கன்யாகுமரி கவிதை முகாம் – ஒரு கடிதம்

கன்யாகுமரி கவிதை முகாம் பற்றி வ.அதியமான் லக்ஷ்மி மணிவண்ணனுக்கு எழுதியிருக்கும்  கடிதம்

அன்புடன் திரு லஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் குடும்பத்தினருடன் நலமாய் இருக்க விழைகிறேன்.

நான் வ. அதியமான்

கன்னியாகுமரி கவிதை முகாம் நிறைத்து, பத்திரமாய் வீடு வந்து சேர்ந்தேன். எவ்வொரு நுண்கலை துறையில் நுழைய விரும்பும் முயற்சியாளர்களுக்கும், இது போன்ற முகாம்கள், பயிற்சி பட்டறைகள், முன்னோடிகளுடன் உரையாடல் சந்திப்புக்கள் ஆகியவைகளே மெய் ஆசிரியனாகவும், விழா நாட்களாகவும் அமைகின்றன. அப்படியான இரு தினங்களை வாய்க்க செய்தமைக்கு தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.

இது போன்ற சந்திப்புகளிலிருந்து திரட்டியெடுத்து நாம் கையோடு கொண்டுவரும் உளப்பதிவுகளே இதன் ஆகச்சிறந்த விளைவாய் நிற்கிறது. அப்படியான என் ஒரு சில நினைவுகளை தொகுத்துக் கொள்வதற்கான சிறிய கடிதம் இது.

16 ம் தேதி காலை ஐந்து மணிக்கே தங்களின் வரவேற்பு என்னுடைய சிறு சோர்வையெல்லாம் விரட்டி, மிகுந்த உற்சாகமான நாளாக அக்கணமே மாற்றியது. தங்கும் வசதிகளும் விருந்துணவும் மிகச் சிறந்த தரத்தில் அமைந்திருந்தது.

திரு விக்கி அண்ணாச்சி அவர்களின் பாதம் பணிந்து ஆசி வாங்கியது ஒரு செல்வம் என்றே மனதில் நிற்கிறது. இரு தினங்களும் அணுவளவும் ஆற்றல் குன்றாமல் அவர் ஆற்றிய தொடர் உரைகள் மெய்யாகவே சிலிர்ப்பாக இருந்தது.

தங்களின் முதல் அமர்வே புதியவர்களுக்கு மிக மிக நம்பிக்கை தரும் விதமாய் இருந்தது. தோல்வியுறும் கவிதைளில் அழகு இத்தலைப்பே புதியவர்களுக்கு ஆசுவாசம் கொடுக்கிறது

1 அடிப்படையான கவிதை நுண்ணுணர்வு கொண்ட ஒருவன் எத்துறையைச் சார்ந்தவனாக இருப்பினும் அத்துறையின் திறனாளர்களை காட்டிலும் ஒரு படி மேலானவனாகவே இருப்பான்

2 மானுட மனதினை அன்றலர்ந்த மலராய் வைத்திருக்க, நமக்கு கைவசமிருப்பது கவிதை ஒன்றே

3 எந்த கலைஞனும் முதலிலிருந்தே மிகச் சிறந்த படைப்புகளையே கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. நிறையும் குறையும் தோல்விகளும் கொண்ட படைப்புக்களின் ஊடாகவே தன் பயணத்தை தொடங்குகிறான்

4 தேர்ச்சி கொண்ட கலைஞர்களுமே, தொடர்ந்து உச்சமான படைப்புக்களை மட்டுமே கொடுப்பதென்பதும் சாத்தியமில்லை. அவர்களும் தோல்வியான சராசரியான படைப்புக்களை எழுதுவதன் ஊடாகத்தான் சிறந்த படைப்புகளையும் மிளிரச்செய்கிறார்கள்

5 ஒரு கவிதையின் பணி என்பது எளிய ஒற்றைப்படையானது அன்று. அது ஒரே சமயத்தில் பல்வேறு பணிகளைச் செய்தாக வேண்டி இருக்கிறது. கவிதையின் ஒரு சில பணிகளை கொண்டு மட்டுமே அது சிறந்த கவிதை என்றும் அப்பணியை ஆற்றவியலாத கவிதைகளை தோல்வியான கவிதை என்றும் அணுகுவது முதிர்ச்சியான ரசனை அல்ல. முழுமையான பார்வை அல்ல.

உதாரணமாய் அழகியல் அம்சத்தை மட்டும் வெற்றிகரமாய் நிறைவு செய்வதே ஒரு சிறந்த கவிதையின் பணி அல்ல. அழகியல் வெற்றி என்பது கவிதையின் பணிகளில் ஒன்று மட்டுமே.

மானுட ஆழ்மனதின் வாசல்களை திறந்துவிடும் கவிதைகள் உடனடி கவனத்தை பெறாவிடினும் அதுவே கவிதையின் ஆகச்சிறந்த உயரத்தை எட்டக் கூடியனவாக இருக்கிறது. உதாரணம் திரு கல்பற்றா நாராயணன் அவர்களின் ‘விதிப்பயன்’ என்ற கவிதை

6 எனவே கவிதைகளின் முதற்கட்ட வெற்றிகளோடு நின்று விடாமல் அதன் ஆகச்சிறந்த உயரங்களை நோக்கியே ஒரு கவிஞன் தொடர்ந்து பயணிக்க வேண்டும்

7 வாக் தேவி (கவிதையின் தேவதை) என்பவள், அவளாக வந்தமர்பவள். உங்களை அவளுக்கு பலி கொடுக்க முழுதாக ஒப்புக்கொடுக்கையில் மட்டுமே அவள் உங்களில் கனிந்து வந்தமர்கிறாள். முழுமையாய் ஒப்பு கொடுத்தல் ஒன்றே கலைக்குள் நுழைவதற்கான ஒரே வாசல்

என் ஊரான வந்தவாசிக்கு அருகே விழுப்புரத்திலிருக்கும் கவிஞர் திரு கண்டராதித்தன் அவர்களை இங்கே தான் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். மிக இனிய அனுபவமாக இருந்தது அவரின் அறிமுகமும் அவரது உரைகளும்.

திரு சபரிநாதன் அவர்களின் தமிழ் கவிதையின் போக்குகள் என்ற தலைப்பிலான உரை மிகச் சிறப்பாக இருந்தது. எதையுமே தவிர்க்கவியாலாத செறிவான உரை

1 எந்த ஒரு மாபெரும் கலைஞனாயினும் அவன் தான் வாழும் காலத்தின் சூழல், அரசியல், தத்துவ நிலைப்பாடுகள், விழுமியங்கள் ஆகியவற்றால் ஆன ஒரு சட்டகத்தின் ஊடாகத்தான் தன் படைப்புகளை படைத்தாக வேண்டி இருக்கிறது

திரு போகன் சங்கர் அவர்களின் அடுத்த அமர்வும் மிக அடிப்படையான கேள்விகளை எழுப்புவனவாக இருந்தன. அவரின் பகடியான உரையும் அதனூடாக கவிதை துறையில் விடுபட்டவற்றின் மீதான மெய்யான ஆதங்கமும் மிக குறிப்பிட தகுந்ததாக இருந்தது. அவரின் இரு நாள் பங்களிப்பு நிகழ்வின் தித்திப்பை பலமடங்கு கூட்டியது

1 கவி என்பவன் ரிஷியாகவே இருந்துவந்திருக்கிறான். உலகின் எல்லா மொழிகளிலும் இப்படித்தான் இருந்தது.

2 தன் இருளை தின்னும் ஒளியை, கவிஞனிடமிருந்து பெற்று கொள்பவர்களாய் மானுடர் இருந்தனர்

3 இன்றைய நவீன யுகத்தில் நவீன கவிதைளை சமைக்கும் நவீன கவிஞர்கள் ரிஷி எனும் இடத்தினை நழுவவிட்டுவிட்டார்கள். பிறர் எவருக்கும் ஒளி தந்தாக வேண்டியவனாக தான் இருக்க வேண்டியதில்லை. தானும் அவர்களில் ஊடாக புழங்கும் ஒருவனே என்ற நிலைப்பாட்டையே இன்றைய கவிகள் எடுத்திருக்கிறார்கள்

4 கவி என்பவன் மீளவும் இருள் தின்னும் ஒளியை தரும் ரிஷியாக ஆக வேண்டாமா? அவனிடமிருந்து பெற்றுக் கொள்ள இவ்வுலகிற்கு அது ஒன்று தானே இருக்கிறது.

மதிய அமர்வாக மதார் மற்றும் ஆனந்த் குமார் ஆகிய இருவரின் அமர்வுகளும் மிக புத்துணர்வாய் இருந்தது.

நான்கு புது கவிதை தொகுதிகளிலிந்ந்து தன் கூரிய அவதானங்களின் மூலமாய் இன்றைய சமகால தமிழ் கவிதைளின் போக்கினை துல்லியமாக படம் பிடித்து காட்டினார் மதார். மதார் அவர்களுக்கு மேடை மொழியின் தேர்ச்சி இல்லை. அதனாலேயே இன்னும் உயிர்ப்பாக இருந்தது அவரது உரை

ஆனந்த் குமாரின் உரை மிக வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. சமகால நவீன மலையாள கவிதைகளின் போக்கினை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. மலையாள கவி மொழியில் சமஸ்கிருத ஆதிக்கம் குறைக்கப்பட்டு அதனை ஈடுசெய்யும் விதமாய் அங்கே தமிழ் மொழியின் பங்களிப்பு மற்றும் மலையாள பழங்குடிகளின் மொழியிலேயே நேரடியாக கவிதைகள் எழுதப்படும் செய்தியும் வியப்பையும் நிறைவையும் அளித்தது. ஆனந்த்குமார் நேரடியாக மலையாள பழங்குடி மொழியிலான கவிதையை வாசித்தது செவிக்கும் இனிமை சேர்த்தது.

லக்ஷ்மி மணிவண்ணனின் ‘வெள்ளைப்பல்லி விவகாரம்’ நூல் வெளியீடு

அந்தியோடு எழுந்த நிலவும், சதா பொங்கும் கடலும் மாலையினை ரம்மியமாக்கியது. முன்னோடிகளின் முன்பு கவிதை வாசிப்பு என்பது இதயத்தின் துடிப்பை கூடுதலாக்கியது. கவிதை வாசித்த முடித்த பிறகு அதன் மீதான மதிப்பீடு என்னவாக இருக்கும் என்ற நிமிட நேர எதிர்பார்ப்பு.

வாசிக்கப்பட்ட பெரும்பாலான கவிதைகள் ஏமாற்றத்தை தரக்கூடியதாகவே இருந்தது. ஆனால் ஒரு கவிதை எப்படி எல்லாம் இருக்க கூடாது என்று முன்னோடிகள் விளக்கி சொல்வதற்கான வாய்ப்பாகவும் அது அமைந்தது. அவ்வகையில் மிகச் சிறந்த கல்வியாகவே கவிதை வாசிப்பு அரங்கு அமைந்திருந்தது.

இரண்டாம் நாள் காலை, திரு ஜெயமோகன் அவர்களின் வரவினால் எழுச்சி கொண்டது.

முதல் நிகழ்வாக தங்களின் “வெள்ளை பல்லி விவகாரம்” புனைவு நூல் வெளியீடு இன்னமும் எனக்கொரு கனவு போலவே இருக்கிறது. அண்ணாச்சியுடனும், ஆசானுடனும் தங்களுடனும் ஒரே மேடையில் நிற்கும் வாய்ப்பினை தந்து அந்த நாளினை என் வாழ்வின் மறக்கவியலாத நாளாக ஆக்கினீர்கள்.

நன்றி என்ற சொல் மிகச்சிறியது. ஆயினும் இக்கணம் அச்சொல் ஒன்றே தங்களிடம் கொடுப்பதற்கு என்னிடமிருக்கிறது. தங்களுக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள். நன்றி கடனை திரும்ப செலுத்தும் வாய்ப்பினை எனக்கு இறை அருளட்டும்.

வழக்கம் போலவே நிகழ்வின் உச்சமாக அமைந்தது ஜெ அவர்களின் நிறைவுரை. அதில் வியப்பும் ஏதுமில்லை. அது அப்படி அமைவது தானே இயல்பு

1 கவிதை என்பது எக்காலத்திலும் மொழியில் அமைந்த தனித்த ஒரு மொழியாகவே இருக்கிறது

2 பொது மொழிக்கு எதிரான கலகம் என்பதே கவிதைக்கான மிகச் சிறந்த வரையறையாக இருக்க இயலும்

3 கவிதையின் சவால் என்பதே அதனை நினைவில் நிறுத்திக் கொள்ளும் தன்மை தான். கவிதை, ஏடுகளின் வழியே பரவுவது இல்லை. அது நினைவுகளின் வழியே பரவுவது, நீடிப்பது.

4 உரைநடை ஆசிரியனுக்கு இருப்பது போன்ற வரலாறு, தத்துவம், வாழ்வின் முழுமையான சித்திரம் ஆகியவற்றை திரட்டித் தரும் பொறுப்புக்கள் எந்த ஒரு கவிஞனுக்கு இருப்பதில்லை. முழுக்க முழுக்க மொழியை நம்பி செயல்படக்கூடியவனாகவே ஒரு கவிஞன் இருக்கிறான்

5 முகநூல் குறிப்பு தன்மையாய் நிறைந்த இன்றைய மொழியில் இல்லாத மூன்று இயல்புகள்

அ செறிவற்ற தன்மை

ஆ இசைமை அற்ற தன்மை

இ உட்குறிப்பற்ற அல்லது பண்பாட்டு பின்புலம் அற்ற தன்மை.

6 இந்த மூன்று இன்மைகளுக்கும் எதிராக படைக்கப்படுவதே இன்றைய கவிதையாக இருக்க இயலும். அதாவது செறிவும், ஒத்திசைவான இசைமையும், நீடித்த பண்பாட்டு உட்குறிப்புகளும் கொண்ட படைப்புளே இன்று கவிதையாக இருக்க இயலும்.

7 இன்றைய தரமற்ற கவிதைகளில் காணக்கிடைக்கும் பொதுவான மூன்று இயல்புகள்

அ சரளமும் ஒழுக்கும் அற்ற மொழி.

ஆ கோட்பாடுகளால் அமைந்த செயற்கையான மொழி

இ மொழிபெயர்ப்புகளை பிரதி எடுத்த மொழிபெயர்ப்பு பாணி மொழி

இம்மூன்று மோசமான இயல்புகளை மீறியே இன்றைய சிறந்த தமிழ் கவிதைகள் எழ வேண்டியதாக இருக்கிறது

8 இன்றைய கவிஞன் தவிர்த்தாக வேண்டியவைகள்

அ போலியான அரசியல் தன்மை

ஆ மிதமிஞ்சிய தன் மைய்ய தன்மை, அதீத சுய கழிவிறக்கம்

இ மலிந்து கிடக்கும், உயிரற்ற ஊடக மொழி

இம்மூன்றையும் தாண்டித்தான் இன்றைய கவிஞன் ஒரு நல்ல கவிதையை படைத்தாக வேண்டும்

தங்களின் உருக்கமான நன்றி உரையோடும், மதிய விருந்தோடும் பூரணமானது கவிதை முகாம்.

சிறு பிசிறும் இல்லாமல் முகாம் நிகழ்ந்தாக வேண்டுமென்ற பரபரப்பில் தாங்கள் இருந்ததாலும், இயல்பான என் அதீத கூச்ச சுபாவத்தாலும் தங்களுடன் அதிகம் உரையாடும் வாய்ப்பமையவில்லை.ஆயினும் தங்கள் அருகிருந்ததே மிக இனிப்பாக இருந்தது.

இவ்விரு தினங்களில் என் குறைகளாக நான் தெளிந்தவை

1 என் வாசிப்பின் போதாமை.

2 கவிதைக்கென ஒதுக்கும் நேரத்தின் அளவும் , அர்ப்பணிப்பின் அளவும் போதாமை

3 எழுதும் ஒவ்வொரு கவிதையும் மிகச் சிறந்த கவிதையாக மட்டுமே இருந்தாக வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு

4 மற்ற கவிஞர்களோடு சதா ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருப்பது

இது போன்ற குறைபாடுகள் என்னிடமிருப்பது இத்தினங்களில் எனக்கு உறுதி ஆயிற்று. இக்குறைகளை களைவதும் இயலக்கூடியதுதான் என்பதும் உறுதி ஆயிற்று

நான் எண்ணி வந்ததை காட்டிலும் இக்கவிதை முகாமில் பெற்றுக் கொண்டது அதிகம்.

இறுதியில் திரண்ட கனியாய் நான் அங்கிருந்து கையில் கொண்டு வந்தது என்னால் சிறந்த கவிதைகளை படைக்க முடியும் என்ற திடமான உணர்வைத்தான்.

ஒரு நம்பிக்கையாக அல்ல. எந்த தர்க்கத்தினாலும் அல்ல.

இயல்பான, மெய்யான, திடமான, பருவான ஒரு பேருணர்வாகவே மனதில் எழுந்து அமர்ந்து கொண்டது இந்த எண்ணம்

தங்களின் ஆசியாலும் இறை அருளாலும் இவ்வுணர்வு மெய் ஆகுக

மீண்டுமொரு சந்திப்பு கூடுமென நம்புகிறேன்

மாணவனாய் தங்களை பணிந்து வணங்குகிறேன்

தீரா அன்புடன்

வ. அதியமான்

முந்தைய கட்டுரையானைடாக்டரும் உயர்நீதிமன்ற ஆணையும்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைசந்தையில் சுவிசேஷம்-கடிதங்கள்