அன்புள்ள ஜெமோ
லோகி நினைவுகள் வாசித்தேன். மிகச்சிறந்த புத்தகம் என்பதை விட மிக முக்கியமான புத்தகம் என்றே சொல்லவேண்டும். அதற்கு என் அன்பும் நன்றிகளும். இப்புத்தகம் வாயிலாக அந்த மகா கலைஞன் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதை வியக்கத்தக்கது. ஏன் வியக்கத்தக்கது என்று வார்த்தையை பயன்படுத்தினேன் என்றால், நீங்கள் சுந்தர ராமசாமி, ஆற்றுர் ரவிவர்மா, சைதன்ய போன்றவர்கள் பட்டியலில் ஒரு சினிமா கலைஞனை வைத்திருப்பது.
லோகியின் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையிலும்அக்காலகட்டத்தியே எல்லா ஜாம்பவான்களின் சினிமாகளை ( பத்மராஜன், பரதன், சிபி மலையில், அரவிந்தன் போன்றவர்களின் படைப்புகள்) பார்த்து ரசித்தவன் என்ற முறையில் நான் உங்களிடம் முரண்படும் ஒரே இடம் என்பது. லோகி மகா கலைஞன் இல்லை என்று தாங்கள் சொல்லும் இடம் தான். லோகி மக்கள்கலைஞன் தான், ஆனால் நிகரற்ற மகா கலைஞனும் தான்.
உதாரணத்திற்கு பூதக்கண்ணாடி என்ற ஒரு அற்புத படைப்பை வேறு எவர் இயங்கினாலும் இந்த அளவுக்கு வீரியம் உள்ள கலா சிருஷ்டியாக வந்திருக்காது என்றே கருதுகிறேன். இதை சிபி மலையிலும் சமீபத்திய ஒரு நேர்காணலில் (The cue – Maneesh Narayanan interview) ஆமோதித்திருந்தார். நான் இப்போது மட்டுமல்ல எப்பொழுதும் லோகி ஒரு மகா கலைஞன் என்றே நம்புகிறேன். நீங்கள் லோகியை பற்றி நினைக்காத நாளில்லை என்று தெரியும். என் கடிதம் நீங்கள் வாசிக்க நேரும் சமையத்தில் லோகிக்கும் உங்களுக்குமான அந்தரங்கமான உலகில் சஞ்சரிப்பிர் என்று தெரியும். இன்று ஒருநாள் அதற்கு நான் ஒரு சின்ன பொறி என்று நினைத்து சந்தோஷப்படுகிறேன்
தருண் வாசுதேவ்