ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022

ஆனந்த்குமாரின் முதல் கவிதைத்தொகுப்பு “டிப் டிப் டிப் “தன்னறம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. என் வாசிப்பிற்கு வந்த சமீபத்திய வரவு. மதம்பிடித்தலைந்த தேடலுக்கு சற்றே இளைப்பாற்றல் தந்த கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பிது என்று சொல்வேன். அறிமுகத் தொகுப்பு என்றாலும் தேர்ந்த அனுபவங்களாக கவிதைகள் மலர்ந்திருக்கின்றன. அணில் குஞ்சைக் கையில் ஏந்துகையில் உண்டாகிற குறுகுறுப்பைப்போல.

வாசிக்கும் மனதைக் குறுகுறுக்கச் செய்கிற கவிதைகளே இத்தொகுதில் உள்ளவை. மிகப் பொருத்தமாக அமைந்திருக்கின்றது அட்டைப்பட முகப்பு. “மொக்கவிழ்தலின் தொடுகை” என்று எழுதாளர் ஜெயமோகன் அணிந்துரையில் சிறப்புச் செய்திருக்கிறார்.

என்னளவில் ஆனந்தகுமாரின் கவிதைகள் ஒரு வசீகர மலரைப்போல காட்சிப்படுகின்றன. ஒவ்வொரு கவிதையும் அதன் இயல்பில் வடிவத்தில் அந்த வசீகரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு கணம் மனம் தொட்டுச் சிலிர்க்கும்படியான வடிவது. படிக்கும் தருணத்தில் சிந்தையின் ஏதோஒரு உறைவை நெகிழ்த்திவிடுகின்ற யுக்தியைக் கவிதைகளில் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியது.

ஒவ்வொரு இதழுக்குள்ளும்
ஒரு மலரை நிமிர்த்தி வைத்துப்போகிறாள்

இந்த வரிகளில் உள்ளதைப்போல சில சொற்கள் நம்மையறியாமல் சிந்தைக்குள் ஒரு மலர்வை மலர்த்திக்காட்டுகின்றன. குழந்தைமுதல் முதுமைவரை மட்டுமல்லாது சடப்பொருள்களுமாக எல்லா பருவங்களுக்குள்ளும் அந்த மலர்வு நிகழ்ந்தேறுகின்றது.

பறக்கத் துவங்கவும் மழை வந்துவிட்டது

போன்ற வரிகள் சிலாகிப்பைத் தருகின்றன.

லேசாய்த் திறந்து பார்த்துக்கொள்கிறான்
தானே மறைத்து வைத்த ஆச்சர்யத்தை

நமக்குள் தேங்கிக் கிடந்த ஒரு ரகசியத்தைத் திறந்துகாட்டி வியப்பூட்டும்படியான வரிகளிவை.

தென்னங்கன்றின் பயணம் கவிதை மிகச் சிறப்பான கவிதையாய் மனதில் பதிகிறது. அது வளர்ந்து பெருமரமாகி இந்தப் பயணத்தை நினைத்துப் பார்க்குமோ என்று கேட்டு கவிதை உச்சம் பெறுகிறது.

எல்லா இலையும் உதிர்ந்த பின்னும் மரம் எதை உதறுகிறது?
அது நினைத்து நினைத்து சிலிர்க்கும் இடத்தில்
தான் மீண்டும் சரியாகத் துளிர்க்கிறது

இறுதி உதறலுக்குப் பிந்தைய அதன் நினைவே புதுப்பித்து எழும் உந்துதலைத் தருமென்று பேசுகிற இக்கவிதையில் வீழ்வதோடு வாழ்வு முடிவதில்லை என்கிற அழகிய தத்துவார்த்தம் வெளிப்படுகிறது.

விடியலை சுமந்து செல்லும் பாதை இப்போதொரு நத்தை

போன்ற வியக்கத்தக்க உருவகங்களும் உவமைகளும் பல கவிதைகளில் தோன்றி சிலிர்க்க வைக்கின்றன.

மொத்த நட்சத்திரங்களையும் அறையில் நான்தான் பூட்டிவைத்திருக்கிறேன்

என்கிற கவிதை வரிகளைப்போல நட்சத்திரங்களைப் பூட்டி வைத்திருக்கின்ற தொகுதியாகவே “டிப் டிப் டிப்” இருக்கின்றது. திறந்து பார்ப்பவர்களுக்கு நிச்சயமாய் அந்த ஒளியானுபவம் மனதிற்குக் கிட்டும்.

அர்த்தம் நழுவ சொல் எழுகிறது
சிறகசைப்பின் திசைகளெங்கும் வீசிப்பறக்கிறதது
தாங்கவொண்ணா வண்ணங்களை

சிந்தைக்கும் கற்பனைக்குமிடையே வண்ணங்களைத் தூவி கவிதையில் ஒருவித மாய விளையாட்டை நிகழ்த்திக் காட்டி இருக்கிற கவிஞருக்கு பாராட்டும் வாழ்த்துகளும்.

சுஜய் ரகு

முந்தைய கட்டுரைவிகடன் பேட்டி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசகனும் முகநூலும்- கடலூர் சீனு