பெண்கள்,காதல்,கற்பனைகள்- கடிதம்

பெண்கள்,காதல்,கற்பனைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். நான் பதின்மவயதிலேயே காதல் என்பது வலி, வேதனையைத் தருவது என்ற  ஞானத்தைப் பெற்றிருந்தேன். அது சில அக்காக்கள், அண்ணன்களின் காதல்கள், கல்யாணங்கள், தோல்விகளை பார்த்ததால் கிடைத்த அவதானிப்பாக இருக்கலாம்.   நான் முதன் முதலில் அருண்மொழியை அறிந்துகொண்டது உங்கள் நூல்களை வாசிப்பதன் மூலமே. சங்கச் சித்திரங்களில் ‘கள் மணக்கும் மலர்’ கட்டுரையில், ‘பேசிக்கொண்டே நடக்கையில் அருண்மொழி சற்றுத்தாவி கையில் இருந்த புத்தகத்தால், பூத்துக் குலுங்கிய கொன்றை மரக்கிளையை அடித்தாள். மஞ்சள் நிற இதழ்கள் கொட்டின. அவளுடைய தலையில் பொன்னிற இதழ் ஒன்று வெகு நேரம் இருந்தது.” அந்த அருண்மொழியையும், செட்டிலாகிவிட்ட உங்களையும் பிற்காலத்தில் அறிந்தவனாக ஜெயித்த காதலர்களாக நான் பார்த்தேன்.

உங்களுக்கு கடிதம் எல்லாம் எழுதி அறிமுகமாகாத ஒரு காலத்தில், காதலர் தினம் ஒன்றில், ஜெயித்த காதலர்கள் என்று  நண்பர்களுக்கு, உங்களையும் மற்றும் மூன்று காதல் ஜோடிகள் பற்றியும் குறிப்பிட்டு கட்டுரை எழுதினேன். அருண்மொழியின் இந்தக் கட்டுரைகளை அப்படித்தான், இனிமையாக நான் பார்க்கிறேன். முதல் கட்டுரை வந்த நாளில், வாசித்துவிட்டு, அன்று முழுக்க நானும் ராதாவும் முழு இனிமையில் இருந்தோம்.

நாங்கள் கல்யாணத்திற்குப் பின் காதலித்தவர்கள். ராதாவை முன்னரே பார்த்திருக்கலாம் என்று அடிக்கடி நான் சொல்வதுண்டு. திண்டுக்கல்லிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் எத்தனையோ முறை , இடையில் உடுமலைப்பேட்டையில் இறங்கி டீ/காபி குடித்திருக்கிறேன். அந்த பஸ் நிறுத்தத்திலிருந்து, இரண்டு கி.மீ. தொலைவில் எனக்காகப் பிறந்தவள் வீடு இருக்கிறது என்பதுகூட தெரியாமல் இருந்திருக்கிறேன். நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் இடையில் இருந்த மூன்று மாதங்களில் மூன்றே கடிதங்கள் போட்டுக்கொண்ட எங்களுக்கு, நாளொரு கடிதம் எழுதியவர்களைப் பார்த்தால், எப்படி இருக்கும்?

‘லைலா மஜ்னு,’ ‘அமராவதி அம்பிகாபதி’ என்று சோகமாகவே காதல் கதைகள் கேட்டு சலித்துபோய்விட்டது. அருண்மொழியின் கட்டுரைகள் இனிமை. பாரதியையும் செல்லம்மாவையும் நாங்கள் பார்த்ததில்லை. எங்கள் காலத்தில் வாழும் அருண்மொழி,  ஜெயமோகன் காதலை பார்ப்பதில் கேட்பதில் எங்களுக்கு சந்தோஷம். எதுவும் மிகைப்படுத்தாமல் அவர் எழுதியிருப்பது, வாழ்வின்மேல்  நம்பிக்கையை வரவழைக்கிறது.

நான், என் சகோதரியின் காதலைக் கேட்டறிந்து வீட்டுப் பெரியவர்களிடம் பேசி, கல்யாணம் செய்து வைத்தவன். எனக்கு அப்பொழுது வயது 23. அருண்மொழியின் இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்பொழுது, ஜெயித்த ஜெயமோகனாக பார்க்காமல், என் சகோதரி, யாரோ ஒருவரை காதலிக்கிறார். சகோதரனாக கவலைப்பட்டுக்கொண்டு வாசித்தேன். அவரின் பார்வையில் அவருடன் இருப்பவராக என்னை மாற்றியதில் இருக்கிறது அவரது எழுத்தின் வலிமை. அவர் தம்பியை பற்றி எழுத ஆரம்பிக்கும் பத்தியிலேயே நான் சொல்லிக்கொண்டேன், “அக்காக்கள் தம்பியிடம் காதலை மறைக்கமுடியாது” என்று.

அருண்மொழி வடக்கில் கல்லூரி சுற்றுலா வந்த சமயம் நான் டில்லியில்தான் இருந்தேன். அப்பொழுது உங்களுக்கு என்னை தெரிந்திருந்தால், ‘என்னோட ஆளு வரா, பாத்துக்கோ சௌந்தர்னு’ சொல்லியிருப்பீர்கள் என நினைக்கிறேன். கரோல் பாக்கில் ஹிந்தியில் பேசி பொருட்கள் வாங்கிகொடுத்திருப்பேன்.

காதலர்கள் என்றால், கொஞ்சலும் முத்தங்களும் மட்டுமல்ல. அவர்கள் உரையாடலில் வாசிப்பு , இலக்கியம், அரசியல், குடும்ப சோகங்கள் பரிமாற்றம் என எல்லாமும் இருக்கும். காதல் என்பது யதார்த்தமன்றி வேறில்லை. முதலில் சுந்தரராமசாமியின் கட்டுரையைத்தான் முதலில் வாசித்தேன் என்று சொல்லிவிட்டு, ட்ரெய்ன் ஏறும் சமயம், ‘மன்னிக்காதே நெல்லி, ரொம்ப நல்லாயிருக்கு, போகட்டா’ என்று உங்களை பிரகாசிக்க வைத்தது, ஒரு இனிமையான காட்சி.

அருண்மொழிக்குவந்த கடிதங்களில் ஒரு கடிதம் கூட திருமணமாகாத பெண் இல்லை என்று சொல்லியிருந்தீர்கள். முதல் கட்டுரையை வாசித்துவிட்டு,  எங்கள் உறவினர் பெண் (இளம்பெண்) எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி. அவரது சம்மதத்துடன், ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் கொடுக்கிறேன்.

இன்றைய இளைஞர்கள் படிக்கவேண்டிய கட்டுரை. என்னுடன் இருக்கும் நண்பர்களின் காதலையும், பிறகு தோல்விகளையும் பார்க்கும்பொழுது கவலையாகவும், பயமாகவும் இருக்கிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் இதை வாசிக்கவேண்டும். அவர்களுக்கு உண்மையான காதலை பற்றி தெரியும்.

எனது வயதுடையவர்கள், பணத்தையும் நிறத்தையும்தான் பார்க்கிறார்கள். இந்தக் கட்டுரையில் காணும் காதலில், அதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. தோல்வியடைந்த காதலை பார்க்கும் எனக்கு ஒரு ஜெயித்த காதலை பார்க்கமுடிகிறது. காதலையும் தாண்டி அங்கே ஒரு அழகிய நட்பு இருக்கிறது. இப்பொழுது காதலிக்கும்பொழுதே, அதிலிருந்து விடுவித்துக்கொள்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்தக் காதலில் தொடர்வோம் என்ற ஒரு உறுதி இருக்கிறது.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

***

முந்தைய கட்டுரைலோஹி- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைநேரு ஒரு புகைப்பட நூல்