அஞ்சலி, ஜான் பால்

நான் ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளாகச் சினிமாவில் இருக்கிறேன். இதுவரைச் சந்தித்த மனிதர்களில் தூயோன் என ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் போளச்சனைத்தான். நிறைந்த மனிதர். நன்மை மட்டுமே அறிந்தவர் என சிலரை சொல்வோமே, அப்படிப்பட்டவர். இனியவர், இனிமை மட்டுமே கொண்டவர். இவ்வுலகின் எந்த மானுடர் மேலும் எந்த குறையும் சொல்லத்தெரியாதவர். மானுடரால் நிறைந்தவர். அவரைப் பற்றி என் நண்பர்கள் அனைவரிடமும் திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன். பெரும் பரவசத்துடன், பிரியத்துடன்.

பௌலோஸச்சன் என்னும் கிறிஸ்தவ அறிஞரின் மகன் ஜான் பால். புதுச்சேரி பி.வி.பௌலோஸ் ஆசிரியராக இருந்தார். அவர் எழுதிய கிறிஸ்தவ இறையியல் நூல்கள் கத்தோலிக்க இறையியல் கல்லூரிகளில் இன்றும் பாடமாக உள்ளன. பௌலோஸச்சனுக்கும் ரெபேக்காவுக்கும் 1950 அக்டோபர் 29ல் எர்ணாகுளம் அருகே புதுச்சேரி என்னும் ஊரில் ஜான் பிறந்தார். எர்ணாகுளம் செயின்ட் ஆல்பர்ட்ஸ் பள்ளி, செயிண்ட் அகஸ்டீன் பள்ளி, பாலக்காடு சிற்றூர் அரசுப்பள்ளி ஆகியவற்றில் பள்ளிக்கல்வியும் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பொருளியலில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.

ஜான் பால் 1972 முதல் கனரா வங்கி ஊழியராக இருந்தார். பதினொரு ஆண்டுக்காலம் வங்கி ஊழியராக பணியாற்றிய காலகட்டத்தில் ஜான் பால் எர்ணாகுளம் ஃபிலிம் சொசைட்டி எனும் அமைப்புடன் இணைந்து செயல்பட்டார். கேரளா டைம்ஸ் என்னும் இதழில் சினிமா பற்றி தொடர்ச்சியாக எழுதிவந்தார். எர்ணாகுளத்தில் மாற்றுத்திரைப்பட இயக்கத்தின் முகம் என அறியப்பட்டார்.

ஜான் பால்தான் பரதனுக்கு நல்ல சினிமாவை அறிமுகம் செய்தவர். பரதன் வெறும் கலை இயக்குநராக இருந்தபோது அன்று திரைப்படச்சங்கங்களில் முழுவேகத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரும், கே.ஆர்.குமாரன் பி.ஏ.பக்கர்  போன்ற மாற்றுத்திரைப்படக் காரர்களுக்கு அணுக்கமானவருமான ஜான் பால் அவரை ஒரு திரைப்படநிகழ்வில் சந்தித்தார். பரதனுடனான நட்பு இறுதிவரை தொடர்ந்தது. பரதன் பற்றி ஜான் பால் எழுதிய நூல் அழகான ஒன்று.

பரதன் ஜான் பாலை சினிமாவுக்குக் கொண்டுவந்தார். ஐ.வி.சசி இயக்கி 1978 ல் வெளிவந்த ஞான் ஞான் மாத்ரம் (நான் நான் மட்டுமே) என்பது ஜான் பாலின் முதல் படம். அவர் அதற்குக் கதை மட்டும் எழுதினார். அப்படத்திற்கு பரதன் கலை இயக்குநர். பின்னாளில் பரதனின் முதன்மையான திரைக்கதையாசிரியராக ஜான் பால் திகழ்ந்தார்.

மாக்டா என்னும் திரைத்தொழில்நுட்ப கலைஞர்களுக்கான சங்கம் ஜான் பால் உருவாக்கியது. நீண்டகாலம் அதன் நிர்வாகியாகவும் இருந்தார். எர்ணாகுளம் இலக்கிய அமைப்புகள் பலவற்றில் ஏதேனும் பொறுப்பில் அவர் எப்போதும் இருந்தார். சங்ஙம்புழா பார்கில் வாரந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நிகழும். நேர்பாதி ஜான் பால் ஒருங்கிணைத்தவை. மறைந்த பி.கே.பாலகிருஷ்ணனின் நண்பர். நான் ஒருமுறை பி.கே.பாலகிருஷ்ணனைப் பற்றியும் ஒரு முறை எம்.கோவிந்தனைப் பற்றியும் அங்கே உரையாற்றியிருக்கிறேன்.

படித்த நல்ல நூல்களை பரிந்துரைப்பதும், வாங்கி அனுப்புவதும் ஜான் பாலின் வழக்கம். அண்மையில் அல்ஷைமர்ஸ் நோய் வந்த தந்தையை கவனித்துக்கொண்ட ஒரு மகன் அந்த அனுபவங்களை எழுதிய நூலை சிலாகித்து தொலைக்காட்சியில் பேசியவர் பிரதிகளில் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அவருடைய ஆசிரியரும் நித்ய சைதன்ய யதியின் நண்பருமான பேராசிரியர் எம்.கே.சானுவின் பிறந்தநாளுக்கு ஒரு விழாவை ஒருங்கிணைத்து என்னை பேச அழைத்திருந்தார். பேராசிரியர் நூறாண்டு அகவையை நெருங்கிக் கொண்டிருக்கிறார். பேராசிரியரின் உடல்நிலை காரணமாக மூன்றுமுறை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அச்செய்தியைச் சொல்வதற்காக அவர் அழைத்தபோதுதான்  அவரிடம் கடைசியாகப் பேசினேன்.

ஜான் பால் தனக்கென திரைக்கதைக் கொள்கைகள் சில கொண்டவர். கலைப்படங்கள் தேவை என்றாலும் நடுத்தரப் படங்களால் பொதுமக்களின் ரசனை மேம்பட்ட பிறகே கலைப்படங்களை உருவாக்கவேண்டும் என்று எண்ணினார். அடூர் கோபால கிருஷ்ணனின் சுயம்வரம் போன்ற படங்களை மக்களிடம் கொண்டுசெல்ல பணியாற்றிய ஜான் பால் அவரே எழுதியவை அனைத்துமே நடுத்தரப் படங்கள். ஆனால் இன்று பார்க்கையில் அவற்றையும் முழுமையான கலைப்படங்கள் என்றே சொல்லமுடியும் – பாடல்கள் அவற்றிலுண்டு என்பது ஒன்றே வேறுபாடு. உண்மையில் அன்று அவற்றை மக்களிடையே கொண்டுசென்றவை பாடல்கள்தான்.

ஜான் பால் சினிமாவுக்கான கதையில் நாடகீயத்தன்மை கூடாது என்ற நம்பிக்கை கொண்டவர். உணர்ச்சிகரத்தன்மை சினிமாவின் காட்சியழகை அழிக்கும் என்றார். சினிமா அன்றாட வாழ்க்கைபோல, சாதாரணமாக, மெதுவாக நடக்கவேண்டும். நிகழ்ச்சிகள் தன்னியல்பாக ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் செல்லவேண்டும். உச்சகட்டம் என பெரிதாக ஏதும் தேவையில்லை, கதைக்கு ஒரு முடிவு வேண்டும், அவ்வளவுதான். அவருடைய திரைக்கதைகள் எல்லாமே அத்தகையவை. படமாக்கலில் சில சினிமாக்களில் சற்று உணர்ச்சிகரம் குடியேறியிருக்கும். இசை வழியாகவும் சற்று உணர்ச்சிகரம் குடியேறியிருக்கும். குடியேறாவிட்டால் மேலும் நல்ல படங்களாக இருக்கும்.

சினிமாவில் தத்துவமோ, வாழ்க்கையின் பார்வைகளோ வெளிப்படவேண்டியதில்லை என ஜான் பால் நினைத்தார். சினிமா அன்றாடவாழ்க்கையின் ஒரு பகுதியை நம்பகமாக காட்டினாலே போதுமானது. அந்த கட்டமைப்பில் அது சொல்லவேண்டியவை உணர்த்தப்பட்டால் போதும். ஆகவே ஜான் பால் எழுதும் வசனங்கள் மிகச் சாதாரணமாக இருக்கும். நிகழ்ச்சிகளும் மிகமிக சாதாரணமாக இருக்கும். கதாபாத்திரங்களும் எந்த வகையிலும் வித்தியாசமானவர்கள் அல்ல.

ஆனால் அவர் எழுதிய படங்களில் பல மலையாளிகளின் நெஞ்சில் நிறைந்தவையாக ஏறத்தாழ அரைநூற்றாண்டு கடந்தும் நீடிக்கின்றன. காரணம், அவர் மானுட உள்ளம் வெளிப்படும் சில அரிய தருணங்களை அந்த அன்றாடத்தின் இயல்புத்தன்மை மாறாமலேயே உருவாக்கியிருப்பார் என்பதுதான். அந்தத் தருணங்கள் பெரும்பாலும் அனைவரும் சற்றேனும் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்தவையாக இருக்கும். சாதாரணமாகக் காணத்தக்க கதாபாத்திரங்கள் மிகச்சரியாக சினிமாவில் தோன்றும்போது நம் நுண்ணுணர்வுகளில் ஓர் அதிர்வு உருவாகும்.

உதாரணம் மின்னாமினுங்கின்றே நுறுங்ஙு வெட்டம்  என்னும் சினிமாவின் இரு கதாபாத்திரங்கள். கதைநாயகியான பார்வதியின் அப்பாவாக வரும் நம்பூதிரி தீய மந்திரவாதங்கள் செய்பவர். தன் மகளை நகரில் ஒரு நாயர்வீட்டில் தங்கி படிக்கவைக்கும்பொருட்டு வருகிறார். அவர்களின் உதவிகோரவே வருகிறார். வந்ததுமே அண்ணாந்து தென்னைமரங்களை பார்க்கிறார். “அடேய், இந்த தென்னையில் எத்தனை தேங்காய் வரும் சராசரியாக?” என்கிறார். ”தெரியவில்லை” என வீட்டு உரிமையாளரான நெடுமுடி வேணு கடுப்புடன் சொல்ல “தெரியணும்டா. தன் சொத்தை தான் கணக்குபோட்டு வைக்கணும்…” என்பார். அவர் வாழ்வது நூறாண்டு முந்தைய ஓர் உலகில். அன்று நம்பூதிரிகள் மானுடதெய்வங்கள்.

அதே சினிமாவில் பென்ஷன் வாங்கச் செல்லும் நெடுமுடிவேணுவும் சாரதாவும் பென்ஷன் வாங்க வந்திருக்கும் அவர்களுடைய பழைய தோழர்களால் செல்லமாக நையாண்டி செய்யப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் (இன்னொசெண்ட்) வாயாடியான உற்சாகமான மனிதர். துருதுருப்பானவர்.  “நீங்க செத்து உங்க சாவுச்சோறெல்லாம் தின்னுட்டுதாண்டா போவேன்” என்பவர் முதலில் செத்துப் போகிறார். கேரளத்தில் எந்தத்தெருவிலும் காணத்தக்க மனிதர்களின் மிக இயல்பான சித்திரங்களால் ஆனது ஜான் பாலின் சினிமா.

ஜான் பால் பரதனுக்காக எழுதிய சாமரம், மர்மரம்,ஓர்மக்காய், காதோடு காதோரம், மின்னாமினுஙின்றெ நுறுங்ஙு வெட்டம்; மோகன் இயக்கத்தில் எழுதிய விடபறயும் முன்பே, ஆலோலம்,ரசன ; பரத் கோபி இயக்கத்தில் உத்சவப் பிற்றேந்நு; பி.என் மேனன் இயக்கத்தில் அஸ்த்ரம்; பாலு மகேந்திரா இயக்கத்தில் யாத்ரா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

போளச்சன் திரைக்கதைக்கு ஒரு பிரச்சினை உண்டு. அவர் மிகச்சாதாரணமான நிகழ்வுகளின் மென்மையான இயல்பான ஓட்டத்தையே எழுதுவார். அவற்றினூடாக ஓடும் மனித உறவுகளின் உரசல்களும் உள்ளங்களின் மெல்லிய அலைக்கழிதலும்தான் அவருடைய கலையின் வெளிப்பாடுகள். நடிகர்தேர்வு, நடிப்பு ஆகியவற்றில் சற்று பிழையிருந்தாலும் மொத்தப்படமும் சர்வசாதாரணமாக ஆகி அவர் எழுதியது திரையில் வராமல் போய்விடும். நல்ல இயக்குநர் படங்களில் மட்டுமே அவரால் நல்ல படங்களை அளிக்க முடிந்திருக்கிறது. அறுபது திரைக்கதைகள் அவர் எழுதியிருக்கிறார்.

போளச்சன் வாழ்க்கையில் இரண்டு நிகழ்வுகள் மிக நெருக்கடியானவை. அவருடைய மனைவி ஐஷா எலிசபெத் 1981 வாக்கில் நோயுற்றார். அது புற்றுநோய் என ஊகிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சாவின் விளிம்பில் ஊசலாடி இறுதியில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அது ரத்தத்தின் ஒரு குறைபாடு என கண்டறியப்பட்டது. தொடர்சிகிழ்ச்சையில் அவர் உயிர்பிழைத்தார்.

அப்போது போளச்சன் அவருடைய திரைவாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார்.அந்த ஓராண்டில் மட்டும் விடபறயும் முன்பே, கதயறியாதே, ஆரதி, ஓர்மைக்காய், தேனும் வயம்பும், பாளங்கள் என ஆறு படங்களுக்கு எழுதினார். எல்லாமே சென்னையில் படமானவை. போளச்சன் வேலூர் ஆஸ்பத்திரியின் கொசு மொய்க்கும் வராந்தாவில் அமர்ந்து மடியில் காகிதத்தை வைத்து, டியூப் லைட்டின் அதிரும் ஒளியில் அவற்றை எழுதினார். பகலில் ரயிலில் கொஞ்சநேரம் தூங்குவார். அப்படியே சென்னையில் திரைப்பணி. மீண்டும் வேலூர். இரவு முழுக்க மனைவியுடனேயே இருந்தார்.

மனைவி பிழைத்துக் கொண்டார். ஆனால் போளச்சனின் தைராய்ட் நிரந்தரமாக செயலிழந்தது. கொடும்பசி. உடல் எடை இரண்டு ஆண்டுகளில் இருநூறு கிலோவுக்குமேல் சென்றது. நான் அவரை சந்திக்கும்போது இரண்டு அறுவைசிகிழ்ச்சை வழியாக நாற்பது கிலோ கொழுப்பை உடலில் இருந்து வெட்டி அகற்றியிருந்தார். அதன்பின் நூற்றி முப்பத்தெட்டு கிலோ எடை இருந்தார். இந்தியாவின் மூன்றாவது எடைமிக்க மனிதர்.

அறுவை சிகிழ்ச்சைக்கு முன் அவரால் நடக்கவே முடியாது. நான் பார்க்கையில் அலுமினிய கூண்டுபோன்ற ஊன்றுகோலை பயன்படுத்தி மிக மெல்ல அடிமேல் அடிவைத்து நடப்பார். கால்களில் கட்டு போட்டிருப்பார். பலவகை வலிகள் உண்டு.  காரில் ஏறும்போது அவர் முதலில் ஏறிவிட்டு தன் வயிற்றை தன் கைகளால் அள்ளி தூக்கி காருக்குள் வைப்பார். விந்தையாக இருக்கும்.

இரண்டாவது இடர், அவர் சினிமா தயாரித்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் இயக்கத்தில் 2000 த்தில் வெளிவந்த ஒரு செறு புஞ்சிரி என்னும் படம். அதன் கதை சி.வி.ஸ்ரீராமன். திரைக்கதை எம்.டி.வாசுதேவன் நாயர். வேறொருவர் தயாரித்து கால்வாசி முடிந்த படத்தை அவர் விட்டுச்சென்றுவிட்டார். ஏனென்றால் அது முழுக்க கலைப்படம். எம்.டி.வாசுதேவன் நாயரின் வணிகமதிப்புக்காக அவர் தயாரிக்க வந்தார். படம் விற்காது என தெரிந்ததும் சென்றுவிட்டார்.

எம்.டி.வாசுதேவன் நாயர் மனம் கலங்கியதை கண்ட ஜான் பால் அவரே அதை தயாரிக்க முன்வந்தார். ஜான் பாலுக்கு எம்.டி.வாசுதேவன் நாயர் மேல் இருந்த குருபக்தி அத்தகையது. விட்டுச்சென்றவர் ஏகப்பட்ட நிதியை அப்படம் மீது வாங்கியிருந்தார். அப்படத்தின் உரிமையை வாங்கியபிறகே ஜான் பாலுக்கு அது தெரிந்தது. ஜான் பாலின் மகள் ஜிஷா பேரில் தயாரிக்கப்பட்ட அப்படத்துக்காக அவர் தன் வீட்டை விற்க நேர்ந்தது. முழுப்பணமும் செலவுகணக்குமட்டுமே.

ஆனால் ஜான் பால் இருக்குமிடத்தில் வெடிச்சிரிப்புதான். எவரையும் எதையும் விமர்சிக்காமல் ஒருவர் மணிக்கணக்காக சிரிக்கச்செய்ய முடியும் என்பதை நான் ஜான் பாலின் பேச்சில் இருந்தே அறிந்தேன். வேடிக்கை நிகழ்ச்சிகள், விதவிதமான மனிதர்கள். நானும் போளச்சனும் இணைந்து ஒரு சினிமாவுக்கு எழுதினோம். அந்தப்படம் கைவிடப்பட்டது. எர்ணாகுளத்தில் ஜோளி ஜோசப் எனும் தயாரிப்பாளரின் உயர்தர ஓய்வுவிடுதியில் நான் ஒருமாதம் தங்கி அந்த திரைக்கதையை எழுதினேன்.

அது ஒன்பதாவது மாடியில் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட். மரைன் டிரைவ் நோக்கி திறந்திருக்கும் மாபெரும் கண்ணாடிச் சாளரம். மரைன் டிரைவின் மொத்த வளைகுடாவும் தெரியும். அது பருவமழை தொடங்கும் காலம். மழை திரண்டு இருண்டு வந்து கண்ணாடிச்சன்னலை அறைந்து மூடி நெளிந்தாடி அடங்கி வழிந்து ஓயும். மெல்லிய பொன்னொளி. அலையடங்கிய கடல் படிகவெளி போலச்  சுடர்கொண்டு ஒளிரும். மீண்டும் மெல்ல வானம் இருண்டு இருண்டு மூடத்தொடங்கும். என் வாழ்க்கையில் நான் மழையை மட்டுமே நேருக்குநேர் பார்த்தபடி இருந்த நாட்கள் அவை.

ஒவ்வொரு நாளும் போளச்சன் வருவார். என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். ஒன்றாகச் சாப்பிடுவோம். மாலையில் கிளம்பிச்செல்வார். பல எர்ணாகுளம் நண்பர்கள் வருவார்கள். சினிமாநண்பர்கள் இருப்பார்கள். அவர் பேசிக்கேட்டு  சிரித்துக்கொண்டே இருப்போம். பேச்சு நின்று மழையை பார்ப்போம். மீண்டும் சிரிப்பு. மழையொளியில் போளச்சனின் கண்ணாடிச் சில்லு ஜொலித்துக் கொண்டிருக்கும்.

போளச்சன் வாழ்க்கையின் துன்பம் என்பதே இல்லை. “என் அப்பா ஒரு புண்ணியாத்மா ஜெயா. அதனால் என் வாழ்க்கையில் ஒரு துளி துன்பம் கூட இல்லை” என்றார்

”அப்படியா? மனைவியின் நோயில் நீங்கள் துன்பப்படவில்லையா?”

“இல்லை. வருத்தம் இருந்தது. செய்யவேண்டியதைச் செய்தேன். தொடர்தூக்கமின்மையால் உடம்பு கெட்டது. ஆனால் நான் துன்பப்படவே இல்லை. அப்போதும் இதே சிரிப்புதான். நான் வேலூர் ஆஸ்பத்திரியில் இருப்பேன். பரதன் என்னைக் கூப்பிட்டு ‘போளச்சா ஏதாவது பேசு. சோர்வாக இருக்கிறேன். கொஞ்சம் சிரித்தால் சரியாகிவிடும்’ என்பார். நான் பேசுவேன்”

மலையாள சினிமாவின் பல புகழ்பெற்ற நகைச்சுவைப் பகுதிகள் போளச்சனின் வேடிக்கைபேச்சுகளில் இருந்து உருவானவை. ஆனால் அவர் தன் படங்களில் நகைச்சுவை எழுதமாட்டார். சேர்க்கவும் ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் படங்களில் கோபி மறக்கமுடியாத சில வேடிக்கைக் கதாபாத்திரங்களை நடித்திருக்கிறார், ஆனால் அவை அன்றாடவாழ்க்கையின் இயல்புத்தன்மைக்குள்ள்யே இருக்கும். நகைச்சுவைக்கு தேவையான திரிபு அல்லது மிகை அவற்றில் இருக்காது.

போளச்சன் சாப்பிடுவதை பார்க்க ஆனந்தமாக இருக்கும். ஒரு சப்பாத்தியை இரண்டாகக் கிழித்து இரண்டு வாயில் தின்பார். பல சப்பாத்திகள், பல கோழிகள். பசி அவரை மெலிய விடவில்லை. அதற்கு எந்த மருந்தும் இல்லை.

”அடுத்த ஜென்மத்தில் நான் என்ன என்று எனக்கு தெரியாது. போன ஏழு ஜென்மத்தில் சமையற்காரன்” என்றார். “அவன்கள்தான் சமைப்பார்கள், ஆனால் சாப்பிடப்பிடிக்காமல் டீயை வைத்தே வாழ்க்கையை ஓட்டுவார்கள். இந்த பசி ஏழு ஜென்மத்தில் நான் ஒத்திப்போட்டது”

போளச்சனை போன்ற அதிதூய மனிதர் ஒரு படத்தில் கொடூரமான நிழல் உலக டான் ஆக மம்மூட்டிக்கு எதிராக நடித்திருக்கிறார் என்பது வேடிக்கைதான். ஆனால் பொதுவாக நல்ல வில்லன்கள் எல்லாருமே அவரைப்போல அப்பாவிகள்தான்.

போளச்சன் எவரைப் பார்த்தாலும் “எந்தாடோ, ஆள் அங்ஙு மெலிஞ்ஞு போயல்லோ” என்பார். நூறு கிலோ எடையுள்ள தயாரிப்பு உதவியாளர் குரியனிடம் அப்படிச் சொன்னபோது நான் “இவரையா சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“எடா, இவன் என்னைவிட முப்பது கிலோ எடை குறைவு” என்றார் போளச்சன். “உலகத்திலுள்ள அத்தனைபேரும் மெலிந்துபோயிருக்கிறார்கள். ஏனென்றே தெரியவில்லை”

போளச்சனுக்கு அவருக்கான ஆன்மிகம் உண்டு. மாதாகோயில் போவது, பிரார்த்தனை கேட்பது எல்லாம் வழக்கமில்லை. போளச்சன் சொல்லி புகழ்பெற்ற ஒரு வரி பின்னாளில் சினிமாவில் வந்தது. மத்தாயி சொன்னார்.  “மத்தாயி கள்ளு குடிக்கும். மத்தாயி பெண்ணு பிடிக்கும். கர்த்தாவே மத்தாயியோடு பொறுக்கணே. பொறுத்தில்லெங்கில் மத்தாயிக்கு மயிராணே” ( மத்தாய் கள்ளு குடிப்பேன். பொம்புளை தேடுவேன். கர்த்தரே மத்தாயியை மன்னிக்கணும். மன்னிக்காவிட்டால் மத்தாயிக்கு மயிரே போச்சு)

போளச்சனும் நானும் எழுதியது ஒரு அருமையான கதை. ஒரு சர்ச் வார இதழில் வந்த ஒன்றரை பக்கக் கதையை ஒட்டியது. ஒரு ஃபாதருக்கு ஒரு திருடன் ஃபோன் செய்கிறான். அவர் வாழ்க்கையை தலைகீழாக்குகிறான். ஆமாம், அதே திருடன்தான். வேடிக்கையாகச் சிரித்துக்கொண்டே எழுதினோம். பிருத்விராஜ் நடிப்பதாக இருந்தது. திருடன் கடைசியில் ஒரே ஒரு ப்ரேம்தான் வருவான்.

திருச்சபைக்கு போளச்சன் பல பணிகள் செய்திருக்கிறார். பல பக்திப்பாடல்களை இசையமைப்பாளர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு எல்லா மதமும் சமம்தான். இந்து கோயில்களுக்குச் செல்வார். இந்துப் பாடல்களுக்கும் அதேபோல பணியாற்றியிருக்கிறார். “நமக்கு என்ன தெரியும்? கடைசியில் மேலே இருப்பது இந்து தெய்வம் என்றால் அங்கே போனபின் சிக்கலாகிவிடும்” ஒரு பேட்டியில் சாவு பற்றி சொல்கிறார். பரதன், பத்மராஜன் எல்லாரும் போய்விட்டார்கள். மேலே போனபின் சாவு பற்றிய கருத்தை டெலிபதி வழியாகச் சொல்வதாக ஒப்பந்தம் இருந்தது. சொல்லவில்லை, காத்திருக்கிறேன் என சிரிக்கிறார்.

போளச்சன் சென்ற ஏப்ரல் 23, என் பிறந்தநாளுக்கு மறுநாள் மறைந்தார்.எனக்குச் செய்தி தெரியாது. நான் நேற்றுத்தான் மின்னஞ்சல்களைப் பார்த்தேன். அவர் மறைந்தது பெரிய துயரை அளிக்கவில்லை. போளச்சன் சென்ற மார்ச் மாதம் கீழே விழுந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கே அவர் உடல்நிலை நலிவடைந்தபடியே இருந்தது. அவர் மறைந்துவிடுவார் என பத்துநாட்களுக்கு முன்னரே சொல்லப்பட்டிருந்தது.

போளச்சன் ஒரு மாதம் முன்னர் நள்ளிரவில் படுக்கையில் இருந்து எழுந்தபோது கீழே விழுந்துவிட்டார். அவரே செல்பேசியில் நண்பராகிய இளம்நடிகரை அழைத்து விஷயத்தைச் சொல்ல அவர் நண்பர்களுடன் போளச்சனின் வீட்டுக்குச்சென்றார். ஆனால் அவரை தூக்க முடியவில்லை. ஆம்புலன்ஸ் காரர்கள் பலமுறை அழைத்தும் வரவில்லை என்றும், தீயணைக்கும்படை வீரர்களை அழைத்தபோது அது தங்கள் வேலையல்ல என்று சொல்லிவிட்டதாகவும் அந்த இளம் நடிகர் குற்றம் சாட்டினார்.

ஆறுமணி நேரம் போளச்சன் தரையில் கிடந்தார். அவர் உடல் நடுக்கம் கொள்ள தொடங்கியது. விடிந்தபின் காவல்துறையினர் வந்து அவரை தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கே சிகிழ்ச்சைகள் ஒவ்வொன்றாக பயனற்றுபோயின. மம்மூட்டிக்கு மிக நெருக்கமானவர் போளச்சன். அவர் வந்து நின்று கவனித்துக் கொண்டார். ஆனால் முடிவு வகுக்கப்பட்டுவிட்டிருந்தது.

போளச்சன் அதே வெடிச்சிரிப்புடன் மேலே சென்றிருப்பார். அவருக்குப் பிரியமான ஏசுவிடம் “எந்தாடோ, தான் ஆளு மெலிஞ்ஞு போயல்லோடா” என்று சொல்லி தோளில் ஓங்கி தட்டியிருப்பார் என நினைத்துக்கொள்கிறேன்.

முந்தைய கட்டுரைஉரையாடும் காந்தி, கடிதம்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை-48