விஷ்ணுபுரம் அமைப்பில் பங்கெடுத்தல் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எப்படித் தொடங்குவது இந்த கடிதத்தை எனப்புரியவில்லை. அதீத அபிமானமும், ஜெயமோகன் என்கிற பிரமிப்பும் மனதில் இருக்கும் சொற்களைத் தடுக்கிறது. தங்களை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டாலும் தங்களை கடிதம் மூலம் கூட வந்தடைய ஏனோ ஒரு தயக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. துரோணரிடம் ஏகலைவனுக்கும் இப்படியொரு தயக்கம் இருந்திருக்குமோ என்னவோ?

புதுமைப்பித்தனின் ‘கடிதம்’ சிறுகதையும், அதையொட்டிய தங்களின் கருத்துகளையும் வாசித்தபிறகு, எழுத்தாளருக்கு வாசகம் எழுதும் கடிதத்தில் இலக்கியத்தரமோ, எழுத்தின் முதிர்வோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஒரு வாசகம் தன்னை செழுமைப்படுத்தும் குருவுடன் மனதோடு மனதாக உறவாடும் ஒரு கருவிதான் வாசக கடிதம் என்று புரிந்தபின், இம்முறை துணிந்து எழுதிவிடலாம் என முடிவெடுத்து எழுதுகிறேன்.

அறுபது வயது பூர்த்தியடைந்ததற்கு தங்களை வாழ்த்த நினைக்கவில்லை, தங்களின் ஆசீர்வாதம் வேண்டுகிறேன். பெருவாழ்வு வாழும் தங்களையும் அருண்மொழி அவர்களையும் ஒரு நாள் நேரில் சந்தித்தால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிட ஆசை. அறுபது வயது பூர்த்தியான ஆசிர்வாதங்களோடு, தங்களின் தமிழ் விக்கி எனும் அசாத்திய பெருமுயற்சி முழு வெற்றியடைய வாழ்த்துகள். முடிந்தால் நானும் அதில் அணிலாக இருக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு நாள் தூங்கியெழும்போதெல்லாம் தங்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கண்டு பிரமிக்கிறேன். மனிதனால் இதெல்லாம் சாத்தியமா என்ன? தங்களின் பார்வையும், தங்கள் நாவால் எமது பெயரையும் உச்சரித்தால் போதும், பேருவகை கொள்வேன். தங்களுக்கு முகஸ்துதி பிடிக்காது என அறிவேன், மன்னிக்கவும். நீண்ட நாள் வாசகன் தன் மனதிலிருந்து உரையாடும் முதல் கடிதம் என்பதால் ஏற்படும் பதட்டம். ஒரு அரசு செய்ய வேண்டிய முயற்சிகளையும் ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டியதையும் ஜெயமோகன் எனும் தனிமனிதன், அதுவும் இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியில். இதற்காகவே மீண்டும் வணங்குகிறேன்.

ஆரம்பநிலை பொழுதுபோக்கு வாசகனாக இருந்த காலத்தில் ஜெயமோகன் என்பவர் கடினமான எழுத்துகளுக்கு சொந்தமான மற்றொரு இலக்கியவாதி என்றளவில்தான் எண்ணியிருந்தேன். ஜெமோ முதன்முதலில் அறிமுகமானது “விசும்பு” மூலமாகத்தான். ‘ஐந்தாவது மருந்து’ படித்து அசந்துவிட்டேன். இப்படியும் கூட தமிழில் விஞ்ஞானக் கதையை எழுத முடியுமா எனும் மிரட்சி அடுத்த சில இரவுகளின் தூக்கத்தை காணாமல்போக செய்தது. அதன் பின் சில சிறுகதைத் தொகுப்புகள், தங்களின் இணையதளம், கட்டுரைகள், நாவல்கள், தனிமையின் புனைவுக்களியாட்டு சிறுகதைகள் என மெல்ல மெல்ல, அதே சமயம் ஆழமாக தங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன். விசும்பு, யட்சி, கந்தர்வன் போன்ற கதைகளில் இருக்கும் நாட்டாரியல் இந்த மண்ணின் மீதும் அதன் கலையிலக்கிய பண்பாட்டியல் மீதும் எழும் இலக்கியம் என்பது எத்தகைய அசுர சக்தியுடன் நம்மை ஆட்கொள்கின்றன என நினைக்கும்போது சிலிர்க்கிறது.

அ.முத்துலிங்கம் அவர்கள் ஒருமுறை தங்களைப்பற்றி இப்படி சொல்லியிருந்தார், ஒருவர் தன் வாழ்நாள் முழுதும் ஜெயமோகனை மட்டுமே வாசித்தால் போதும். வாழ்நாளின் பெரும் இலக்கியச் சுவையைப் பெற்றிட முடியும். அவர் சொன்னது மிகையல்ல, வாழ்நாள் முழுவதும் வாசிக்கும் அளவுக்கு தங்களின் படைப்புகள் அள்ள அள்ள வந்துகொண்டே இருக்கின்றன, அட்சய பாத்திரம் போல. அத்தனையும் உலகத்தரம் வாய்ந்தவை. இந்த உலகின் உச்சியில் இருந்து எல்லோருக்கும் கேட்கும்படி உரக்கச்சொல்ல வேண்டும், “பாருங்கள்! எங்களிடம் ஜெயமோகன் இருக்கிறார்” என்று.

ஆனால் மற்ற எழுத்துகளை வாசிப்பது போல தங்களின் புனைவை எடுத்தவுடனே வாசிப்பதில்லை. மிகுந்த நேரமெடுத்து, சிரத்தையுடன், புறத்திலும் அகத்திலும் எந்த சலனமும் இல்லாத பேரமைதிப் பொழுதாக பார்த்துதான் வாசிக்க விரும்புகிறேன். தங்களின் படைப்பை முழுவதுமாக உள்வாங்க, அதன் உலகத்துக்குள் மனதை முழுமையாக செலுத்த இந்த முறைதான் எனக்கு உதவுகிறது. வேலைப்பளு கூட காரணமாக இருக்கலாம். அதனாலேயே தங்களின் ஆகச்சிறந்த படைப்புகளுக்குள் பயணிக்க நான் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறேன். தெய்வ தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தனின் உணர்ச்சியுடனும் ஆவலுடனும்.

தங்களின் ஒன்றிரண்டு கருத்துகள் மீது வேறுபாடுகள் இருந்தாலும், தங்களைப் பற்றி நண்பர்களிடம் பேசாத நாள் இல்லை. சில சமயம் சலிப்புறும் நண்பர்கள், ‘அதெல்லாம் சரி, ஜெயமோகனை நேரில் சந்தித்தால் என்ன பேசுவாய்?’ என்று கேட்கும்போதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் சொல்வேன். ‘பேசுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. அவரிடம் உரையாடும் அளவுக்கு அறிவுத்தகுதியும் வந்துவிட்டதாய் எண்ணவில்லை. வேண்டுமானால் அவர் காலில் விழுந்து வணங்கி, அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு வந்துவிடுவேன். அவ்வளவுதான்’ என்பேன்.

எனக்கு இரண்டு ஆசைகள். ஒன்று, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இயங்குவது எப்படி? விஷ்ணுபுரம் இலக்கியக் கூட்டங்கள் எங்கெங்கு நடைபெறுகின்றன என்கிற தகவல்களைப் பெறுவது எப்படி? பெரிதாக பங்காற்ற முடியுமா தெரியவில்லை (ஆனால் நிச்சயம் ஏதோவொரு வகையில் பங்காற்ற முடியும் என நம்புகிறேன்), ஆனால் ஒரு பார்வையாளனாக இருக்க விழைகிறேன். ஏதோவொரு வகையில் அது தமிழுடனும் நவீன இலக்கியத்துடனும் தங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் உணர்வை அளிக்கும் என்றும் நம்புகிறேன். இரண்டாவது ஆசை, தங்களை நேரில் சந்திப்பது. நான் சென்னையில் வசிக்கிறேன். நீங்கள் அனுமதி அளித்தால், விரைவில் நாகர்கோயில் வருகிறேன், தங்களை தரிசிக்க.

என்னைப்பற்றி சொல்ல மறந்துவிட்டேனே. கவிஞர் ‘இசை’ எழுதிய அறிமுகப்பதிவில், “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். “அரசு மருத்துவமனையொன்றில் பார்மசிஸ்டாக இருக்கேன்” என்று பதில் சொன்னேன்.  “கவிஞனா இருக்கேன். பார்மசிஸ்டா வேலை செய்யறேன்னு சொல்லுங்க..” என்று அதிரடியாகச் சொன்னார் ஜெயமோகன்” என்றார். எளிமையாக இருந்தாலும் இப்படிச்சொல்ல எப்பேர்ப்பட்ட மனநிலை வேண்டும்? எழுத்தாளன் எனும் செருக்கு உடையவனால் மட்டுமே எழுத முடியும். அவனால் மட்டுமே இப்படிச் சொல்லவும் முடியும். அன்று முடிவெடுத்தேன், என்னுடைய அறிமுகம் இனி இப்படித்தான் இருக்க வேண்டுமென. என் பெயர் கார்த்திக். (கார்த்திக் ஸ்ரீநிவாஸ் எனும் இரட்டை எழுத்தாளர்கள்) எழுத்தாளனாக இருக்கிறேன், ஐ.டி ஊழியனாக வேலை செய்கிறேன். கார்த்திக் ஸ்ரீநிவாஸில் இருக்கும் ஸ்ரீநிவாஸ் என்னுடைய நண்பன். இருவரும் சேர்ந்தேதான் எழுதுகிறோம், எழுத்தாளர் சுபா போல. ‘கார்த்திக் ஸ்ரீநிவாஸ்’ என்கிற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுப்பும், மூன்று அபுனைவுகளும் எழுதியிருக்கிறோம். தவிர, சில இணைய இதழ்களில் அவ்வப்போது ஒருசில கதைகள், கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. மேலே எங்கெல்லாம் ஒருமையில் எழுதியிருக்கிறேனோ, அங்கெல்லாம் நீங்கள் கார்த்திக்-ஸ்ரீநிவாஸ் எனும் இரண்டு நபர்களைப் பொருத்திக்கொள்ளலாம். இருவருமே எழுத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள், நெருங்கிய நண்பர்கள். அதனாலேயே எழுத்திலும் இணைந்து பயணிக்கிறோம். இருவருமே ஜெயமோகனின் அதிதீவிர அபிமானிகள். அபுனைவு எழுதியிருந்தாலும் மனம் புனைவை நோக்கியே நகர்கிறது. ஒரு தரமான இலக்கியப்படைப்பைப் படைக்காத வரை எழுத்தாளன் என சொல்லிக்கொள்வதில் சிறு கூச்சம் கூட இருக்கிறது. புனைவில் சில திட்டங்களும் இருக்கின்றன, செயல் விரைவில்.

விரைவில் தங்களை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறோம். கடிதத்தை எப்படித் தொடங்குவது எனத்தெரியாமல் தத்தளித்தது போல, எப்படி முடிப்பது என்றும் தெரியவில்லை, முடிக்க மனமில்லாததால் தானோ என்னவோ. கடிதத்தை மீண்டும் படிக்கவில்லை, திருத்தும் பார்க்கவும் இல்லை. மனதிலிருந்து எழும் சொற்களை திருத்தும்போது அதன் உண்மைத்தன்மையை இழந்துவிடும் அபாயம் இருக்கலாம் எனும் அச்சம். தவறிருந்தால் மன்னிக்கம்.

என்றும் அன்புடன்,

கார்த்திக் (எ) கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

***

அன்புள்ள கார்த்திக்,

உங்கள் கடிதம் நிறைவளித்தது. ஆமாம், நாம் வாழ்க்கைக்கு எது வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் அது நாம் என நாம் ஒப்புக்கொள்ளக்கூடாது. நாம் நம்மை வரையறை செய்யவேண்டுமே ஒழிய பிறர் அல்ல.

விஷ்ணுபுரம் அமைப்பு எல்லாருக்கும் திறந்திருப்பது. ஆனால் இது அமைப்பு அல்ல. இது ஒரு நண்பர்கூட்டமைப்பு. இதில் இணைய ஒரே வழி நண்பர் ஆவது. இதிலுள்ள நண்பர்களுடன் தொடர்பு கொள்வது. பங்களிப்பாற்றுவது. எங்கள் நிகழ்ச்சிகளுக்கு வருக. எங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகேரளத்தில்
அடுத்த கட்டுரையசோதரை