பெண்கள்,காதல்,கற்பனைகள்
ஈர்ப்பின் விசை – யுவன் சந்திரசேகர்
அன்புள்ள ஜெ
ஒரு தனிப்பட்ட கடிதம். ’கோச்சுக்க மாட்டீங்க’ன்னு நம்புகிறேன். அருண்மொழி நங்கை எழுதிய கட்டுரையில் நீங்கள் அவர்களைப் பார்த்த முதல் நாளே ஊருக்கு போய் காதலை தெரிவித்து நீண்ட கடிதம் எழுதிவிட்டீர்கள் என எழுதியிருக்கிறார். அப்படிச் சீக்கிரம் முடிவெடுக்க முடியுமா? அது சரிதானா?
(அடுத்த சந்திப்பிலேயே டி போட்டு வேறு கூப்பிடுகிறீர்கள்)
ரஞ்சனி சிவா
அன்புள்ள ரஞ்சனி,
முதல் சந்திப்பின்போது, முதல்முதலாக அவளைப் பார்த்த ஐந்தாவது நிமிடமே ஏறத்தாழ முடிவெடுத்துவிட்டேன். அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் உறுதியும் செய்துவிட்டேன். அந்த தருணத்தை நானும் எழுதியிருக்கிறேன்.
ஆனால் அது ‘கண்டதும் காதல்’ அல்ல. உள்ளுணர்வை நம்பி முடிவெடுப்பது. என் அணுக்கமான நண்பர்களுக்கு தெரியும், நட்பும் அப்படித்தான் என்னால் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 1987ல் குற்றாலம் கவிதைப் பட்டறையில் யுவன் சந்திரசேகரைப் பார்த்தேன். ஒரு ஹாய் சொல்லிக்கொண்டோம். அவன் கவிதை பற்றி ஒரே ஒரு கேள்வியை முக்கி முனகி கேட்டான். அரங்கில் யாரோ சலிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர்.
சிகரெட் பிடிக்க அவன் வெளியே போனான். நான் கூடவே சென்றேன். ‘சிகரெட்?’ என்றான். ’சிகரெட்லாம் மடையன் தான் குடிப்பான்’ என்றென். ‘வாஸ்தவமான பேச்சு’ என்றான். அக்கணமே நண்பர்கள். அப்படியே கிளம்பி அவன் வீட்டுக்குச் சென்று ஓரிருநாட்கள் தங்கி பேசி, சண்டைபோட்டு, அதன்பிறகுதான் ஊருக்கே போனேன்.
என் அணுக்கமான நண்பர்கள் அனைவருமே அப்படித்தான் வந்து சேர்ந்திருக்கிறார்கள். மிஞ்சிப்போனால் ஐந்து நிமிடம் ஆகும் நட்பாக. அது வாழ்நாள் முழுக்க நீளும். அன்பு, அரங்கசாமி , கனடா செல்வம், சுகா, ஆஸ்டின் சௌந்தர், செந்தில்குமார், வசந்தபாலன், ஷாகுல் ஹமீது என எல்லாருமே கணநேரத்தில் நட்பானவர்கள்தான். அப்படி எத்தனை பேர். ‘எண்ணிச் சீர்தூக்கி’ நட்பென ஏற்றுக்கொண்ட எவரும் இல்லை.
ஈரோடு கிருஷ்ணன் என்னை தேடி ஈரோட்டில் இருந்து தன் நண்பர்களுடன் நாகர்கோயில் வந்திருந்தார். அப்போது அவருக்கு பரீக்ஷா ஞாநி, ஜென்ராம் போன்றவர்கள் ஆதர்சம். இலக்கியம் இசை எல்லாம் கவைக்குதவாத வேலை என எண்ணம். கணிதம், அறிவியல் ஆகியவை மானுடத்துக்கு போதும், எஞ்சியவற்றை ஒழிக்கவேண்டும் என உறுதி பூண்டிருந்தார். அவ்வாறு ஒழிக்கப்படவேண்டியவர்களில் ஒருவராக என்னை பட்டியலில் வைத்திருந்தார். ஆனால் என் எழுத்து எதையும் படித்ததில்லை. கேள்விப்பட்டதுடன் சரி. நேரிலும் பார்த்ததில்லை.
சந்தித்து அறிமுகம் முடிந்ததுமே ‘சில கேள்விகள் கேக்கலாமா?” என்றார். ’சரி’ என்றேன். நீண்ட ஒரு காகித ரிப்பனில் ஏராளமான கேள்விகள் எழுதி வைத்திருந்தார். பரிணாமம், இயற்பியல், உலகவரலாறு, இந்திய அரசியல்… நான் ஒவ்வொன்றுக்கும் பதில் சொன்னேன். அவர் கேள்வியே பட்டிராத பெயர்கள். ரோஜர் பென்ரோஸ் என்றும் ஆலிவர் சாக்ஸ் என்றும் சொன்னதும் குறித்துக்கொண்டார்.
டீ போட்டுக்கொண்டிருந்த அருண்மொழியை பார்க்கச் சென்றேன். சிரித்துக்கொண்டிருந்தாள். ‘என்ன?” என்றேன்.
“ஜெயன், இந்தாளு ஒரு லூசு. ஆனா ரொம்ப ரொம்ப நேர்மையான மனுஷன்’ என்றாள்.
அன்றே அவர் என் நண்பரானார். இன்றுவரை ஒருநாள்கூட விடாமல் பேசிக்கொள்ளும் நண்பர். இன்று எனக்கும் அருண்மொழி சொன்ன அதே கருத்துதான், என்னைப்போலவே லூசு, ஆனால் என்னை விட நேர்மையானவர்.
அரங்கசாமி எனக்கு ஒரு கடிதம் போட்டார். உடனே தன் குழந்தையும் மனைவியுமாக கிளம்பி நாகர்கோயில் வந்தார். பையனுக்கு நான் எழுத்தறிவிக்கவேண்டும் என்றார். அன்றே நண்பர்களானோம். நன்றாக நெருங்கியபின்னரே அவர் யார் எவர் என்று தெரிந்துகொண்டேன்.
ஆசிரியர்களையும் அப்படித்தான் தேர்வு செய்திருக்கிறேன். சுந்தர ராமசாமியை நேரில் சந்தித்தபோது ‘சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர்கள் இலக்கியம் எழுதமுடியுமா?” என்று கேட்டேன்.
“சில்வர்ஸ்பூன் பற்றி எழுதலாமே?” என்று சொல்லி சிரித்த ராமசாமி ’இருங்கோ, அப்டியே பேசிட்டே வீட்டுக்குப் போலாம்’ என்றார்.
சு.ரா வீட்டில் வந்து தங்கிய ஆற்றூர் ரவிவர்மாவுடன் நான் ஒரு சின்ன நடை சென்றேன். அவருக்கு ஒரு சவர பிளேடு வாங்கவேண்டியிருந்தது. ஒரு அன்னைப்பன்றி சாக்கடையில் இருந்து தலைநீட்டியது. “சார் , நில்லுங்க. ஒரு பண்ணிக்கூட்டம் ரோட்டை கிராஸ் பண்ணப்போகுது” என்றேன்
“எப்படி தெரியும்?” என்றார்
“அது தாய்ப்பன்னி. அதோட காது பின்னாடி மடிஞ்சு அசையுது. கீழே குட்டிகள் இருக்கு”
சட்டென்று ஒரு பன்றிக்குடும்பம் கரிய உருளைகளாக சாலையை கடந்தது. சுழித்த குட்டிவால்களுடன் சிறுகால்கள் வைத்து குடுகுடுவென ஓடின பன்றிக்குட்டிகள்
“கதைகள் எழுதுவாயா?”என்றார் ஆற்றூர்
“இல்லை” என்று பொதுவாகச் சொன்னேன்.
“நீ எழுத்தாளன்” என்றார்.
அவ்வாறு தொடங்கியது அவருடைய வாழ்நாள் இறுதி வரை நீண்ட ஆழமான நட்பு.
நித்ய சைதன்ய யதியை நான் ஆசிரியராக ஏற்றுக்கொண்ட தருணத்தையும் எழுதியிருக்கிறேன். நான் அவருடைய ஓரிரு கட்டுரைகளை வாசித்திருந்தேன், ஆனால் அவை முக்கியமான கட்டுரைகள் அல்ல. எனக்கு துறவிகள் மேல் ஆழ்ந்த சலிப்பு இருந்த காலம். என் நண்பர் நிர்மால்யா மணி என்னை கட்டாயப்படுத்தி அவரை பார்க்க அழைத்துச் சென்றார். அவருடன் ஊட்டி குருகுலத்துக்குள் நுழைந்தேன். நேர் எதிரில் நூறடி அப்பால் நித்யா ஒரு சிறு மாணவர்குழுவுடன் நின்று நின்று மலர்களை பார்த்தபடி வந்துகொண்டிருந்தார்.
நான் எண்ணியது நினைவிருக்கிறது. ஒரு பத்துவயது சிறுவன் போலிருக்கிறார் என. அத்தனை தெளிந்த கண்கள். அக்கணமே அவருடைய மாணவரானேன். முழுமையாக என் ஆணவத்தை அழித்து அவரை ஏற்றேன். அவர் காலடிகளை தொட்டு வணங்கியபோது ‘என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என மனதுக்குள் சொன்னேன்.
எல்லா முடிவுகளையும் அப்படித்தான் எடுக்கிறேன். அப்படி எடுக்கலாமா? கூடாது என்றே சொல்வேன். வணிகத்தில் என்றால் அது மாபெரும் பிழை. வாழ்க்கையிலும் அபாயம்தான். ஆனால் என்னால் அப்படித்தான் செயல்பட முடியும். என் இயல்பு முழுக்கமுழுக்க என் உள்ளுணர்வை மட்டுமே நம்பிச் செயல்படுவது.
ஜெ
பிகு
டி,டா போடுவது கேரள -குமரிமாவட்ட பண்பாடு. தமிழ்நாட்டில் நான் எவரையும் டா,டி போடுவதில்லை. அவன் இவன் என யுவன் சந்திரசேகரை தவிர எவரையும் சொல்வதுமில்லை. கேரளத்தில் நிலைமை வேறு. 1988ல் பாலசந்திரன் சுள்ளிக்காடு என்னை அறிமுகம் செய்துகொண்டார். இரண்டு நிமிடம் கழித்து என்னிடம் ‘டா, நீ சி.வி.ராமன்பிள்ளை எழுதிய சிதறால் மலைக்கு போயிருக்கியா?” என்றார். என் மலபார் நண்பர்கள், நண்பிகள் எல்லாமே டா, டிதான்.