மாயை

அன்பு ஜெ,

இன்று ஏனோ மாயை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன் ஜெ. “INSIGHT IS NOT INTUTION” என்ற தலைப்பில் ஜிட்டு பேசியிருந்தார். அறிதலுக்கும் மாயைக்குமான வித்தியாசத்தை சொல்லிக் கொண்டிருந்தார். அறிதலினால் தான் நாம் செயல் செய்கிறோம். செயலும் அறிவும் வேறுவேறல்ல என்கிறார். செய்யும் செயல்கள் யாவும் நாம் நன்கு அறிந்திருப்பதால் செய்கிறோம் ஆனால் எல்லாச் செயல்களும் நினைத்த பலனைக் கொடுப்பதில்லை. பலனைக் கொடுக்காத செயல்களுக்காக நாம் வருந்துகிறோம். கூர்ந்து நோக்கினால்… இவையாவுமே மாயையின் மிகப்பெரிய சட்டத்துள் இயங்குகிறது என அறியலாம் (If u watch carefully you see instantly the whole structure of illusion) என்கிறார். இந்தக் கண்டடைதலே ஞானம் என்கிறார். “structure of illusion” என்ற வார்த்தையை நான் பிரம்மாண்டமாக கற்பனை செய்து கொண்டிருந்தேன்.

யாவற்றையும் சற்று “நான்” என்பதை விலக்கி தள்ளி நின்று பார்த்தால் “மாயை” என்பதை உணரலாம் என்று தோன்றுகிறது ஜெ. வியாச பிரசாத் அவர்கள் “Speclation on Maya and Absolute” பற்றி கூறும்போது “நீ தான் மாயா; Absolute/முழுமை என்பது கடவுள்” என்கிறார். Absolute தன்னை நிகழ்த்திக் கொள்வதற்காக படைக்கப்பட்டது தான் மாயை. நான் என்பதே மாயையை உய்த்துணர்வதற்கே; மாயை என்பது முழுமையின் ஒரு சாயை என்கிறார். மாயா தன்னை ஆத்மன் என்ற ஒரு ஏஜென்சி மூலமாக நிகழ்த்திக் கொள்கிறது என்கிறார். முழுமை என்பது ஒருமையைக் குறிக்கிறது. அது தன்னை நிகழ்த்திக் கொள்வதற்கு மாயை தேவைப்படுகிறது. அதனால் இரண்டாகப் பகுக்கிறது என்கிறார். இரண்டு எதிரெதிர் துருவங்கள் தான் எதேச்சையாக ஒரு பயணத்தில் சந்தித்துக் கொள்கிறது என நிக்கோலஸ் கூறுவதாக ஒரு கூற்றையும் முன் வைத்தார்.

உண்மையில் மகிழ்வு, துக்கம், அறிவு, ஞானம், வெற்றி, புகழ், காதல், காமம் என நாம் உணர்வது யாவுமே நாம் மாயையில் இருப்பதால் தான் என்ற சிந்தனை வந்தது ஜெ. முழுமையின் இடத்தில் நின்று நாம் இவற்றையெல்லாம் உற்று நோக்கினால் இவையாவும் மாயை/மாயையின் ஆடல் என்பதை அறியலாம் என்கிறார்.

அப்படியானால் முழுமை தன்னை நிகழ்த்திக் கொள்வதற்கு பல நிறைவின்மைகளை உருவாக்கிக் கொள்கிறது. இந்த நிறைவின்மைகளாகிய ’மாயை/நான்’ முதலில் தன்னை முழுமையின் கூறான “நிறைவின்மை” என்பதை உணரவேண்டும். உண்மையில் ’நான்’ என்ற ஒன்றால் மட்டும் முழுமையை அடைந்துவிட முடியாது என்பதால் தான் நீங்கள் ”ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவினமையை அடைக!” என்றீர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

பெரும்பான்மையான துக்கங்கள், மகிழ்ச்சிகள், இச்சைகள், தருணங்கள் எதிர்காலத்திலிருந்து பார்க்கும் போது “நான்” அல்ல என்றோ அதை அனுபவித்ததற்கான எந்த போதமோ இல்லாமல் தான் இருக்கிறது. Absolute மாயையைப் பயன்படுத்திக் கொள்கிறது என்றால், மாயை ஆத்மனைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆத்மன் உடலைப் பயன்படுத்திக் கொள்கிறது. காலத்தின் முன் சென்று இறந்த காலத்தைப் பார்த்தால் அது நான் அல்ல என்றே தோன்றுகிறது. அப்படியானால் நிகழ்வதற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பு என்ன? செய்து முடித்த பிழைகளிலிருந்தும், செயல்களிலிருந்து நமக்குக் கிடைத்த ஞானம் ஒன்று மட்டுமே நம்மால் தொகுத்துக் கொள்ளக் கூடியது.

“நான் அல்ல” என்று எதிர்கால ’நான்’ நினைத்துக் கொள்கிறது என்பதாலேயே தான் மீண்டும் மீண்டுமென நாம் அதை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறோம். இங்கு நான் காலத்தை யோசித்துப் பார்த்தேன் ஜெ. “காலம் அனைத்தையும் தீற்றலாக்குகிறது” இன்று அந்தத் தீற்றல்களை யோசித்துப் பார்த்தால் அவையாவும் Absolute-ன் ஒரு பகுதி என்றே தோன்றுகிறது.

இங்கு தான் ஐன்ஸ்டீன் காலத்தை Absolute அல்ல Relative என்பதைக் கண்டறிந்திருப்பார் என்று தோன்றுகிறது. காலத்தை மாயம் என்று கொண்டால் திறக்கும் வாசல்கள் ஏராளம். அதைவிட “நான்” என்பதையே மாயம் என்று கொண்டால் அது இன்னும் பல்லாயிரம் வேறு வாசல்களைத் திறக்கிறது ஜெ. “நான்” மாயமாகும் போது கண்டறிந்த/கண்டறியப்படாத அனைத்துப் பரிமாணத்தையும் மாயம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. அப்படியானால் இருப்பது “Time, Space, Gravity”  என்ற பரிமாணம் மட்டுமல்ல. இந்தப் பரிமாணங்கள் முடிவிலி என நீண்டு கொண்டே இருப்பவை. ஒவ்வொரு பரிமாணத்தையும் கண்டறிந்து உலகை அறியும்போது வியப்பு கொள்கிறோம். ஒன்றை Absolute ஆக்கும்போது ஒரு வாசல் திறக்கிறது. அதையே Relative ஆக்கும் போது வேறு பல வாசல்கள். புதிய பரிமாணத்தின் சாத்தியங்கள் வரும்போதெல்லாம் அதில் திறக்கும் முடிவிலி வாசல்களைப் பார்த்துத் திகைக்கிறோம். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து மனிதகுலம் எத்தனை பரிமாணங்களைக் கண்டடைந்திருக்கும் என்று கூற முடியவில்லை. ஆனால் அங்கு நின்றும் அவை அடையப் போகும் உச்ச சாத்திய ஞானம் ஒன்று என்றே தோன்றுகிறது ஜெ. அறிவியலிலும் இது நிறைவின்மையின் பாதை தான். Absolute க்கு சென்றடைய அவர்களுக்கு இருப்பதும் நிறைவினமையின் பாதை தான். தத்துவத்திலும் ஆன்மீகத்திலும் அதே நிறைவின்மையின் பாதை தான்.

அப்படியானால் சுயம் என்பதை எப்படி முழுமையாக உணர்வது? நீங்கள் சொல்வது போல செயல் செயல் என நிகழில் திகழ்ந்து சென்றுகொண்டே இருப்பது தான். நிகழில் மட்டுமே “நான், ஆத்மன், மாயை, முழுமை” என யாவற்றையும் உணர முடியும் என்று நினைக்கிறேன் ஜெ. உண்மைதானா?

இது அறுதியான உண்மை என்றும் தோன்றவில்லை. ஏனென்றால் வித்யையும் மாயை என்கிறார்கள். ஞானமும் கூட உளமயக்கைத் தரக் கூடியது என்கிறார்கள்! மண்டை வெடித்துவிடும்போல இருக்கிறது. அதனால் இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன் ஜெ.

பிரேமையுடன்

ரம்யா.

***

அன்புள்ள ரம்யா

மாயை போன்ற கலைச்சொற்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அவை பெரிய மரங்களைப் போன்றவை ஆழத்தில் புதைந்து எண்ணமுடியாத தொலைவுகளுக்கெல்லாம் சென்று பரவிய வேர்கள் உண்டு. கண்ணுக்குமுன் தூலமாக எழுந்து எப்படி சென்றாலும் முட்டிக்கொள்ளும் அளவுக்கு பிரம்மாண்டமாக நின்றிருக்கும் அடிமரங்கள் உண்டு. தலைக்குமேல் நிழலென விரிந்து பல்லாயிரம் நாக்குகளென துடிதுடித்துக்கொண்டிருக்கும் இலைப்பரப்புகள் உண்டு. தளிர்கள் உண்டு, மலர்கள் உண்டு, கனிகளும் உண்டு. உலகெங்கும் பரவும் விதைகளும் உண்டு. ஆகவே இக்கலைச்சொற்களில் ஒரு குறிப்பிட்ட விவாதச் சூழலில் ஒரு குறிப்பிட்ட களத்தில் திட்டவட்டமாக வரையறை செய்துகொண்டு பேசுவதே உசிதமானது.

தத்துவத்தில் மிகப்பிழையான ஒன்று என்பது மேற்கோள் வழியாக யோசிப்பது. தத்துவத்திற்குள் தொடக்ககால வாசகர்களை, மாணவர்களை உள்ளே கொண்டு வருவதற்கு மேற்கோள்கள் உதவியானவை. அவை மூளையைத் தொட்டு உசுப்புகின்றன. புதிய கேள்விகளை உருவாக்கி அலைக்கழிய வைக்கின்றன. அவற்றிலிருந்து வாசகன் தத்துவத்திற்குள் வருவான். தத்துவத்திற்குள்  வந்த பெரும்பாலானவர்கள் அப்படித்தான் நுழைந்திருப்பார்கள்.

ஆனால் மேற்கோள்கள் ஒரு விரிந்த விவாதப்புலத்தில் முன்வைக்கப்பட்டவை.  ஒரு பொதுச்சித்தரிப்பின் ஒரு பகுதியாக அமைபவை. அந்த விவாதக்களத்தில் அச்சித்தரிப்பில் அம்மேற்கோள் உருவாக்கும் கருத்தும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்களும் என்னவாக இருக்கின்றன என்று அறியாமல் நாம் புழங்கிக்கொண்டிருக்கும் அறிவுத்தளத்தில் விவாதக்களத்தில் அந்த மேற்கோள்களின் கருத்தையும் கலைச்சொற்களையும் எடுத்து புரிந்துகொள்வது என்பது பெரும்பாலும் பிழையாகவே அமையும்.

ஆகவே ஒரு கட்டத்துக்கு மேல் உதிரி மேற்கோள் வழியாக யோசிப்பதை முழுமையாகவே நிறுத்திக்கொள்ளவேண்டும். எந்த தத்துவ விவாதமானாலும் அதனுடைய தொடக்கம், முதிர்வு, எதிர்நிலை ஆகிய மூன்று நிலைகளையும் அறிந்த பிறகு நம்முடைய சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

இந்தக்கடிதத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாயை எனும் சொல் சார்ந்த கருத்துக்களை ஒன்றாகத் தொகுத்து உங்களுக்கான ஒரு தரப்பை உருவாக்க முயல்கிறீர்கள்.  தத்துவத்தில் இது பிழையென கருதப்படும். ஒரு முழுக்கட்டுரையுமே மேற்கோளாக்கி இந்த விவாதத்தை நீங்கள் தொடங்கியிருந்தால் அந்த கட்டுரைக்கான எதிர்த்தரப்பு, அக்கட்டுரையின் முந்தைய பரிணாம வளர்ச்சி, அக்கட்டுரையின் எதிர்கால வளர்ச்சிச் சாத்தியங்கள் ஆகியவற்றைக்கொண்டு இவற்றை விவாதிக்க முடியும்.

இது ஆழ்ந்த தத்துவ விவாதம் போல் தோன்றினாலும் இதிலுள்ள அடிப்படையான பிழை என்ன என்று சுட்டவே இதைச் சொன்னேன். மாயை என்னும் கருதுகோள் இந்திய தத்துவ மரபிலேயே வெவ்வேறு வகையில் வெவ்வேறு பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது.

அத்வைத மரபில் பிரம்மம் ஒன்றே மெய்யானது. பிற அனைத்துமே அதனுடைய மாயத்தோற்றங்கள் தான். பிரம்ம சத்யம், ஜகன்மித்யை. இப்பிரஞ்சத்திலுள்ள அனைத்தும் தோற்ற மயக்கங்கள் தான் ஆனால் வெவ்வேறு பக்தி மரபுகளில் இறைவனின் அழகிய லீலையாகவே மாயை கருதப்படுகிறது. இறைவனிடம்  அழைத்துச் செல்லும் பாதையாக மாயை கருதப்படுகிறது. மனிதனை செயல்களத்தில் ஈடுபடவைத்து விவேகத்தையும் ஞானத்தையும் பெறச்செய்து பரம்பொருளின் தோற்றத்தை மாயை வழங்குகிறது. ஆகவே  அதுவும் பரம்பொருளே. இங்குள்ள எதுவும் பிரம்மமன்றி வேறில்லை என்று வரும்போது மாயையும் பிரம்மத்தின் தோற்றமே.

மாயையை பழித்தல் என்பது அத்வைதத்தில் உள்ளது. ஆனால் மகாமாயை என்று உலகளந்த பராசக்தியை வழிபடும் மரபு சாக்தமரபில் உள்ளது. இன்று கேரளத்தில் சென்றால் பெரும்பாலான தேவி கோயில்களில் ‘அம்மே மகாமாயே’ என்று கூவி வழிபடுபவர்களை நீங்கள் பார்க்கலாம். மாயா வடிவமாக அங்கிருப்பவள் உலகளந்த அன்னை. ஆகவே மாயை என்பதற்கு ஒரு பொருள் மட்டும் இல்லை. அது ஒரு கருத்தோ ஒரு பொருளோ அல்ல.

இங்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்? ஒரு செயல்; அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உளமயக்குகள் எதிர்பார்ப்புகள், விளைவை எண்ணி செய்யப்படும் செயல்களுக்கு இருக்கக்கூடிய பொருளின்மை, உலகச் செயல்களை இயற்றிச் சென்றடையும் வெறுமை என நீங்கள் கொடுக்கும் அர்த்தங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இங்கு அச்சொல்லுக்கு ஒரு அறுதியான பொருளை நீங்கள் வகுத்துக்கொண்டு மேற்கொண்டு சிந்திக்கும்போது தெளிவை அடைவீர்கள். எந்த சிந்தனை மரபுக்குள் நீங்கள் நிற்கிறீர்கள் என்பதை அதற்கு முன் வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்திய மரபில் ஒருவர் முதலில் தன்னை வேதாந்தி என்றோ சைவ சித்தாந்தி என்றோ உறுதியாக வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் ஒவ்வொரு விவாதத்திலும் உனது ஆசிரியர் யார், உனது நூல் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவ்வாறன்றி வெவ்வேறு தரப்புகளின் அறிதல்களை கலந்து தனக்கென ஒன்றை உருவாக்கிக்கொண்டால் அத்தரப்பை ஒருவர்  ஒரு முழுமையான தத்துவத் தரப்பாக தானே வரையறுத்துக்கொள்ளும் வரைக்கும் அது விவாதத்துக்குரியதல்ல. அதாவது நீங்களே ஒரு சங்கரரோ மத்வரோ ஆகும்வரை அத்தரப்பு தத்துவத்திற்குள் பேசப்படாது.

இறுதியாக இச்சொல்லை மிக எளிய உலகியல் அர்த்தத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டு மேலே பேசுகிறேன். இங்கு நாம் வாழும் வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம் என்று உணர்கிறீர்கள். இங்கு வாழ்ந்து உறவுகளைப்பின்னி அவற்றுக்கான கடமைகளை நிறைவேற்றி மடிகிறோம். இந்த வாழ்க்கைச் செயல்பாடுகளை இலக்குகளை வைத்து உழைக்கிறோம். எய்தியதும் நிறைவுறுகிறோம். கடமைகளை இயற்றும்போது தன்னிறைவையும் அவற்றுக்கான பயன்கள் விளையும்போது மகிழ்வையும் அடைகிறோம். இவ்வாறு வாழ்ந்த வாழ்க்கையின் இலக்குகள் நடைமுறைகள் விளைபயன்கள் ஆகிய மூன்றுமே வெறும் மனமயக்கங்கள் தானா என்று நீங்கள் இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதாக புரிந்துகொள்கிறேன்.

அதற்கு மாயை என்ற சொல்லை பயன்படுத்த வேண்டியதில்லை. அச்சொல்லின் தத்துவ அர்த்தம் மிக விரிவானது, மிகப்பெரிய சொல் அது. ஆணி அடிப்பதற்கு கல்லுடைக்கும் இரும்புக்கூடத்தை எடுக்க வேண்டியதில்லை. உண்மையில் மாயை என்ற சொல்லை இந்த விவாதத்தின் இறுதியில் இருந்து உண்மையான தத்துவ விவாதத்துக்குள் செல்லும்போது பயன்படுத்தலாம். அதுவரைக்கும் அதை அப்பால் நிறுத்தி வைப்போம்.

உலகியல் செயல்பாடுகள் பொருளற்றவையா? அவ்வப்போது நமக்குத் தோன்றுவது அது. நமது பெரும்பாலான மனநிறைவுகள் மகிழ்ச்சிகளும் உலகச் செயல்பாடுகளில்தான் உள்ளன. ஒரு நல்ல வேலை கிடைத்தால், பணம் கிடைத்தால், நல்ல பொருள் வாங்கினால் உரியவர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் மகிழ்கிறோம். அம்மகிழ்ச்சி பொய்யானதா என்ன? அவ்வண்ணம் எண்ணியது நிகழாத போது இவை அனைத்தும் பொய் என எண்ணுவோம் எனில் அது நமது உளச்சோர்வுக்கான ஒரு காரணத்தை நாம் கண்டுபிடிப்பது தவிர மெய்யானதல்ல. மகிழ்ச்சி உண்மை, துயரம் மாயை என எண்ணுவீர்கள் என்றால் அது எப்படிப்பட்ட மடமை. உலகியல் என்பது பொய் என்று சொல்லவேண்டும் என்றால் அதன் மகிழ்ச்சிகளும் பொய் என உண்மையாகவே உணரும் மனநிலை இருக்கவேண்டும்.

பாரதி ஒருவேதாந்தியாக நின்று சொன்னதுதான் இது. இவ்வுலகத்திலுள்ள இன்பங்கள், கடமைகள், இலக்குகள் எவையும் பொய்யானவை அல்ல. அவற்றைத் துறந்துவிட்டு நாம் இங்கு வாழவும் இயலாது. உறவுகளும் கடமைகளும் தவிர்க்கக்கூடியவை அல்ல. ஆனால் அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை உணர்ந்திருப்பதற்கு இத்தகைய சில தத்துவத் தெளிவுகள் பயன்படும். உலகியல் இலக்குகள் முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவு. ஆனால் அவை  மட்டுமே முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவின்மை.

அது ஒரு பொருளுக்கு அதற்கு தகுதியில்லாத பல மடங்கு விலை அளிப்பது போல. நூறு ரூபாய் மதிப்புள்ள சட்டையை நூறு ரூபாய்க்கு வாங்குவதென்பது பொருளுள்ள செயல். முழு வாழ்க்கையையும்  கொடுத்து அந்த சட்டையை ஒருவர் வாங்கினாரென்றால் அது அபத்தமானது. உலகியல் வாழ்க்கைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே அளிப்பவர் உலகியல் வாழ்க்கை பொருளற்றது என்ற இடத்துக்கு சென்று சேர்வதில்லை. அது அளிக்கும் இன்பங்கள் இவ்வளவுதான் என்பதை உணர்பவர்கள் அது அளிக்கும் துன்பமும் அவ்வளவுதான் என்பதை வகுத்துக்கொள்ள முடியும்.

உங்கள் உறவுகளில் ஒரு நன்று நடந்தால் அது முழு வாழ்க்கையின் வெற்றி என்று நீங்கள் துள்ளிக் கொண்டாடுவீர்கள் என்றால் உங்கள் உறவுகளில் ஒரு தீது நடந்தால் முழு வாழ்க்கையும் அழிந்துவிட்டதென்ற பெருந்துயரை அடைவீர்கள். முழு வாழ்க்கையின் அர்த்தமே உலகியல் சார்ந்ததென்று எண்ணுவீர்கள் என்றால் உலகியலில் அடையும் தோல்வி முழு வாழ்க்கையையும் பொருளற்றதாக்கிவிடும் என்றும் அறிவீர்கள்.

உலகியல் என்பது என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி. அது மனமயக்கல்ல பொய்யல்ல.  மாயை அல்ல. இங்கு நாம் உடல்கொண்டு இருப்பதனாலேயே வேறு வழியில்லாமலேயே அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம்.  உணவுண்டால் தான் பசி தீருமே ஒழிய எந்த தத்துவத்தை வைத்தும் பசியை தீர்க்க முடியாது. பொருளீட்டினால் தான் வாழ்வே ஒழிய உள எழுச்சிகளைக்கொண்டு வாழ்ந்துவிட முடியாது. உணவுக்கும் உலகப்பொருளுக்கும் உகந்ததை இயற்றுவது எவ்வகையிலும் பொய்யல்ல. தேவையற்றதல்ல.

ஆனால் அதற்கப்பால் நமக்குரிய அகக்களங்கள் வேறு .நாம்  இங்கு ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன. நாம் அடையவேண்டிய நுண்ணிய இன்பங்கள் ,ஆழ்ந்த நிறைவுகள் பல உள்ளன. நமக்குள் அவற்றை நிகழ்த்திக்கொள்வதற்கு உரிய புறத்தை உருவாக்குவதே உலகியலில் நாம் செய்யவேண்டியது. நமது தெய்வத்தை நிலை நிறுத்தும் கல்பீடம் இது என்று கொள்க. இங்கிவற்றை இயற்றும்போது அகத்தை நம்மை ஆக்கிக்கொள்வதற்கான சில நிபந்தனைகளை நிறைவேற்றுகிறோம்.

ஆகவே பொய்யென்றும் வீணென்றும் இவற்றை நினைக்க வேண்டியதில்லை.  உல்கியல் ஒரு சிறிய தெய்வம் இந்த தெய்வத்திற்குரிய படையலையும் பூசையையும் கொடுப்போம். தலை கொடுக்க தகைமை கொண்ட பெருந்தெய்வம் நமக்குள் நமக்காக காத்திருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைமறைமலையடிகள், ஒரு தொடக்கம்
அடுத்த கட்டுரைகேட்பவனும் சொல்பவனும்- கடிதம்