பொன்முகக் கிண்கிணி ஆர்த்தல்- தாமரைக் கண்ணன்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022

ஆனந்த் குமார் இணையப்பக்கம் https://anandhkumarpoems.wordpress.com/

அம்மாவின் அம்மாவை பார்க்க எனது மகனை முதல் முறையாக கூட்டி போயிருந்தேன், சம்பிரதாயமாக அவ்வாவின் காலில் கவினை விழவைத்து  ஆசி எல்லாம் வாங்கியாயிற்று. கோவிட் காலத்தில் நேரடியாக கவினை ஊருக்கு அழைத்துவர முடியவில்லை, அவ்வாவும்  எண்பத்தைந்தை கடந்திருந்தாள். அம்மா எனது செல்போனில் உள்ள  அவனது போட்டோக்களை அவ்வாவுக்கு வரிசையாக காட்ட சொன்னாள்,  அவன் தவழும் குழந்தையாக கண்களை உருட்டும் போட்டோக்களில் ஆழ்ந்த கிழவி அந்தப்புகைப்படத்தை கொஞ்ச ஆரம்பித்தாள், முழியைப்பாரு, உம், கண்ண நொண்டிப்புடுவேன் என்று சிரித்துக்கொண்டே அதிலிருந்த குழந்தையை நிஜக்குழந்தையாகவே பாவித்துக் கொண்டாள்,  நேரில் ஓடி விளையாடும் கவினை அப்போது அவள் பொருட்படுத்தவும் இல்லை.

கவிஞர் ஆனந்தகுமார்  இரு குழந்தைகளுக்கு அப்பாவும் கூட என நினைக்கிறேன். தனது பேனாவை அவர் எடுக்கும் தோறும் பிறந்த குழந்தையை இரு கைகளிலும் அதிகவனத்துடன் ஏந்திக் கொள்ளும் தந்தை ஒருவர்  எழுந்துவருகிறார். வளர்ந்து பெரியவர்களாகி விடப்போகும்  குழந்தைகளை, அவர்கள் உதறிவிடப்போகும் குழந்தைமையை எப்போதும் தன்கைகளில் வைத்திருக்கத் துடிக்கும் ஒரு தகப்பன்.

அவரது குழந்தை என்னும் கவிதை நண்பர்களுக்கிடையே அதிகம் பகிரப்பட்டது.

குழந்தை
 எப்போது
 என் குழந்தை?

ஒரு குழந்தையை
கையிலெடுக்கையில்
அது என் குழந்தை  

வளர்ந்த குழந்தையை
அணைக்கும்போதெல்லாம்
என் குழந்தை

விலகும் குழந்தையை
நினைக்க நினைக்க
என் குழந்தை
என் குழந்தை”

அதே உணர்வு, கையில் தன் குழந்தைக்கான பரிசுடன் தாமதமாக வீடு திரும்பும் ஒருவன் நினைக்கும் கவிதையொன்றில்  வேறு நிறத்தில் எழுந்து வருகிறது. அவன் மானசீகமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை நிஜத்தில் வேறொன்றாகியிருக்கும்  கவலை ..

“சரியாய் சொன்னால்
கிடைக்கும் பரிசு
இதோ காத்திருக்கிறது
என் மடியில்
வீடு போய் சேர்க்கையில்
உறங்கும் குழந்தை
கொஞ்சம் வளர்ந்திருப்பான்.”

நோஞ்சான் குழந்தையை தன் பெருங்கைகளால் அள்ளிக்கொள்ளும் கவிதை ஒன்று

“….இடையில்,
யாரும் அறியாமல்
தன் சுவாரஸ்யத்தை
குறைத்துக்கொண்ட
விளையாட்டு
குழந்தையை மெல்ல
சேர்த்துக்கொண்டது”

இவ்வுணர்விலிருந்து கவிதையாக மேலெழும் கவிதை ஒன்றுண்டு, தூளியில் ஆடும் குழந்தை, நதியில் ஆடும் கூழாங்கல்லாக மாறிவிடும் இனிமை.. இந்தப்புள்ளியிலிருந்து நவீன கவிமனத்தின் பெருகும் கவிதைகளாக உயரம், பரிசு முதலிய கவிதைகளும் சேர்கிறது.

இங்கிருந்து ஆனந்தின் கவிதைகள் தன்னைச் சூழ்ந்திருந்த அனைத்துக்கும் கொஞ்சம் குழந்தைமையை அள்ளித் தெளிக்கின்றன, சுவரைத்தீண்டும் தொட்டிச்செடியையும், பக்கத்துவீடு செல்லும் பலாச்சுளையும் கூட குழந்தையாக்கி பார்க்கின்றன. கட்டாயம் ஆண் ஒருவன்  குழந்தையை தீண்டுகையில் கட்டவிழும் இறுக்கங்கள் அற்புதமான ஒன்று,அவனது நுண்ணுணர்வை எழுப்பும் தருணமும் கூட.
அனாயசமாக குழந்தையை கையாளும் பெண்களுக்கு இது உணர்வதற்கரிது.  தனது பிரதியை அதன் சிறு சிறு அசைவுகளை வெறிகொண்டு கொண்டாடும் ஆசையை வெளிக்காட்டும் ஒருவரது மொழி வளர்ந்து சென்று , ஒரு ஏரியை மண்ணில் கை அளைந்து விளையாடும் பிள்ளையாக பார்க்கும் வரை போகிறது.

இந்த உணர்வு காலாதீதமானது, குடிக்கும் கூழில் கைவிட்டு ஒளப்பும் பிள்ளையை மெச்சும் வள்ளுவர் முதலாக.

குழந்தை பெயர் சொல்லி பாடிய பல பிள்ளைத்தமிழ்களை விட, சில பெரியாழ்வார் பாடல்களில் மொழியின் இலக்கணத் தேவை, தலைவனை மெச்சுதல் தாண்டி நிஜமாகவே ஒரு குழந்தை தவழ்ந்து போகிறது.

“தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்…”

“பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக்கோட்டரா அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ…”

இந்தக்கவிமரபின் நீட்சியாகவும், ஒரு தரிசனத்திற்கு இணையாக கண்டுகொண்ட இந்த பேரினிமையை ஒருமின்மினியை கைக்குள் பிடித்து ஒற்றைக்கண்ணை கொண்டு பொத்திய கைகளுக்குள் எட்டிப்பார்க்கும் ஒருவனின் புன்னகையாகவும் உள்ள கவிதைகள்  ஆனந்த குமாருடையது.

இந்த வகைமையைத்தாண்டி இதன் எதிர் எல்லையாகிய முதுமை எய்தி உடல் சுருங்கிக் கொண்டிருக்கும் தாயின் தோற்றத்தை காட்டும் கவிதைகள். மேலும் பல நல்ல கவிதைகள்.

என் தெரிவு இந்தத் தொகுப்பில் உள்ள  இரு கவிதைகள்,

அருகாமைப் பேரலை போல ஒரு காட்சியை  காட்டி கணத்தில் முழுதாக பார்த்து விடாத அதை பதறித்   தேடச் செய்யும் இந்தக் கவிதை.

“ஊர்
மெதுவாக நடக்கிறது
அது குளத்தை
கையிலேந்தியிருக்கிறது
தளும்பும் குளத்தின்மேல்
ஒரு நீர்ப்பூச்சி
ஒரு கால்வைத்ததும்
குளமாட
பயந்து
மறுகால் தூக்கியபடி
நின்றுவிட்டது”

இறுதியாக இது. அரிதாகவே ஒரு கலை இன்னொன்றை ஆரத்தழுவிக் கொள்கிறது, உண்டு உமிழ்கிறது, பிணைந்து பெண்ணொருபாகனாக மாறுகிறது, ஆனந்த குமாரின் தெய்வம் என்னும் இந்தக் கவிதை ஆடும் ஒருத்தியை மிகச்சரியாகக் கண்டுவிட்டது.

“வலது கையில்
அவளந்த
மலரை மலர்த்தியபோது
இடது காலை
அங்குகொண்டு
சரியாக வைத்துவிட்டது
நடனம் ” 

தாமரைக்கண்ணன்
புதுச்சேரி

பொன்முகக் கிண்கிணி ஆர்த்தல்

வடுக்களும் தளிர்களும்

நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்

நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி

குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விளையாடும் ஏரி- கடிதங்கள்

ஒருதுளி காடு- கடிதங்கள்

பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்

ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு


டிப் டிப் டிப் வாங்க

டிப் டிப் டிப் தன்னறம் நூல்வெளி

முந்தைய கட்டுரைநேரு ஒரு புகைப்பட நூல்
அடுத்த கட்டுரைஆழம் நிறைவது