நண்பர்கள் நடுவே பூசல்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் காதலைப் பற்றியும் நட்பைப் பற்றியும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.  உள்ளுணர்ச்சி சொல்வது பெரும்பாலும் சரியே. ஏனெனில் அது தர்க்கம் செய்வதில்லை.

ஒரு கேள்வி.அருமையான நண்பர் குழாமுடன் பயணங்கள் மேற் கொள்ளுகிறீர்கள். பல சந்திப்புகளை நடத்துகிறீர்கள்.‌ உங்கள் நண்பர்களிடையில் கருத்து மோதல்கள், மனப் பேதங்கள், பூசல்கள் வரூம் போது அவை ஒருவேளை பெரிதாகும் போது எப்படி சமாளிக்கிறீர்கள்? தீர்த்து வைக்கிறீர்கள்?

அன்புடன்

எஸ். கணேஷ்

***

அன்புள்ள கணேஷ்

நண்பர்களுடனான உறவு எந்த ஓர் அமைப்பிலும் முற்றிலும் சிக்கலான ஒன்று. ஓர் அறிவார்ந்த அமைப்பில் மேல்-கீழ் எனும் அடுக்கு இருக்க முடியாது. அனைவருமே தங்களுக்கென தனிச்சிந்தனையும் தனித்துவமான ஆளுமையும் கொண்டவர்கள். சாதாரணமாக நீண்டகால வாசிப்புக்கு பிறகுதான் ஒருவர் என்னுடைய எழுத்துகளுக்கு வந்து சேருகிறார். இயல்பாகவே அவருக்கு முன்னரே தெளிவான இலக்கியக் கொள்கைகளும் அரசியல்கொள்கைகளும் உருவாகியிருக்கும்.

என்னுடைய வாசகர்கள் நண்பர்களிலும் இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்கள், இந்துத்துவ அரசியல்சார்பு கொண்டவர்கள், தீவிரமான திராவிட இயக்க ஆதரவு கொண்டவர்கள் என மூன்று தரப்பினருமே உள்ளனர். மத அடிப்படையிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், இந்துக்கள் என மூன்று தரப்பினரும் விஷ்ணுபுரம் அமைப்பின் முதன்மைப் பங்களிப்பாளர்களாக இருக்கிறார்கள். ஆகவே ஓர் ஒத்திசைவின் அடிப்படையில்தான் இது செயல்பட முடியும்.

இந்த வகையான அமைப்புகளின் அடிப்படை என்பது அவற்றை ஒருங்கிணைத்து நிறுத்தும் விசை என்ன என்பதுதான். அந்த விசை அவ்வமைப்பின் நோக்கத்தில் இருந்து எழுவது. அதிகாரம் சார்ந்த அமைப்புகளுக்கு அந்த அதிகாரமே நோக்கமாகிறது. ஒருவர் ஓர் அரசியல் கட்சி அல்லது நிறுவனத்தில் பணியாற்றுகையில் அவருடைய தனிப்பட்ட நலன்கள்தான் அவரை அங்கே நிறுத்தி வைக்ககூடியவை. அந்த கட்சியின் அல்லது நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, பலவகையான சமரசங்கள் வழியாக ஒத்திசைந்து, தனது பங்களிப்பை அவர் ஆற்றினால் அதற்கு அவருக்கு தனிப்பட்ட முறையில் அதிகார லாபமோ பொருளியல் லாபமோ அடையாளமோ உண்டு.

பெரும்பாலான அமைப்புகள் இத்தகைய உலகியல் நன்மைகள் அளிப்பவை. அங்கு பூசல்கள் எழுவதென்பது பங்குவைத்தலில்தான். தனிப்பட்ட லாபத்தின் பொருட்டு ஒர் அமைப்பில் அல்லது நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தனக்குரிய இடமோ பங்கோ அளிக்கப்படவில்லை எனும்போது சீற்றம் கொள்கிறார். தன்னைவிடக் குறைவான ஒருவர் தன்னை முந்திச் செல்கிறார் என உணரும்போது முரண்படுகிறார். பெரும்பாலான அரசியல் கட்சிகளும் நிறுவனங்களும் தொடர்ச்சியாக இந்தப் பகிர்வில் ஒரு சமரசத்தை செய்துகொண்டே இருக்கின்றன. முரண்படுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் சிலவற்றை அளிக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று கிடைக்கும்படி பார்த்துக்கொள்கின்றன. சில தருணங்களில் அமைப்பு சிலரை பொருட்படுத்தாமல் இருக்கக்கூடும். அல்லது சிலருடைய எதிர்ப்பார்ப்புகள் அவர்களுடைய தகுதியை விட மேலானதாக, எந்த வகையிலும் அந்த அமைப்பால் ஈடுசெய்ய முடியாததாக இருக்கும். அச்சூழ்நிலையில் அவர் அந்த அமைப்புடன் முரண்பட்டு வெளியேறுகிறார்.

விஷ்ணுபுரம் போன்ற அமைப்பின் முதன்மையான வேறுபாடென்பது இதில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரமோ பணமோ எதுவுமே அளிக்கப்படுவதில்லை என்பது தான். அவ்வாறெனில் இந்த அமைப்பில் அவர்கள் சேர்ந்து செயல்படுவதற்கான விசையாக இருப்பதென்ன? எந்த நோக்கம் இதை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறதோ அதுதான். அது ஒரு இலட்சியவாதம். தமிழில் இலக்கிய அறிவுச்சூழலில் சிலவற்றை செய்யவேண்டும் என்னும் எண்ணம். இங்கிருக்கும் சில விடுபடல்களை நிரப்பவேண்டும், குறைபாடுகளைக் களைய வேண்டும் என்னும் நோக்கம். அதைச் செய்வதனூடாக வரும் தனிப்பட்ட தன்னிறைவு.

இங்கே ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான அன்றாடப் பணிகள் உள்ளன. அங்கேயே அவர்களுடைய அடையாளங்கள் அமைந்துள்ளன. அவர்கள் பணம் ஈட்டவும் உலகியல் லாபங்களை ஈட்டவும் வேறு களங்கள் உள்ளன. அதற்கப்பால் அவர்களுக்கு ஒன்று தேவைப்படுகிறது. கொஞ்சம் இலட்சியவாதம், கொஞ்சம் கனவு, அவை அளிக்கும் அகநிறைவு. அதன்பொருட்டே விஷ்ணுபுரம் போன்ற ஒரு அமைப்பில் ஒருவர் பங்காற்ற முடியும். அதன்பொருட்டு மட்டும் இங்கு வருபவர்களே இங்கு நீடிக்கவும் செய்கிறார்கள்.

ஆச்சரியம் என்னவெனில் ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்புக்குள் அன்று முதல் இன்று வரை வந்து சேர்ந்தவர்களில் ஓரிருவர் மட்டுமே அகன்று சென்றிருக்கிறார்கள். மற்றவர்கள் அதே விசையுடன், அதே தீவிரத்துடன் இன்றும் நீடிக்கிறார்கள். மிகமிகக்குறைவாகவே பூசல்களோ கருத்துமுரண்பாடுகளோ நடந்துள்ளன. அவை மிக விரைவில் சரிசெய்யப்பட்டும் உள்ளன. அது இந்த அமைப்பின் அடிப்படையான நோக்கம் நேர்மையானது, வலுவானது என்பதற்கான சான்று.

இத்தகைய இலட்சியவாத அமைப்புகளை நடத்துவதற்கான சில நிபந்தனைகள் உண்டு. பிற எந்த ஒரு ஒருங்கிணைப்பாளரிடம் இருந்தும் கற்பதைவிட பல மடங்கு நுட்பமாகவும் விரிவாகவும் இதன் நெறிகளை நாம் காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். காந்திய இயக்கங்கள் அல்லாத இயக்கங்கள்கூட, குறிப்பாக இடதுசாரி இயக்கங்கள், இந்தியாவில் ஜனநாயகச் சூழலில் காந்தியிடமிருந்து கற்றுக்கொண்ட நெறிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். நம் காலகட்டத்தின் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பாளர் காந்திதான்.

ஒருங்கிணைப்புக்கான முதன்மை நெறியென்பது இதற்கு அதிகார மையம் ஒன்றிருக்கலாகாது என்பதுதான். வழிகாட்டி ஒருவர் இருக்கலாம். ஆனால் அந்த வழிகாட்டுபவர் அதன்மூலம் தனக்கு நன்மைகளைத் தேடிக்கொள்வார் என்றால், தன்னை அதிகார மையமாக ஆக்கிக்கொள்வார் என்றால் அந்த அமைப்பின் நோக்கம் அவரை நிலைநிறுத்துவதாக ஆகிறது. அவ்வண்ணம் அவர் தன்னை ஆக்கிக் கொள்ளவேண்டும் என்றால் மற்ற அனைவருக்கும் அவர் தான் அடைவதில்  ஒரு பகுதியை முடிவிலாது பங்கிட்டாகவேண்டும். மாறாக, மையத்திலிருப்பவரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் வழியாகவே லட்சியவாத அமைப்புகள் நிலைகொள்ளும். காங்கிரஸிலிருந்து காந்தி எதையுமே பெற்றுக்கொள்ளவில்லை என்பது காங்கிரஸின் இணைப்புவிசையாக அவரை நிலைநிறுத்தியது.

எளிய முறையிலேனும் விஷ்ணுபுரத்தின் இயங்குமுறை அதுதான். இந்த அமைப்பு எந்த வகையிலும் என்னையோ என் படைப்புகளையோ முன் நிறுத்தாது. இதிலிருந்து நான் அடையக்கூடியதென எதுவுமில்லை. அது இதிலுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்போதுதான் அவர்கள் தங்கள் பங்களிப்பை ஆற்ற முடியும். அவர்கள் என்னுடைய நெருக்கமான நண்பர்கள், என்மீது தனிப்பட்ட பிரியம் கொண்டவர்களே ஆனாலும் அவர்கள் எவரும் எனக்காக உழைக்கவில்லை. தமிழ்ச்சூழலில் ஒரு பண்பாட்டு மாற்றத்திற்காகவும் இலக்கிய வளர்ச்சிக்காகவும்தான் அவர்கள் தங்கள் பங்களிப்பை ஆற்றுகிறார்கள். அந்த உணர்வு அவர்களிடம் இருக்கும்போது மட்டும்தான் நான் அவர்களை இந்த அமைப்புக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும்.இதை தொடக்கத்திலேயே நான் உணர்ந்திருக்கிறேன். வெவ்வேறு தருணங்களில் எனது படைப்புகள் சார்ந்து நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்று நண்பர்கள் கூறும்போதெல்லாம் கடுமையாக மறுத்து என் கருத்தை தெரிவித்ததெல்லாம் இதன் பொருட்டே.

அதேசமயம் முற்றிலும் பின்னணியில் என்னை நான் நிறுத்திக்கொள்ள முடியாது. பல அமைப்புகளில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஏறத்தாழ அறியப்படாதவர்களாக பின்னணியில் செயல்படுவதுண்டு. ஆனால் இந்த அமைப்பு என்னுடைய தனி ஆளுமையை நம்பி, எனது எழுத்துகளின் வழியாக தொடர்ந்து இங்கே உள்ளே வருபவர்களால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதன் ஈர்ப்பு விசை நானே என்றவகையில் இதன் முகஅடையாளமாக என்னை முன்னிறுத்தாமலிருக்க முடியாது. https://www.jeyamohan.in என்னும் இணையதளம்தான் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம். தமிழ் விக்கி உட்பட எல்லா அமைப்புச் செயல்பாடுகளுக்கும் அடிப்படை. அது ஒவ்வொரு நாளும் வெளியாவதும், அதில் எனது கருத்துக்கள் வெளியாவதும், நான் பரிந்துரைக்கும் படைப்புகள் வெளியாவதும் இதை நிலைநிறுத்தும் முக்கியமான சக்தி. இது என்னை முன்னிறுத்துவது அல்ல, என்னை முன்வைப்பது மட்டும்தான்.

ஒரு பொது நோக்கத்துடன் கூடும் பலரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையானவர்கள். ஏறத்தாழ நிகரான தகுதிகொண்ட பலர் ஒன்றிணைந்து செயலாற்றும் இன்னொரு அமைப்பு மிக அரிதானது. ஓர் இலட்சியவாதம் அதற்கு தகுதியானவர்களையே ஈர்க்கும். ஆகவே இதில் செயலாற்றும் ஒவ்வொருவரும் தனக்கு இணையானவர் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். எவரும் எவரையும் ஆள முடியாது, மாற்றியமைக்க முடியாது. தங்கள் தளங்களில், தங்கள் இயல்புக்கேற்ப ஒவ்வொருவரும் பணியாற்றுவதே இயல்வது. கூடுமானவரை மற்றவர்களிடம் ஒத்திசைவது ஒன்றே செய்யக்கூடுவது.

இணையானவர்கள் என்பதனால் ஒவ்வொருவருக்கும் இன்னொருவரிடமும் சிறு முரண்பாடுகள் எழும். அதை தவிர்க்க முடியாது. சிலர் சிலருடன் இயல்பிலேயே இணைய முடியாது. ஆளுமை சார்ந்த முரண்பாடுகள் இருக்கும். சிலருக்கு சிலருடைய செயல்முறையில் முரண்பாடுகள் உருவாகும். உதாரணமாக, மிகக்கவனமாக எண்ணிச் செயல்படக்கூடிய ஒருவர் மிகுந்த விசையுடன் செயல்படக்கூடிய ஒருவருக்கும் கடுமையான ஒவ்வாமையை அளிக்க வாய்ப்புண்டு. ஆனால் இரு சாராரும் ஆற்றக்கூடிய வெவ்வேறு பணிகள் உண்டு.

இத்தகைய அமைப்புகளில் தொடர்ச்சியாக நிகழும் உரையாடல்களில் தவறான புரிதல்கள், ஒரு தருணத்தில் உருவாகும் சீற்றங்கள் என பல நிகழும். அத்தகைய சிறு உரசல்கள் விஷ்ணுபுரம் அமைப்புக்குள் அரிதாகவேனும் நிகழ்ந்துகொண்டுள்ளன. அத்தருணங்களில் அவர்களை சமரசம் செய்யும் விசையாக இருப்பது என்னுடைய நட்பும். அவர்கள் என் மேல் கொண்டுள்ள மரியாதை ஆகியவையே. பலதருணங்களில் இருவருக்கிடையே உள்ள பூசல் என் வரையில் வந்துவிடக்கூடாதென்று இருவருமே கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் சமரசமாகி இணைந்த பிறகு நெடுங்காலம் கழிந்துதான் அந்த செய்தி எனக்கு வந்து சேர்கிறது.

அதற்கும் அப்பால் ஒரு முரண்பாடு வருமெனில் இருதரப்பினரை அழைத்து என் பொருட்டும், நான் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட என் கனவுகளின் பொருட்டும் அவர்கள் ஒத்திசைந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்வது என்னுடைய வழக்கம். ஒவ்வொரு முறையும் சமரசம் செய்வதற்குரிய காரணமாக நான் முன்வைப்பது நம்மை இணைக்கும் பொதுக்கனவையே. நாம் சிறிய அளவிலேனும் ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளை கவனித்தாலே அது தெரியும். அந்தக் கூற்று ஒவ்வொரு முறையும் பயனளித்திருக்கிறது. ஏனெனில் இதில் பங்கேற்கும் அனைவருக்கும் அது உள்ளூரத் தெரியும்.

இங்கு அவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் அவர்களிக்கும் தனிப்பட்ட நிறைவை வெளியே அவர்கள் ஈட்ட முடியாது. மிகச்சிறிய கருத்துமுரண்பாடுகளுடன் விலகிச் சென்றவர்கள் எவரும் வெளியே சென்று எதையும் ஆற்றவில்லை. தங்கள் எளிய அன்றாடத்திற்குள் சுருண்டு மறைந்து போனார்கள். இங்கு இருக்கையில் இருந்த நட்பார்ந்த சூழல், படைப்பூக்கம் கொண்ட தருணங்களை அவர்கள் அந்தரங்கமாக எண்ணிப் பார்த்தால் அவர்கள் இழந்ததென்ன என்று அவர்களுக்கே  தெரியும். அவ்வாறு விலகிச்சென்ற ஓரிருவர் சென்றமைந்த சோர்வின் இருளை மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறு முரண்பாடின் வழியாக, சிறு ஆணவச் சீண்டலின் வழியாக விலக்கம் அடைவோம் என்றால் தாங்கள் இழப்பது எத்தனை பெரிய வாழ்க்கையை என்று அவர்களுக்குத் தெரியும். அதுவே இணைக்கும் சக்தி.

ஒவ்வொருவரிடமும் நான் மீண்டும் சொல்வது அதைத்தான். பெருங்கனவுகள் அளவுக்கு வாழ்வை நிறைவுறச் செய்பவை வேறில்லை. பகிர்ந்துகொள்ளப்படுகையில் கனவு மீண்டும் பெரிதாகிறது. பலருடைய கனவுகள் சேர்ந்து ஒன்றாகும்போது அது இயக்கமாகிறது. ஓர் இலட்சியவாத இயக்கத்தின் உறுப்பினராக இருப்பது என்பதைப்போல இனிய அனுபவம் வேறில்லை. இன்று விஷ்ணுபுரம் அமைப்பிலிருக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் தங்கள் மிக இனிய தருணங்கள், கொண்ட்டாட்டமான நாட்கள் இங்கே செயல்பட்டபோது அவர்கள் அடைந்ததுதான் என்பதை காணமுடியும். அவ்வகையில் பார்த்தால் வேறு எதைவிடவும் அதிகமான ஊதியம் தரும் செயல் இது என்று அவர்கள் அறிவார்கள். அது ஒன்றே மீள மீள ஒவ்வொருவரிடமும் நான் கூறுவது.

அத்தனைக்கும் அப்பால் ஒன்றுண்டு. இத்தகைய இலட்சியவாதம் சார்ந்த அமைப்புகளில் உள்ள நட்பார்ந்த சூழல் வேறெந்த உலகியல் அமைப்பிலும் இருக்காது. இங்கே போட்டி இல்லை. ஆகவே வெற்றி தோல்வி இல்லை. இங்கு ஒருவர் பேச, ஒருங்கிணைக்க, செயல்பட கற்றுக்கொள்வது மிக எளிது. மகிழ்ச்சியும் களியாட்டமும் நிறைந்த கல்வி இது. இங்கே பெறும் பயிற்சி அவர்களுக்கு வெளியே உலகியல் சூழலிலும் உதவுவது.விஷ்ணுபுரம் விழா போன்ற ஒன்றை ஒருங்கிணைப்பவர் அவருடைய வணிகத்தில், தொழிலில் எதையும் ஒருங்கிணைக்கலாம். இந்த அனுபவம் விலைமதிப்பற்றது.

அடிப்படை நன்னோக்கம் கொண்ட எந்த கூட்டமைப்பும் நம் ஆளுமையை பெரிதாக்குவதுதான். நமக்கு நம்மைப்பற்றி நம்பிக்கையும் நிறைவும் அளிக்கும் செயல்களை அதன் வழியாக நாம் செய்கிறோம். வாழ்க்கையின் மிகமிக மதிப்புமிக்க தருணங்களை அடைகிறோம். நாம் அளிப்பவற்றை கணக்கு வைத்துக்கொள்வதுபோல பெறுபவற்றை கணக்கிட்டால் நாம் கொள்முதல்தான் செய்கிறோம் என உணர்வோம். சில்லறை உறவுகளில், அன்றாடத்தொழிலில் ஆயிரம் சமரசங்களைச் செய்துகொள்ளும் நாம் இதைப்போன்ற பொதுச்செயல்பாடுகளில் எளிய தன்முனைப்பால் புண்படுவதும் விலகுவதும் அறிவின்மை என்றே கொள்ளப்படும்.

நாம் இங்கே மும்மடங்கு சமரசம் செய்துகொள்ளவேண்டும். ஏனென்றால் நம் சமூகத்தின் எல்லா வகைமாதிரிகளும் கொண்டவை இத்தகைய அமைப்புகள். மேலும் பற்பல நூற்றாண்டுகளாகவே கூட்டாகச் செயல்படும் குடிமைப்பண்புகள் இல்லாமல் சிறு சிறு சமூகக்குழுக்களாக வாழ்ந்து பழகிய சமூகம் நாம். கூடிச்செயல்புரியும் இயல்பை நாம் கற்கத்தொடங்கி நூறாண்டுகள்கூட ஆகவில்லை. ஆகவே நாம் கூட்டுச்செயல்பாட்டுக்கான குடிமைப்பண்புகளை கற்கவேண்டும். கற்காத பிறரை தாங்கிக்கொண்டு செயல்படவும் வேண்டும். இச்செயல் அளிக்கும் நன்மைகளுக்காக அச்சமரசங்களை செய்யலாம்.

இவ்வளவும் சொன்னபின்னரும் ஒருவர் தனிப்பட்ட உரசல்களையே முன்வைப்பார் என்றால், முனகுவார் என்றால், செயல்களுக்கு தடையென அமைவார்எனில் அவர் விலகியாகவேண்டும்.அது ஊழ், அவ்வளவுதான்.

ஜெ

***

முந்தைய கட்டுரைபுதுமைப் பெண்ணொளி- கடலூர் சீனு.
அடுத்த கட்டுரைஎழுத்தாளனும் குற்றவாளியும் -கடிதம்