ஜெயகாந்தனின் ரிஷிமூலம்

ரிஷிமூலம் குறுநாவல் வாசித்தேன்..

தங்களின் கவனப்படுத்தல் வழிதான் இந்த கதை ஜேகே எழுதியிருப்பதே எனக்கு தெரிய வந்தது. ரிஷிமூலத்திற்கு தாங்கள் எழுதிய வாசகர் கேள்வியொன்றுக்கான பதிலை இருமுறைகள் வாசித்தேன். ஆதி சங்கரர், சௌந்தர்ய லஹரியைப் பற்றிய தங்கள் எழுத்தையும் வாசித்தேன். நல்ல படைப்பொன்று வாசிக்க வழி செய்தமைக்கு நன்றி.

இன்றும், வருங்காலமும் உரையாட வாசிக்க உள்ளடக்கம் கொண்ட கதை இது. ஜேகேயின் மெய்யியல் தேடல் இக்கதை. யாரும் செல்ல தயங்கும் தளங்களுக்குள் பாய்ந்து ஜேகே எழுதிப் பார்த்தது இதுவென ரிஷிமூலம் பற்றி தாங்கள் கூறியுள்ளீர்கள்.

தங்களது ஏதோ ஒரு பயண கட்டுரையில், ஒரு சிற்பத்தை எப்படி ரசிக்கணும். எவ்வளவு நெருக்கத்தில் நின்று உள்வாங்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லிச் சென்று இப்படியாக அணுகும் போது அச்சிற்பம் நமது ஆழ்மனதில் அடைக்கலமாகும் என்பீர்கள் .அத்தகைய அதிர்ச்சியோடு, விழிப்போடு அம்பி தன் தாயின் முழு நிர்வாணத்தைக் காண்கிறான். அதனால்தான் அவனுக்குத் தொடர்ந்து உக்கிரமான தன் தாய் தொடர்பான அந்த கனவு வந்து கொண்டே இருக்கிறது. தனது தாய் இடத்தில் சாம்புவையரின் மனைவி. மாமி. இடம் பெறுவதெல்லாம் மனித மனதை அதன் அசுரப்பயணத்தைப் புரிந்து கொள்ள உதவும் இடங்கள்.

அவன் தன் தாயையும் ஒரு பெண்ணாகக் கண்டான். இப்போது எல்லா பெண்களையும் தன் தாயாகக் கருதுகிறான் என்பது அம்பி பெரிய பக்குவத்தை அடைந்ததை ஜேகே சொல்லும் பஞ்ச்.

அம்பி காவேரி கரையோரம் அமர்ந்து மசானத்து எரியும் பிணங்களில் தன்னையே காண்பது. ஓஷோ இப்படியொரு பயிற்சியைப் பரிந்துரை செய்திருப்பார். அதாவது தன் உடல் இறந்த பின் மயானத்தில் கிடத்தி எரிக்கப்படுவதை கற்பனையில் காண்பது.

நல்ல படைப்பொன்றை இனம் காட்டியமைக்கு நன்றி

முத்தரசு

வேதாரண்யம்

***

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி விழா – புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைஎழுதுக, இலவசப் பிரதிகள்.