இணையநூல்கள்

இனிய ஜெயம்

தமிழ் எண்ம நூலகத்தில் இரண்டு முக்கியமான தத்துவ நூல்கள் பதிவேற்றம் கண்டிருக்கிறது.

முதலாவது, தேவிப்ரஸாத் சட்டோபாத்யாய எழுதிய கரிச்சான் குஞ்சு மொழியாக்கம் செய்த  _ இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் _ எனும் நூல்.

பொதுவாக கட்சி சார் மார்க்சியம் பேசும் பொருள் முதல் கருத்து முதல் எனும் இருமை மிக மிக எளிமையானது. இந்து  தத்துவ மரபை இந்த எளிய வாய்ப்பாட்டின் படி குறுக்கி அணுகுவது என்றுமே கட்சி சார் மார்க்சியத்தில் உள்ள சீர் செய்ய இயலா கோணல். இவை போக மானுடத்தை ஆட்டிவைக்கும் காம க்ரோத மோகம், இந்து மெய்யியல் கொண்ட அடிப்படை தவிப்பான ‘மானுட துக்கம்’ இவை குறித்தெல்லாம் மார்க்சியத்துக்கு அன்றும் இன்றும் எதுவும் தெரியாது.

இத்தகு போதாமைகளுக்கு வெளியே தேவி பிரஸாத் அவர்களின் முக்கியமான பங்களிப்பு என்பது 17 ஆம் நூற்றாண்டு துவங்கி பின்னோக்கி பொருள்முதல்வாத தரப்புகள் வழியே வேதகாலம் வரை சென்று, பண்டைய இந்தியாவின் பொருள்முதல் வாத தரப்பின் தோற்றுவாய் என்னவாக இருந்தது என்பது குறித்து மார்க்சிய முறையில் அவர் நிகழ்த்திய ஆய்வு. ( அவ்வாய்வு உலகாயதம் எனும் தலைப்பில் ncbh இல் வாசிக்க கிடைக்கிறது) .

இந்த ஆய்வில் நமக்கு கிடைத்த முக்கியமான விஷயம் ஒன்று மிக சுவாரஸ்யமானது. பல்வேறு பொருள்முதல்வாத தரப்புகள் எல்லாம் ( அவற்றின் மூல நூல் காலத்தால் மறைந்து போய்விட) அவை எவற்றுடன் விவாதித்தனவோ அந்த எதிர் தரப்பு அதன் சுப பர பக்க விவாத முறைமையில் இந்த அழிந்து போன பொருள்முதல்வாத தரப்புகள் மொத்தத்தையும் கொண்டிருந்தன.

அப்படி கருத்துமுதல் தரப்பின் வழியாக மீட்டுருவாக்கம் கண்ட பொருள்முதல்வாதம் உள்ளிட்ட இந்தியத் தத்துவப் பாரம்பரியம் குறித்த நூலே மேற்கண்ட நூல்.

இரண்டாவது, இல. மகாதேவன் அவர்கள் எழுதிய இந்திய தத்துவ ஞான மரபில் ஆயுர்வேதம் குறித்த _ பத்தார்த்த விஞ்ஞானம் _ எனும் நூல்.

ஆயுர்வேதம் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான பாட நூல். இந்திய தத்துவ மரபினை விரிவாக அதன் வாத கதியுடன் அறிமுகம் செய்து, அதன் ஒரு பகுதியாக ஆயுர்வேதம் எனும் ‘முழுமை நோக்கை’ கற்பிக்கும் நூல். ஆயர்வேதம் எனும் தரிசனத்துக்கும் ‘வீடு பேறு’ என்பதே இலக்கு என்று முன்னுரையில் கூறுகிறார் நூலாசிரியர். ஆயுர்வேதம் இலக்காகும் ஆரோக்கியம் என்பது உடல் தெளிவு உள்ளத் தெளிவு அதன் பயனான ஆத்மீகத் தெளிவு என்று கூறுகிறார். ஸ்வஸ்தா எனில் மெய்மையை அறிந்து அதில் நிலைத்திருக்கும் நிலை என்கிறார் நூலாசிரியர். விஷ்ணுபுரம் நாவலுககான பல பத்து துணை நூல்களுள் ஒன்றாக, பவதத்தர் .மரணத்தை தனது மாணவர்களுக்குகு முன்னறிவிக்கும் ஆயுர்வேத ஞானி கணநாதர் தரப்பு என்றும் இந்த நூலை வாசிக்கலாம். இந்த வகைமையில் இதுவே தமிழில் ஒரே நூல் என்று எண்ணுகிறேன்.

பின்குறிப்பு:

தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் நூலக தளம் உட்படுவதால் நூல் தேவைப்படும் வாசகர்கள் உடனடியாக தரவிறக்கி கொள்ளவும்

கடலூர் சீனு.

அன்புள்ள சீனு,

இந்த ‘தளம் மேம்படுத்தல்’ வேலைகளை கடந்த பத்துப்பதினைந்தாண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூகிள் புக்ஸ் இருபதாண்டுகளாக ஒரே சுட்டிகளுடன் இயங்குகிறது. இங்குள்ள தளங்கள் நாலைந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு சிறு தொழில்நுட்ப மேம்படுத்தலுக்காக மொத்தமாகவே மாற்றிவிடுகிறார்கள். அந்த இணைய நூலகத்துக்கு பல்லாயிரம் இணைப்புகள் அளிக்கப்பட்டிருக்கும். அத்தனையும் தொடர்பறுந்துவிடும். தமிழ் விக்கியை பாருங்கள் , 90 சத இணைப்புகள் பயனற்றவை.

மிகச்சிறிய தொழில்நுட்ப கவனமிருந்தால் அந்த இணைப்புகள், சுட்டிகள் அப்படியே இருக்க தளத்தை மேம்படுத்த முடியும். ஆனால் நம் கணிப்பொறி ஆசாமிகளில் வாசிப்பு, சிந்தனை ஆகியவற்றுடன் மிகமிகமிக மேலோட்டமான அறிமுகம் கொண்டவர்கள், உலகில் புத்தகம் என சிலவற்றை சிலர் படிக்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் லட்சத்தில் ஓரிருவர்.

என் தளத்தை அப்படி சற்று மேம்படுத்த வேண்டியிருந்தபோது இணைப்புகள் போய்விடுமா என்று கேட்டேன். நான் கேட்டதே அந்த கணிப்பொறி ஆளுக்கு புரியவில்லை. விழித்தார். விளக்கியபோது அதெல்லாம் போயிடும் என்றார். போடா என்றுவிட்டேன். நாம் ஒருவகை பண்பாட்டுத் தற்குறிகள். நமக்கு அடிப்படைகளைப் புரியவைக்க ஓரிரு தலைமுறை ஆகலாம்

ஜெ

முந்தைய கட்டுரைசுடரென எரிதல்- “கனலி’ விக்னேஷ்வரன்
அடுத்த கட்டுரைஏப்ரல் 22