வரும் மே 7 அன்று அமெரிக்காவில் ஆஷ்பர்ன் பிராம்பிள்டன் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கவிழா நிகழ்கிறது. ஹார்வார்ட், கொலம்பியா, வாட்டர்லூ பல்கலைக் கழக பேராசிரியர்கள் கலந்துகொள்ளும் விழா. நண்பர்கள் அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு அழைப்பிதழ்களைப் பெற்றுக்கொண்டு வருகைதரவேண்டும் என கோருகிறேன்.
விக்கிப்பீடியா என்பது ஒரு மானுடச்செல்வம். அதன்மேல் தொடக்க காலத்தில் இருந்த அறிவுலக தயக்கங்கள் இன்றில்லை. ஏனென்றால் ஆங்கில விக்கிப்பீடியா என்பது உலகு தழுவிய மாபெரும் அறிவுச்சேகரிப்பு. அதில் இல்லாததே இல்லை. இன்று அறிவுத்தளத்தில் செயல்படுபவர்களில் விக்கியை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தாதவர்கள் அரிதினும் அரிது. ஆய்வாளர்கள் கூட விக்கியை பயன்படுத்துகிறார்கள். நினைவுகளை சரிபார்க்க, மேலதிக தொடர்புநூல்களையும் இணையப்பக்கங்களையும் வாசிக்க. காவல்துறை, நிர்வாகத்துறைகூட இன்று விக்கியை நம்பியுள்ளது.
ஆங்கில விக்கி அதற்கான தரக்கட்டுப்பாட்டுடன் உள்ளது. அது பொதுவெளியால் உருவாக்கப்படுகிறது. ஆகவே பொதுவெளியின் பொதுவான அறிவுத்தகுதி அதில் வெளிப்படுகிறது. ஆங்கில விக்கியில் அங்குள்ள பல்கலைகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அங்குள்ள மாணவர்கள் அதன் கண்காணிப்பாளர்கள். ஆகவே அதன் தகவல்களுக்காக மட்டுமல்ல, நடைக்காகவே கூட அதை வாசிக்கலாம்.
அப்படி ஒரு விக்கிபீடியா தமிழில் உருவாக எல்லா வாய்ப்பும் இருந்தது. இருபதாண்டுகளுக்கு முன் அ.முத்துலிங்கம் அவர்கள் விக்கிக்கு பங்களிக்கும்படி என்னிடம் கோரினார். அதன்படி நான் பங்களிப்பாற்றினேன். பின்னர் தமிழ் விக்கியை ஒரு சிறுகூட்டம் கைப்பற்றியது. பழமைவாத மொழிக்கொள்கை மற்றும் எளிய அரசியல் காழ்ப்புகளால் அதன் பயனை அழித்தது. அது தமிழுக்கு ஒரு பெரும் இழப்பு.
கலைக்களஞ்சியம் என்பது ஏற்கனவே உருவாகி இருந்துகொண்டிருக்கும் அறிவை அட்டவணையிட்டு சேகரிப்பதே ஒழிய, அறிவை உருவாக்குவதோ கற்பிப்பதோ அல்ல. கலைக்களஞ்சியத்துக்கு எதையும் மாற்ற உரிமை இல்லை. அது எதையும் அறிவியக்கம் மேல் சுமத்த முடியாது. கலைக்களஞ்சியம் அதன் பயன்பாடு வழியாகவே வளரவேண்டும். அதற்கு மாறா இலக்கணம் இருக்க முடியாது. இதெல்லாம் உலக அளவில் கலைக்களஞ்சியங்களின் நெறிகள்.
உலகமெங்குமுள்ள கலைக்களஞ்சிய ஒழுக்கங்கள் சில உண்டு. ஒருவர் தன் பெயரை எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதுவதற்கும் சொல்வதற்கும்தான் பிறருக்கு உரிமை உள்ளது. இன்னொருவர் பெயரை நாம் மாற்றமுடியாது. அது அத்துமீறல். ஓர் ஆசிரியர் தன் பெயரை தன் நூலில் எப்படி எழுதினாரோ அப்படி எழுதுவதே அறிவுலக மரபு. மனிதர்களின், ஊர்களின் பெயர்களை மாற்றுவதென்பது அறிவின்மை. கலைக்களஞ்சியம் தனக்கென ஒரு மொழித்தரம் கொண்டிருக்கலாம் – அதுகூட மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கவேண்டும். ஆனால் பொதுவான அறிவுச்சூழலுக்கு அப்பால் ஒரு மொழிக்கொள்கை அதற்கு இருக்கலாகாது. அது ஒரு குறுங்குழுவின் மொழிக்கொள்கை என்றால் அதன்பின் அது பொதுவான கலைக்களஞ்சியமே அல்ல.
அத்துடன் தமிழ் விக்கிப்பீடியா பொதுவான வாசகர்களால் இயக்கப்படுவதனால் தமிழ்ச்சூழலில் உள்ள பொதுவான ரசனை, அறிவுமதிப்பீடுகளே அதில் அமைய முடியும். ஆனால் தமிழின் மெய்யான அறிவியக்கம் என்பது பெரும்பான்மையினருக்கு அப்பால், அரசு மற்றும் பெரிய கல்வியமைப்புகள் ஆகியவற்றின் உதவியில்லாமல் தனிநபர்களின் உழைப்பால்தான் சென்ற நூறாண்டுகளாக நடந்து வருகிறது. அறிவியக்கச் செயல்பாட்டில் இருப்பவர்கள் அமைப்புகளின் அதிகார விளையாட்டுகளில் ஆர்வமற்றிருப்பார்கள். அமைப்புகளின் தலைமையில் இருப்பவர்களுக்கு அறிவியக்கவாதிகள் மேல் மதிப்பு இருப்பதில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் அரசும் கல்வியமைப்புகளும் ஒருபக்கமும் அறிவியக்கம் இன்னொரு பக்கமுமாகவே சென்ற நூறாண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆகவே சிற்றிதழ்கள் சார்ந்தே இங்கு நவீன இலக்கியமும் பழந்தமிழிலக்கிய ஆய்வும் நிகழ்ந்து வருகின்றன. இந்த சிறு அறிவுலகம் ‘புகழ்’ பெறாதது. ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே அறிந்தது. இவ்வட்டத்துக்கு வெளியே மிகப்பொதுவான அறிவு மட்டுமே கொண்டவர்களுக்கு இச்செயல்பாடுகளின் முக்கியத்துவம் புரியாது. அவர்களால் இச்செயல்பாடுகளை மதிக்கவும் முடியாது. ஆகவே அவர்களின் ஆட்சி கொண்ட தமிழ் விக்கிபீடியா போன்ற தளங்களில் மெய்யான அறிவியக்கம் புறக்கணிக்கப்படுவது இயல்பு. இந்த மெய்யான அறிவியக்கம் தனக்கான தளங்களை தானே உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான். அது எப்போதும் அப்படித்தான் செயல்பட்டு வந்துள்ளது.
தமிழ் அறிவியக்கத் தரப்பாக ஓர் இணையக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கவேண்டும் எனும் எண்ணம் சென்ற டிசம்பரில் உருவானது. விக்கி என்பது ஒரு சர்வதேச அறிவுப்பரப்பு. அது அளிக்கும் வசதிகள், அதன் முன்னுதாரணம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என நண்பர்களிடம் சொன்னேன். உடனே ஒரு தளம் வாங்கி, அணுக்கமான நண்பர்களை இணைத்துக்கொண்டு சென்ற ஜனவரி இறுதியில் பணிகளை தொடங்கினோம். இதன் பொதுக்கொள்கைகள், செயல்விதிகள் ஆகியவற்றை விவாதித்து உருவாக்கினோம். இப்போதைக்கு இலக்கியம், கலை, பண்பாடு மட்டுமே. அரசியல், சினிமா, வரலாறு கிடையாது. பண்பாடு, இலக்கியம் சார்ந்து நிறைவுறும்படி பதிவுகள் வந்த பிறகு அப்படி நீட்டித்துக் கொள்வோம்.
பிப்ரவரியில் பதிவுகளை உருவாக்கத் தொடங்கினோம். பேசிப்பேசி பிழைகளை களைவதன் வழியாக இதன் செயல்முறைகளை பொதுவாக உருவாக்கிக் கொண்டோம். 90 நாட்களில் ஏறத்தாழ 2000 தமிழ்ப்பதிவுகளும் 200 ஆங்கிலப்பதிவுகளும் போட்டிருக்கிறோம். அவற்றில் முழுமைபெற்றவை வரும் மே ஏழாம் தேதி நடக்கும் தொடக்கவிழாவுக்குப் பின் வாசகர்களின் பார்வைக்கு வரும். தொடர்ந்து இவ்வாண்டுக்குள் 5000 பதிவுகள், பத்தாண்டுகளில் ஐம்பதாயிரம் பதிவுகள் என்பது திட்டம். என் வாழ்நாளில் லட்சம் பதிவுகளை கண்ணால் பார்க்கவேண்டும் என விழைகிறேன்.
இதன் செயல்முறை விக்கிக்கு உரியதுதான். அனைவரும் பங்களிக்கலாம். ஒரு சிறு வேறுபாடு, நிபுணர்கள் கொண்ட ஓர் ஆசிரியர் குழு உண்டு. எதிர்காலத்தில் வரலாறு, அரசியல் போன்றவை சேர்க்கப்படுமென்றால் அதற்குரிய ஆசிரியர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆசிரியர்குழுவின் பார்வைக்குப் பின் புதிய பக்கங்களோ திருத்தங்களோ வலையேற்றம் செய்யப்படும். இது தகுதியுடைய அறிவியக்கவாதிகளின் ஒரு கூட்டுச்செயல்பாடாக முன்னகர வேண்டும் என்பது எங்கள் எண்ணம். வாசகர்கள் அறிஞர்கள் இரு சாராரும் சேர்ந்து செய்யும் ஒரு பெரும்பணி.
இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பக்கங்களின் நோக்கம் என்பது இதில் என்னென்ன வகை பதிவுகள் இடம்பெறலாம், அவை எப்படி அமையவேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்களை உருவாக்குவதுதான். இந்த நடை, இந்த கட்டுரைக் கட்டமைப்பு, இத்தனை விரிவு தேவை. இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நண்பர்கள் மேலும் பங்களிக்கவேண்டும் என விரும்புகிறேன்.
வெறும் தொண்ணூறு நாட்களில் நிகழ்ந்த இந்த பெரும்பணி அபாரமான நிறைவை அளிக்கிறது. இன்னும் அதிக நண்பர்களுடன் இன்னும் அதிக விசையுடன் பணியாற்ற முடியும் என்னும் நம்பிக்கை உருவாகிறது. பல புதிய நண்பர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். எங்களுக்குத் தேவை முதன்மைப் பதிவை எழுதுபவர்கள், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்பவர்கள். இன்னும் இளம்நண்பர்கள் வரவேண்டுமென விரும்புகிறேன். கல்லூரிகளை தொடர்புகொண்டு ஊதியம் அளித்து மொழியாக்கங்கள் செய்யவைக்க எண்ணமுண்டு. நன்கொடைகள் அளிக்கவும் நண்பர்கள் முன்வரவேண்டும்.
இந்தக் கலைக்களஞ்சியத்தில் அரசியல் இல்லை. இதன் மொழிக்கொள்கைகள் சர்வதேச அளவில் விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியங்கள் கடைப்பிடிப்பவை. ஆனால் ஒரு வேறுபாடுண்டு. விக்கியில் ஆசிரியர்குழு இல்லை. ஆகவே விக்கி மதிப்பீடுகளுக்கும் கருத்துக்களுக்கும் உசாத்துணை கோரும். இக்கலைக்களஞ்சியம் ஆசிரியர்குழு கொண்டது. இதற்கென பண்பாட்டு அளவுகோல்களும் அவற்றின் அடிப்படையிலான மதிப்பீடுகளும் உண்டு. அவை தமிழ் அறிவுச்சூழலில் நீண்ட விவாதங்களின் விளைவாக பொதுவாக ஏற்கப்பட்டவை.
தமிழ் விக்கி என இணையதளத்தின் பெயர். ஆகஸ்ட் மாதம் இதை இரண்டாயிரம் பதிவுகளுடன் வெளியிடுவதென இலக்கு வைத்திருந்தோம். நான் அமெரிக்கா செல்வதை ஒட்டி பணிகளை முடுக்கி மே மாதத்திலேயே இலக்கை எட்டினோம். இன்னும் விசையுடன் இணைந்து மேலே செல்வோம். அறிவியக்கம் மீது நம்பிக்கை கொண்ட அனைவரையும் அழைக்கிறேன்.