குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022

அன்புள்ள ஜெ,

ஒரு பழமொழி உண்டு : “பெற்றவளுக்கு ஒரு பிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை”. தாய்க்கு சொன்னது போல் தந்தைக்கு இப்படி ஏதாவது பழமொழி இருக்கிறதா என்று தெரியவில்லை. (இருந்தால் கூறவும்). வெண்முரசு இதை ஈடு செய்கிறது. முதலில் அனகை பாண்டுவுக்கு சொல்வது :

“மண்ணில் பிறந்த குழந்தைகளில் எதை ஒருவன் இது என் குழந்தை என எண்ணி அகம் கனிந்து தந்தையாகிறானோ அவனுக்கு அது அக்கணமே மைந்தனாகிறது.”(வெண்முரசு : நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 73) http://www.jeyamohan.in/?p=53905

அனகை கூறும் நீண்ட கருத்தை பாண்டு பின்னர் செறிவாக்குகிறான்.”அகத்தில் பிள்ளைப்பெரும்பாசத்தை நிறைத்துக் கொண்டவனுக்கு உலகமெங்கும் பிள்ளைகள்தான்.” (வெண்முரசு : நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88)     http://www.jeyamohan.in/?p=54367

பழமொழி பெண்ணைப் பற்றியும், வெண்முரசின் இவ்வரிகள் ஆணைப் பற்றியும் பேசுகின்றன. ஆனந்த் குமாரின் இக்கவிதை எல்லோருக்குமானதாக இருக்கிறது.

குழந்தை
எப்போது
என் குழந்தை?
ஒரு குழந்தையை
கையிலெடுக்கையில்
அது என் குழந்தை.

வளர்ந்த குழந்தையை
அணைக்கும்போதெல்லாம்
அது என் குழந்தை

விலகும் குழந்தையை
நினைக்க நினைக்க
என் குழந்தை
என் குழந்தை.”

சில கவிதைகள் புன்னகைக்க வைக்கும். சில ஒரு புதிய கோணத்தை, திறப்பை அளிக்கும். இன்னும் சில எதையும் உடனடியாக அளிக்கா. ஆனால் நம்மை பிடித்துக் கொள்ளும். உரிய நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். கீழுள்ள கவிதை எனக்கு எதையும் அளிக்கவில்லை, இன்னும். ஆயினும் திரும்பத் திரும்ப படிக்கிறேன்.

மலையெனக்கருதி இருளை
பாதிவரை ஏறிவிட்டேன்
இடரும் எதன்தலையிலும்
அழுந்த மிதித்தே
வந்திருக்கிறேன்.

வழியென்பது ஒன்றேதன்,
மேலே.
விடிய நான் தொட்டது
பாழ்வெளியின் பெருமூச்சு.
எனக்குத் தெரியும்
ஏறுவதை விட இறங்குவது
கடினமென.

ஆனாலும்
மலையில்லாத உச்சியிலிருந்து
எப்படி இறங்க?

மலை அல்லாத அந்த இருள் என்ன? அதன் உச்சி எது? உலகியல் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு வாழ்வதை பற்றியும் அந்த “வெற்றியின்” வெறுமையைப் பற்றியும் கூறுகிறாரா? அல்லது வேறு ஏதாவதா?

குமரகுருபரன் விருது பெறும் ஆனந்த் குமாருக்கு வாழ்த்துக்கள்.

நன்றி
கார்த்திகேயன்

முந்தைய கட்டுரையானைடாக்டர் வாசிப்பு
அடுத்த கட்டுரைகுகை- வாசிப்பனுபவம்