தமிழ் விக்கி -சில கேள்விகள்

தமிழ் விக்கி இணையம்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்தக் கலைக்களஞ்சியம் எப்படி வேறுபடுகிறது என்பது முக்கியமாக வைக்கப்படும் கேள்வி. உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.

அன்புடன்

சௌந்தர்

***

அன்புள்ள சௌந்தர்

இக்கேள்விகளை ஏற்கனவே விவாதித்து ஒரு தெளிவுக்கு வந்துள்ளோம். உண்மையில் கலைக்களஞ்சியம் வெளியாகும்போது அதைப் பார்ப்பவர்களுக்கே பல கேள்விகளுக்கு விடை அமைந்துவிடும். உங்கள் கேள்விகளுக்கு என் விளக்கங்கள் இவை.

இவ்வளவு தரம் பார்த்து  முன்னெடுத்து செய்யும் ஒரு தளத்தை ஏன் கலைக்களஞ்சியம் என்று அழைக்காமல் ‘தமிழ் விக்கி’ என்று அழைக்கிறோம். அதாவது தளத்தின் பெயரே கலைக்களஞ்சியம் என்று பொருள்பட இருக்கலாம் அல்லவா?

கலைக்களஞ்சியம் வேறு, விக்கி வேறு. விக்கி என்பது இணையத்தில் உருவான ஒரு தனித்த ஒரு போக்கு – முன்பு இல்லாதது, முன்பு இயலாதது.

கலைக்களஞ்சியம் என்பது ஓர் அறிஞர்குழுவால் உருவாக்கப்பட்டு முடிவுற்ற ஒரு நூல். விக்கி என்பது தொடர்ச்சியாக நிகழும் ஒரு கூட்டுச்செயல்பாடு. விக்கியின் பதிவுகள் வளர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். அதில் எந்தப் பதிவும் அறுதியானது அல்ல. அந்த வேறுபாட்டைக் குறிக்கவே விக்கி என்னும் சொல்லை கையாள்கிறோம்.

இணையத்தில் என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா உள்ளது. அதற்கும் விக்கிக்கும் பெரிய வேறுபாடுண்டு. அண்மையில் விக்கி நிறுவனர் ஒரு பேட்டியில் விக்கி ஒரு செய்தியிதழாகவும் செயல்படுகிறது என எழுதியிருந்தார். அந்த ‘நிகழும்தன்மை’யை இப்பெயர் வழியாகச் சுட்ட விரும்புகிறோம்.

விக்கி என்ற பெயரை அந்த செயல்பாட்டுக்கு உரிய பொதுப்பெயராக, காப்புரிமை அற்ற முகச்சொல் (பிராண்ட்)ஆக அறிவித்தவர் அதன் நிறுவனரே.

பெரியசாமி தூரன் கலைக்களஞ்சியம் பற்றி நீங்களே தளத்தில் எழுதியிருக்கிறீர்கள். எப்படி வேறுபடுகிறது? அதுவும் இணையத்தில் கிடைக்கிறது.

ஏற்கனவே சொன்னதுதான். பெரியசாமித்தூரனுடையது முடிவுற்ற கலைக்களஞ்சியத் தொகுதி. மேலும் அது அச்சில் வெளிவந்தது. அச்சுக்கு பக்க எல்லை உண்டு. புகைப்படங்கள் அளிக்க வரையறை உண்டு. ஆகவே அதில் சுருக்கமான பதிவே உள்ளது. தமிழ் விக்கி இப்போது அதன் ஓராண்டுக்கால இலக்கில் மூன்றிலொன்றை எட்டியுள்ளது. அதாவது 90 நாட்களின் பணி. ஆனால் இப்போதே அதன் அளவு தூரனின் கலைக்களஞ்சியத்தை விட பெரியது. அதன் இலக்கு இதைவிட நூறுமடங்கு பெரிய தொகுப்பு

வேதசகாயகுமாரின் திறனாய்வுக்களஞ்சியத்திற்கும் இதற்குமான தொடர்பு, மதிப்பீடு, அதன் தகவல்கள். 

வேதசகாய குமாரின் கலைக்களஞ்சியம் திறனாய்வு சார்ந்தது. நா. மம்முதுவின் இசையியல் கலைக்களஞ்சியம் உள்ளது. அப்துற் ரஹீமின் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் உள்ளது. அப்படி பல கலைக்களஞ்சியங்கள் உள்ளன. அனைத்தில் இருந்தும் செய்திகளை எடுத்து இணையவெளியில் தொகுப்பதே விக்கி தமிழின் நோக்கம். ஒரு கலைக்களஞ்சியம் என்பது நூலகத்தின் சாறு என்பார்கள். உரிய உசாத்துணைகளுடன் அத்தனை செய்திகளும் தொகுக்கப்படவேண்டும்.

காங்கிரஸ் காலத்தில் கலைக்களஞ்சியம் தொகுக்கப்பட்டது. அது எங்கனம் வேறுபடுகிறது

காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, அவினாசிலிங்கம் செட்டியார் முயற்சியால், பெரியசாமித் தூரன்  ஆசிரியத்துவத்தில் தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவானது. அது தமிழில் நடந்த மாபெரும் அறிவுப்பணி. (அதற்கு இணையான பெரும்பணி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமையில் நடந்த பேரகராதி.)

தூரனின் கலைக்களஞ்சியம் இதற்குள் குறைந்தது இருபது முறை திருத்தி விரிவாக்கப்பட்டு மறுபதிப்பாக வெளிவந்திருக்கவேண்டும். தமிழ் விக்கி ஓர் இணையதளம். இது அறிவியக்கம் அதுவே திரட்டிக்கொள்ளும் ஒரு பொதுமையம், அவ்வளவுதான்

இது தமிழ் பண்பாடு, வரலாறு, எழுத்தாளர்கள் , இலக்கியம் பற்றிய கலைக்களஞ்சியம் மட்டும்தானா ? பொறியியல் சார்ந்த சாதனம் பற்றிய விபரங்கள் இதில் இருக்காதுதானே? 

இப்போதைக்கு பண்பாடு, இலக்கியம் மட்டுமே பேசுதளம். பின்னாளில் விரிவாக்கம் செய்யப்படும். அப்போது அத்துறை சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர் குழுவில் அமைவார்கள். ஒரு பத்தாயிரம் பதிவுகளுக்குப்பின் வரலாற்றை உள்ளே கொண்டுவரலாமென நினைக்கிறேன்.அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து செல்லவேண்டும் என்றால் புதிய நிபுணர்குழு ஆசிரியர்களாக வரவேண்டும்.

இதற்கான பொருட்செலவை யார் ஏற்றுக்கொள்வார்கள்?

இப்போதைக்கு இது என் நண்பர்களின் கூட்டுமுயற்சி. அனைவருமே இலவச உழைப்புதான். ஒருநாளுக்கு சராசரியாக ஐந்து மணிநேரம் பணியாற்றுகிறார்கள்.

இதுவரை செலவு  என்பது இந்த இணைய இடம் வாங்குவதற்கு ஒரு நண்பர் செலவு செய்த தொகை மட்டுமே.நான் சில ஆயிரம் ரூபாயிலேயே பெரிய செயல்களைச்ச் செய்யலாம் எனும் எண்ணம் கொண்டவன். குறைவான செலவு என்றால் மிகுதியான சுதந்திரம் என்பது என் புரிதல்.

இப்போதைக்கு இதற்கான செலவை நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒர் அறக்கட்டளை அமைத்து நிதி பெறலாம் என்னும் எண்ணம் உள்ளது. ஆனால் என்னுடைய எல்லா செயல்பாடுகளும் மிகமிகக் குறைவான நிதியில் நடைபெறுபவை. ஆகவே இதற்கும் பெரிய நிதி தேவைப்படாது. இப்போதைக்கு இலவச உழைப்புதான். நிதி சற்று கூடுதலாக வந்தால் ஆங்கிலம் பயிலும் மாணவர்களை பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என எண்ணம் உண்டு

ஆசிரியர்குழுவில் இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்களா ? அவர்களில் மாற்றம் உண்டென்றால் யார் முடிவெடுப்பது ?

ஆசிரியர்குழு தொடரும். பிற துறைகள் சேரும்போது மேலும் ஆசிரியர்கள் வருவார்கள். புதிய ஆசிரியர்களை ஏற்கனவே இருக்கும் ஆசிரியர்கள் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தேர்வுசெய்வோம். புதிய ஆசிரியர்கள் வந்துகொண்டே இருக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஉசாவல்
அடுத்த கட்டுரைவாடிவாசல் வாசிப்பு