பத்மநாபனின் நிதியும் பொற்காலமும்

ஜெ,

அனந்த பத்மநாபனின் களஞ்சியம் வாசித்தேன்.

சைத்தானின் வக்கீல் என்று வைத்துக் கொள்ளுங்கள்.பிரிட்டிஷ் காரர்கள் வந்ததும்தான் இந்தியா நாகரிகம் அடைந்தது என்பது ஒரு மிகைப் படுத்தல் எனில் அதற்குமுன் இந்தியா சொர்க்கமாக இருந்தது என்பதும் ஒரு மிகையான மனச் சித்திரம் அல்லவா?இத்தனை நகைகளும் செல்வங்களும் போரினால் வரவில்லை எனில் அது இன்னும் மோசம் அல்லவா..அது மக்களை மிகுந்த வரிச் சுமைக்கு உட்படுத்தி அல்லவா பெறப் பட்டிருக்கவேண்டும்?

இந்தச் செல்வங்கள் எல்லாம் பஞ்சகாலப் பராமரிப்பு நிதியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும்  என்று உறுதியாகச் சொல்ல முடியுமா ..ஏனெனில் அது நாட்டின் சொத்தெனக் கருதப் படாமல் – ஏன் கோயிலின் சொத்துக் கூட இல்லை,தனிப் பட்ட நபர்களின் சொத்தாகவே அல்லவா கருதப்பட்டு ரகசியம் காக்கப் பட்டிருக்கிறது?நீங்கள் சொல்வது போல் கோயில் நகைகளை உருக்கிப் பஞ்சம் தீர்த்த வரலாறோ கதையோ அங்கோ வேறு பகுதிகளிலோ  உண்டா ?

BOGAN [GOMATHI SANKAR]

www.ezhuththuppizhai.blogspot.com

 

ஐரோப்பாவின் வழக்கறிஞருக்கு ,

1. அந்த நிதி ‘கடுமையான வரிகள் மூலம்’ பெறப்பட்டதல்ல. அதெல்லாம் வழக்கமான மனப்பதிவுகள். 1740ல் டி-லென்னாய் காலம் வரை திருவிதாங்கூரில் நிலவரியே கிடையாது. விளைச்சலுக்கே வரி கிடையாது. கடுமையான வரிகள் முழுக்க பிரிட்டிஷாருக்கு கப்பம் கட்ட ஆரம்பித்தபின்னர் வந்தவை.

2. இப்போது கிடைத்துள்ள நிதிக்குவையின் பொருட்களில் 70 சதவீதத்துக்கும் மேலானவை ஐரோப்பிய வணிகர்களிடம் இருந்து பெற்றவை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவர்களிடமிருந்து பெற்ற தங்கத்தால் செய்யப்பட்டவை. அவர்களிடம் செய்யப்பட்ட மலைச்சரக்கு வணிகமே இந்தச்செல்வத்தை உருவாக்கியது. 17 ஆம் நூற்றாண்டு முதல் கேரளத்தின் எல்லா அரசுகளும் முழுக்கமுழுக்க சுங்கப்பணத்தாலேயே வாழ்ந்தன என்பது வரலாறு.

3. இந்தச் செல்வங்கள் பஞ்சநிவாரணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு மதிலகம் ஆவணங்களிலும் முதலியார் ஆவணங்களிலும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. பஞ்ச காலங்களில் முழு வரிகளும் ரத்து செய்யப்படுகின்றன. மொத்த அரசு நிர்வாகமும் கையிருப்புச் செல்வத்தால் பஞ்சம் தீரும்வரை செய்யப்படுகிறது

4. பஞ்சகாலங்களில் கட்டுமானப்பணிகளை ஆரம்பிப்பதும் ஒரு நிவாரணப்பணியே.[கீய்ன்ஸ் கொள்கை என அது நவீன பொருளியலில் பேசப்படுகிறது] மூலம்திருநாள் காலகட்டத்தில் சுசீந்திரம் ராஜகோபுரம் அவ்வாறு ஒரு ‘வறுதி’ காலகட்டத்திலேயே கட்டப்பட்டது. சுசீந்திரம் கோயில் வைப்பு நிதி அதற்குச் செலவிடப்பட்டது. 1732ல்  கொள்ளைநோய் காலகட்டத்தில் காயங்குளம் கோயில் நிதி செலவிடப்பட்டிருக்கிறது. பலநூறு ஆவணங்களை இப்படிக் காட்டமுடியும்.

5 . தனிப்பட்டவர்களின் சொத்தாக இது இருக்கவில்லை. அரசாங்க சொத்தாக, அரசாங்க ரகசியமாகவே இருந்திருக்கிறது என்பது வெளிப்படை.

6. கண்டிப்பாக அந்தக்காலகட்டம் பொற்காலம் அல்ல. அது நிலபிரபுத்துவ காலகட்டம். நிலப்பிரபுத்துவ காலகட்டத்திற்குரிய ஆண்டான் அடிமை முறை அன்று நிலவியது. அது நேரடியான சுரண்டலேதான். மக்களில் பாதிப்பேர் நில அடிமைகளாகவே இருந்தார்கள். ஆனால் உலகம் முழுக்க நிலப்பிரபுத்துவம் அப்படித்தான் இருந்தது

7 ஆனால்  பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் மற்றும் மார்க்ஸியக் கோட்பாட்டாளர்கள்  சொல்வதைப்போல நம்முடைய நிலப்பிரபுத்துவம்,பின் தங்கிய உற்பத்தி முறைகளின் காரணமாக நோயுற்றுத் தேங்கி வறுமையில் கிடக்கவில்லை. ஐரோப்பிய நிலப்பிரபுத்துவம் உபரிச்செல்வத்தை உருவாக்கியது, அந்தச்செல்வம் தொழில்துறை முதலீடாக ஆகி அங்கே முதலாளித்துவம் வந்தது என்பது மார்க்ஸிய பாடம். ஆனால் இங்கே இருந்த  பின் தங்கிய நிலப்பிரபுத்துவம் உபரியை உருவாக்கவில்லை, ஆகவே இங்கே முதலாளித்துவம் உருவாகவில்லை, அதை பிரிட்டிஷாரே கொண்டுவந்தார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அது உண்மை அல்ல என்பதே இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து. இங்கே உள்ள நிலப்பிரபுத்துவமும் கணிசமான உபரிச்செல்வத்தை உருவாக்கியது. ஆனால் ஒரு வரலாற்றுத்தருணத்தில் பிரிட்டிஷாரிடம் தோற்றுப்போய் அவர்களின் சுரண்டலுக்கு அந்த உபரிச்செல்வத்தை கொடுக்கவேண்டி இருந்தது. அதன் விளைவாகவே இங்கே உள்ள நிலப்பிரபுத்துவ அமைப்பு தேங்கியது. இங்கே வறுமை உருவானது. இங்கே முதலீட்டுக்குச் செல்வம் இல்லாமலாகியது. முதலாளித்துவம் இங்கே முழுவீச்சில் உருவாகாமல் ஆகியது. நாம் பின் தங்கியவர்கள் ஆனோம்.

அதாவது பிரிட்டிஷார் இங்கே முதலாளித்துவத்தை கொண்டுவரவில்லை, அது உருவாவதை இருநூறாண்டுகள் தடுத்து வைத்தார்கள். அவர்கள் தங்கள் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய  உபரி செல்வத்தால் அல்ல,  இங்கே இருந்து கொண்டுசென்ற கொள்ளைச் செல்வத்தால்தான் தங்கள் முதலாளித்துவத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.

ஆக,பிரச்சினை அது பொற்காலமா,இது பொற்காலமா என்று அல்ல. பிரிட்டிஷார் வருவதற்கு முன்,நாம் பின் தங்கிய உற்பத்தி முறைகளுடன்  வறுமையில் வாடிக்கிடந்தோம் என்ற வழக்கமான பாடம் எவ்வளவு பெரிய பிழை அல்லது மோசடி என்பதுதான். அதற்கான அப்பட்டமான ஆதாரமே  பத்மநாபசாமியின் பொற்குவைகள்

ஜெ

 

[குழும விவாதத்தில் இருந்து]


ராஜராஜசோழன் காலகட்டம் பொற்காலமா?

பண்டைய இந்தியாவில் பஞ்சங்கள் இருந்ததா?

பசியாகிவரும் ஞானம்

மூதாதையர் குரல்

மார்க்ஸ் கண்ட இந்தியா

அள்ளிப்பதுக்கும் பண்பாடு

அள்ளிப்பதுக்கும் பண்பாடு கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைஅஞ்சலி, பிரேமானந்த குமார்
அடுத்த கட்டுரைகல்வி- கடிதம்