வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை

உளுந்து

அருண்மொழிக்கு நான் எழுதிய பழைய கடிதமொன்றை எடுத்து வாசித்து வெடித்துச் சிரித்தது நினைவில் இருக்கிறது. நெருக்கி எழுதப்பட்ட நீண்ட கடிதம். மிகச்சரியாக அதன் உள்ளடக்கத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு பக்கம் அவளை நான் திருமணம் செய்துகொள்வது சம்பந்தமான ஏற்பாடுகள். வீடு வாடகைக்கு பார்க்கவேண்டும், அதற்கு பணம் வேண்டும், சீட்டு போட்டிருக்கிறேன், மேற்கொண்டு பணம் தேவை, ஏற்பாடு செய்துவிடலாம்… இன்னொரு பக்கம் நேரடியாகவே உச்சகட்ட கற்பனாவாத கவித்துவம். உணர்ச்சிப்பெருக்கு. சொற்புயல். மண்ணுடன் சம்பந்தமே இல்லை.

ஆனால் அதுதான் இயல்பானது என்று தோன்றியது. ஒரே கடிதத்தில் மாறிமாறி அவை இருப்பதுகூட இயல்பானதுதான். வான்நிறைந்த ஒளியில் நின்றிருத்தல். கீழிறங்கியதும் அன்றாடம். மீண்டும் எழுந்து வானம். அந்த அலைக்கழிவே காதலின் துன்பம்போன்ற இன்பம்.

அதைச் சொல்லாமலிருக்க மாட்டான் கபிலன் என்று தேடினேன். கண்டடைந்து அக்கவிதையை வாசித்தபோது உள்ளம் எழுந்து பறந்து சுழன்று முகிலை மரக்கிளை இலைப்புதர் எனச் சென்று அமர்ந்தது. நெடுநேரம் எழுந்தும் அமர்ந்தும் தவித்தபின் பெருமூச்சுடன் உரையை வாசித்தேன். அவ்வளவுதான், தரைக்கு வந்துவிட்டேன். மண்ணில் அறைபட்டு விழுந்தேன் என்று சொல்லவேண்டும்.

தமிழில் கவிதைக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரைகள் பெரும்பாலும் கவிதையே இல்லாத அன்றாட யதார்த்தப் புத்தியுடன், எழுதப்பட்டவை. பாவலர்களுக்கு கவிதை புரியக்கூடாதென்பது கலைமகளின் ஆணை. தேனைக் கொண்டுவந்து சேர்க்கும் தேனீக்களுக்கு தேனில் மூழ்கி தவம் செய்யும் உரிமை இல்லை. அவற்றுக்கு கூட்டுக்குள் வேறு தேனீக்கள் உண்டு. உரைகளை மண்ணுக்கு வந்து வாசித்தபின் மீண்டும் சிறகு விரித்து எழுந்தாகவேண்டும். சிறகு கிழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எழமுடியாதபடி எடைமிக்க எதையும் உகிர்களால் பற்றிக்கொண்டிருக்கவும் கூடாது.

கவிதையை ரசிக்க இயற்கைக்குச் செல்லவேண்டும் என்கிறார் எமர்சன். வெளியேயும் நம்முள்ளும் நிறைந்திருக்கும் இயற்கையே கவிதைகளுக்குப் பொருள் அளிக்கிறது. வெளியே நம்மை ஒவ்வொரு பார்வையிலும் திகைப்புறச் செய்யும் நுட்பங்களால் நிறைந்து பரவியிருக்கிறது இயற்கை. உள்ளே நாம் அறிந்த ஒவ்வொரு இயற்கைத் துளியையும் நாம் அர்த்தமேற்றம் செய்து படிமங்களாக்கி வைத்திருக்கும் பெருங்களஞ்சியம் நம்மை பிரமிக்கச் செய்கிறது. கவிதை விதையெனச் சென்று விழவேண்டியது அந்த வளமான நீர்நிலப் பரப்பில்தான். வரண்ட அறிவின் பாறையில் அல்ல.

இருபது வயதுவரை வேளாண்மை செய்துவந்தவன் நான். வயல்வெளிகளில். காடுகளில் அலைந்தவன். நான் வாசிக்கும் கவிதைகளை எல்லாம் குட்டிக்குரங்குக்கு அளித்தவற்றை முந்தி கைநீட்டி வாங்கிக்கொள்ளும் தாய்க்குரங்கு போல எனக்குள் உள்ள அந்த வேளாண்குடிமகன் வாங்கிக் கொள்கிறான். அவன் அளிக்கும் அர்த்தம் நூல்களில் இருப்பதில்லை. நூல்கள் மிகக்கீழே இருக்கின்றன.

குறிப்பாகச் சங்கப்பாடல்கள் இது அடிக்கடி நிகழ்கிறது. ஏனென்றால் சங்கக் கவிதைகளை எழுதியவர்கள் பண்டிதர்கள் அல்ல, என்னைப்போலவே மண்ணில் உழன்றவர்கள், காட்டில் திளைத்தவர்கள். மழையில் ஊறி வெயிலில் காய்ந்து வானத்தின் கீழ் உச்சிமலைப் பாறை போல் தவமியற்றியவர்கள்.

எள்

நெய்யொடு மயங்கிய உழுந்து நூற்றன்ன
வயலை அஞ்சிலம்பின் தலையது
செயலை அம்பகைத்தழை வாடும் அன்னாய்.

(கபிலர் ஐங்குறுநூறு 211)

இக்கவிதைக்கு உரையெழுதியவர்கள் எப்போதோ ஒரு செயற்கையான விளக்கத்தை அளித்துவிட்டனர். மீண்டும் மீண்டும் அந்தப்பொருளையே எல்லா உரைகளும் அளிக்கின்றன. எவருமே இன்னொரு முறை யோசித்ததில்லை. கவிதையென வாசித்ததும் இல்லை.

வழக்கமாக அளிக்கப்படும் பொருள் இது. தலைவன் தலைவிக்கு தழையாடையை அளிக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளும்படி அவள் தோழி சொல்கிறாள். ‘இந்த தழையாடை நெய்விட்டு பிசைந்த உளுந்துமாவைப்போலத் தோன்றும் வயலைக் கொடி படர்ந்த மலைச்சாரலில் தழைத்த அசோகமரத்தளிரால் ஆனது. இதை கொள்க, இல்லையேல் வாடிவிடும்’.

இதற்கு என்ன பொருள்? வயலைக்கொடிக்கும் நெய்விட்டு பிசைந்த உளுந்து மாவுக்கும் எந்த சம்பந்தம்? உளுந்துமாவு போல வெண்மை என்று வைத்துக்கொண்டால்கூட எதற்கு நெய்? எவராவது உளுந்துமாவில் நெய்விட்டு பிசைவதுண்டா என்ன? உளுந்து மாவே கொழகொழவென்றிருக்கும், அதில் நெய்யா? இது உரையெழுதிய பண்டிதர்கள் அடுக்களைப் பக்கமே போனதில்லை என்பதற்குச் சான்று. அவர்கள் நூல்நவிலும்போது மனைவியார் உளுந்து மாவில் நெய்விட்டு கொண்டுவந்தால் கொளக் பொளக் என்று விழுங்கி வைப்பார்கள் போல. பல்லாவது இருக்குமோ, என்ன கருமமோ.

பயலை என்பது பசலை, பசலிக்கீரை என நாம் சொல்வது. அதன் காட்டுவகை ஒன்றுண்டு. காட்டுப்பசலி என்பார்கள். காட்டில் சமைப்பதற்கு அதன் தளிர்களை மட்டும் கொய்து வருவார்கள். (தண்டு துவர்ப்புடன் இருந்தால் சாப்பிடக்கூடாது) அந்த காட்டுச்செடியின் தழைக்கும் மலருக்கும் ஒப்புமை விளக்கமாக கபிலர் இரண்டு ஊர்த்தாவரங்களை அளிக்கிறார். நெய் என்றால் எள். (எள்+நெய் என்பதே எண்ணை. பழைய ஆயுர்வேத நூல்களில் நெய் என்றால் பெரும்பாலும் நல்லெண்ணைதான்). எள்ளுச்செடியும் உளுந்துச் செடியும் கலந்தது போல  தோன்றும் பசலி என்கிறார். இலைகளையும் மலர்களையும் ஒப்பிட்டு காட்டும் வரி இது.

பசலி

எள்ளுச் செடியுடன் கலந்த
உளுந்துச் செடியின் பின்னல்போல
மலைச்சாரலில் படர்ந்த
பசலைக்கொடியின் தழையையும்
அங்கே தலைஓங்கி நின்றிருக்கும்
அசோகமரத்தின் தளிர்களையும்
முரண்படத் தொடுத்த இந்த மாலையைக் கொள்க
இல்லையேல் வாடிவிடும் தோழி.

மலைச்சரிவில் படர்ந்த பசலியின் தழைமலர்களையும் அச்சரிவில் தலை ஓங்கி நின்றிருக்கும் அசோகத்தின் தளிர்மலர்களையும் ஒன்றுக்கொன்று வண்ணம் முரண்பட தொடுத்து உருவாக்கிய ஆடை அவன் அவளுக்கு அளித்த காதலின் குறியீடு. அதை வாடவிடாதே என்கிறாள் தோழி.

பகைத்தழை என்று தெளிவாகவே பாடல் சொல்கிறது. முரண்படும் தழைகளால் ஆனது. நூற்றன்ன என்பதை நூறு என பொருள்கொண்டு மாவு என விரித்துக்கொண்டிருக்கிறார்கள். அது பின்னல் அல்லது நெசவு என பொருள் அளிக்கும் நூற்பு எனும் சொல்.

பசலை காட்டின் தரையெங்கும் பரந்து, காடே என ஆகி கிடப்பது. அசோகம் காட்டில் மிக அரிதான மரம். செங்குத்தாக மண்ணை நிராகரித்து வான்நோக்கி எழுவது. பசலி அத்தனை காட்டுக்கும் அடியில் பரவியிருப்பது. அசோகம் அத்தனை மரங்களுக்கும் மீதாக காட்டின் மேலே விரிந்திருப்பது.

உச்சிமலரும் தரைமலரும் கலந்து பின்னிய இத்தழையாடையை வாடவிடாதே என்கிறாள் தோழி.  வயலையும் செயலையும் மயங்கும் மலராடை அவன் காதல்.

முந்தைய கட்டுரைஅ.மாதவையா ஆளுமையின் சித்திரம்
அடுத்த கட்டுரைபூன்முகாம், கவிதை -கடிதம்