ஆனந்த் குமார்- கடிதம்

அன்புள்ள ஜெ,

நலம்தானே? நானும் நலம்.

ஆனந்த் குமார் அவர்களுக்கு விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்வைத் தருகிறது. அவர் பற்றிய ஒர் அறிமுகப்படுத்தல் செய்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். இப்போது உங்கள் தளத்தில் அவரைப்பற்றி ஏராளமான கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் படித்து அவரைப்பற்றி ஒரு பதிவை உருவாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அவருக்கு இணையப்பக்கம் ஏதாவது உள்ளதா?

ரவீந்திரன் சாமிவேலு

***

அன்புள்ள ரவீந்திரன்,

ஆனந்த்குமார் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். ஆனால் நாகர்கோயிலில் இருந்து சென்று நீண்டநாட்களாகிறது. கணிப்பொறித்துறை ஊழியராக பெங்களூரில் வேலைபார்த்தார். கொரோனா காலகட்டத்தில் நீண்ட காலத்துக்குப்பின் நாகர்கோயிலில் சிறிதுகாலம் இருந்தார்.   இப்போது கோவையில்.

ஆனந்த்குமாரின் இரண்டு விருப்பங்கள் கவிதையும் புகைப்படக்கலையும். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்து எடுத்த ஆவணப்படம் ஒன்று யூடியூபில் உள்ளது. சுரேஷ்குமார இந்திரஜித் பற்றிய ஆவணப்படமும் ஆனந்த்குமார் எடுத்தது.

ஆனந்த்குமார் புகைப்படக்கலையை தொழிலாகத் தெரிவுசெய்து கொண்டிருக்கிறார். இப்போது கோவையில் வாழ்கிறார். குழந்தைகளை புகைப்படம் எடுப்பது அவருக்கு பிடித்தமானது. அதையே தொழிலென்றும் செய்கிறார். ஆனந்த் குழந்தைகளை எடுத்த படங்கள் மட்டுமே கொண்ட தும்பி குழந்தைகள் இதழ் வெளிவந்துள்ளது.

பிறந்தநாள் முதலிய நன்னாட்களில் குழந்தைகளை நல்ல புகைப்படநிபுணர்களைக் கொண்டு புகைப்படம் எடுத்துச் சேமிப்பது உலகமெங்குமுள்ள வழக்கம். கேரளத்திலும் அவ்வழக்கம் உண்டு. ஆனந்த் திருவனந்தபுரத்தில் அதையே முழுநேர தொழிலாகச் செய்துகொண்டிருந்தார். இப்போது மனைவியின் பணிநிமித்தம் கோவைக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.

புகைப்படங்கள், குறிப்பாக குழந்தைப்படங்களுக்காக கோவை வாசிகள் அவரை அணுகலாம்

ஆனந்த்குமார் மின்னஞ்சல் : [email protected]

ஆனந்த்குமார் தொலைபேசி : 7829297409

ஆனந்த்குமார் இணையப்பக்கம் : https://anandhkumarpoems.wordpress.com/

ஜெ

விஷ்ணுபுரம் விழா 2019 – முகங்கள் ஆனந்தகுமார்
முந்தைய கட்டுரையுவன் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகடலும் கவிதைகளும் -லோகமாதேவி