என் பிரியத்துக்குரிய மலையாளக் கவிஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரும் அவர் மனைவியும் இன்றில்லை. அவரைப் பற்றிய ஒரு சித்திரத்தை ஆற்றூர் ரவிவர்மா ஒருமுறை சொன்னார். கவிஞருடைய மனைவி ஆற்றூர் ரவிவர்மாவின் மனைவியிடம் சொன்னது அது.
அது காதல் அல்ல, காதல் வெறி, காதல்பித்து, காதல் கிறுக்கு, காதல்யோகம்—என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம். அவர் ஆசிரியராக இருந்தார். அவர் மனைவியும் ஆசிரியர். காதல் தோன்றி, திருமணம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கவிஞர் வேலைக்கே சென்றார். அதுவரை விடுப்புக் கடிதம்கூட கொடுக்காமல் பள்ளிக்கு மட்டம் போட்டார். பின்னர் வேலைக்குச் செல்ல முயன்றபோதுதான் ஏற்கனவே வேலைநீக்கம் செய்யப்பட்ட செய்தியே தெரியவந்தது. கவிஞருக்கு அதில் கவலை இல்லை, மகிழ்ச்சியும்கூட.
கவிஞரின் மனைவி கல்வித்துறைச் செயலரை நேரில் சென்று பார்த்து கண்ணீர் விட்டார். அவர் அமைச்சரிடம் சொல்லும்படி அனுப்பினார். அமைச்சர் அக்கவிஞரின் நல்ல வாசகர். கவிஞரும், அமைச்சரும் இடதுசாரிகள். ஆகவே வேலை திரும்பக் கிடைத்தது.
காதல் சில துர்தேவதைகள் உபாசகனை ஆட்கொள்வதுபோல கவிஞரைச் சூழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டது. இரவும் பகலும் காதலி நினைவு. ஒருநாளில் இரண்டு மணி நேரம்கூட தூக்கம் இல்லை. கண்கள் கிறுக்கனின் கண்கள் போல மிதந்து அலைந்துகொண்டிருக்கும். தொடர்ச்சியாக நாலைந்து வாய்கூட சாப்பிட முடியாது. சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் அப்படியே ஏதோ நினைவில் எழுந்து நடந்து சென்றுவிடுவார். மெலிந்து கன்னங்கள் ஒட்டி இன்னொருவர் போல ஆகிவிட்டார்.
ஆனால் அழுக்கு உடையோ, சவரம் செய்யா முகமோ கிடையாது. ஒருநாளுக்கு. நாலைந்து முறை குளியல். நாலைந்து உடை. இரண்டுமுறை சவரம் பூர்விகச் சொத்துக்கு முழுக்க ஆடைகள் வாங்கிக் குவித்தார். எந்நேரமும் புதிய ஆடைகள். திருமணமாகி நான்காண்டுகளில் ஆடையே வாங்கவேண்டியிருக்கவில்லை.
கவிஞரின் காதலி காலையில் வீட்டுச் சாளரத்தை திறந்தால் வீட்டு வாசலை பார்த்தபடி தெருவில் நின்றிருப்பார். எங்கே போனாலும் பின்னாலே வருவார். எப்போதும் அவர் பார்வை காதலிமேல் பதிந்திருக்கும். காதலியை நேராகப் பார்க்க முடியாவிட்டால் காதலி இருக்கும் வீடோ பள்ளிக்கூடமோ போதும், அதை பார்த்துக் கொண்டிருப்பார்.
அன்றெல்லாம் பெண்கள் அப்படி ஆண்களிடம் பேசமுடியாது. அந்த அம்மையார் பற்பல சூழ்ச்சிகள் செய்து கொஞ்சம் நேரத்தை திருடி பள்ளிக்கு அருகிலுள்ள கோயிலின் பின்பக்கமோ ஆற்றங்கரையிலோ அவரைச் சந்திப்பார். அப்போது அவர் கட்டற்றுக் கொந்தளிப்பார். காதலியை தாக்கிவிடுவார், கொன்றுவிடுவார் என்றே தோன்றும். பெரிய சண்டை போலிருக்கும்.
முதல் பாதிநேரம் அழுகைக்கு அருகே செல்லும் குமுறல். தன் அவஸ்தைகளைச் சொல்லி அவற்றை காதலி பொருட்படுத்துவதே இல்லை, தன்னை அவர் உண்மையாக விரும்பவில்லை என்று சொல்வார். அமர்ந்திருக்கவே முடியாதபடி எம்பி எம்பி எழுவார். சுற்றிச்சுற்றி வருவார். தரையில் கிடக்கும் கற்களை எடுத்து வீசுவார். நெஞ்சிலும் தலையிலும் ஓங்கி அறைந்துகொள்வார்.
அதன்பின் உருக்கம். கண்ணீர். இனிமை. காதலியின் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொள்வார். விரல்நுனிகளை முத்தமிடுவார். ஆடைமுனையை எடுத்து முத்தமிடுவார்.காதலியையே வெறித்துப் பார்த்துக்கொண்டு அசையாமல் அமர்ந்திருப்பார்.
அதன்பின் ஏக்கம். காதலி கிளம்ப ஆரம்பிக்கும்போது கைகளைப் பிடித்துக்கொண்டு போகாதே என்று கெஞ்சுவார். மன்றாடுவார். விட மறுப்பார். காதலி கிளம்பினால் பின்னாலேயே வருவார். இரவு வீட்டு வாசலை மூடும்போது பார்த்தால் தெருவில் நின்றிருப்பார். சிலசமயம் மறுநாள் காலை வரை அங்கிருப்பார்.
திருமணம் குடும்பத்தவராலேயே நிச்சயிக்கப்பட்டது. ஏனென்றால் கவிஞர் அப்போதே பெரிய ஆளுமை. நிறைய நகையெல்லாம் போட்டு அனுப்பினார்கள். திருமணமான பிறகு நிலைமை இன்னும் மோசம். வீட்டை விட்டு வெளியே கிளம்புவதே இல்லை. எந்நேரமும் மனைவியுடன் இருப்பார். காமமும் காதலும் பெருகி நுரைத்துக்கொண்டே இருக்கும். மிதமிஞ்சிய பாலுறவால் நாலைந்து முறை வலிப்பு வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்க நேர்ந்திருக்கிறது.
வீட்டை விட்டு மனைவி வெளியே செல்ல ஒத்துக்கொள்ள மாட்டார். மனைவியைத் தேடி தோழிகள் கூட வரமுடியாது. மனைவியின் வீட்டார் வரவே கூடாது. சண்டை, கூச்சல், அழுகை. முதல் குழந்தை பிறந்த பின் மனைவி பள்ளிவேலைக்குச் செல்ல தொடங்கினார். இவரும் வேலைக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனால் எல்லா இடைவேளைகளிலும் சைக்கிளில் மனைவியின் பள்ளிக்கு வந்துவிடுவார்.
ஒருகட்டத்தில் மனைவியின் வீட்டாருக்கு கவிஞருக்கும் கடுமையான பூசல்கள் உருவாயின. அடுத்தடுத்த குழந்தைகள் பிறந்தபோது பூசல்கள் வலுத்து மனைவி கணவரிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டார். தன் வீட்டாரை அவரால் விடமுடியவில்லை. கவிஞர் மறு எல்லைக்குச் சென்று மனைவியை ஒதுக்கிவிட்டார். தனியாக வாழ ஆரம்பித்தார். மனைவியை சந்திப்பதே இல்லை. விவாகரத்து போன்ற வாழ்க்கை. ஆனால் அந்த மனைவிமேல் அதே பெரும்பித்துடன் இருந்தார். கடைசிவரை.
நான் அண்மையில் அந்த விசித்திரமான காதல் பற்றி நினைத்துக் கொண்டேன். சங்கப்பாடல்களில் இல்லாமலிருக்காதே என தேடினேன். நான் சங்கப்பாடல்கள் அனைத்தையுமே பலமுறை படித்தவன். ஆகவே எல்லாமே எங்கோ நினைவில் இருக்கும். என் நினைவின் சுவைநா துழாவிக்கொண்டே இருந்தது, கண்டுபிடித்துவிட்டேன்.
சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாது உக
கன்றுதாய் மருளுங் குன்ற நாடன்
உடுக்குந் தழை தந்தனனே அவை யாம்
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின்
கேளுடைக் கேடஞ் சுதுமே ஆயிடை
வாடல கொல்லோ தாமே அவன்மலைப்
போருடை வருடையும் பாயாச்
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந்தழையே.
(கபிலர். நற்றிணை. 259)
மலைச்சாரலில் மேய்ந்த
சிறிய கொம்புகள் கொண்ட
இளம் செந்நிறப்பசு
காற்றில் அலைவுற்றுக் குலையும்
காந்தள் மலர்ப்புதரின் அடியில் நிற்க
மலரும் பொடியும் பொழிந்து மூடி
செந்நிறமாகி
தன் கன்றே அடையாளம் காணாமல்
மருளும்படி ஆகியது.
அக்குன்றத்தைச் சேர்ந்தவன்
எனக்கு மலராடை தந்தான்.
அணிந்தால் தாயை அஞ்சவேண்டும்
மறுத்தால் அவன் நட்பை இழக்கவேண்டும்
வாடிவிடுமா தோழி?
போர்க்குணம் கொண்ட வரையாடுகள்
பாய்ந்து மண்டையை அறைந்து கொள்ளும்
அவன் மலையில்
சூர் கொண்ட தெய்வங்கள் வாழ்கின்றன.
இந்த ஆடையோ
கொய்வதற்கு அரிய மலர்களால் ஆனது
*
சுந்தர ராமசாமியிடம் இக்காதல் பற்றிச் சொன்னேன். “அது mad gene. எல்லா கிறுக்கையும் இயற்கை பேணி வளக்குது. அதனாலே அதுக்கு வீரியம் ஜாஸ்தி” என்றார்.
அல்லது பாலை நிலத்து மரங்கள் கிலோக்கணக்கில் மகரந்தத்தை காற்றில் இறைப்பது போலவா? பாலையில் அவற்றுக்கு இணைமரம் அமைவதில்லை. காற்று எங்கோ ஏதோ ஒரு மரத்தின் மலரின் சூலுக்கு ஒரு மகரந்தத்தையாவது கொண்டுசென்றுவிடும் என அவை வெடித்து சிதறிப் பரவுகின்றன.
எத்தகைய படிமங்கள்! மகரந்தத்தால் மூடி உறவுகளாலேயே அடையாளம் காணமுடியாதபடி பசுவை மாற்றிக் கொள்ளும் வீரியம் மிக்க மலர்ச்செடி. அந்த அணுகமுடியாத மலை வெறிகொண்டு மண்டையை முட்டிக்கொள்ளும் வரையாடுகள் உலவுதற்குரியது. வெறியாட்டெழுந்த காட்டுதெய்வங்கள் வாழ்வது. அங்கே எட்டா மலையுச்சியில் மலரும் பூக்களால் ஆனது அந்த மலராடை.
கவிஞர் மறைந்தபின், அந்த மனைவி சொன்னார். “நாற்பத்தைந்து ஆண்டுகாலம் ஒரு நிமிடம், ஒரு செகண்ட், வேறு எதையும் நினைக்கவே என்னை விடவில்லை. கடல்கரையிலே நிற்கும் பாறை போல் இருந்தேன். இப்படி ஒரு தவம் செய்யும் வாய்ப்பு எனக்கு இந்தப் பிறவியில் கிடைத்தது. ஒரு கணமும் வீணாகாமல் வாழ்ந்தேன். அது போதும்”
***