தமிழ் விக்கி- வாழ்த்துகள்

தமிழ் விக்கி இணையம்

அ.முத்துலிங்கம்

எழுத்தாளர், கனடா

வாழ்த்துரை

’சிறியன சிந்தியாதான்’ என்று நாம் சொல்வதுண்டு. ஆனால் பெரியனவாகவே சிந்தித்து பெரியனவாகவே செயலாற்றுபவர்கள் சிலர் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்; ஆனால் அரிது. திரு ஜெயமோகன் அப்படியானவர். முதலில் விஷ்ணுபுரம் என்னும் நாவலை 25 வருடங்களுக்கு முன்னர் எழுதினார். ஆழ்ந்து அகன்ற உலகத்தரமான நாவல். அது கிளப்பிய அலை இன்னும் ஓயவில்லை, வருடா வருடம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. விமர்சகர்களால் இதுவரை அதன் நுனியை தொடமுடியவில்லை.

அடுத்து வெண்முரசு. மகாபாரதத்தை விரிவாக்கி  இணையத்தில் தொடராக  ஒருநாள்கூட இடைவெளிவிடாமல் தினமும் எழுதியது. 6 வருடம், ஏழு மாத சாதனை, 26,000 பக்கங்கள். உலகத்தின் மாபெரும் படைப்பு என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அவருடைய அடுத்த சாதனை உலகத்தரமான நூறு சிறுகதைகளை தொடர்ந்து நூறு நாட்களில் எழுதியது.

தமிழின் இன்றைய மிகப் பெரிய தேவை சுதந்திரமான, சகமதிப்பாய்வு கொண்ட தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கி, இலவசமாக  நிகழ்நிலை வழியாக  உலகத்துக்கு வழங்குவது. பல பல்கலைக்கழகங்கள் இணைந்து முன்னெடுக்க வேண்டிய பாரிய பணி இது. பெரிதாகவே சிந்தித்து, பெரிதாகவே செயல்படுத்துவதற்கு முற்றிலும் தகுதியானவர் திரு ஜெயமோகன். இவருடன் இணைந்து திரு அ.கா. பெருமாள், திரு நாஞ்சில் நாடன் மற்றும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் என பல்துறை சான்றோரும்  பணியாற்ற முன்வந்திருக்கிறார்கள். தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் ஆழமாகவும், அகலமாகவும் இருப்பதுடன் உண்மைத்தன்மை கொண்டதாகவும், காய்தல் உவத்தல் இன்றி நடுநிலை கலையாததாகவும்  இருக்கும். கட்டுரைகள் பல படிநிலைகள் தாண்டி, உண்மை சோதிக்கப்பட்டு, பலமுறை செப்பனிடப்பட்ட பின்னரே பதிவேற்றம் பெறும் என்பது உவப்பான செய்தி.

விக்கி தமிழின் ஆரம்ப நாள் இன்று 2022ம் ஆண்டு மே 7ம் தேதி என்று அனைவரும் குறித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு முடிவு தேதி கிடையாது; இது என்றும் வளர்ந்து கொண்டே இருப்பது. ஆகவே இதன் அடித்தளம் சரியாகவும் வலுவுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்பதாக அவரவர் துறைக்கு ஏற்ப தகுதியானவர்கள் இணைந்து செயலாற்றுகிறார்கள்  என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

இந்த இயக்கத்தில்  இணைந்திருப்பவர்கள் தமிழில் முழு ஈடுபாடும், அர்ப்பணிப்பும், செயல்திறனும் உயர் நோக்கும் கொண்டவர்கள். ’முள்ளும் நோவ உறாற்கதில்ல’ என்னும் புறநானூற்று வரிகளை நினைவூட்டுபவர்கள்.  இனிவரும் காலங்களில் விக்கி தமிழ் கலைக்களஞ்சியத்தில் முதன்மையான தமிழ் இலக்கிய நூல்கள், ஆசிரியர்கள், அமைப்புகள், பண்பாடுகள், வரலாறுகள்  பற்றிய பிழையற்ற தகவல்கள் ஆகியவற்றை  உலகத்தில் எங்கேயிருந்தும் எளிதாக இலவசமாக யாரும் பெற்றுக்கொள்ளலாம்  என்பது பெரும் பேறு.

தமிழ் ஆய்வாளர்களும் பெருந்தகைகளும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் இந்த மாபெரும் முயற்சி நிறுத்த முடியாத விசையாக பெருகி, என்றென்றும் நிலைத்து நின்று,  வெற்றிபெற  என் வாழ்த்தும் ஆசியும்.

அறம் நனி சிறக்க

அல்லது கெடுக.

நன்றி

I am moved and excited by the launch of Tamil wiki, a visionary enterprise which will be a blessing to all people who care about Tamil language and civilization, and who think of Tamil within the wide universal vision of humankind. It is an enterprise whose time has come. It is wonderful that Tamil wiki will be free for online usage, and that the quality of the entries will be peer-reviewed. The sample entry I have seen is lucid, informative, and elegant.

I am sorry i cannot be with you on this day of the launch, but please know that my feelings are entirely with you. I look forward to reading the first entries as they make their way onto the worldwide web. My congratulations and gratitude to all who are involved.

All my blessings,

David Shulman

தமிழ்ப் பண்பாட்டிற்குப் பங்களித்த எழுத்தாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் பற்றி பிழையற்ற அதிகாரப்பூர்வ தகவல்களைத் தொகுப்பதற்கான இணைய தமிழ்க் களஞ்சியத்தை உருவாக்கும் ஜெயமோகனின் முன்னெடுப்பு பாராட்டுக்குரியது. தமிழ் விக்கி சிறக்க வாழ்த்துகிறேன்.

முந்தைய கட்டுரைபாறை
அடுத்த கட்டுரைரப்பர் – வாழ்வும் மரணமும்