இரு அமெரிக்கக் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்

அன்புள்ள ரிச்சர்ட் டைலர், ஜோனதன் ரிப்ளி,

சென்ற 7-5-2022-ல் வாஷிங்டன் நகரில் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னோடியான தமிழ் மானுடவியல் ஆராய்ச்சியாளர் பிரெண்டா பெக், திருக்குறளையும் ஔவையாரையும் மொழியாக்கம் செய்த தாமஸ் புரூய்க்ஸ்மா, தமிழ் அறிவியலெழுத்தாளரும் அறிவியலாளாருமான பேராசிரியர் வெங்கட்ரமணன், நூலகர் சங் லியு ஆகியோர் கலந்துகொண்டார்கள்.  ஹார்வார்ட் பல்கலை தமிழ் பீடத்தின் வருங்கால தலைவி மார்த்தா ஆன் செல்பி, அ.முத்துலிங்கம், கமல்ஹாசன், டேவிட் ஷூல்மான் போன்றவர்கள் வாழ்த்து அனுப்பியிருந்தார்கள்.

உங்களை எங்கள் தமிழ்விக்கி அமைப்பு சார்பில் இவ்விழாவுக்கு அழைத்திருந்தோம். இத்தகைய ஒரு முயற்சியில் கல்வித்துறையாளர்களின் ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என்றும், எல்லா தரப்பும் வரவேண்டும் என்றும் விரும்பினோம். வருவதற்கு ஒத்துக்கொண்டபின் இறுதி நேரத்தில் வருவதாக இருந்த நான்குபேருமே ஒன்றாக வர மறுத்துவிட்டீர்கள். நீங்கள் உடல்நிலை சார்ந்த காரணத்தைச் சொன்னீர்கள். அது எங்கள் அமைப்புக்கு பெரிய நெருக்கடியை அளித்தது என்றாலும் முன்னிலும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம்.

தமிழ் விக்கி பக்கங்கள் உங்களுக்கு பார்வைக்கு அளிக்கப்பட்டன. அவை மிகச்சிறப்பாக உள்ளன என்று பாராட்டினீர்கள். அதன் அடிப்படையிலேயே வர ஒத்துக்கொண்டீர்கள். ஆனால் இங்குள்ள மிகச்சிறு அரசியல் சார்ந்த அதிகாரக்குழு ஒன்றின் கெஞ்சலுக்கோ மிரட்டலுக்கோ ஆட்பட்டு நிகழ்ச்சியை புறக்கணித்தீர்கள். அவர்கள் அதை இணையவெளியில் கொண்டாடினார்கள், அவர்கள் சொன்னவற்றில் இருந்தே இதை எழுதுகிறேன்.

நீங்கள் குறைந்தது இணையத்தில் நான் எவர் என்று தேடியிருக்கலாம். என் வாசகர்பரப்பும் நான் இளைஞர் நடுவே உருவாக்கும் செல்வாக்கும் என்ன என்று ஒரு சிறு புரிதலை அடைந்திருக்கலாம்.

உலகம் முழுக்க படைப்பிலக்கியவாதியின் இடம் என்பது கல்வித்துறையை விட ஒரு படி மேலானது. அதிலும் ஒரு மொழியில் ஒரு காலகட்டத்தின் முதன்மைப் படைப்பாளி என்பவன் அதன் வழிநடத்துநன். அதன் மதிப்பீடுகளை உருவாக்குபவன்.

படைப்பிலக்கியம் மீது அத்தகைய மதிப்பு இல்லாத கல்வித்துறையாளர்களை வெளியே நான் கண்டதில்லை. அந்த அறிதலை தமிழகக் கல்வித்துறையாளர்களிடம் பொதுவாக எதிர்பார்க்க முடியாது. அது இங்குள்ள ஒரு மாபெரும் வரலாற்றுரீதியான இடைவெளி. அது இருப்பதனால்தான் இங்கே இலக்கியம் மட்டுமல்ல, இலக்கிய ஆய்வும் எழுத்தாளர்களால் செய்யப்படுகிறது.

ஆகவே வரமறுத்த மற்ற இருவர் மேலும் எனக்கு எந்த மனக்குறையும் இல்லை, அவர்கள் இலக்கியத்தையோ இலக்கியவாதிகளையோ அறிந்திருந்தால்தான் வியப்படைந்திருப்பேன். கல்வித்துறை சமகால அறிவியக்கத்தை அறியாமல் புறக்கணிப்பதுபோல கல்வித்துறையை நாங்கள் புறக்கணிக்கலாகாது என்னும் ஒரே காரணத்திற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டனர்.

இந்த வரலாற்று இடைவெளி இருக்கும் காரணத்தால்தான் தமிழ் விக்கி போன்ற ஒரு தளம் படைப்பிலக்கியத்தில் செயல்படும் எழுத்தாளர்களால் உருவாக்கப்படுகிறது. படைப்பிலக்கியம் மீது மதிப்பு கொண்ட ஒரே கல்வித்துறை ஆய்வாளர் மரபு எஸ்.வையாபுரிப் பிள்ளை உருவாக்கியது. அம்மரபின் இன்று வாழும் முதன்மை அறிஞர்கள் தலைமையில் உருவாகும் கலைக்களஞ்சியம் இது.

நான் அமெரிக்க அறிவியக்கம் மற்றும் அமெரிக்கக் கல்வித்துறை மேல் பெருமதிப்பு கொண்டவன். எப்போதும் அதை வெளிப்படுத்தி வருபவன். தமிழ் விக்கி அமெரிக்காவில் வெளியிடப்பட்டதே அதனால்தான். அந்த உரையிலும் அதை குறிப்பிட்டேன்.

அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பயின்ற ஒருவருக்கு படைப்பிலக்கியத்தின் முக்கியத்துவம் என்ன, படைப்பிலக்கியவாதி என்பவனின் இடம் என்ன என்று தெரிந்திருக்கும் என்று நம்பினேன். அறிவியக்கத்தில் அதிகாரம் மற்றும் அமைப்புகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு மாற்றாக செயல்படும் எழுத்தாளர் இயக்கங்களுக்கு உள்ள பங்களிப்பு என்ன என்று தெரிந்திருக்கும் என்றும் எண்ணினேன். ஏனென்றால் நானறிந்த அமெரிக்கக் கல்விமுறை என்பது இன்று தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம்போல அதிகாரத்திற்கு அப்பால் நிலைகொள்ளும் மாற்றுச்செயல்பாடுகளுக்கு மேலும் கவனம் அளிப்பதாகவே உள்ளது.

அனைத்துக்கும் மேலாக ஒரு கல்வியாளர் என்பவர் எல்லாத் தரப்புக்கும் பொதுவானவர், ஆகவே அறிவுச்செயல்பாட்டைக் கொண்டே அவர் கொள்ளும் மதிப்பீடுகள் அமையும் என கருதினேன்.

அந்நம்பிக்கைகளைக் குலைக்கும் செயலாக நீங்கள் வருவதை தவிர்த்தமை அமைந்தது என்று தெரிவிக்க விரும்புகிறேன். பிரெண்ட பெக் வருகையும்  வாழ்த்தும், மார்த்தா ஆன் செல்பியின் வாழ்த்தும் அமெரிக்கக் கல்விநிலையங்கள் பற்றிய என் நம்பிக்கையை தக்கவைக்க உதவின. அதற்காக அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

இக்கடிதம் பொதுவெளியில் இருக்கும். என் எழுத்துக்களில் தொகுக்கப்படும். என் எழுத்துக்கள் எப்படியும் நூற்றாண்டுகளை கடந்து நிலைகொள்ளும். இக்கடிதமும் அந்த தொகுதிகளில் ஆவணமாக இடம்பெறவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

நன்றி

ஜெயமோகன்

தமிழ் விக்கி பதிவுகள்

பிரெண்டா பெக்

தாமஸ் புரூய்க்ஸ்மா

மார்த்தா ஆன் செல்பி

முந்தைய கட்டுரைபொறுப்பேற்றல் – கடிதம்
அடுத்த கட்டுரைபாறை