு வழியாகவே அவர் சிலவற்றைக் கண்டடைந்திருப்பார்.

திரும்ப உங்கள் கடிதத்தை நீங்கள் படித்துப் பார்த்தால் அதிலேயே உங்களுக்கான தெளிவு திரண்டிருப்பதைக்காண முடியும். அதே கடிதத்தை இன்னொரு முறை எழுதினால் எவற்றை தவிர்ப்பீர்கள், எவற்றை வளர்ப்பீர்கள் என்று  பார்த்தாலே இது தெரியும். அதாவது அக்கடிதத்திற்கு மிகச்சிறந்த பதிலை நீங்களே எழுதிக்கொள்ள முடியும். ஆகவே அதனுள் புகுந்து நான் விவாதிக்க விரும்பவில்லை.

நான் மீள மீளச் சொல்லும் ஒன்றுண்டு. மனிதர்கள் தங்களுக்குள் ஆழத்தில் ஒரு சுயகண்டனத்தை கொண்டிருக்கிறார்கள். ஏனெனில்  அவர்கள் இங்கு வந்தது தின்று குடித்து உண்டு புணர்ந்து பெற்று வளர்த்து மறைவதன் பொருட்டு அல்ல. உலகியல் செயல்பாடுகளை மிகுந்த வெறியுடன் செய்பவர் எவராயினும் அதன் முடிவில் அவர்கள் வெறுமையைக் கண்டடைகிறார்கள். எந்த ஆன்மீகப் பயிற்சியும் இல்லாதவர்கள் கூட ஓர் உலகியல் செயல்பாட்டின் முடிவில் அந்த நிறைவின்மையை முன்வைத்து பேசுவதைப்பார்க்கலாம்.

உலகியலாளர்கள் அடிக்கடி சொல்லும் சில உணர்ச்சி வெளிப்பாடுகள் உண்டு ஒன்று, நான் செய்தவற்றுக்கு நன்றியில்லை. இரண்டு, என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இவ்விரண்டு வழியாகவுமே உலகியல் செயல்பாட்டில் அவர் அடைந்த வெறுமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். உலகியல் செயல்பாடுகளுக்கு இருக்கும் இந்த அடிப்படையான போதாமையை உணர்ந்தமையால் தான் அதில் ஈடுபடுபவர்கள் தொடர்ச்சியான அதிருப்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அதிருப்தியைத்தான் அவர்கள் பிறரிடம் வெளிப்படுத்துகிறார்கள்.

இரு வகையில் அதை வெளிப்படுத்துகிறார்கள் ஒன்று பிறரை மட்டம் தட்டி சிறுமைப்படுத்தி அதன் வழியாக  தனக்குத்தானே மேல் என்று நிறுவிக்கொள்கிறார்கள்.  பொருளியல் சார்ந்தும்  தோற்றம் சார்ந்தும் தன்னைவிட ஒருபடி கீழானவரைப் பார்க்கையில் பெரும்பாலானவர்கள் கொள்ளும்  ஒருவகையான மகிழ்ச்சி இந்த நிறைவின்மையின் வெளிப்பாடு மட்டுமே. இவரோடு ஒப்பிடும்போது நான் எவ்வளவோ பரவாயில்லை என்று அவர் சொல்லிக்கொள்கிறார். தனது ஆற்றாமையை அதனூடாக நியாயப்படுத்திக்கொள்கிறார். ஏனெனில் பொருளியலும் தோற்றமும் மறுக்கமுடியாதபடி புறவயமானவை.

ஆனால் அது அவருக்கு உண்மையில் நிறைவை அளிக்காது. ஏனெனில் அது பொய் என்று அவருக்கே தெரியும். உண்மையாக மகிழ்ந்து வாழும் ஒருவரைப் பார்த்தவுடன்  உலகியலாளன் ஆழ்ந்த சீற்றத்தைக் கொள்கிறான். உயர்ந்த உணர்வுகள் அவனை பதற்றமடையச் செய்கின்றன. தன்னுடைய வாழ்க்கையை ஆன்மிகமாக தெளிந்த உணர்வுகளுடன் அமைத்துக்கொண்ட ஒருவரை அவன் உள்ளூர வழிபடவும் வெளிப்படையாக கசந்து ஏளனம் செய்யவும் முற்படுகிறான். இந்த ‘வெறும்’ உலகியலாளர்கள் கொள்ளும் அவஸ்தையை ஒருவர் புரிந்துகொண்டால் மட்டுமே அவரால் உலகியலிலிருந்து விடுதலை பெற முடியும். ஒருவர் உங்களை ஏளனம் செய்கையில் தன்னை அவர் செயற்கையாக மேலே தூக்கி ஒரு மாபெரும் வெறுமையை ஈடுசெய்ய முயல்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்தாகவேண்டும். அப்போது அந்த ஏளனம் செய்யும் மனிதரை  ஒரு பரிதாபத்துக்குரிய மனிதரென்று உங்களால் புரிந்துகொள்ள முடியும். அவர் சற்று உளம் திறக்ககூடியவர் என்றால் உண்மையில் அவருக்கு நீங்கள் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை, அது அளிக்கும் நிறைவையும் மெய்யான மகிழ்ச்சியையும் அறிமுகம் செய்யக்கூட முடியும்.

ஆனால் அத்தகையவர்கள் நம் சூழலில் மிக அரிதானவர்கள். பெரும்பாலானவர்கள் மூடிய உள்ளம் கொண்டவர்கள். அவர்கள் மேல் என்றும் அனுதாபத்துடன் இருங்கள். அவர்கள் மேல் பிரியத்துடன் இருங்கள். ஆனால் அவர்களிடமிருந்து விலகியும் இருங்கள். உங்கள் கருணை உங்களை விடுதலை செய்யும். ஆனால் அவர்களிடமிருந்து விலகி நிற்கவில்லை என்றால் அவர்களின் ஆன்மிகக்கருகல் உங்களை பாதித்து கசப்பு கொண்டவராக ஆக்கிவிடும்.

எளிய மனிதர்கள். இத்தகைய பலவகையான பாவனைகள் நடிப்புகள் வழியாக ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நழுவிச்சென்று வாழ்க்கையை முடித்துவிட்டு செல்பவர்களே பெரும்பாலானவர்கள். அது அவர்களின் ஊழ் என்று மட்டுமே சொல்ல முடியும். மெய்யாக நுண்ணுணர்வும் அறிவுத்திறனும் உடையவர் தோற்றம் காரணமாகவோ செல்வம் காரணமாகவோ வேறு ஏதேனும் காரணமாகவோ அந்த உலகியலாளனின் மேலோட்டமான அற்பமான எதிர்வினைகளுக்கு எதிர்வினையாற்றி தன் பொழுதையும் சிந்தனையையும் வீணடிப்பார் என்றால் அவர் அந்த உலகியலாளனை விட மிகக்கீழானவர்.

ஏனென்றால் எதற்கு நீங்கள் எதிர்வினையாற்றினாலும் நீங்கள் அந்த எதிர்வினையாற்றப்படும் விஷயத்தையும் மனிதர்களாஇயும் விட ஒருபடி கீழாகத்தான் தெரிவீர்கள். எதிர்வினையாற்றும்போது எதிர்வினையாற்றப் படுவதைவிட மேலே செல்வதாக ஒரு பாவனை நமக்கு இருக்கிறது. அது உண்மை அல்ல. மிக உன்னதமான ஒன்றை நோக்கி எதிர்வினையாற்றுகிறீர்கள். அது நேர்நிலை எதிர்வினை என்றால் நாம் அதை நோக்கி மேலே செல்கிறோம். நம்மைவிடக் கீழான ஒன்றை நோக்கி எதிர்வினையாற்றினால் நாம் இருக்கும் நிலையிலிருந்து கீழே செல்கிறோம்..

இதை ஒவ்வொரு தருணத்திலும் எதிர்வினையாற்றிய பிறகு உருவாகும் எரிச்சலிலிருந்து நாமே உணர்கிறோம். நாம் ஆற்றிய எதிர்வினையை பிறகு நாமே படிக்கும்போது ஒவ்வாமையும் சிறுமையுணர்வும் கொண்டு நம்மை நாமே கசந்து கொள்கிறோம். நமது எதிர்வினைகளை நம்மால் அந்த உணர்வு நிலையிலிருந்து சற்று விலகிய பிறகு சற்றும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதுவே அந்த எதிர்வினை எத்தனை பயனற்றது மேலோட்டமானது என்பதற்கு சான்று.

ஒருவன் பிறருக்கு ஆற்றும் எதிர்வினைககளை ஒட்டியே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வான் என்றால் அவன் தன் வாழ்க்கையை தானே தோற்கடிக்கிறான் என்றே பொருள். ஒருவருடைய வாழ்க்கை அவருடைய அகம் சார்ந்தே முடிவெடுக்கப்படவேண்டும். அவருடைய தன்னிறைவு சார்ந்து நிகழ்த்தப்படவேண்டும். நீங்கள் அறிவியக்கத்தில் ஆர்வமும் திறனும் கொண்டவர் என்றால், கலை நுண்ணுணர்வு கொண்டவர் என்றால் ,உங்கள் பணியும் நிறைவும் முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தது மட்டுமே. அதற்கு இன்னொருவருடைய ஏற்போ, இன்னொருவர் அளிக்கும் இடமோ எவ்வகையிலும் தேவையானதல்ல. உண்மையில் இன்னொருவர் அளிக்கும் பாராட்டு கூட பெருமளவுக்கு பெறுமதி கொண்டது அல்ல.

அறிவியக்கவாதி தன் செயல்பாடுகளினூடாக தொடர்ந்து தன்னைத்தானே நிறைத்துக்கொள்ள முடியும். இங்கிருந்து பெற்று, தனக்குள் திரட்டி, தன்னுடைய பங்களிப்பை சேர்த்து அளித்துவிட்டு நிறைந்து அவன் மீள முடியும். இங்குள்ள பல்லாயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே அதற்கான அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் அமைந்துள்ளது. அதிலும் பல ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே அதை ஒட்டி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக்கூடிய பொருளியல் விடுதலையும் சமூக வாய்ப்பும் உள்ளது.  அத்தகைய ஒருவருக்கு வெளியிலிருந்து அளிக்கப்படுவது எதுவுமில்லை. நீங்கள் இரண்டும் உடையவர், அவ்வகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

உங்கள் அகவையில் அகவாழ்க்கை மிக முக்கியமானதாகத் தோன்றும் சரியான துணைவியைக் கண்டடைதல், குடும்பத்தை அமைத்துக்கொள்ளுதல் ஆகியவை சார்ந்து தத்தளிப்புகளும் கனவுகளும் இருக்கும். ஆனால் என் வரையில் அதிலுள்ள வெற்றியோ தோல்வியோ ஒரு அறிவியக்கவாதிக்கு இலக்கியவாதிக்கு எந்தவகையிலும் பொருட்டானது கிடையாது. அவற்றுக்கு அப்பால் தன்னில் ஊறி தானே நிரப்பிக்கொள்ளும் ஒன்றால் அவன் இங்கு வாழ்கிறான்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைகவிதை விதைத்தல்- பாலாஜி ராஜு
அடுத்த கட்டுரைபுகைப்படங்கள்