மு.வ- ஒரு கடிதம்

மு.வ ஒரு மதிப்பீடு

மு.வரதராசன் தமிழ் விக்கி

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

என் பெயர் துரைசாமி. எனக்கு வயது எழுபத்தி நான்கு. பொறியியல் கல்வி கற்று சுயதொழில்கள் செய்தவன். இன்று நான் தொழில் முனைவர் அல்ல. ஓய்வில் உள்ளேன்.

தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை இரண்டாயிரத்தி நான்கு காலகட்டத்தில் வாசித்ததில் இருந்து தங்களை நான் அறிவேன்.

பின்னர் தங்களது எழுத்துக்களை நான் அண்மைக் காலம் வரையில் வாசிக்கவில்லை. காணொளிகள் சாதாரண மனிதர்கள் வாழ்வில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் காலம் இது என்பதால் சிறுவயதிலிருந்து தமிழ் நாவல்கள் காண்டேகர் நாவல்கள் சரத் சந்திரர் நாவல்கள் தாகூர் நாவல்கள் இன்னும் பல புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற நாவல்கள் சோவியத்தை நாவல்கள் என தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்த என் வாழ்விலும் ரவி காரணமாகவும் தொழில் நெருக்கடிகள் காரணமாகவும் படிப்புக்கான இடைவெளி இருந்தது.

ஆனால் முகநூலில் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் செயல்பட்டதில்  தங்கள் பேரில் பலருக்கும் இருந்த வெறுப்பை கண்டு ஆச்சரியப்பட்டேன். அதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது இந்துத்துவ வெறி பிடித்தவர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவு சங்கி, தற்பெருமை பேசுபவர், பிற எழுத்தாளர்களின் எழுத்துக்களை மட்டும் தட்டுபவர் என்பவைதான்.

அப்படி தங்களுடைய எந்த எழுத்துக்களை வைத்துக்கொண்டு இவ்வளவு வெறுப்பு கொண்டுள்ளார்கள் என்பதற்காக தங்களுடைய இணையப் பக்கத்தில் உள்ள கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். நான் காந்தி மீது மிகப் பெருமளவில் பற்று வைத்துள்ளவன் என்றாலும் தாங்களே ஏற்றுக் கொள்ளாத வகையில் உள்ள அவருடைய  கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டவன் என இல்லை.

தாங்கள் காந்தி பற்றிய விருப்பு வெறுப்பற்ற அறிவுபூர்வமான வகையில் எழுதிய பல கட்டுரைகளையும் அறவழி சார்ந்து தாங்கள் எழுதியவற்றையும் அதிகமாகப் படிக்க படிக்க தங்கள் நிலை மீது நியாயபூர்வமான பார்வை கொண்டுள்ளேன்.

இந்துமத தத்துவங்கள் மீது பிடிப்பு உள்ளவராக தங்களை காணும் அதேவேளையில் இந்துத்துவ வெறியராகவோ, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவு நிலை கொண்டவராகவோ நான் எண்ணவில்லை. அறம்சார்ந்த மனிதராகவே நான் தங்களை மதிக்கிறேன்.

ஹிஜாப் பற்றிய தங்கள் கட்டுரை போன்றவை அந்த மதிப்பீட்டை உறுதி செய்கின்றன.

தங்கள் குறைகளை தாங்களே பட்டியலிட்டபடியும் அதற்கு மேலும் தற்பெருமை கொண்டவராகவும் அடுத்தவர் எழுத்துக்களை, தங்கள் பார்வையை சரி என கொண்டு, விமர்சனம் என்ற பெயரில் மட்டம் தட்டுபவராகவும் உள்ளவர் என்ற எண்ணம் நீடிக்கிறது என்பதை சற்று வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

நிற்க. முதன்முதலாக தங்களை தொடர்பு கொள்ள தூண்டியது மு.வ பற்றிய, அதிலும் முக்கியமாக அவரது நாவல்கள் இலக்கியத்தரம் கொண்டவை அல்ல என்ற விமர்சனம் பற்றிய கட்டுரைதான்.

இலக்கியம் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வாசிப்பு மகிழ் அனுபவம், சூழல் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய நுணுக்கமான விவரணைகள் போன்றவைதான் இலக்கியத்தரத்துக்கு முக்கியம் என்பது போன்ற பலரது வரையறைகள் என் வரையில் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. தாங்கள் அதற்கும் மேலும் சென்று உள்ளீர்கள். அவை பரிசீலிக்க வேண்டியவையாக கூட இருக்கலாம், ஆனாலும் வரையறைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

படிக்கும் மக்களுள் எவ்வளவு தாக்கத்தை மட்டுமல்ல எந்த விதமான தாக்கத்தை அந்த நூல்கள் ஏற்படுத்துகின்றன என்பதுதான் மிக முக்கியம் என நான் எண்ணுகிறேன்.

லட்சியவாத ஒழுக்கவாத நூல்களாகத் தங்களைப் போன்றோர் மு.வ நாவல்களை வகைப்படுத்தலாம், அவை உண்மையாகவும் இருக்கலாம் ஆனால் அவரது நாவல்கள் படிப்பவரின் மனதில் எந்த விதமான எண்ணங்களை விதைத்து அவரை அந்த அறநெறிகள் பால் சார்ந்து வாழ வேண்டும் என்ற உத்வேகத்தை அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அளித்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாங்கள் அறியாதவர் என நான் நினைக்கவில்லை.

இந்த 74 வயதில் நான் ஓரளவாவது அறநெறி சார்ந்து இயங்குபவன் என சிலராவது கொள்வார்கள் என்றால் அதற்குப் பெரும் காரணமாக இருப்பது காந்தியடிகளின் சொல் மற்றும் செயற்பாடுகள், மு.வ, காண்டேகர், சரத் சந்திரர் மற்றும் எண்ணற்ற இலக்கியவாதிகளின் எழுத்துக்கள், ஹிந்து பத்திரிக்கை போன்றவை தான் காரணம் என தயக்கமின்றி கூறுவேன்.

இறுதியில் நான் கூற வருவது, தாங்கள் போன்றோர் இலக்கியத்தரம் என்பது இவைதான் என்ற வரையறையை தயவு செய்து வகுக்காதீர்கள், அந்தத்தர மதிப்பீடுகளை ஒரு நல்ல வாசகன் வாசிப்பின் மூலம் சென்றடையட்டும் என்பதுதான்.

என்ன காரணத்தினாலோ தங்களுடைய கட்டுரைகளை படிக்க அதிக ஆர்வம் கொண்டுள்ள எனக்கு தங்களுடைய புனைவுகளை படிக்க ஆர்வம் ஏற்படவில்லை. தங்களுடையதை மட்டுமல்ல மற்றவர்கள் புனைவு எழுத்துக்களையும் சில காலமாகவே படிக்க மிகவும் தயங்குகிறேன்.

அண்மையில் நான் தங்களுடைய ‘தாயார் பாதம்’ என்ற நீண்ட சிறுகதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கதாபாத்திரங்கள் வடிவமைத்தல் சூழல் நுண் விளக்கங்கள் போன்றவற்றாலும் கதையின் மையக் கருத்தாகும் பெரிதும் கவரப்பட்டேன்.

தமிழ் விக்கி முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

தங்களுக்கு என் நன்றி.

தங்களது ஓய்வறியா உழைப்புக்கு இடையில் என்னை தொடர்பு கொள்ள முடிந்தால் மகிழ்வேன்.

ப. துரைசாமி.

***

அன்புள்ள ப. துரைசாமி

நான் நவீன இலக்கியத்தின் இயக்கமுறை என கருதுவது வாசகனை குலைத்து அதன் பின் அவனே தன்னை அடுக்கிக்கொள்ள வைத்து அவனுக்குரிய தெளிவுகளை அவனே கண்டடையச் செய்தல். மு.வ பாணி எழுத்துக்கள் வாசகனுக்கு அறிவுரை சொல்லி, அவனிடம் விவாதித்து அவனை நிலைகொள்ளச் செய்பவை. அவற்றின் அமைப்பு செயல்முறையில் அழகியல் சார்ந்த விமர்சனம் எனக்கு உண்டு. ஆனால் அவற்றின் முக்கியத்துவம் பற்றியோ, அவற்றின் பங்களிப்பு பற்றியோ ஐயம் இல்லை. மு.வ என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர்

ஜெ

  • குறிச்சொற்கள்
  • மு.வ
முந்தைய கட்டுரைஇரண்டின்மை, கடிதம்
அடுத்த கட்டுரைஉள்மெய்யின் ஒளியில்