அன்புள்ள ஜெ,
உங்களுக்கு வரும் கடிதங்களில் சரிபாதியானவை இளவயது மற்றும் நடுவயது நண்பர்களின் கடிதங்களாகவே இருப்பதை கவனிக்க முடிகிறது. அதிலும் வெண்முரசுக்கு பிறகான உங்களுடனான உரையாடல்கள் பெரும்பாலும் கொந்தளிப்பும், பதற்றமும், தத்தளிப்பும் கொண்ட கடிதங்கள் தான் அதிகம். அவற்றிக்கு நீங்கள் ஆற்றும் எதிர்வினை மிகவும் ஆழம்கொண்ட முன்னோர் சொற்களென அவர்களுக்கு அமைவதை கவனித்து வந்திருக்கிறேன் .
இதற்கு மறுபுறம் என, சிலரின் வாழ்வு அமைந்து விடுகிறது, இனிமையும், மனநிறைவும், ஆசிகள் என ஒவ்வொரு நாளும் நிறைவாக தொடங்கி அவ்வண்ணமே முடிகிறது, உச்சியில் பறக்கும் பறவையின் நிழலென, மிகச்சிறிய நேரம் மட்டுமே பதட்டமோ, அசூயையோ ஏற்படுகிறது.
இவ்வளவு ஆசிபெற்ற வாழ்க்கையை ஒருவர் எப்படி கையாள்வது ?இதை ஒருமுறை என் குருநாதர் நிரஞ்சனிடம் கேட்டபோது “சமர்ப்பித் கரோ” {ஆசிகளையும் யாருக்கேனும் சமர்ப்பணம் செய்துவிடு , என்கிற அர்த்தத்தில்} என்று சொன்னார் .
ஒரு ஆசான் என உங்கள் சொல்லில் அதை கேட்க விரும்புகிறேன் .
சௌந்தர்.G
***
அன்புள்ள சௌந்தர்
அனைத்து உகந்த விஷயங்களும் அமைந்த பிழையற்ற வாழ்வு வாய்க்கப்பெற்ற இருவரை கடந்த பல ஆண்டுகளாக நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். நடராஜ குரு அவரது மாணவர் நித்ய சைதன்ய யதி. செல்வந்த குடியில் பிறந்தவர்கள், உயர்கல்வி கற்றவர்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தவை அனைத்துமே சிறந்தவை மட்டுமே. வரலாற்று நாயகர்கள் இளமைப்பருவத்திலேயே அவர்களுக்கு அறிமுகமாகிறார்கள். பேரிலக்கியங்களையும் தத்துவங்களையும் கற்பிக்கும் ஆசிரியர்கள் கிடைத்தனர். பெற்றோர் அறிஞர்களாகவும் முன்னுதாரணங்களாகவும் இருந்தனர்.
நடராஜகுரு கேரளத்தின் முதல் ஈழவ பட்டதாரியாகிய டாக்டர் பல்புவின் மகன். மைசூர் சமஸ்தானத்தில் திவான் பேஷ்கராக பணியாற்றியவர் டாக்டர் பல்பு. கேரள சமூக சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவர் SNDP அமைப்பின் நிறுவனர். நாராயண குருவுக்கு முதன்மை மாணவராக அமைந்து அவருடைய சமூக பணிகளை முன்னெடுத்தவர். பெரும் செல்வந்தர்கள் பயிலும் பள்ளியில் நடராஜ குரு பயின்றார். பாரிஸிலும் சுவிட்சர்லாந்திலும் உயர்கல்வி கற்றார். ஹென்றி பெர்க்ஸன் போன்ற தத்துவ மேதைகளிடம் மாணவராக அமர்ந்து ஆய்வு செய்தார். நாராயணகுருவை இளஞ்சிறுவனாகவே சந்திக்கவும், நாராயணகுருவுடன் அன்றிருந்த இதழாளர்களான பி.குஞ்ஞிராமன் சமூக சீர்திருத்தவாதியாகிய சகோதரர் ஐயப்பன் கவிஞர் குமாரனாசான் போன்றவர்களை அணுகியறியவும் வாய்ப்பைப்பெற்றார்.
நித்ய சைதன்ய யதி பந்தளம் பணிக்கர்கள் என்னும் புகழ்பெற்ற குடியில் பிறந்தார். தந்தை பந்தளம் ராகவ பணிக்கர் கேரளத்தின் அறியப்பட்ட கற்பனாவாதக் கவிஞர்களுள் ஒருவர். தாய்மாமன் மூலூர் பத்மநாபப் பணிக்கரும் கவிஞர். அவர் அன்னையும் அறிஞர், ஆன்மீக நாட்டம் கொண்டவர். வாழ்நாள் இறுதியில் மகனிடமிருந்தே துறவு பெற்றுக்கொண்டவர். நினைவறியா நாளிலேயே மகாத்மா காந்தியை சந்திக்க வாய்ப்பு அமைந்தது நித்யாவுக்கு. நாராயணகுருவை, ரமண மகரிஷியை அறிமுகம் செய்து கொண்டார். காந்தியின் ஆசிரமத்திலிருந்தார். நடராஜ குருவுடன் அணுகி அருகமர்ந்து வாழ்ந்தார்.
எது அவர்களின் வாழ்க்கையில் குறைவுபடுகிறது என்று பார்த்தால் எத்தனை துழாவினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. எதிர்மறை நிகழ்வுகள் என்ற எதுவுமே அவர் வாழ்க்கையில் உருவாகவில்லை. ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்து அவர்களை பிரபஞ்ச சக்தி வளர்த்தெடுக்கிறது. அத்தகையோர் தொடர்ந்து மண்ணில் பிறந்தபடி இருக்கிறார்கள். தாகூர் அத்தகையவர். கதே அத்தகையவர். அரவிந்தரும் காந்தியும் கூட ஒருவகையில் அத்தகையவர்களே. நேருவையும் அவ்வாறே கூறமுடியும்.
ஆசி பெற்றவர்கள் எனத்தக்க இவர்களின் வாழ்க்கையின் பொருளென்ன? ஒன்றுதான் அவர்கள் ஆசியளிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல பெரும் பொறுப்பும் அளிக்கப்பட்டவர்கள். உண்மையில் வறுமையில் துயர்களில் உழல்பவர்கள் பெருங்கலைஞர்கள் ஆவார்கள் என்ற ஒரு நம்பிக்கை நமக்கு உண்டு. குறிப்பாக நவீனத்துவ காலகட்டத்தில் அவ்வாறு ஒரு எண்ணம் உருவாக்கப்பட்டது. அதற்கு எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது என்றபோதிலும் கூட. அவ்வாறு உருவாக்கியவர்கள் பெரும்பாலும் வெறும் அறிஞர்கள். அவர்கள் அனுதாபத்துடன் குனிந்து நோக்கி கூர்ந்து கவனிக்கத்தக்க பிறழ்வு கொண்டவர்களாக எழுத்தாளர்களை உருவகித்துக் கொண்டார்கள். அல்லது பிறழ்வு கொண்டவர்களை முதன்மை படைப்பாளிகளாக முன்னிறுத்தினார்கள்.
மிகச்சிறந்த உதாரணம் ஜீன் பால் சார்த்தர், ழீன் ரெனே போன்ற ஒரு குற்றவாளிக்கலைஞன் மேல் அவர் கொண்ட ஆர்வம் என்பது கலை மேல் கொண்ட ஆர்வமல்ல. தன்னிலும் முற்றிலும் வேறுபட்ட ஒருவர் மேல் கொண்ட ஆர்வம் மட்டுமே. உண்மையில் பெருங்கலைஞர்களில் பலர் பிறப்பிலேயே வாழ்த்தப்பட்டவர்கள். மிகச்சிறந்த உதாரணம் என்று டால்ஸ்டாயைத்தான் சொல்வேன். அவர்கள் கலை என்பது அவர்கள் அடைந்த தனிப்பட்ட துயரத்திலிருந்து உருவாவதல்ல. மானுடத் துயரங்கள் அனைத்தையும் மலையுச்சியிலிருந்து பார்க்கும் உயரத்தை அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கிறது. ஆகவே அனைத்தையும் பார்த்து முழுமை நோக்கை உருவாக்க, சாராம்சத்தை கண்டடைய அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அமைகிறது.
வறுமையிலும் துயரத்திலும் வாழ்ந்த எழுத்தாளர்கள் பெரும்பாலும் வறுமையையும் துயரத்தையும்தான் எழுதியிருக்கிறார்கள். மிகக் குறைவாகவே அவர்கள் தாங்கள் அடைந்த அனுபவத்தின் எல்லைக்கு அப்பால் செல்ல அவர்களால் முடிந்திருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையையே முன்னுதாரணமாக, ஆய்படு பொருளாக முன்வைக்கும்போது அது ஒருநபரின் வாழ்க்கை மட்டுமே என்னும் எல்லை உருவாகிவிடுகிறது. அது எத்தனை தீவிரமாக இருந்தாலும் அது ஒரு மாதிரி மட்டுமே. அதற்கு கூர்மையும் பிரதிநித்துவமும் இருக்கும் ,அதே நேரம் முழுமையின்மை எனும் குறையும் உண்டு. சிறந்த உதாரணம் காஃப்கா. டால்ஸ்டாயை காஃப்காவுடன் ஒப்பிடும்போது நூறு காஃப்காக்களை உள்ளே வைக்க டால்ஸ்டாயில் இடமிருப்பதை நல்ல வாசகன் உணர முடியும்.
அன்றாட துயர்கள் மற்றும் போராட்டங்கள் ஊழின் அடிகள் அனைத்திலிருந்தும் இயற்கையின் கைகள் பொத்தி சிலரைப் பாதுகாப்பதென்பது மேலும் தீவிரமான முழுமை கூடிய பணிகளை அவர்கள் செய்ய வேண்டுமென்று அது எதிர்பார்ப்பதனால் தான் என்று எடுத்துக்கொள்கிறேன்.
தத்துவவாதிகள் அத்தகைய வாழ்த்தப்பட்ட வாழ்க்கை கொண்டிருப்பது ஒரு தேவை என்றுகூட சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் பிழைப்பு சார்ந்த எளியவற்றில் வீணடிக்கத்தக்க வாழ்க்கையை கொண்டிருந்தால் தத்துவவாதிக்கு அடித்தளமாக அமையவேண்டிய பெரும் கல்வி அவர்களுக்குக் கிடைத்திருக்காது. இருபதாண்டுகளேனும் முழுமையாகவே தன்னை கல்விக்கு அளித்துக்கொண்ட ஒருவராலேயே முதன்மைத் தத்துவவாதியாக ஆக முடியும். போராட்டங்களற்ற, அல்லல்களற்ற, தனிப்பட்ட துயர்களற்ற ஒரு வாழ்க்கையை அது நிபந்தனையாக்குகிறது. முழுமைப்பார்வை கொண்ட பெருங்கலைஞர்கள் தத்துவவாதிக்கு இணையானவர்கள். அவர்களுக்கும் அதுவே தேவை.
இந்திய மெய்ஞான மரபை எடுத்துக்கொண்டால் ஞானிகள் என்று எழுந்த பெரும்பாலானவர்கள் அரசர்களுக்கு நிகரான இளமைப்பருவம் கொண்டவர்கள் என்பது விந்தையல்ல. அவர்கள் போராடி அடைவதற்கும் ,வென்று கொள்வதற்கும் எதுவுமற்று இளமையை கழிக்கிறார்கள். இங்குள்ள அனைத்தும் அருகிருக்கையில் இவையனைத்துக்கும் அப்பாலுள்ளதென்ன என்னும் வினாவை சென்றடைகிறார்கள். தொட்டு எடுக்கும் தொலைவில் இப்புவியில் உள்ள அனைத்தும் இருக்கையில் அனைத்திற்கும் அப்பால் உள்ள மெய்மை ஒன்றை நோக்கி அவர்கள் உள்ளம் நீள்கிறது. இதை ஒவ்வொருவருக்கும் சற்றே நீட்டித்துக்கொள்ளலாம் என்று இன்று தோன்றுகிறது.
இருபதாம் நூற்றாண்டுக்குப்பிறகு உலகம் முதன்மையாக ஒரு மாறுதலை அடைந்தது. வரலாற்றில் என்றுமே அன்றாடத்தில் கடும் போராட்டத்தில் இருக்கும் ஏழைகளும், அவர்களுக்கு மேல் அனைத்தையும் அடைந்து வாழும் பிரபுக்களும் என உலகம் இரண்டாகப் பிரிந்திருந்தது. நடுத்தர வர்க்கம் என்று நாம் சொல்லும் ஒரு பெருந்திரள் தொழில்நுட்ப புரட்சிக்கு பிறகு உருவானது முதலாளித்துவப் பொருளியலின் உருவாக்கம் அவர்கள். இன்னும் கூர்மையாகச் சொல்லப்போனால் இயந்திரங்கள் உருவானபிறகு ,உபரி கூடுதலாக உற்பத்தியாக தொடங்கியபிறகு, பெருமுதலீட்டின் ஒரு பகுதியாக உருவானவர்கள் இந்த நடுத்தர வர்க்கத்தவர்.
உயர் நடுத்தர வர்க்கம் என்பது ஒருவகையில் மிக மிக நல்வாய்ப்பு கொண்டது. அதற்கு கீழ் நடுத்தர வர்க்கத்தின், அல்லது உழைக்கும் பெருந்திரளின் அன்றாடக் கடும்போராட்டங்கள் ஏதுமில்லை. அதன் பொழுது முழுக்க அதனால் ஈட்டப்பட்டு கையில் உள்ளது. மறுபக்கம் உயர் குடியினரின் முடிவில்லாத சம்பிரதாயங்கள், பெரும் சாம்ராஜ்யங்களை நிர்வாகம் செய்யவேண்டிய சுமைகள், பெரும் செல்வம் மட்டுமே உருவாக்கும் உளத்திரிபுகள் மற்றும் நுகர்வின் வெறிகள் ஆகிய அனைத்திலிருந்தும் உயர் நடுத்தர வர்க்கம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
உயர் நடுத்தர வர்க்கம் இன்று ஒவ்வொரு நாளுமென பெருகிக்கொண்டிருக்கிறது. இப்படிச் சொல்கிறேனே, பிழைப்பின் பொருட்டு எந்தத் தொழிலையும் செய்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இல்லாதவர்கள், தங்களுக்கு உகந்ததை மட்டுமே செய்தாலும் உணவும் உடையும் உறையுளும் உறவுகளுமாக வாழும் வாய்ப்பு கொண்டவர்கள் உயர் நடுத்தர வர்க்கம் எனலாம்.
அது அல்லலற்ற வாழ்க்கைக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆம் நீங்கள் சொல்வது போல ஆசி அளிக்கப்பட்டது. அது ஒரு பெரும் வாய்ப்பு. ஆனால் அவர்கள் இன்று இரண்டு வகைகளில் தங்களை அழித்துக்கொள்கிறார்கள். ஒன்று தங்களை தங்களுக்கு மேலிருக்கும் உயர் குடிகளைப்போல கற்பனை செய்துகொள்கிறார்கள். அவ்வாறு ஆகிவிட முயல்கிறார்கள். ஆகிவிட்டதாக நடிக்கிறார்கள். அதன்பொருட்டு தங்கள் முழு வாழ்க்கையையுமே செலவிடுகிறார்கள். தங்கள் ஆளுமையை இழுத்து நீட்டி செயற்கையானதாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
சிலநாட்களுக்கு முன் நான் ஒரு திரைப்படத்துறை சார்ந்தவரிடம் சொன்னேன். ”நீங்கள் முயன்று உயர்குடி போல் ஆகவேண்டுமெனில் நீங்கள் உயர்குடியே அல்ல” அவர் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்பேசி வைத்திருந்தார். அந்த செல்பேசிக்கு மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் தவணை கட்டிக்கொண்டிருந்தார். நான் சொன்னேன் ”ஒரு கணத்தில் ஒரு சில்லறைத்தொகையை செலவழிப்பது போல பணத்தை வீசி இந்த செல்பேசியை வாங்கும் ஒருவருக்கு மட்டும்தான் இதை வைத்திருக்கும் இயல்பான உரிமை உள்ளது. உழைத்து சேமித்து ஈட்டி இதை வாங்குபவர் இதை வைத்திருக்கத் தகுதி கொண்டவரல்ல. வாள்பயிற்சி இல்லாதவன் வாளைக்கையில் ஏந்துவது போன்றது இது. ஒரு வகை அகங்கார நிறைவு. இதைக் கையில் வைத்திருக்கையில் நீங்கள் வெறுமே நடிக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் உயர்குடி அல்ல என்று. உங்களைப்பார்ப்பவர்களுக்கும் தெரியும், இது உயர் குடியாக நடிபதற்காக நீங்கள் வைத்திருக்கும் ஒரு கருவி மட்டும் தான் என்று. ஆகவே இதன் எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. எல்லாவகையிலும் இது பயனற்றது”.
இன்னொருவகையில் உயர்நடுத்தர வர்க்கம் அன்றாடச் சலிப்பில் தன்னை அழித்துக்கொள்கிறது. கீழ்நடுத்தர வர்க்கம் கடும் உழைப்பில், அன்றாடத்தின் தேடலில் தன்னுடைய பொழுதை முழுமையாக செலவிடும்போது; கையில் எஞ்சியிருக்கும் நீண்ட பொழுதில் என்ன செய்வதென்று தெரியாமல் கேளிக்கைக்கு கொண்டு செல்கிறார்கள் உயர்நடுத்தர குடியினர். கேளிக்கை ஒருவர் தன் அன்றாடத்தின் இடைவெளிகளில் மட்டுமே அனுபவிக்கத்தகுந்தது. கேளிக்கையின்போது உளச்சக்தியும் அறிவு சக்தியும் செலவிடப்படுவதில்லை. அவை ஓய்வில் இருக்கின்றன. மிதமிஞ்சின ஓய்வு மேலும் களைப்பைத்தருகிறது. கேளிக்கையில் ஒரு அளவுக்கு மேல் ஈடுபடுபவர் மிக எளிதில் கேளிக்கை அனைத்திலும் சலிப்படைகிறார். சலிப்படையா கேளிக்கை, ஆடும்தோறும் வேட்கை கூடும் கேளிக்கை என்பது சூதாட்டம் மட்டுமே .ஆகவே அத்திசை நோக்கி செல்கிறார்கள். அது அவரை நிறைவின்மை கொண்டவராக ,பதற்றம் மிக்கவராக ஆக்குகிறது. சூதாட்டம் என்பது ஒரு மாபெரும் வீணடிப்பு -பொழுதை, உள்ளத்தை, வாழ்க்கையை.
இந்த இரு வேறு திரிபு நிலைகளுக்கும் அப்பால் ஓர் உயர்நடுத்தர வர்க்கத்தினன் செய்ய வேண்டியது என்ன ?அவனுக்கு அளிக்கப்பட்ட பொழுது என்பது பொன் போன்றது .பொன் தனக்கென மதிப்பில்லாதது. அதை செலவிடுபவன் வழியாக தன் மதிப்பை ஈட்டிக்கொள்வது. பொன்னை பெரும் கொடையாளன் ஒருவன் பல்லாயிரம் வயிறுகளில் அன்னமாக நிரப்ப முடியும், கலைகளைப் புரக்க முடியும், ஆலயம் எழுப்ப முடியும். நடுத்தர வர்க்கத்தின் பொழுதும் அவ்வாறே. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் இந்த பொழுதென்பது ஒரு கொடை என உணர்ந்தார்கள் என்றால் அதை தங்கள் அக ஆழம் எதை நோக்கிச் செலுத்துகிறதோ அதைச் செய்ய செலவிடலாம். கலை, அறிவுத்துறை, சேவை என இம்மானுடத்திற்கு அவர் அளிப்பதற்கு எவ்வளவோ உள்ளது.
மானுடத்திற்கு தன்னிலிருந்து ஒன்றை அளிப்பவன் மட்டுமே தன்னை எண்ணி நிறைவுற முடியும் அவனுக்குள் மட்டுமே புறவுலகு தொடாத ஒரு தன்னிலை இருக்க முடியும். அவன் மட்டுமே குறைவுபடாத வாழ்வொன்றை வாழ்ந்த நிறைவை தன் இறுதிக்காலத்தில் அடையமுடியும். அதன்பொருட்டு தன் வாழ்க்கையை செலவழிப்பவன் அச்செலவை விட பல மடங்கு வேறு ஒரு தளத்தில் ஈட்டிக்கொள்கிறான்.
மானுடத்திற்கு தன் முழுத் தனித்திறனையும் அளிக்கும் பொருட்டே தனக்கு அந்த அல்லல் அற்ற வாழ்க்கையும் சிதறடிக்காத பொழுதும் அளிக்கப்பட்டுள்ளதுன என்று அவன் உணர்வான் எனில் அது எத்தனை பெரிய விடுதலை என்று அவன் அறிவான். தன்னை சுற்றி பல்லாயிரக்கணக்கானவர்கள் அன்றாடத்தின் சிக்கல்கள் வாழ்க்கையை வீணடித்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம் இருக்கையில் தனக்களிக்கப்பட்டுள்ள நல்வாய்ப்பு முழுமை நோக்கி நிறைவு நோக்கி செல்வதற்குரியது என்று உணர்ந்தான் எனில் அவன் விடுதலை கொள்கிறான்.
ஜெ