பொன்வெளியில் மேய்ந்தலைதல்

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் ஆற்றங்கரையில் நின்றிருந்தேன். எதிரில் குளிப்பதற்கு போட்டிருந்த துவைகல் அருகே எனக்குத் தெரிந்த கல்யாணி அக்கா வந்து அமர்ந்தாள். ஒரு நிமிடம் நான் அவளை அடையாளம் காணவில்லை. இத்தனைக்கும் அவள் உடை, தோற்றம் எதுவும் மாறவில்லை. ஆனால் வேறொருத்தி என்று தோன்றினாள்.

அடையாளம் கண்டபின் பார்த்தேன், என்ன மாறியிருக்கிறது என? அவள் உடல் பொலிவுகொண்டிருந்தது. முகம் ஒளிவிட்டது. சட்டென்று வயலில் பொற்கதிர் எழுந்து பரவியது போல. என்ன நிகழ்ந்தது?

அவள் அப்பா விட்டுவிட்டு போய்விட்டார். அம்மா வீட்டுவேலை செய்து வாழ்பவர். அவள் வேலைக்குப் போகமுடியாது, உயர்குடி. ஆகவே கொடும்பட்டினி. வீட்டுக்குள் அரையிருளில் சிறையிருந்தும் ஆகவேண்டும். மெலிந்து வெளிறி, களிம்பு படர்ந்து தூசடைந்த வெண்கல விளக்கு போலத்தான் எப்போதும் இருப்பாள்.

நான் என் அம்மாவிடம் சொன்னேன். “கல்யாணி அக்கா வேற மாதிரி இருக்கா”

என் அம்மாவின் அருகே இருந்த சலவைக்கார பானுமதி உடனே சொன்னாள். “அவளுக்கு பொன்னுருக்கியிருக்கு”

அது பலபொருள் கொண்ட சொல். பொன்னுருக்குதல் என்றால் நேர்ப்பொருள் நகைசெய்வது. குறிப்புப் பொருள், திருமணமாகப்போகிறது. கூர்ப்பொருள், காதல் கொண்டிருக்கிறாள். அப்பாலுள்ள பொருள், அவள் உடலில் பொன்னிறம் பரவி எழில் கூடியிருக்கிறது.

சிலநாட்களிலேயே தெரிந்தது, அயலூரில் இருந்து அங்கே வந்து அச்சு கடையின் மாடியில் தங்கியிருக்கும் பள்ளி ஆசிரியர் அவள்மேல் காதல் கொண்டிருந்தார். அவள் அவரை மணந்துகொண்டார். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என பெருகி பொலிந்தாள்.

பொன்னுருக்குதல் என்னும் சொல்லாட்சி என் செவியில் அவ்வப்போது கேட்கும். ஏராளமான நாட்டார்பாடல்களை அப்படிமம் இணைத்துச் செல்வதுண்டு. “பொன்னுண்டோ தட்டானே? பெண்ணுண்டு தட்டானே” என்றொரு பாட்டு. பொற்கொல்லரிடம் ஒரு பெண் கேட்பது. பொன்னுருக்கி தரமுடியுமா? அந்த விண்ணளந்து மண்வகுத்த பொற்கொல்லன் அவளுக்கும் கொஞ்சம் பொன் எடுத்து வைத்திருப்பான்.

இன்றைய மதுரம் தேடி கபிலனுக்கு வந்தேன். இவன் வேரும் இனிக்கும் பெருமரம். இங்கன்றி இடம் வேறில்லை.

”நாய் தான் கவ்விய பொருளை எடுத்துக் கொண்டு ஓடுவதுபோல கவிதையை வாசித்ததுமே அதில் இருந்து கிள்ம்பிவிடவேண்டும். நாய் தனக்கான இடத்தில் அமைதியாக படுத்துக்கொண்டு அதை மெல்ல தொடங்கும்” ஆற்றூர் ரவிவர்மா ஒருமுறை சொன்னார்.

நான் கவிதையை வாசிப்பது எப்போதுமே அப்படித்தான். பெரும்பாலும் அவற்றுக்கான பொழிப்புரை, பதவுரை, தெளிவுரை, விரித்துரை, ஆய்வுரை ஆகியவற்றுக்குள் செல்வதில்லை. சென்றால் என் வாய் கவிதையை வேறு பல விலங்குகள் கவ்விப்பிடுங்கி குதறி மென்று சக்கையே எனக்கு கிடைக்கும்.

பலசமயம் கொள்ளப்பட்ட பொருள் ‘சரியானது’ ஆகவும் இருக்கும். சட்டைப்பித்தான் எல்லாம் போட்டு, எண்ணை தேய்த்து படியச்சீவி, பணிவுடன் அமர்ந்திருக்கும் வகுப்பின் முதல்வரிசை மாணவன் எழுந்து சொல்வது போன்ற பொருள். ஆனால் எனக்கு ‘வழிதவறி’ சென்றால்தான் கவிதை கிடைக்கிறது. பெருவழியில் சென்றால் கிடைப்பது உலகியல் விவேகம்.

பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ
மானினப் பெருங்கிளை மேயக ஆரும்
கானகநாடன் வரவும் இவள்
மேனி பசப்பது எவன்கொல் அன்னாய்?

(கபிலர் ஐங்குறுநூறு 217)

பெருமலையில் வேங்கைமரத்தின்
பொன்னென தோன்றும் மலர்களை
மான்கூட்டம் உறவொடு சேர்ந்து மேயும்
காட்டைச் சேர்ந்தவன்
வருவது உறுதியானபின்னரும்
இவள் மேனி மெலிவது ஏன்?

உரையாசிரியர் சொல்வது. தலைவன் மணச்செய்தியுடன் வருகிறான், மான்கூட்டம் வேங்கை மலர்களை கூடி உண்பதுபோல செழுங்கிளை கூட திருமணம் நிகழவிருக்கிறது. ஆயினும் இவள் ஏன் எண்ணி ஏங்கவேண்டும்?

மான் இனப் பெருங்கிளை என்னும் சொல் அந்தப் பொருள்நோக்கிக் கொண்டுசெல்வது உண்மை. ஆனாலும் நான் கொள்ளும் பொருள் வேறு. மான்கள் கூட்டமென ஏன் வேங்கைமலரை மேயவேண்டும்? ஏன் புல்லை மேயலாமே? அதுதானே இயல்பு?

வேங்கைமலர்கள் பொன்னிறமானவை. உதிர்ந்தால் மண்ணையும் பொன்விரிப்பென மூடுபவை. மானும் பொன்னிறமே. வேங்கைமலர்க்குலை அசைவது அங்கே ஒரு மான் நின்றிருக்கிறது என்ற விழிமயக்கையே அளிக்கும். (வேங்கை நின்றிருப்பது என்றும் தோன்றும். ஆகவேதான் அதன் பெயர் வேங்கை.  நான் எரிமருள் என ஒரு கதையே எழுதியிருக்கிறேன்)

விரிந்த பொன்வெளியில் பொன் என திரண்ட மான்கூட்டம் மேயும் காட்சியே என்னுள் எழுகிறது. பொன்னை மேயும் பொன். தன்னை தான் உண்பதா? தலைவியின் அகத்தே நடப்பது என்ன? பொன்னெனத் திரளும் அகம். பொன் என விரியும் வெளி. பொன்னெனப் பூப்பது எது?

முந்தைய கட்டுரைஆனந்தபோதினி
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கத்துக்கு கி.ரா.விருது