உலகம் எத்தனை அழகானது என நான் உணர்ந்தது முதல்முறை மூக்குக்கண்ணாடி அணிந்தபோதுதான். மீண்டும் அவ்வாறு உணர்ந்தது சமீபத்தில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்புக்காக பறவைகளின் உலகுக்குள் நுழைந்தபோது. நீங்கள் தளத்தில் பிரசுரித்த வெங்கடேஸ்வரனின் கடிதம் ஒரு புது உலகை அறிமுகம் செய்துவைத்தது.
பார்வையை சற்றே இழந்து பெறுவதன் இன்பம் அபாரமானது. பெரும்பாலானோர் உணர்ந்திருக்கக்கூடியது. மூக்குக்கண்ணாடிக்கான தேவை வந்தபிறகும் பல நாட்களுக்கு நான் அதனை தவிர்த்திருந்தேன். சற்று மங்கலான, கூர்மழுங்கிய உலகமே கண்களுக்கு பழகிவிட்டிருக்க வேண்டும். எனவே கண்ணாடி அணிந்தபோது அனைத்தும் கூர்கொண்டுவிட்ட உணர்வை அடைந்தேன். வடிவங்களும், வண்ணங்களும் துலங்கிப் பெருகின. மேகங்கள்கூட துல்லிய வடிவம்கொண்டன. இரவில் விண்மீன்களின் அடர்த்தி கூடியது. இலைகள் பளிச்சென கழுவி எடுத்ததுபோல இருந்தன.
இப்போது அதே அனுபவம் பறவைகளினூடாக கிடைத்தது. முன்பு பார்வை கூரிழந்தது போலவே புலன்களும் மழுங்கியிருக்கவேண்டும். சென்னையில் என் வீட்டின் சுற்றத்தை பறவைகள் தம் இருப்பால் நிறைத்திருந்தும் பலவருடங்களாக அவை சித்தத்தை எட்டவில்லை. நெடுஞ்சாலையில் துயில்வோர் வாகன இறைச்சலை புறக்கணிப்பது போல பறவைகளின் குரல்களை முற்றிலும் புறக்கணிக்க பழகிவிட்டிருந்தேன். ஒரு பறவையைக் கூட நின்று கூர்ந்து பார்க்கவில்லை. திடீரென ஒரு வாரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளை அடையாளம் காணப்புகுந்ததில் புலன்களும் உள்ளமும் பறவைகளை நோக்கி கூர்கொண்டு குவியத்தொடங்கிவிட்டன.
சென்னைக்கு புலம் பெயர்வதற்கு முன் ஊரில் பறவைகள் தினசரி உணவில் ஒரு அம்சமாக இருந்தன. கொக்கு, மடையான், புறா, குயில், காடை, கவுதாரி, கானாங்கோழி, எல்லாம் வீடருகே கிடைக்கும் உணவுகள். அவ்வப்போது அலையாத்திக் காடுகளிலிருந்து நாரை. உணவுக்காக எனினும் இவற்றைப் பிடிப்பது சட்ட விரோதமானது என வன இலாகாவினர் துரத்திப் பிடிப்பது உண்டு.
ஆனால் மரவள்ளிக்கிழங்கின் உச்சபட்ச ருசி காச்சுலு எனப்படும் ஆறுமணிக்குருவியை குழம்பு வைத்து சேர்த்துக்கொண்டால் மட்டுமே வசப்படும் என்பதால் பலருக்கு கைது பற்றிய பயம் இரண்டாம் பட்சம்தான். சுவை மட்டும்தான் காரணமா என்று இப்போது யோசிக்கிறேன். ஊரில் இதை சாப்பிடுவார்கள் என்று சொல்லி காச்சுலு பறவையின் படத்தைக் காட்டினால், நகரத்திலிருக்கும் என் தங்கைகள் புறங்கையால் வாய்மூடி அலறுமளவு அதிர்ச்சி அடைகின்றனர். புத்தகங்களின் அட்டைப் படங்களில் இடம்பெறும் அளவுக்கு அழகு. ஹிந்தியில் இது நவ்ரங், ஒன்பது வண்ணங்கள் கொண்டது என்னும் பொருளில். வட இந்தியாவிலிருந்து வலசை வருவது. சமீபத்திய காணொளி ஒன்றில் ப.ஜெகந்நாதன் சொன்னார் “வலசை என்பது நமக்குத்தான். அவற்றுக்கு நாடுகளின் அரசியல் எல்லைகள் தெரியாது, இயல்பான பயணத்தில் இருப்பவை”.
இவற்றையெல்லாம் பிடிப்பதற்கென தனிப்பொறிகள் இருந்தன. கண்ணிகள், வலைகள், விசைப் பொறிகள். சில அரிய உள்ளூர் கண்டுபிடிப்புகள் எல்லாம் இத்தகைய பொறிகளை மேம்படுத்தும் வகையில் அமைந்தவை. அவற்றின் நுட்பங்கள் பற்றி தனிப்புத்தகமே எழுதலாம். ஊரில் இப்போது யாரும் இவற்றுக்காக மெனக்கெடுவது இல்லை என நினைக்கிறேன். ஆட்டுக்கறி, கோழிக்கறி வாங்கிக்கொள்வது வழமையாகிவிட்டது.
உணவென எண்ணாது பறவைகளுக்கு கவனம் கொடுத்தது பள்ளி நாட்களில் வீட்டில் கூடுகட்டும் சிட்டுக்குருவிகள் மீது மட்டுமே. கல்லூரி சென்ற பிறகு மொத்த வெளி உலகத்தையும் பூட்டிவிட்டு கட்டிடங்களுக்குள், கணினிக்குள் புதைந்துகொண்டேன். வெளியில் வந்தபோது உலகை, பறவைகளை அவதானிக்கத் தேவையான புலன்கள் பயன்படாமல் மழுங்கியிருக்க வேண்டும்.
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பற்றிய வெங்கடேஷின் கடிதத்தை தளத்தில் பார்த்த பிறகு நான் மாலை நடை செல்லும் இடங்களில் இருக்கும் பறவைகள் சிலவற்றை பதிவிடலாம் என ஆரம்பித்தேன். செயல்முறை எளிதாக இருந்தது. கைபேசி மட்டுமே போதும். இரண்டு நேர்த்தியாக வடிவமைப்பட்ட பழுதற்ற செயலிகள். பொதுவாக நம் கவனத்தை சிதறடிக்க, நம்மை அடிமையாக்கவென்றே வடிவமைக்கப்பட்ட செயலிகள் போன்றவை அல்ல. மாறாக, Ebird மற்றும் Merlin செயலிகள் பறவைகளை நோக்கிக் கவனத்தை குவிக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டவை. Ebird பறவைகள் கணக்கை பதிவுசெய்ய. Merlin பறவைகளை அடையாளம் காண.
பறவைகள் கணக்கெடுப்பில் கிடைக்கும் அத்தனை தகவல்களையும் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் e-bird தளத்திலும் , Merlin செயலியிலும் திறந்து வைத்திருக்கின்றனர். மெர்லின் செயலியில் பறவைகளின் வாழிடங்கள் வண்ணங்கள் அவற்றின் அழைப்புகளின் ஒலிப்பதிவுகள் என அனைத்தும் உண்டு. துவக்க நாட்களில் அந்த செயலியில் ஊர்ந்துகொண்டிருந்த என் இளையோன் சட்டென ஆர்வம் மேலோங்க “பறவைகள் பற்றி இவ்வளவு தகவல் இருக்கே, இதில் நாம் எதையெல்லாம் சாப்பிடலாம்னு இருக்கா?” என்றான். நல்ல வேளை, “புறா இறைச்சியில் மார்பு இறைச்சியே மிகவும் சுவையானதாகும்.” என்று விக்கிப்பீடியாவில் இருப்பது போன்ற வரிகள் ஏதும் அதில் இல்லை.
Merlin செயலி தென் இந்தியாவில் மட்டுமே 500 பறவைகள் பற்றிய தகவல்களை படத்தோடு, அவற்றின் குரலோடு , வாழிடங்களையும் வலசை வரும் பாதைகளையும்கூட அடையாளப் படுத்தியுள்ளது. சமீபத்தில் பார்த்த அரிவாள் மூக்கன் என்ற பறவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது மட்டும் வடகிழக்கு சீனா எல்லையில். அங்கிருந்து தென்மேற்கு தமிழகம் வரை வந்துசெல்கிறது. அங்கிருந்து இங்குவரை என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது என்கிறார் வனவிலங்கு உயிரியலாளர் முனைவர் ப.ஜெகன்னாதன். அனைத்துமே பறவைகளைப் பொறுத்தவரை அவற்றின் வாழிடமே. இந்தியப் பறவை என்றோ, சீனப் பறவை என்றோ அரிவாள் மூக்கனை வகுப்பது அபத்தமானது.
பெருங்கடலும் , பனிச்சிகரங்களும்கூட பறவைகளுக்கு பயணத் தடையாவதில்லை. மொத்த உலகையும் சிறகால் அளப்பவை. நாடுகளுக்கு இடையேயான எல்லைக்கோடுகளின் அபத்தத்தை உணர நாம் பறவைகளை நிமிர்ந்து பார்க்க வேண்டும்.
https://en.wikipedia.org/wiki/Black-headed_ibis#/media/File:Black-headed_Ibis_(Threskiornis_melanocephalus).jpg (பறவையின் படம் விக்கிப்பீடியாவில் ஹரிக்ரிஷ்ணன் என்பவருடையது)
எண்ணியதைவிட பல மடங்கு பறவைகள் என்னைச் சுற்றி இருப்பது ஒருநாள் நடையிலேயே தெரியவந்தது. துல்லியமாக அடையாளம் காண வேண்டும் என்பது பறவைகள் கணக்கெடுப்பின் முதல் விதி. (அதற்கும் முந்தைய பொன்விதி கணக்கெடுப்புக்காக பறவைகளையோ , அவற்றின் வாழிடத்தையோ சலனப்படுத்தக் கூடாது என்பது). சரியாக அடையாளம் காண இயலாவிட்டால் அவற்றை பதிவேற்றாமல் விடுவதே சிறந்தது. அவற்றின் குரல், வண்ணங்கள், வடிவங்கள் என வரையறுக்காமல் அடையாளம் காண்பது கடினம். உதாரணமாக கொக்குகளில் மட்டுமே நான்கு வகைகள். உண்ணி கொக்கு தவிர மற்றவற்றை பிரித்தறிவதற்கு அவற்றிடையேயான நுண்ணிய வேறுபாடுகளை அறிந்திருக்க வேண்டும். பெரிய கொக்கின் அலகின் நிறம் பருவத்துக்கேற்ப மஞ்சளுக்கும் கருப்புக்கும் மாறுவது. கால் விரல்கள் மட்டும் மஞ்சளாக இருந்தால் அது சின்ன கொக்கு. ஆனால் அது எப்போதும் நீரில் கால் அமிழ்ந்தவாறுதான் காணக்கிடைக்கிறது. இன்னும் நான் சரியாக அடையாளம் காணமுடியாத சிட்டுக்குருவிகள் மட்டுமே பல உண்டு.
பறவைகளை அடையாளம் காண்பதில் உள்ள இடரே அதை ஒரு அபாரமான விளையாட்டாக்கியது. பின்னர் ஒரு புதிய பறவையை கண்முன் காண்பதும், அதை சரியாக அடையாளம் காண்பதும் இனிய நிறைவை அளிக்கத்தொடங்கின.
முதல் இரண்டு நாட்களில் அடையாளம் காண்பது மெல்ல பழகிவிட , மூன்றாவது நாள் இருபது வகையான பறவை இனங்களை அடையாளம் கண்டோம். அன்று பதிவேற்றிய பட்டியல் இது https://ebird.org/checklist/S100754306. என் தம்பி உள்ளூர் பறவைகள் பற்றி நன்கு அறிந்தவன். பார்த்த கணத்தில் அதன் தமிழ்ப் பெயரைச் சொல்லிவிடுவான். அந்த தமிழ்ப் பெயர்களைக் கொண்டு ஆங்கிலத்தில் பெயர் தேடிப் பிடிப்போம். நான் அப்பறவையின் கால் நிறம், கண் நிறம் தெளியும் வரை அதுதான் என ஏற்பதில்லை. ஒருவழியாக இருவரும் ஒரே முடிவுக்கு வந்து சேர்ந்தால் மட்டுமே பதிவில் கணக்கேற்றுவது. என்னுடையது நத்தை வேகம் என்பான். நான் அது நிதானம் என்பேன்.
கணக்கெடுப்பின்போது ஒரு அறைதலாக நான் உணர்ந்தது, பறவைகள் தம் இருப்பை ஓய்வின்றி கூவி அறிவித்துக்கொண்டே இருக்கின்றன என்பதுதான். எங்கேனும் பறந்து செல்லும்போது கூட விளையாடக் கூடிவிட்ட சிறுமியர்போல ஊரையே நிறைத்துவிடும் கீச்சல்களுடன் பறக்கின்றன கிளிகள். நெடுந்தூரம் கேட்குமளவு நான் இங்கிருக்கிறேன் என முழங்குகின்றன செண்பகப்பறவைகள். எந்நேரமும் பாடலில் திளைத்திருக்கும் கருஞ்சிட்டுகள், தேன் சிட்டுகள், மைனாக்கள். உருவத்துக்கும் நிறத்துக்கும் இசைவில்லாத அலறலை எழுப்பும் பனங்காடைகள். பொதுவான இரைச்சல்களை சற்று புறக்கணித்துவிட்டு கூர்ந்து கேட்டாலே புறாக்கள் குனுகுவதை நாம் கேட்டுவிட முடியும். இக்குரல்களை முற்றிலும் புறக்கணிக்க நம் காதுகள் எப்படி பயில்கின்றன என்று இன்னும் வியந்தபடியே இருக்கிறேன்.
அப்படி பறவைகளின் பாடல்களை தொடர்ந்து கேட்கத் தொடங்கினால் பின் காதுகள் இயல்பாகவே அவற்றை ஈர்க்கத் தொடங்கிவிடுகின்றன. இந்த வருட புத்தகக் கண்காட்சியில் அரங்குகளுக்கு நடுவில் ஒரு குருவியின் சீரான பாடலைக் கேட்டு அரங்கினுள்ளேயே பரவசத்துடன் தேடி இறுதியில் கண்டடைந்தேன். அது ஒரு குழந்தையின் காலணி விசில்.
இந்த பறவைகள் கணக்கெடுப்பு அத்தியாயத்தின் உச்சம் என நீலக்கண்ணி என்றொரு அற்புதமான பறவையின் கண்களை நேர்நோக்கிய தருணத்தை சொல்வேன். ஏரிக்கரையில் கருவேலம் புதர் மண்டியிருந்தது. அதிலிருந்து பத்தடி தூரத்தில் நின்றிருப்பேன். புதரினுள் முதலில் அசைவாக புலப்பட்டது மெல்ல கிளைகள்தோறும் தவ்வி வெளிக் கிளையில் வந்தமர்ந்தது. தலைசாய்த்து ஒற்றைக்கண்ணால் பார்த்தது. நான் பார்த்த பறவைகளில் நீலக்கண் அரிது. அந்த நீலம் அதன் கண்ணில் மிரட்சி துளிகூட இல்லை எனக் காட்டுவது. மூக்குகூட சற்றே நீலம் ஏறியதுதான். முன்பின் தெரியாதவர் வாசலில் நின்றால் “வாங்க” என்பதை விடுத்து “என்ன வேணும்” என்று கேட்பது போன்ற பாவனை. நான் ஒன்றும் சொல்லவில்லை, அசைவில்லாமல் நின்றிருந்தேன். ‘எனக்கு வேலை இருக்கிறது” என்ற தொனியில் திரும்பிச்சென்றது. சாம்பலும் நீலமும் என்ற இந்த கலவையை முன்னர் பார்த்ததே இல்லை. அதுவும் குயில் இனம்தான் என பின்னர் அறிந்தேன். காக்கை கூட்டைத் தேடாமல் தானே கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது.
பெரும்பாலான பறவைகள் நம்மை அருகே நெருங்கவிடுவதே இல்லை. கணக்கெடுப்புக்கு நடந்து செல்லும்போது நம்மைப் பார்த்து விலகிச்செல்லும் பறவைகளே மிகுதி. வெகு சில பறவைகள் மட்டுமே அணுக்கமாகின்றன.
எங்கள் வீட்டில் என் மகளின் கைக்கெட்டும் தூரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு கிளையில் தேன்சிட்டுகள் கூடுகட்டியுள்ளன. பளபளக்கும் கருநீலத் தலையும் , வெண்மஞ்சள் நிறமார்பும் நீண்டு வளைந்த அலகும் கொண்ட கை கட்டைவிரல் அளவேயான குருவி. ஒருநாள் அதன் கூட்டில் சாம்பல் முதுகும் வெண்மார்பும் கொண்ட குருவி வந்த அமர , ஒரே அமளி. என் இளையோன் இரண்டும் ஒரே கூட்டுக்காக சண்டையிட்டுக்கொள்வதைச் சுட்டிக்காட்டினான். பறவைகள் கணக்கெடுப்புக்காக அவற்றை அடையாளம் காணத்தொடங்கிய பின் அறிந்தோம். அவை இரண்டும் இணைகள். அந்த கண்களைக் கவரும் பளபளப்பான மின்னும் இறகுகள் கொண்ட குருவி ஆண். மங்கலான மற்றொன்று பெண். ஊதா தேன்சிட்டு வகைகளில் ஆண்கள் , இனப்பெருக்க பருவத்தில் மட்டும் மின்னும் ஊதா இறகுகளை வளர்த்துக்கொள்கின்றன. இத்தருணத்தில் மட்டும் இரண்டும் வேறு பறவைகள் என சந்தேகிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. வடிவம் மட்டுமே ஒன்று. குஞ்சு பொரித்த பின்னர் ஆண்கள் மீண்டும் பெண் குருவி போன்ற மங்கிய நிறத்துக்கு மாறிவிடுகின்றன.
இது ஊதா தேன்சிட்டு அலங்கரித்துக்கொள்ளும் சுழற்சி. தனியே பார்த்தால் இவை அனைத்தும் ஒரே இனம் என நம்பவே முடியாது. இனப்பெருக்க பருவத்தில் ஆண் பறவைகள் முழுதணிக்கோலம் கொள்கின்றன. படங்களின் காப்புரிமை இங்கே; https://ebird.org/species/pursun4
சென்னையிலிருந்து ஊருக்கு விழாவுக்காக சென்றபோது அங்கும் பறவைகளை கணக்கெடுப்பை தொடர்ந்ததில் , பார்த்த பறவை இனங்களின் எண்ணிக்கை ஐம்பதை எட்டியது. கணக்கெடுப்பை அறிமுகம் செய்த வெங்கடேஸ்வரனுக்கு இந்த அனுபவத்துக்காக நன்றி சொல்லி தனிமடல் அனுப்பினேன். அன்றே தொலைபேசியில் அழைத்தார். இன்று இத்தளம் வழியே இன்னொரு இளையோன் எனக்கு.
நான் இருக்கும் இடத்தில் இருந்து பைக் எட்டும் தூரத்தில் இருந்தார் வெங்கடேஸ்வரன். மறுநாள் காலை 6 மணிக்கு ஒரு கணக்கெடுப்பு நடத்த திட்டம் வைத்திருந்தனர். நானும் என் இளையோனும் அன்று அவர்களுடன் இணைந்துகொண்டோம். திரு நவநீதம் அவர்களும் உடனிருந்தது கணக்கெடுப்பின் நுட்பங்களை அறிய நல்வாய்ப்பாக அமைந்தது.
அன்று தேர்ந்தெடுத்த பகுதியில் நாய்களினால் ஆபத்து உண்டு என்பதால் நன்கு தெரிந்த பள்ளி மாணவர் ஒருவரின் உதவியுடன் அணுகினர். கூடவே கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், இதில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். இரு நீர்நிலைகளை சுற்றி வந்தோம். எக்கச்சக்க பறவைகள். என்னுடைய பட்டியலில் 19 பறவைகள் அன்று பதிவேற்றினேன். அடையாளம் காணமுடியாதவற்றை படம் எடுத்துக் கொண்டோம். இயல்பாகவே அவ்வூரின் பறவைகளை அறிந்திருக்கும் ஒரு இளையவரை இளம் சலீம் அலி என அடையாளப்படுத்தியுள்ளனர்.
எந்த ஒரு உலகியல் ஆதாயமும் இல்லாத ஒரு முன்னெடுப்பில் அவர்கள் காட்டும் தீவிரம் அபாரமானது. இளையோரை ஆக்கப்பூர்வமான திசைகளில் அழைத்துச்செல்லும் முயற்சியும், அதில் இளையோர் ஊக்கத்துடன் பங்கேற்பதும், அதில் காட்டும் தீவிரமும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. பெரும் நம்பிக்கையூட்டம் செயல்பாடு.
இன்னும் பெயர் உறுதியாகத் தெரியாத பறவைகளின் படங்களை நிபுணர்களுடன் தொடர்புகொண்டு அலசிக்கொண்டிருக்கின்றனர். உயிரியலாளர் முனைவர் ப.ஜெகன்னாதன் அவர்களை அழைத்து ஒரு காணொளி உரையாடல் ஒருங்கிணைத்தனர். யூடியூபில்பதிவேற்றப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=YkbtgN4nlJc
பறவைகளை அறிமுகப்படுத்திக்கொள்ள பயனுள்ள ஒன்று. காட்டுமஞ்சரி என ஒரு உள்ளூர் இதழும் நடத்துகின்றனர். ஊருக்கென தனி இணைய தளம். அதில் வருடம்தோறும் பொங்கல் விளையாட்டுப்போட்டிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் கூட உள்ளன. நல்விதைகளை இளம் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மட்டும் நன்கு உணர முடிந்தது.
ஏற்கனவே நாங்கள் கணக்கெடுப்பில் பதிவு செய்த பட்டியலை அனுப்பியிருந்தேன். பறவைகளை அடையாளம் காண்பதில் இருக்கும் இடர்கள் பற்றி பேசியிருந்தோம். ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது “ஜெயமோகனின் வாசகர்கள் தீவிரமானவர்கள் என்று தெரியும். நிச்சயமாக யாரேனும் ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்த்தேன். நீங்கள் இந்த அளவு ஈடுபடுவது எதிர்பாராதது” என்றார் வெங்கடேஸ்வரன். ஆனால் நேரில் அவர்களின் ஈடுபாட்டைப் பார்த்தபோது அதில் துளியின் துமி அளவுதான் என்னுடைய ஈடுபாடு என உணர்ந்தேன். நாங்கள் சென்று சந்தித்ததில் அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. காலை தேநீரோடு சந்திப்பை முடித்துத் திரும்பினோம். இன்றும் பறவைகள் கணக்கெடுப்பின் பட்டியலை பகிர்கிறோம். தினசரி உரையாடல் தொடர்கிறது.
பறவைகளை கணக்கெடுக்க செல்லுமிடங்களில் கணக்கெடுத்தால் காசு கொடுப்பார்களா என்ற கேள்வியை ஒருசில சமயம் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இல்லை, இது வேறு, இது ஆராய்ச்சிக்காக என்று விளக்குவேன். பறவைகள் கணக்கெடுப்பின் வழியே என்ன அடைந்தேன் என்று திரும்பிப்பார்க்கிறேன். பறவைகள் பற்றிய ஆராய்ச்சிக்கு நம்மால் இயன்ற உதவி என்ற நிறைவு. நல்ல தீவிரமான நேர்நிலை எண்ணங்கள் கொண்ட வெங்கடேஸ்வரன் மற்றும் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். பறவைகள் பற்றிய அறிதல் விரிவாகியிருக்கிறது. ஒவ்வொரு கணக்கெடுப்பும் ஒன்றையே நோக்கிய குவியம் கொண்ட செயல்பாடு என்ற வகையில் தியானம்தான். என் மகள் எப்போது வெளியில் இருந்தாலும் பறவைகளைப் பார்த்து அடையாளம் காண்கிறாள். என் இளையோருக்கு இதை அறிமுகம் செய்து , “அதிக பறவை இனங்களைப் பார்த்தவர் யார்” என்று ஆரோக்கியமான ஒரு போட்டி தொடங்கியது – பங்கேற்பாளர்கள் அருகிவிட்டனர் – ஆனாலும் நிறுத்துவதாயில்லை. ஆக, ஏராளமாக அடைந்திருக்கிறேன். அந்த ஒரு கடிதத்துக்காக வெங்கடேஸ்வரனுக்கு மீண்டும் நன்றிகள்.\
விடுப்பு முடிந்து சென்னை வந்து வணிக உலகுக்குத் திரும்பி கணக்கெடுப்பு சற்று மட்டுப்பட்டது. மனம் மெல்ல வானை பறவைகளுக்கே விட்டுவிட்டு தரையிறங்கிவிட்டது. அவ்வளவுதான். அது ஒரு எழுச்சி. வழக்கம்போல அலை அடங்கிவிட்டது என்று நினைத்தேன். ஆனால் மாற்றம் சற்றேனும் நிரந்தரமாக தங்கிவிட்டது. முக்கியமாக காலையில் விழிப்புக்கும் உறக்கத்துக்கும் இடையில் ஊஞ்சலாடும்போது பறவைகளின் அழைப்பை உணர முடிகிறது. சற்று ஆபத்தானது எனினும் வாகனம் ஓட்டும்போதுகூட கண்கள் பறவைகளைப் பின்தொடர்வதை கட்டுப்படுத்த முடிவதில்லை. ஒரு புத்தகத்தை வாசித்து முடிப்பவன் வாசிக்க ஆரம்பித்த அவனாக திரும்ப முடியாது என்பர். மிகச் சிறிய அளவில் எனினும் அவன் என்றென்றைக்குமாக மாறிவிடுகிறான். பறவைகளின் உலகும் அப்படியே. அதை ஒருமுறை கண்டவர்கள் முழுவதும் திரும்பிச் சென்றுவிடமுடியாது என்றே நினைக்கிறேன். சிறகை சுமையாக எண்ணும் பறவை இருக்கக்கூடுமா என்ன?
இதனால் உலகியல் ஆதாயம் இல்லை, ஆனால் உலகுக்கு ஆதாயம் உண்டு என வாசிக்கும்போதே உள எழுச்சி கொள்ளும் நண்பர்கள் இங்கு உண்டு என அறிவேன். அனைவரையும் பறவைகளின் உலகுக்கு அழைக்கிறேன்.
நன்றி
பா.விஜயபாரதி
சென்னை