ஈர்ப்பின் விசை – யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
சியமந்தகம் இணையதளத்தில் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். யுவன் சந்திரசேகர் எழுதிய கட்டுரை மிக உணர்ச்சிபூர்வமானது. யுவனும் நீங்களும் கொண்ட முப்பத்தைந்தாண்டுக்கால நட்பு, அவருடைய படைப்புக்கள் மேலும் அவர் மேலும் நீங்கள் கொண்டிருக்கும் அன்பு என பல தளங்கள் வெளியான கட்டுரை. தமிழில் இப்படி பல இலக்கிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். சுந்தரராமசாமி -கிருஷ்ணன் நம்பி. கி.ராஜநாராயணன் – கு.அழகிரிசாமி. அதற்கு முன் கு.ப.ராஜகோபாலன் – ந.பிச்சமூர்த்தி. இந்த இலக்கிய நட்பில் புனிதமான ஒன்று உள்ளது. ஏனென்றால் இரண்டு இலக்கியவாதிகள் இணைவது கடினம். இலக்கியவாதியின் ஈகோ பெரியது. ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் அவர்களுக்குண்டான அழகியலும் வாழ்க்கைப்பார்வையும் இருக்கும்.
கட்டுரையில் எனக்கு கொஞ்சம் சங்கடமோ வருத்தமோ ஊட்டியது அஞ்சலிக்கட்டுரை பற்றிச் சொல்லியிருப்பது. இருவருமே என் எழுத்தாளர்கள். அப்படியெல்லாம் கற்பனைசெய்வதே கடினமானது.
எம்.பாஸ்கர்
***
அன்புள்ள பாஸ்கர்,
அது ஓர் உணர்வு மட்டும்தான். நிரந்தரமானது, நீடிப்பது என நாம் எதை எண்ணினாலும் மரணம் அங்கே வந்துவிடும். மரணம் பற்றி நினைக்காமல் எவரும் எந்த அரிய உணர்வையும் எண்ணிக்கொள்ள முடியாது.
யுவன் கட்டுரை எனக்கும் அணுக்கமானதுதான். அவன் என்றுமே உணர்ச்சிகரமானவன். மிகச்சிறிய ஒரு துளிக்குள் ஆழ்ந்து ஆழ்ந்து செல்பவன் என்பது என் எண்ணம். அவனை நினைக்கையில் அவனுக்கு மிக நெருக்கமான ஆயுட்கால நண்பனாகிய தண்டபாணியையும் என்னால் நினைக்காமலிருக்க முடியாது. இருவரையும் ஒரே நாளில்தான் சந்தித்தேன்.
ஜெ
***