திங்கள் மாலை

அன்புள்ள ஜெ,

அநேகமாக ஒரு மனிதன் இசையமைத்துக் கிடைக்கப்பெறும் பாடல்களில் மிகப்பழையதாக இருக்கலாம் இந்தப்பாடல். கரும்பு (1973) என்ற ராமுகாரியட்டின் வெளிவராத தமிழ்ப்படத்திற்காக சலில் சௌத்ரி இசையில் ஜேசுதாஸ், சுசிலா – டூயட் அல்ல, தனித்தனியாக – பாடியது. பாடலாசிரியர் இளங்கோவடிகள். ஷாஜியின் இசைக்கட்டுரைகளில் சலில்தா பற்றிய கட்டுரையை ஒன்றில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டிருந்தார். ‘திங்கள் மாலை வெண்குடையான்’ என்ற சிலப்பதிகாரத்தில் வரும் கானல்வரிப் பாடல். ‘கூகுளே’ஸ்வரனின் தயவில் இன்றும் கேட்கக் கிடைக்கிறது. முதல் அடியைக் கேட்டவுடனேயே பாடல் நினைவுக்கு வந்து விட்டது. புணர்தலுக்கும், புல்லுதலுக்கும் எந்த அர்த்தமும் தெரியாத காலத்தில், இலங்கை வானொலியில் கேட்டது நினைவுக்கு வர பாடலோடு சேர்ந்தே பாடினேன்.  சமீபகாலத்தில் இத்தனைமுறை எந்தப்பாட்டையும் கேட்ட நினைவில்லை. பெரும் சோகத்திற்குக் கட்டியம் கூறுவதுபோல அமைந்துள்ள ஜேசுதாஸின் குரல் பாடலைப் பலமுறை கேட்கவைத்து விட்டது.

ஜேசுதாஸ் பாடியது

‘இணைமெட்டை (obligato) திறமையாகப் பயன்படுத்துவது சலில்தாவின் முக்கியமான உத்தி. மைய மெட்டுக்கு எதிரான அந்த மெட்டு பல திசைகளில் பிரிந்து வளர்ந்து பாடலை ஒரு பின்னலாக மாற்றிவிடும்’  என்கிறார் ஷாஜி. ஒரு சரணம் விட்டு ஒரு சரணம் இருவேறு மெட்டுக்கள் பின்னிப்பின்னிச் செல்வதை இந்தப்பாட்டிலேயே காணலாம். நவவீனத்துவ இசையில் ஒலிக்கும் இந்தத் தமிழ்ச் செவ்வியல் பாடலின் ஆக்கத்தில் இளங்கோவடிகள் மட்டுமே தமிழர். பாடியவர்கள் ஜேசுதாஸ் – மலையாளம், சுசிலா – தெலுங்கு, இசையமைப்பாளர்  சலில் சௌத்ரி – வங்காளி. டி.எம்.எஸ் சின் ‘சின்னச் சின்ன மூக்குத்தியாம்’, ஜேசுதாசே பாடிய ‘அருள் வடிவே’ (எம்மதத்துக்குமான பக்திப் பாடல் இது), கமல் பாடிய ‘பன்னீர் புஷ்பங்களே…’ என்று பல பாடல்கள் நினைவுக்கு வந்தன.

சுசிலா பாடியது

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
நடந்தாய் வாழி காவேரி !

விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி !

(புலவாய் – சண்டையிட மாட்டாய், புல்லுதல் – கட்டியணைத்தல், ஒத்துப்போதல், புல்லார் – எதற்கும் ஒத்துவராதவர்)

புகழ் மாலை சூடிய திங்களைப் போல,புகழ்பெற்ற வெண்கொற்றக் குடையை உடையவன் சோழ மன்னன்.அவன்,தன் செங்கோலினைச் செலுத்திக் கங்கை நதியிடம் சென்று கூடினாலும்,நீ அவனை வெறுக்கமாட்டாய்,ஆகையால், காவேரியே நீ வாழ்க!

கயலாகிய கண்ணை உடையவளே!கங்கை என்னும் பெண்ணுடன் உன் கணவன்(சோழன்) சேர்ந்தாலும் நீ அவனை வெறுக்காமல் இருக்கக் காரணம்,உன் போன்ற மாந்தரின் பெருமைமிக்க உயர் கற்புநெறி என்பதை நான் அறிந்து கொண்டேன்.காவேரியே நீ வாழ்க!

பெருமை பொருந்திய புகழ்மாலையினை அணிந்த,வெண்கொற்றக் குடையை உடையவன் உன் கணவன்(சோழ மன்னன்).அவன் தனது வளையாத செங்கோலினைச் செலுத்திக் குமரியையும் கூடினான்.அதனாலும் நீ அவனை வெறுக்க மாட்டாய்.ஆதலினால்,காவேரியே நீ வாழ்க!

கயலாகிய கண்ணை உடையவளே!கன்னியாகிய குமரியுடன் சோழன் அவ்வாறு சேர்ந்தாலும்,நீ அவனை வேறுக்காதிருத்தல்,மாந்தரின் பெருமை வாய்ந்த கற்புநெறியால் தான் என்பதை நான் அறிந்தேன்.காவேரியே நீ வாழ்க!

ஆற்றினில் புதுப்புனல் கண்ட உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசையும்,மதகுதனில் நீர் நிறைந்து வடிகின்ற ஓசையும்,வரப்புக்களை உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும்,புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் மிகுதியாக இருபக்கமும் ஆர்ப்பரிக்க,நடந்து செல்லும் காவிரியே நீ வாழ்க!

நீ அவ்வாறு சிறந்து நடக்க,காவல் புரியும் வீரமறவர்களின் போர்முழக்கத்தை உடைய சோழனது ஆட்சி பயனே காரணம்.இதை நீ அறிவாயாக…காவேரியே,நீ வாழ்க!

‘ஆம்பளைகன்னா அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்க, நாமதான் சரிக்கட்டிக் கொண்டுபோகணும்’ என்று அந்தக் காலத்துக் கண்ணகிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்பிடிப்பட்ட ஆம்பளப் பயகளில் ஒருவனான கோவலன் மாதவியைப் பார்த்துப் பாடியது. ‘ சோழன் கங்கையோட சேந்தாலும், குமரியாத்தோட சேந்தாலும் காவிரி ‘கம்’ முனு கெடக்காளா, இல்லையா? அவல்ல புள்ள. பொண்ணுன்னா அந்த மாதிரி இருக்கணும்’ என்று மேற்கண்ட பாடல் மூலம் குறிப்புணர்த்த, இதிலிருந்து பிணக்கு ஆரம்பிக்கிறது. கோவலன் கண்ணகியிடம் திரும்புகிறான். இருவரும் மதுரைக்குச் செல்கிறார்கள்.பின்பு நடந்தது அனைவரும் அறிந்ததே

ஒரு பின்னொட்டு – திருச்சி தாயுமானவசுவாமி கோயிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் கோயில் செல்லும் வழியில் உள்ள குடைவரைக்கோயிலான ‘இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்’ என்ற முதலாம் மகேந்திரவர்மர்(கி.பி. 615-630) எழுப்பிய குடைவரையில் காவிரி தனக்குரியவள் (இளங்கோவடிகளின் பாதிப்பு?) என்று கவிநயத்துடன் குறிப்பிட்டுள்ளார் மகேந்திரவர்ம பல்லவர். சிவன் கங்காதரராக கங்கையைத் தலையில் தாங்கும் காட்சி இங்கு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. அருகிலேயே பதிப்பித்துள்ள கல்வெட்டில் காணப்படும் மகேந்திரவர்ம பல்லவரின் வடமொழிப் பாடலின் பொருள் பின்வருமாறு.

“நதி விரும்பியான சிவபெருமான், கண்ணுக்குக் குளுமையூட்டும்நீர்ப்பரப்பும், தோட்டங்களை மாலையாக அணிந்த நிலையும், நேசிப்பிற்குரிய பண்புகளையும் பெற்ற காவிரியால் கவரப்பட்டு காதல் கொண்டுவிடுவாரோ என்று அஞ்சித் தன தந்தையின் குடும்பத்தை நீங்கி இம்மலையில் நிரந்தரமாகத் தங்க வந்துள்ள மலைமகள், காவிரியைப் பல்லவ அரசரின் அன்பிற்குரியவளாக அறிவிக்கிறார்.” இப்படியாக மன்னராட்சியில் ஆரம்பித்த காவிரிச் சண்டை நிலவுடைமைச் சமூகம் தொடர்ந்து மக்களாட்சியிலும் தொடர்ந்து ஆயிரத்தைந்நூறு வருடங்களாக நடந்தேறி வருகின்றது.  இப்படிக் காலம் காலமாக வேறெந்த ஆற்றுக்காகவாவது சண்டையிட்டு வந்திருக்கிறார்களா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

முந்தைய கட்டுரைகலைச்சொற்களும் அனுபவமும்
அடுத்த கட்டுரைஇயற்கை, ஒரு தொகுப்பு