தமிழ் விக்கி தூரன் விருது

தமிழ் விக்கி இணையம்

7-மே-2022ல் அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெறுகிறது தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது.

தமிழ் விக்கி சார்பில் ஒரு விருது இவ்விழாவில் அறிவிக்கப்படுகிறது. தமிழ்க் கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவரும், இசைப்பாடலாசிரியருமான மறைந்த பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படும். ‘தமிழ் விக்கி பெரியசாமி தூரன் விருது’ என்று பெயர்.

இவ்விருதுத்தொகை அமெரிக்க நண்பர் வாசு சுவாமியின் கொடை. நிகழ்ச்சியை நடத்துவது விஷ்ணுபுரம் நண்பர்கள். ரூபாய் இரண்டு லட்சமும் சிற்பமும் அடங்கியது இவ்விருது.

இவ்விருது இலக்கியம், தமிழாய்வு, பண்பாட்டாய்வு களங்களில் செயல்படும் ஆளுமைக்குரியது. ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உரியது. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே விஷ்ணுபுரம் விருது பட்டியலில் இருப்பவர்கள். ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற பத்தாண்டுகள் காத்திருக்கவேண்டும் என்பதனால் இந்த நிபந்தனையைச் சேர்த்துக்கொண்டோம்.

விருதுக்குரியவர்களை விக்கி நண்பர்கள் கூடி பொதுப்புரிதலின் அடிப்படையில் முடிவுசெய்வோம். உண்மையில் இத்தகைய விருதுகளை முடிவுசெய்ய ‘நடுவர் குழு’ ‘மதிப்பீட்டுமுறை’ எல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் இலக்கியப் போட்டிகளுக்குரிய நடைமுறைகள். பெரிய விருதுகள் மட்டுமல்ல சிறிய விருதுகள் எவருக்கு வழங்கப்படவேண்டும் என்பதெல்லாம் ஓர் இலக்கிய சூழலில், இலக்கிய விமர்சனத்தாலும் வாசக ஏற்பாலும், ஏற்கனவே தெளிவாக முடிவுசெய்யப்பட்டிருக்கும். அதற்கான பட்டியலே சூழலில் திரண்டிருக்கும். முதிர்வுவரிசைப்படி விருது அளிக்கவேண்டியது மட்டுமே அமைப்பு செய்யவேண்டியது.

அவ்வண்ணம் சூழலால் திரண்டு வந்த தேர்வின் மூலம் விருதுபெறுபவர்களே விவாதத்துக்கு அப்பாற்பட்ட தகுதி கொண்டிருப்பார்கள். விஷ்ணுபுரம் விருது பெற்ற எவர் மீதும் அவர் தகுதி பற்றிய ஐயம் எழுந்ததே இல்லை. குமரகுருபரன் விருது பற்றிக்கூட அப்படி ஓரு வினா எழுந்ததில்லை. இவ்விருதும் அப்படித்தான், கேள்விக்கு அப்பாற்பட்டபடி தன் பங்களிப்பை ஏற்கனவே சூழலில் நிறுவிவிட்டிருக்கும் ஆளுமைக்கே வழங்கப்படும். விருது அதைப் பெறுபவர்களால் தகுதி பெறுமே ஒழிய விருதால் அவர்கள் அடையாளம் பெற மாட்டார்கள்

இவ்வாண்டு விழா தூரனின் ஊரான ஈரோட்டில் நிகழும். தொடர்ந்தும் சூழல் அமைந்தால் அங்கே நிகழ்த்தவே எண்ணம். வரும் ஆகஸ்டில் விருதுவிழா. ஜூன் 11ல் விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுவிழாவுக்கு பின்னர் தமிழ் விக்கி தூரன் விருதுபெறுபவர் அறிவிக்கப்படுவார்.

தமிழ் விக்கி தூரன் விருது

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி- முதல்பதிவு
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி- விழா