அன்புள்ள ஜெ
என்னுடன் விவாதிப்பவர்கள் அனைவரும் திரும்பத்திரும்பச் சொல்வது தமிழ் விக்கிக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்றுதான். நீங்கள் அமெரிக்காவில் நிதி திரட்டுகிறீர்கள் என்று சிலர் சொன்னார்கள். சிலர் ஏதோ கட்சிப்பணம் வருகிறது என்கிறார்கள். உங்களிடமிருந்து ஒரு வார்த்தை கேட்க விரும்புகிறேன்
எஸ்.விவேக்
***
அன்புள்ள விவேக்,
தமிழ்நாட்டில் இரண்டு ‘மாடல்கள்’ உண்டு. பல லட்சம் ரூபாய் நிதி வாங்கி ஆய்வுகளைச் செய்பவர்கள் பலருண்டு. தமிழ் என்றும் பெருமைகொள்ளும் அடிப்படை ஆய்வுகளைச் செய்த அ.கா.பெருமாள் பெரும்பாலும் எல்லா ஆய்வுகளையும் ஆசிரியர்ப்பணி புரிந்து அடைந்த சம்பளத்தில் சொந்தச்செலவில்தான் செய்திருக்கிறார். அச்சிடப்பட்ட நூல்களுக்காகக்கூட அவருக்கு பெரிய பணம் ஏதும் கிடைத்திருக்காது.
தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் பெரிய பணிகள் எல்லாமே மிகக்குறைவான தொகையில், பெரும்பாலும் சொந்தச் செலவில்தான் நடைபெற்றுள்ளன. முக்கியமான செயல்களுக்கு தொகை ஒரு பொருட்டே அல்ல. பலர் ஒத்திசைந்து செயல்படுவதொன்றே முதன்மையானது.
தமிழ் விக்கி இதுவரை மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் செலவுக்குள்தான் வெளிவந்துள்ளது. இணைய இடம் (டொமைன்) வாங்கிய செலவு மட்டும். அதுவும் ஒரே ஒரு நண்பரின் கொடை. விஷ்ணுபுரம் அமைப்பின் உறுப்பினர், நீண்டநாள் நண்பர். நான் சிறிது செலவிட்டிருக்கிறேன். எஞ்சிய எல்லா பணியும் நண்பர்களின் உழைப்புப் பகிர்வுதான்.
ஒருவேளை வருங்காலத்தில் இன்னும் சில லட்சங்கள் தேவைப்படலாம். நான் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அறக்கொடைகள் செய்யும் சினிமா எழுத்தாளன். எங்கும் எவரிடமும் எதையும் கேட்கவேண்டிய நிலையில் நான் இல்லை.
ஆனால் ஊர்கூடித் தேரிழுக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் விஷ்ணுபுரம் நண்பர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். ஆனால் இப்போதல்ல, செலவு வரும்போது.
எங்கள் அமைப்புக்கு இதுவரை எந்த நிறுவனத்தின் நிதியையும் பெற்றுக்கொண்டதில்லை. எங்கள் பெருங்கூட்டமைப்பின் நண்பர்கள் அளிக்கும் நிதிக்கொடையாலேயே இது இன்றுவரை நடைபெற்று வருகிறது. எங்கள் செயல்பாடுகளை பத்துமடங்கு பணமில்லாமல் இன்னொரு அமைப்பு செய்ய முடியாது.
ஜெ
பேரன்பிற்குரிய ஜெயமோகன்