தமிழ் விக்கி, கடிதங்கள்

தமிழ் விக்கி இணையம்

காலத்தின் சொல்

உலகெங்கும் தமிழ் விக்கிக்கென தன்னார்வல உழைப்பால் இணைந்திருக்கும் தமிழ் பேராண்மைகளுக்கும்,  பேராசிரியர்களுக்கும், தொழில் நுட்பர்களுக்கும், தமிழிலக்கியப் படைப்பாளர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தகவல் சார்ந்த விவரணைகளும், நுண்குறிப்புகளும், கவனமாய் பதிவிடப்பட்ட தொகுப்புப் பட்டியல்களும்,  இன்னமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய சரியான தகவல்களுக்காய் காத்து நிற்கும் தொடர்முறையும், யாரும் தரும் சரியான தலைப்பு சார்ந்த குறிப்புகளுக்கான சரிபார் மின்னஞ்சல் தொடர்பும், பரந்து விரிந்தென நீள்முடிவிலி சமுத்திரமாய் காலத்தும் முன்நின்று கனப்பெரும் தமிழ் கலைஇலக்கியப் பண்பாட்டுப் பெட்டகமாய் வாழ்ந்தாகப் போகும் “தமிழ்விக்கி” வாழ்க!!! வாழ்க!!! சமரசமற்றத் தமிழ்த்தொண்டால் என்றும் உயர்ந்தே வளர்க!!!
ஒரு எழுத்தாளனாய் இப்பெரும் முயற்சியை முன்னெடுத்து,  சக உறுப்பினராய் தோழனாய் பங்காற்றி உழைக்கும் அன்பின் அன்ணன் ஜெயமோகனின் பணி “காலத்தின் சொல்” என என்றுமே நிலைக்கும்.

பின்குறிப்பு: யாராகினும், சரியான தகவல் குறிப்புகளுக்காகவும், சொல், பொருள், எழுத்து திருத்த முறைமைகளுக்கென காத்து நிற்கும் தரமான பொறுப்புக்குழு என்பதற்காய் இந்தச் சிறு உதாரணம் இணைப்பில் -: தமிழ்விக்கி உள்ளே அ.கா.பெருமாள் பற்றிய சுயகுறிப்பில்,  ‘விருதுகள்ள்’ என சிச்சிறு தட்டச்சுப்பிழையை தமிழ்விக்கி தொடர்பு மின்னஞ்சல் மூலம் சுட்டிக்காட்டிய சில மணித்துளிகளில் திருத்தம் செய்யப்பட்டு வலையேற்றி மறுபதிலும் வந்தது. நன்றி தமிழ்விக்கி உழைப்பே! திறந்த கதவெனெ, பொறுப்பான நுழைவுடன்,  தரம் திறன் தெரிவில் சரிபார்த்து முடிவிடும் தமிழ்விக்கியின் பணி மென்மேலும் உயரட்டும். தமிழ் கலை இலக்கியப் பண்பாட்டின் மின்வெளிக் கல்வெட்டாய் உயர்ந்து ஓங்கட்டும். நன்றி நன்றி நன்றி தமிழ்விக்கி!!!

நெப்போலியன் சிங்கப்பூர்

***

அன்புள்ள ஜெ,

தமிழ் விக்கி தளம் என்பது மிகப்பெரிய சாதனை. வாழ்த்துகள். பக்கங்களை வாசித்துக் கொண்டே இருக்கிறேன். என் வழக்கப்படியே ஜெயகாந்தனில் தொடங்கினேன். என்ன சொல்வது? என் மனம் மலர்கிறது. அத்தனை விவரங்களையும் முழுமையாக அளித்துள்ளீர்கள். ஜெயகாந்தனின் அரசியல் ஆன்மீகம் இலக்கியம் என எல்லா தரப்பும் மிக விரிவாக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. மகத்தான பணி. தமிழ் விக்கியை வாசித்தாலே தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். உண்மையில் இன்றுள்ள புதிய வாசகர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. நான் என் இளமையில் இலக்கிய புத்தகங்களையும்,  எழுத்தாளர்கள் பற்றிய சிறிய குறிப்புகளையும் தேடி அலைந்திருக்கிறேன். தி.ஜா, கிரா, சுந்தர ராமசாமி, மௌனி ஜேகே  என்றெல்லாம் யாராவது பேச மாட்டார்களா என அலைபாய்ந்திருக்கிறேன். எனக்கு அன்று அப்படி யாரையும் தெரியவில்லை. பல எழுத்தாளர்களுக்கு வாசித்து விட்டு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அது மட்டும் தான் முடிந்தது.

இன்று இத்தனை விரிவான இலக்கிய தளத்தைக் காண்கையில் என் உள்ளம் பொங்குகிறது. அற்புதமான பணி. இதனைத் தொடங்கிய உங்களையும் இந்த உன்னத பணியில் பங்காற்றிய அனைவரையும் வணங்குகிறேன்.

வழக்கம்போல இப்பணியினை கேலி செய்யும் பதிவுகளையும் பார்க்கிறேன். செய்யட்டுமே.அதுவே அவர்களால் இயன்றது.

இந்த மாபெரும் பணியின் இடம் தமிழ் இலக்கியத்தில் முதன்மை பெறும்.

அன்புடன்

மோனிகா மாறன்.

***

முந்தைய கட்டுரைஅந்த ஆள்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி: மகத்தான அறிவியக்கம்