வணக்கம். நலம் விழைகிறேன்.
டிப் டிப் டிப் கவிதைத் தொகுப்பை பற்றிய என்னுடைய வாசிப்பனுவ பதிவை உங்கள் தளத்தில் பார்ப்பது இன்றைய நாளை இனிமையாக்குகிறது. இந்தப்பதிவை உங்கள் வரை கொண்டுவந்து சேர்த்த உள்ளத்திற்கு அன்பும் நன்றியும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களிடம் ஒன்றை பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜனின் ‘காயாம்பூ’ நாவலை அண்மையில் வாசித்தேன். முதல் சில பக்கங்களில் மூடி வைத்து விட்டேன். வாசிக்கவென்று எடுத்துவிட்ட புத்தகங்களை முட்டி மோதி திறந்து விடும் நமக்கு இதில் என்ன சிக்கல்? என்று யோசித்தேன். இது குழந்தையின்மை பற்றிய நாவல். ‘நாம் தான் பேச்சுலர் ஆச்சே …நமக்கெதுக்கு இந்த வம்பு’ என்ற நினைப்பு. [பீஷ்மர் போன்ற பிரம்மச்சாரிகள் பெண்கள் என்றால் எப்படி குறிப்பிடுவது என்று தெரியவில்லை]
ஆனால் உண்மை என்ன என்றால்? மேல்நிலை வகுப்புகளிலும்,கல்லூரியிலும் உயிர்அறிவியல் எடுத்து படித்ததனால் அப்படியொன்றும் உடலியல் பற்றிய அறிமுகமே இல்லாத ஆள் இல்லை. பின்பு மீண்டும் எடுத்து வாசித்தேன். நூறுபக்கங்களுக்கு மேல் நிதானமாக வாசிக்கமுடிந்தது. அண்மையில் மனதை தொந்தரவு செய்த நாவல். புறமாக குழந்தையின்மைக்கான மருத்துவமுறைகள் பற்றியும், அகத்தில் அது ஏற்படுத்தும் தொந்தரவுகள் மற்றும் மருந்துகள் ஏற்படுத்தும் மனநிலை தடுமாற்றங்கள் என நாவல் குழந்தையின்மை ஏற்படுத்தும் பாதிப்புகளை,சமூகத்தின் நிர்பந்தங்களை அல்லது தன் மனமே தனக்கு இடும் நிர்பந்தங்களை நாவல் நன்றாகவே கையாள்வதாகவே நினைக்கிறேன். இது இவரின் முதல் நாவல். நாவல் வாசிப்பில் ஏற்படுத்தும் தடைகளைத் தாண்டி வாசிக்க வேண்டிய நாவல். பேசுபொருளை அணுகியிருக்கும் விதம் சார்ந்து இது தான் தமிழில் முதல் நாவல் என்று நினைக்கிறேன். Invitro fertilization,Intra unine insemination,Embiro implant,Azoospermia,Hormnal imbalance,HSG test போன்ற விஷயங்களை பேசிய இன்னொருநாவல் உண்டா என்று தெரியவில்லை.
அதனால் எனக்கிருந்த Hesitation ன்களை தாண்டி இந்த நாவலை மட்டும் மையப்படுத்தி ஒரு நேர்காணல் செய்தேன். அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
நேர்காணலிற்கான இணைப்பு:
http://www.vasagasalai.com/lavanya-sundararajan-interview-kaayampoo-novel/
கமலதேவி