பொன்னின் மாயம் -கடிதங்கள்

  அன்புள்ள தோழர்…!

  இது கடலூரிலிருந்து மஹிந்தீஷ் சதீஷ்.

  தங்களின் ‘மாயப்பொன்’ வாசிக்க நேர்ந்தது.

  அற்புதம், அபாரம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட சிறுகதை!

  படித்துக்கொண்டிருக்கும் போதே ‘பழ வாசனை’ அடிப்பது மாதிரி அத்தனை நுணுக்கமான ‘தொழில்’ நுட்பங்களோடு நகர்கிறது இப்படைப்பு!  ‘சாராயம் காய்ச்சும் அவனுக்குள் ஜெயமோகன் புகுந்து கொண்டானா…? ஜெயமோகனுக்குள் சாராயம் காய்ச்சுபவன் புகுந்து கொண்டானா…!?’ தெரியவில்லை..!

  அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது மாதிரி கிளைமாக்ஸ். மற்றும் அது உணர்த்தும் விஷயம் ‘பரிபூரணமான, அதி உன்னதமான, ஆத்ம நிறைவான படைப்பிற்கு பின்னால், அப்படி ஒரு உருவாக்கம் உருவாக்கியவனுக்கே தெரியாமல் உருவான பிறகு அந்தப் படைப்பாளி வாழக் கூட அவசியமில்லை என்பதே…! இது பிறவிப்பயன் அடைந்தபின்  பிறவியின் அவசியமற்றுப் போகும் ஒர் ஞானியின் நிஜ ‘ஆன்ம இளைப்பாற்றி’ற்கான தேடலின் முடிவுக்கு சற்றும் குறையாத அனுபவமாக அக்கதாபாத்திரத்திற்கும்,  ஏன் வாசகனுக்குமே கூட அமைகின்றது!

  ஒரு உன்னத படைப்பு என்பது படைப்பாளியின் அந்நேர உணர்வை மிகச்சரியாக வாசகனுக்கு கடத்துவதே ஆகும்!

  அதற்கு எழுத்தில் ஓர் அநியாயமான நேர்மை தேவைப்படுகிறது!

  தங்களின் ஒவ்வொரு படைப்பும் அதைக் குறைந்தபட்சம் 95 சதவிகிதமாவது பூர்த்திசெய்து விடுகிறது

  வாழ்த்துக்கள் தோழர்!

  தவிர்க்க இயலா அன்புடன்,

  மஹிந்தீஷ் சதீஷ்

  ***

  அன்புள்ள ஜெ

  மாயப்பொன் கதையை முதலில் வாசித்தபோது அந்தச்சூழல், அந்த இடம், அந்த மணம் கூட தெரிந்தது. அது ஓர் அனுபவமாக இருந்ததே ஒழிய அதன் தத்துவார்த்தமான சாரம் பிடிகிடைக்கவில்லை. ஆனால் பின்னர் தன்மீட்சி படித்தேன். அதன்பின் அண்மையில் ஆழத்தின் நிறைவு படித்தேன். ஆகா, இதைத்தானே அந்தக்கதையும் சொல்கிறது என்று புரிந்துகொண்டேன். அக்கதை கலை அதன் உச்சியில் பொன்னாக ஆவதை குறிக்கிறது. Nature’s first green is gold, என்ற வரி ஞாபகம் வந்தது. எல்லாம் அதி தூய நிலையில் பொன். பொன் என அவனுக்குச் சாவு வருகிறது. அது சாவுதானா? அவனுடைய உபாசனா மூர்த்தியா? சாவு என அதைச் சொல்லலாமா? அந்த வேங்கைப்புலியை இன்னமும் கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மிக அண்மையில் இருக்கிறது அது

  எம்.கே.கிருஷ்ணன்

  விஷ்ணுபுரம் பதிப்பகம்

  [email protected]

  https://www.vishnupurampublications.com/

  முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307