வணக்கத்திற்குரிய ஜெ,
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். பல ஆண்டுகளாக உங்களின் எழுத்தை புத்தகங்கள் வாயிலாகவும், உங்களின் வலைத்தளத்தின் மூலமாகவும் வாசித்துக்கொண்டிருந்தவன் என்ற முறையில், இந்த கடிதம் மிக நீண்ட காலம் பிறகு உங்களின் கதவை தட்டுகிறது.
உங்களின் அமெரிக்க பயணத்தில் இருந்து வெவ்வேறு பயன் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு உங்களின் பார்வையில் அமெரிக்காவை பார்க்க ஆவலாக இருந்தேன். அதன் ஒரு பங்காக நார்த் கரோலினா முகாமிற்கு கூட பதிந்து வைத்து காத்திருந்தேன். இத்தனை நாள் உள்புகாத வைரஸ் இப்போது புகுந்து அதை கெடுத்துவிட்டது.
உங்களின் அமெரிக்கா! அமெரிக்கா! பதிவில் ஐசக் பாஷவிஸ் சிங்கர் பற்றி சொல்லியிருந்தீர்கள். நீங்கள் அறிந்த அமெரிக்கா அவர் வழியே அறிந்தது என்றும் சொல்லியிருந்தீர்கள். என்னை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்த அமெரிக்காவில் புரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது என எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன். எங்கு சென்றாலும் நான் பார்க்கும் பார்வையில் சிறிது மாற்றம் இருந்தது. அமெரிக்க மண்ணில் செழித்து வாழ்ந்து பிறர்க்கு நிலத்தை பறிகொடுத்த பூர்வகுடிகள் என் மனதுக்கு மிக நெருக்கமானவர்கள். இப்போதைய அமெரிக்கர்கள் செய்த மிகப்பெரிய நல்ல காரியமாக நான் நினைப்பது, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் அவர்களைப்பற்றி எடுத்துரைப்பது தான். அதன் படிநிலையில் இருக்கும் அரசியல் இன்னும் எனக்கு விளங்கியபாடு இல்லை. பூர்வகுடிகளும், அயல் நாட்டினரும் இந்த நாட்டிற்கு அளித்திருக்கும் கொடை இல்லாவிட்டால் எங்கே இருந்திருக்கும் இந்த நாடு என்ற கேள்வி எனக்கு எப்போதும் உண்டு.
சிங்கர் பற்றி கூறியவுடன் அவசர அவசரமாக அவரை தெரிந்துகொள்ள ஆவலானேன். மிக நெருக்கமாக உணர்ந்தேன். நியூயார்க் நகரம் செல்லும் போதெல்லாம் எல்லிஸ் ஐலண்ட் அருங்காட்சியகம் என் பார்க்கும் பட்டியலில் இடம் பெற்று விடும். மாபெரும் கடல் பயணத்தில் சுதந்திர கனவு பலிக்குமா பலிக்காதா என மருண்டு கொண்டிருந்த ஒவ்வொருவரின் காலும் பட்டிருந்த இடம் எல்லிஸ் ஐலண்ட். அவர்களுக்கு சுதந்திர தேவி கண்டிப்பாக ஒரு தெய்வ தரிசனம் தான். அந்த இடத்திலிருந்து தான் சிங்கரும் தரிசனத்தை கண்டிருப்பார். அவர் தொடர்பான டாகுமெண்டரியும், கதை () ஒன்றையும் படித்தேன். இன்னும் படிக்க வேண்டும் என்ற உத்வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உங்களின் இந்தப் பயணத்தில் மூலம் எனக்கு அமெரிக்க மேல் கொண்ட பார்வை இன்னுமின்னும் அடர்த்தியாகவும் விரிவாகவும் படரும் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து வரப்போகும் அமெரிக்க கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கொண்டிருக்கிறேன்.
நன்றியுடன்,
லக்ஷ்மண்
அன்புள்ள லக்ஷ்மண்
வழக்கமாக அமெரிக்கா வந்தால் பயணக்கட்டுரை எழுதுவதில்லை. ஏனென்றால் அது இன்று தமிழர்களுக்கு அந்நிய நாடு அல்ல. அவர்களில் ஒரு பகுதியினர் வாழும் நாடு. ஆகவே அறிந்தவற்றை திரும்பச் சொல்வதாக ஆகுமோ என ஐயம்.
அவ்வப்போது என் உளப்பதிவுகளாக பண்பாட்டுச் செய்திகளை சொல்வதுண்டு.
ஜெ