“அகத்திறப்பின் வாசல்” – துரை. அறிவழகன்

“உண்மையே எழுத்தாளனின் தேடல்”

எனும் நித்ய சைதன்ய யதியின் வார்த்தையை தன் அகத்தில் நிறுத்திக்கொண்டு,  நம் சமகாலத்தின் பேராளுமை ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்ட நூல் “எழுதுக”.

வாழ்வாசான் நிலையில் இருந்து தங்களை வழிநடத்தும் ஆசிரிய மனதுக்கு நன்றிக்கடன் முயற்சியாக “தன்னறம்” நூல்வெளியால் அழகியல் செறிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நூல் இது.

படைப்பூக்க உணர்வுக்கு எதிரான தடைகளை கடந்து முன்னகரும் வாழ்வுப் பாதைக்கான திறப்பு இந்த நூலில் உள்ள ஜெயமோகன் அவர்களின் உரையாடல்கள்.

“எந்தப் புத்தகங்கள் உங்களை வழமைக்கு அதிகமாகச் சிந்திக்கத் தூண்டும்கிறதோ அவைகளே உங்கள் மீட்சிக்கு அதியுன்னதமாக உதவும். தன்னுள் ஆழ்ந்த ஒரு மாபெரும் சிந்தனையாளன்   இடமிருந்து நற்படைப்பென வருகிற நூலானது,  எளிமையும் உண்மையும் நிரம்பிய எண்ணங்களை உள்ளடக்கியிருக்கும். தத்தளிப்புகளின் முடிவிலி அலைகளிலிருந்து நம்மை ஒளிநோக்கி கரைசேர்க்கும் ஒரு மரக்கலம் அது” என்பது ‘தியோடர் பார்க்கர்’ அவர்களின் மொழி. ஜெயமோகன் அவர்களின் “எழுதுக” நூலினை இளம் படைப்பாளிகளுக்கு நற்படைப்பென வந்துள்ள மரக்கலம் என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு உரையாடல் பதிவுகளுக்கும் முன்னர் ஒரு அழகியல் ஒளிப்படம் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. உரையாடலின் அழகியல் மற்றும் கருத்தியல் சாரத்தை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளன இந்த ஒளிப்படங்கள். மொழிவாசிப்புக்கு முன்பாகவே பரவசத்தை கொடுத்துவிடுகின்றன இவைகள்.

அறுவடைக்கும் மறுவிதைப்புக்கும் இடையில் மண் மலரும் காலம் என்று ஒன்றுண்டு. இயற்கை வேளாண்மையில் அறிவுத்திறனுடன் விளங்கிய நம் முன்னோர்கள் அறிவார்கள் அக்காலம் குறித்து.

ஓரியூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது எனது தந்தையின் ஆதி கிராமம் ‘பண்ணவயல்’. பனங்கூந்தல் வண்டி உருட்டி விளையாடும் பொடிக் குருவி போன்ற சிறுமிகளையும்,  பொக்கைச் சிரிப்பும் பஞ்சு தலையும் கிளறிய வயக்காடு மாதிரி சுருக்கம் விழுந்த கிழவிமார்களையும் இந்த நாளிலும் பார்த்து வருகிறேன் அந்த நிலத்தில்  நான். நெஞ்சுக்கூட்டில் பழைய நினைவுகளை உள்ளடக்கியபடி நாழி ஓடுகளால் வேயப்பட்ட வீட்டில் சாய்ந்து உட்கார்ந்து இருக்கிறார் காயாம்புத் தாத்தா. அவருக்கு அருகில் இப்பொழுதும் நிலை குழையாமல் நின்றிருக்கின்றன நாங்கில்  மரக் கலப்பைகள்.  புளியங்குளம், செவலை,  குட்டை,  காரி என்று மாடுகள் நின்றிருந்த தொழுவம் வெக்கை குடித்து நிற்கிறது. மாடுகளின் கொம்புகளுக்கு இருந்த அதிசய சக்தி அறிந்திருந்த மூதாதையர் குரலோடு காற்றில் அசைகின்றன பனை மரச்சிரைகள்.  சூரியனின் கதிர்வீச்சை உள்வாங்கி அதனை பல்வேறு சக்திகளாக மாற்றி தன் பாதக் குளம்புகள் வழியாக மண்ணுக்குள் செலுத்தும் ஆற்றல் கொண்டவை மாடுகளின் கொம்புகள். அத்தகைய அபூர்வ சக்தி அளித்து வாசிப்பு மனதை மலரச் செய்யும் நூலாக உருக்கொண்டுள்ளது ஜெயமோகன் அவர்களின் “எழுதுக”.

“எழுது,  அதுவே அதன் ரகசியம்” எனும் சுந்தர ராமசாமி அவர்களின் சொல்லை வேர் நிலமாகக் கொண்டு கிளைபரப்பி நிற்கிறது இந்த நூலில் உள்ள கருத்துலகம்.

“இலக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த கதைத்திறன் வெளிப்படாத,  அதேசமயம் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்களுக்கும் அவற்றுக்கான மதிப்பு என்றும் உண்டு” என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். தொடக்கநிலை எழுத்தாளர்களுக்கு  ஊக்கம் கொடுப்பவையாக  அமைந்துள்ளது இந்த வார்த்தைகள். தயக்கம்,  தடைகளைக் கடந்து ஒரு இளம் படைப்பாளி  முன்நகர நம்பிக்கை அளிக்கும் ஊன்றுகோல்  ஜெயமோகனின் இக்கருத்து.

எதிர்காலம்,  சுய அடையாளம், அகவயத் தேடல் என பல்வகை பரிமாணக் கதிர்களை வாசிப்பு மனங்களுக்குள் பாய்ச்சுகிறது இந்த நூல்.

இலக்கியம்,  எழுத்து,  வாசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி வாழ்வியலின் சகல திசைகளையும் பேசுகிறது இந்த நூல்.  செயல் மூலம் அகச்சோர்வை கடத்தல் எனும் திசைவழியை தன் வாழ்வியல் அனுபவத்தை முன் வைத்து தெளிவுபடுத்துகிறார் ஜெயமோகன்.

இளம் தலைமுறைகளுக்கான இந்த நூலில் உள்ள ஜெயமோகனின் உரையாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஒளித்தெறிப்புகள். அலைஅலையாக அடுக்கப்பட்ட ஒளித்தெறிப்புகளால் நெய்யப்பட்ட மந்திரக் கம்பளம் “எழுதுக” எனும் நூல்.

“காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம். இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை முள்ளை அறிவால் எடுத்தபின் அதையும் வீசிவிட வேண்டும்” என்ற ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மொழியை அடியோட்டமாகக் கொண்ட “கல்வியழிதல்” எனும் உரையாடலே இந்த நூலின் உச்சம்.

“ஒரு நல்ல நூலின் முன்,  அறிஞனின் முன் நம் கல்வியை கொஞ்சமேனும் அழித்துக் கொள்ளாவிட்டால் நாம் எதுவும் கற்கப்போவதில்லை”.

விசால மனதுடன்,  முன்முடிவுகள் இன்றி “எழுதுக” நூலுக்குள் நுழையும் வாசகன் நிறைவுடன் வெளியேறுவான் என உறுதிபடச் சொல்லலாம்.

துரை. அறிவழகன்,

காரைக்குடி.

05-05-2022.

*

நூல் : “எழுதுக”

ஆசிரியர் : ஜெயமோகன்

வெளியீடு : தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி

அலைபேசி : 9843870059

www.thannaram.in

*

முந்தைய கட்டுரைபெரும்பணியில் இருத்தல்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி- நிதி