புகைப்படங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். வாஷிங்டன் டி.சி. மெட்ரோ பகுதியில் நடந்த தமிழ் விக்கி தொடக்க விழாவிற்கு வேறு பல மாநிலங்களிலிருந்து வாசக நண்பர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள். அவர்களில், ரஜினிகாந்த் அய்யாதுரையும் ஒருவர். பவாவும் ஷைலஜா அவர்களும் அமெரிக்கா வருவத்தைப்பற்றிய திட்டமிடல் கூட்டமொன்றில், அறிமுகமானார்.  புளோரிடா மாநிலத்தில் உள்ள இன்வெர்நெஸ்  எனும் நகரில் வசிக்கும் மருத்துவர். இலக்கியம் வாசிக்கும் இவர், தன்னுடைய வேலை கல்லுடைப்பது என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்புறம்தான் தெரிந்தது தான் சிறுநீரக மருத்துவராக வேலை பார்ப்பதை அப்படி சொன்னார் என்று.

அறம் நூலின்  வழியாக தங்களின் வாசகர் ஆனவர். உரையாடலின் ஊடே, தமிழ் விக்கி விழாவிற்கு வரும்படி அழைப்பை சொன்னேன். டிக்கெட் புக் செய்த கையோடு திரும்பவும் அழைத்து விழாவில் எனக்கு ஏதாவது வேலை சொல்லுங்கள், உதவுகிறேன் என்றார். உங்களுக்கு நன்றாக படம் எடுக்கத் தெரியுமா என்றேன். எனக்கு Photography ஹாபி என்றார். அப்படியா அது பெரும் உதவி  என்றேன். விழா நடக்கும் காலையில், நேராக வந்ததும் ஹலோ சௌந்தர் என்று கைகுலுக்கினார். அமெரிக்க மருத்துவர்களை கூகுளில் தேடி கண்டுபிடித்து அவர்களை பற்றிய விபரங்களும் புகைப்படங்களும் அறிந்துகொள்வதில் ஒன்றும் கஷ்டம் இல்லை. அப்படி நான் சேகரித்து வைத்த புகைப்பட புன்னகையுடன், நேரிலும் அதையே பார்க்க, ‘ஹலோ ரஜினி’ என்றேன். அவர் விழாவில் எடுத்த புகைப்படங்களின் கூகுள் டிரைவ் சேமிப்பில்  இங்கே.

அன்புடன்,
சௌந்தர்

முந்தைய கட்டுரைஅடிப்படைகளில் அலைதல்-பதில்
அடுத்த கட்டுரைகவுண்டர்?