ரப்பர் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சென்ற ஆண்டு குமரித்துறைவியை படித்து முடித்தகையோடு உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னதின்  மகிழ்ச்சி இன்னும் இருக்கிறது. நீங்கள் இன்று இதை பார்க்கமாட்டீர்கள் என்றாலும் உங்களை வாழ்த்துவது அந்த மகிழ்ச்சியை நீடித்துக்கொள்ளத்தான்.

கொஞ்ச நாளாகவே உங்கள் ரப்பர் நாவலை நினைத்துக்கொண்டிருக்கிறேன். இன்றும் நம்பமுடியாததாக இருப்பது ஒரு தலைமுறை காலத்துக்கு முன் இருபது நான்கு வயதில் எப்படி அதை எழுதினீர்கள் என்பதுதான். சூழல் சீர்கேடு மனித ஆன்மாவின் வீழ்ச்சியின் வெளித்தோற்றம்தான் என்று என்னுடைய பேராசிரியர் சொல்வதுண்டு. திணையையும் ஒழுக்கத்தையும் இணைத்துப்பார்த்த நம் முன்னோருக்கு இது நன்றாகவே தெரிந்திருந்திருக்கிறது. ஆனால் நவீன இலக்கியத்தில் ரப்பர் நாவல்தான் அதனை முதலில் சொன்னது. அது ஒரு முக்கிய வரவு என்று அன்றே தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சொன்னதில் வியப்பு ஏதுமில்லை.

நான் தேடிப்படித்த அளவில் ரப்பர் நாவல் இன்னும் உரிய அளவில் உணரப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை என்று எண்ணுகிறேன். தவறாகவும் இருக்கலாம். கடந்த முப்பது ஆண்டுகளில் சூழல் அழிவு இன்னும் அதிகமாகவும் சிக்கலாகவும் ஆகியிருக்கிறது.  ஆனால் அதை நாம் எதிர்கொள்வது ‘மரம் வளர்ப்பீர், மழை பெறுவீர்’ என்ற எளிய அளவிலேயே உள்ளது. உள்ளே சரி செய்ய வேண்டியதிற்கு தீர்வை வெளியே தேடுகின்ற இன்றைய நிலையில் ரப்பர் சொல்லும் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையிலிருந்து கற்பதற்கு நிறைய இருக்கிறது. இன்று மட்டுமல்ல என்றுமிருக்கிற ஒன்றை எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

இன்னோரு முறையும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நிக்கோடிமஸ்

***

அன்புள்ள நிகோடிமஸ்

நான் நீண்ட இடைவெளிக்குப் பின் ரப்பர் நாவலை வாசித்தேன். அன்று யோசிக்காத தளத்தில் பல இணைப்புகள் அதில் இருப்பதைக் கண்டேன். உதாரணமாக மிக ஆடம்பரமான தோட்டம் வீட்டில் மிக ஆடம்பரமான ரெம்ப்ராண்டின் மாபெரும் ஓவியம் உள்ளது. ஆனால் அது ஏசு மாட்டுக்கொட்டிலில் பிறந்தது பற்றியது. எளிமையும் ஆடம்பரமும் என்னும் அந்த முரண்பாடு ரப்பர் நாவல் முழுக்க ஓடுகிறது. கிறிஸ்துவின் எளிமையை பிரான்ஸிஸ் கண்டடைவதில் முடிகிறது. அன்று ஏதோ ஒரு பிரக்ஞை நிலையில் எழுதியது. ஆனால் அது ஆழ்ந்த ஒரு முழுமையை உருவாக்கியிருக்கிறது. உண்மைதான், அதை மறுவாசிப்பு அளித்தவர் சிலரே.

ஜெ.

முந்தைய கட்டுரைஇலக்கணவாதம்- கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி- தேவைகள்