மேலும் ஒரு நாள்

அறுபதும் அன்னையும்

இன்று இன்னொரு நாள். எனக்கு அறுபது வயது நிறைவடைகிறது.

அறுபது நிறைவை ஒட்டி சில சடங்குகள் செய்வது இந்துக்களின் வழக்கம். திருக்கடையூர் செல்வது பற்றி ஒரு பேச்சு எழுந்தது. ஆனால் அது பண்டைக்காலத்திற்குரியது. அன்றெல்லாம் அறுபது என்பது முதுமை. பிள்ளைகளுக்கே நாற்பதை ஒட்டிய வயதுகளும், பேரப்பிள்ளைகளுக்கு இருபதை ஒட்டியவயதுகளும் ஆகிவிட்டிருக்கும். அவர்கள் தங்கள் வாழும் மூதாதைக்குச் செய்யும் சடங்குகள் அவை. நமக்கு நாமே செய்துகொள்வன அல்ல.

கோயிலுக்குச் செல்லலாம் என்று அருண்மொழி சொன்னாள். எதற்கு என்று யோசித்துப்பார்த்தால் நீண்ட ஆயுளுக்காக வேண்டிக்கொள்ள. நானே கோயிலுக்குச் சென்று எனக்காக அப்படி வேண்டிக்கொள்வதில் ஒரு ‘சம்மல்’ தோன்றுகிறது. வேண்டிக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவற்றில் நீண்ட ஆயுள் எப்போதும் இருந்ததில்லை.  ஆயுளை பொறுத்தவரை இதுவே ஒருமாதிரி நிறைவுதான். என் அப்பா 62 வயதில் மறைந்தார்.

இப்போதும் தீவிரமான பணிகளில் இருக்கிறேன். ஆனால் இன்று  நான் செய்துகொண்டிருப்பவை நானே செய்து முடிக்கவேண்டியவை அல்ல. நானே எழுதியாக வேண்டியிருந்த வெண்முரசு எழுதும்போதுகூட அதை முடித்தேயாக வேண்டுமென எண்ணியதில்லை. இப்போது செய்துகொண்டிருப்பவை செயல்வழியாக வாழ்க்கையை நிறைப்பதற்கான செயல்கள் மட்டும்தான். பயணங்களைப்போல இவை அறிவார்ந்த திசைச்செலவுகள்.  இன்று, இருத்தலை முழுமையாக கொண்டாடுவதே என் இலக்கு. ஆகவே ஆயுளுக்கான வேண்டுதலை எப்போதும் செய்யப்போவதில்லை.

அந்நிலையில் இந்நாள் மேலதிகமான பொருள் ஏதும் கொண்டதல்ல. ஆகவே கொண்டாட்டம் என ஏதுமில்லை. மேலும் நான் ஊரிலும் இல்லை. ஏப்ரல் 21 வரை சென்னையில் இருந்தேன். 21 காலையில் நிகிதா- பரிதி திருமணம் முடிந்ததுமே கிளம்பி அடுத்த திரைப்படப் பணிகளுக்காக வந்துவிட்டேன். உக்கிரமான பேய்ப்படம். அமெரிக்கா போவதற்குள் ஏழுநாட்களில் முடித்தாகவேண்டும்.  எழுத்து, விவாதம், தனிமை. ஆகவே எவருடனும் தொலைபேசித் தொடர்பு இருக்காது. மின்னஞ்சல், வாடஸப் பார்ப்பதெல்லாம் ஏப்ரல் 24 க்குப்பின்னர்தான்.

ஆகவே, வாழ்த்துக்கள் சொல்ல ஃபோனில் அழைக்கும் நண்பர்கள் மன்னிக்கவேண்டும் என்று கோருகிறேன். என் வரையில் இந்நாள் இயல்பாக இன்னொரு நாளென கடந்துசெல்லவேண்டும், இது எனக்கு எந்த அழுத்தத்தையும் தரலாகாது என நினைக்கிறேன். அத்துடன் ஏன் மின்னஞ்சல், தொலைபேசிகளை எடுப்பதில்லை என்றால் அன்று வாழ்த்துக்களுக்குச் சமானமாகவே அதியுக்கிர வசைகளும் வரும். பெரும்பாலும் அர்த்தமற்ற மதக்காழ்ப்புகள், சாதிக்காழ்ப்புகள். பெரும்பாலும் என்னை செவிச்செய்தியாக எவரிடமிருந்தோ கேட்டு வைத்திருப்பவர்களிடமிருந்து. தேவையில்லாமல் அதில் பொழுதை வீணடிக்க வேண்டியிருக்கும்.

சில நண்பர்கள் வாழ்த்தி கடிதங்களை அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு பின்னர் தனியாக பதில் போடுகிறேன். அவை தனிப்பட்ட கடிதங்கள். வாழ்த்து, பாராட்டு எதுவும் இத்தளத்தில் வெளிவராது.

சென்ற ஏப்ரல் 22ல் சென்னை சினிமா வேலைகளை முடித்துவிட்டு கிளம்பி கன்யாகுமரி சென்று அங்கே தனிமையில், இருந்தேன். 22 அன்றுதான் குமரித்துறைவி என் தளத்தில் வெளியாகியது. இன்று இனிய நினைவு என்பது அதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஎன் குறைபாடுகள்
அடுத்த கட்டுரைஒளிமாசு- கடிதம்