தமிழ் விக்கி, அதிகாரம்

தமிழ் விக்கி இணையப்பக்கம்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி ஓர் அதிகாரச் செயல்பாடு, அதன் நோக்கம் ஆதிக்கம் என்றெல்லாம் இங்கே பேசப்படுகிறது. (ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு எழுந்து வந்துகொண்டே இருக்கிறது) உங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.

ஆர். ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்

சரி, ஆதிக்கம் இல்லாத, அதிகாரம் இல்லாத ஏதாவது ஓர் அறிவுச்செயல்பாட்டைச் சொல்லுங்கள்.

அறிவுச்செயல்பாடு என்பதே ஒரு கருத்தின், ஒரு தரப்பின் ஆதிக்கத்தை உருவாக்குவதற்காகவே. அதன்பொருட்டே நீங்கள் எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள். யார் எங்கே எதைப்பேசினாலும்.

ஆனால் இது அரசியல் அதிகாரம் அல்ல. சமூக அதிகாரம் அல்ல. பொருளியல் அதிகாரம் அல்ல. அது அறிவதிகாரம் மட்டுமே.

அறிவுக்களத்தில் ஒவ்வொரு கருத்தும் வளரத் துடிக்கிறது. தன்னை நிறுவவும் பிறிதை வெல்லவும் முயல்கிறது. உயிர்க்களத்தில் ஒவ்வொரு உயிரும் அதையே செய்கிறது.

இவ்வாறு எல்லா கருத்தும் முயல்கையில் ஒட்டுமொத்தமாக ஒரு சமன்பாடு உருவாகிறது. அதுவே அந்த கருத்துப்பரப்பின் கட்டமைப்பாக ஆகிறது.  இதுவே எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ் விக்கி புதுமைப்பித்தன் மற்றும் க.நா.சுவின் வழிவந்த தமிழ்ச்சிற்றிதழ் சார்ந்த நவீன இலக்கியத்தின் தரப்பு. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் ஆய்வுமரபின் தரப்பு. அது நூறாண்டுகளாக இங்கே உள்ள ஒன்று. பல தலைமுறைகளாக வளர்வது.

அந்த மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இக்கலைக்களஞ்சியம் அமைகிறது. உலகிலுள்ள எல்லா கலைக்களஞ்சியங்களும் வெவ்வேறு அறிவியக்கங்களின் வெளிப்பாடுகளே. அறிவுத்தரப்பு இல்லாத கலைக்களஞ்சியம் என ஒன்று இருக்க முடியாது.

ஒரு கலைக்களஞ்சியத்தில் பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் இடம்பெற முடியாது. எவர் இடம்பெறவேண்டும் என்பதிலேயே மதிப்பீடும் தரப்பிரிவினையும் வந்து விடுகின்றன. அதில் எவர் மேல் என தீர்மானிப்பதில் மதிப்பீடு உள்ளது. க.நா.சுவின் இடம் வெங்கட் சாமிநாதனுக்கு இருக்க முடியாது. மறைமலையடிகளின் இடம் ச.பாலசுந்தரத்துக்கு இல்லை. அந்த அளவிலேயே பதிவின் அமைப்பு தீர்மானமாகிறது.

ஒரு கலைக்களஞ்சியத்தில் ஒருவர் ஏன் இடம்பெறுகிறார் என்பதன் காரணம் அப்பதிவில் இருக்கும். ஒருவரை எப்படி புரிந்துகொள்வது, அவருடைய இடம் என்ன என்பது கலைக்களஞ்சியத்தில் இருக்கும். எல்லாரும் அவர்கள் விரும்பியபடி சமமாக இடம்பெற கலைக்களஞ்சியம் என்பது லிங்கடின் தளம் அல்ல. நம்மில் பலர் கலைக்களஞ்சியங்களையே பார்த்தவர்கள் அல்ல.

ஆனால் அதற்கு மாற்றாக உள்ள எந்த தரப்பையும் அது மறைக்கவில்லை. எதையும் திரிக்கவில்லை. எதையும் அழிக்க முயலவில்லை. அவற்றை ஏற்று, விவாதிக்கிறது. தன் மதிப்பீட்டை முன்வைக்கிறது. மறுப்புகள் அறிவார்ந்தவை என்றால் அவற்றை பதிவுசெய்கிறது.

மாறாக சென்ற சில நாட்களாக எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு காழ்ப்பு வெளிப்படுகிறதென்று பாருங்கள். இதை அழிக்கவேண்டும் என முயல்கிறார்கள்; பதினெட்டு முறைக்கு மேல் ஹேக்கிங் முயற்சிகள் நடைபெற்றுவிட்டன. வெளிப்படையாகவே இக்குரல் அழியவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் களங்களில் சிற்றிதழ் சார் இலக்கிய மரபின் குரல்களை ஒடுக்குபவர்கள். படைப்பாளிகளை மறைப்பவர்கள். அவர்களை எதிர்க்காமல் சிற்றிதழ் சார் தரப்பு தனக்கென ஒரு தளத்தை உருவாக்கினால் அதை அழிக்கவேண்டும் என்கிறார்கள். நிகழ்ச்சிகளை சதிசெய்து தடை செய்கிறார்கள். அப்பட்டமாக அவதூறு கிளப்புகிறார்கள்.

எது ஃபாசிசம்? எது அதிகார வெறி? எது உண்மையான அறிவுச்செயல்பாடு? மனசாட்சி இருந்தால் யோசியுங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஇயற்கை, ஒரு தொகுப்பு
அடுத்த கட்டுரைமறைமலையடிகள், ஒரு தொடக்கம்