இலக்கணவாதிகளும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ

வழக்கமாக எல்லா பஞ்சாயத்தும் பதினெட்டு பட்டி ஆலமரத்தடிக்கு வந்தாகவேண்டும். ஆகவே ஒரு கேள்வி. இலக்கியத்தில், கவிதையில் இலக்கணத்தின் இடம் என்ன? இலக்கண விதி இலக்கியத்தை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தும்? இலக்கியவாதி எந்த அளவுக்கு இலக்கணவாதியை பொருட்படுத்தவேண்டும்?

சக்தி குமார்

***

அன்புள்ள சக்தி,

இலக்கியவாதி இலக்கணவாதியிடம் ‘போடா மயிரே!’ என்று அன்பாக (மலையாள அர்த்தத்தில்) சொல்லவேண்டும். வைக்கம் முகமது பஷீர் 1952ல் அப்படித்தான் சொன்னார். பஞ்சாயத்து தீர்ப்பு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டிலிருந்து வந்த தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. ஆகவே வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

*

பழைய கதை. கம்பன் ஒரு பாடலில் துமி என்னும் சொல்லை பயன்படுத்தினான். அச்சொல் அன்றைய நிகண்டுக்களில் இல்லை. ஆகவே அவரை விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருந்த ஒட்டக்கூத்தன் சீற்றம் கொண்டு எதிர்த்தான். என் சொல் நாட்டார் நாவழக்கில் உள்ளது என்றான் கம்பன்.

அப்படியென்றால் ஓரு பகல் முழுக்க நகர்வலம் வருவோம். எங்கோ எவரோ அச்சொல்லை சொல்லிக் கேட்டால் நான் ஒத்துக்கொள்கிறேன் என்றார் ஒட்டக்கூத்தன். சோழனும் ஒட்டக்கூத்தனும் கம்பனும் நகருலா சென்றனர்.

அப்படி ஒரு சொல் உண்மையில் இல்லை. ஆனால் கவிச்சொல் பொய்க்கலாகாது என்பதனால் சரஸ்வதி ஓர் இடைச்சியாக அமர்ந்து மத்தால் தயிர்கடைந்தாள். அருகே பிள்ளையார் வெண்ணைக்காக அமர்ந்திருந்தார். ஆய்ச்சி ‘அப்பால் போடா, துமி தெறிக்கும்’ என்றாள்.

ஒட்டக்கூத்தன் தெளிந்தான். சோழனும் ஏற்றுக்கொண்டான். நீதிகள் இரண்டு. ஒன்று ஒரு சொல் நாவழக்கில் இருந்தாலே இலக்கண ஏற்பு உண்டு. இரண்டு, கவிஞன் சொன்னாலே அது இலக்கணம்தான்.

’இலக்கியம் கண்டதற்கே இலக்கணம்’ என்னும் அழியாச்சொல் திகழும் மொழி இது. இலக்கணம் வழி இலக்கியம் ஒழுகியதில்லை தமிழில். இலக்கியத்தை புரிந்துகொள்ள, வகுத்துக்கொள்ள, அடுத்த இலக்கிய வருகைக்கான தொடர்ச்சியென அதை அமைப்பதற்காக மட்டுமே இங்கே இலக்கணம் எழுதப்பட்டது

*

இலக்கணவாதியும் இலக்கியவாதியும் சொல்லை அணுகும் முறைகள் முற்றிலும் வேறானவை. இலக்கணவாதிக்கு அது திட்டவட்டமாக வகுக்கப்பட்ட அர்த்தங்களை அளிக்கும் ஓர் அடையாளம் மட்டுமே. எழுத்தும் சொல்லும் சேர்ந்து பொருளை முற்றாக வரையறை செய்யும் என இலக்கணவாதி எண்ணுகிறான்.மாறாக, பொருள் என்பது வாழ்விலிருந்து நேரடியாக தோன்றுவது என்றும், எழுத்தும் சொல்லும் அதன் கருவிகளும் ஊர்திகளுமாகும் என்றும் எண்ணுபவன் இலக்கியவாதி.

ஒரு சொல்லின் குறைந்தநிலை அர்த்தமென்ன என்று சொல்பவன் இலக்கணவாதி. அதன் அதிகநிலை அர்த்தத்தை நாடுபவன் இலக்கியவாதி. ஒரு சொல்லை முன்பு எப்படி பயன்படுத்தினார்களோ அப்படியே பயன்படுத்தவேண்டும் என்பவன் இலக்கணவாதி. அச்சொல்லை முற்றிலும் புதிய முறையில் பொருளேற்றம் செய்பவன் இலக்கியவாதி.

இலக்கணவாதி ஒரு மொழியில் செயல்பட்டாக வேண்டும். பொதுமொழி மேல் அவனுடைய ஆட்சி இருந்தாக வேண்டும். ஏனென்றால் , மொழி தன்னியல்பாக விரிந்து பரவிக்கொண்டே இருக்கும் ஒரு பெருநிகழ்வு. உரையாடல்கள் வழியாக, அன்றாடத்தின் பல்லாயிரம் புழக்கங்கள் வழியாக, இலக்கியம் வழியாக அது புதியபுதிய அறைகூவல்களை எதிர்கொள்கிறது; புதிய இயல்கைகளைக் கண்டடைகிறது.

விளைவாக, ஒவ்வொரு நாளும் மொழி தன் விளிம்புகளை சிதைத்துக்கொண்டே இருக்கிறது. தன் வடிவை கலைத்துக்கொண்டாலொழிய அது புதிய பாதைகளுக்குள் நுழைய முடியாது. இப்படிச் சொல்கிறேன், மொழி தன் சிதைவினூடாகவே தன்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவும் புதுப்பித்துக்கொள்ளவும் முடியும். சிதையாத மொழி என்பது செத்தமொழி. கல்மொழி அது.

அச்சிதைவை அவ்வண்ணமே விட்டுவிட்டால் மொழியின் எல்லா தனித்தன்மைகளும் மறையும். அதன் அடிப்படைக் கட்டமைப்பே காலப்போக்கில் அழிந்துவிடக்கூடும். ஆகவே இலக்கணவாதி அங்கே செயல்பட்டாகவேண்டும். அவனுடைய பணி என்பது தன் அன்றாடப்புழக்கம் வழியாக தொடர்ந்து சிதைந்துகொண்டிருக்கும் மொழியை மீண்டும் மீண்டும் ஒழுங்குபடுத்திக் கொண்டே இருப்பது.

ஆனால் அது பழைய இலக்கணத்தை மூர்க்கமாக முன்வைத்து மொழியை பின்னுக்கிழுப்பதல்ல. மொழியை நகரவிடாமல் மேலே ஏறி அமர்ந்துகொள்வது அல்ல. மொழி அடைந்த புதிய வடிவங்களை, சென்ற புதிய வழிகளை உள்ளே எடுத்துக்கொண்டு இலக்கணத்தை மீண்டும் உருவாக்குவது இலக்கணவாதியின் பணி. வாழும் மொழி தொடர்ச்சியாக ‘இலக்கணப்படுத்தப்பட்டுக்கொண்டே’ இருக்கும். இலக்கணத்தில் உறைந்து நின்றிருக்கும் மொழி அழிந்த மொழி. வெறும் தொல்பொருள் அது.

*

இவ்வாறு மொழியின் ‘சிதைவாக்கம்’ நிகழும் களங்களில் முதன்மையானது இலக்கியம். அங்கே இரண்டு களங்களில் இலக்கியவாதி இலக்கணத்துடன் முரண்படுகிறான்.

ஒன்று, இலக்கியம் பேச்சுமொழிக்கு மிக அண்மையில் இருந்தாகவேண்டும். இலக்கியநடை  உள்ளத்தில் ஓடும் மொழியின் எழுத்து வடிவாக இருந்தாகவேண்டும். வாசிப்பவன் தன்னுள் அந்த மொழி உளஓட்டமாக ஒழுகுவதாக நம்பவேண்டும்.  இலக்கியமொழியின் பெரும்பாலான சிதைவுகள் இதன்பொருட்டே அமைகின்றன. “போடா!” என ஒற்றைச் சொல் வாக்கியத்தை இலக்கணத்தை மீறி அமைத்தான் பாரதி. காரணம், இதுவே.

இரண்டாவதாக, இலக்கியவாதி தொடர்ந்து மொழியின் உச்ச எல்லைகளை தொடமுயல்கிறான். மொழியின் பன்முக அர்த்தங்களை இலக்காக்குகிறான். ஆகவே அவன் மொழியின் அதுவரையிலான கட்டமைப்பை மீறியே ஆகவேண்டும்.

இலக்கியத்தின் வழி என்பது திட்டவட்டமான அர்த்தம் வழியாக தொடர்புறுத்துவது அல்ல. ’மயக்கம்’ அதன் தொடர்புறுத்தல் வழிகளில் முதன்மையானது. சொல்மயக்கம், பொருள்மயக்கம் வழியாக வாசகனின் கற்பனையை விரியச்செய்து இலக்கியம் தன்னை நிகழ்த்துகிறது. மிகக்கறராக ஒற்றை அர்த்தத்தில் தன்னை நிறுத்தும் உரைநடைக்கு இலக்கியத்தில் உமியின் மதிப்புதான்.

மூன்றாவதாக ஒன்று உண்டு. இலக்கியவாதிக்கு அவனுடைய அகச்செவிக்குரிய ஓசைநயம் ஒன்று உண்டு. அந்த ஓசைவழியாக உருவாகும் அர்த்தவேறுபாடுகள் உண்டு. அது மிகநுட்பமான ஒரு தளம், அதை அவன் வாசகன் பகிர்ந்துகொள்வான். அந்த நுண்பகிர்வு வழியாகவே மொழி வாழ்கிறது.

உதாரணமாக, meaning  நான் பெரும்பாலும் ‘பொருள்’ என்ற சொல்லையே பயன்படுத்துவேன். ஆனால் சில இடங்களில் ‘அர்த்தம்’ என்ற சொல்லை கையாள்கிறேன். ஏனென்றால் அங்கே பொருள் என்று சொன்னால் matter என்னும் அர்த்தம் வந்துவிடுகிறது. இது யோசித்துச் செய்வதில்லை, இதை யோசித்துக் கொண்டிருப்பவன் எழுத்தாளனும் அல்ல. இயல்பாகவே ஒரு நுண்ணுணர்வால் அந்த சொல்தெரிவை நான் நிகழ்த்துகிறேன்.

மரபான இலக்கணவாதிக்கு இத்தகைய மீறல்கள் எல்லாம் பிழைகள் என்று தோன்றலாம். ஆனால் அத்தகைய பிழைகள் வழியாகவே இலக்கியம் நிகழமுடியும்.இந்த மீறல்களில் பல வெறும் பிழைகளாகவே நின்றுவிடும். சில மொழியின் புதிய வழிகள் என துலங்கும். பாரதியின் தமிழ் அன்றைய இலக்கணவாதிகளால் கீழ்த்தரமாகப் பழிக்கப்பட்டது – அதுவே இன்றைய உரைநடையை உருவாக்கியது. அவருக்கு முன்பு கோபாலகிருஷ்ண பாரதியை இலக்கணப்பிழைக்காக வசைபாடினர். வசைபாடியவர்கள் எங்கே என்றே தெரியவில்லை.

உ.வே.சாமிநாதையர் கோபாலகிருஷ்ண பாரதி பற்றி எழுதிய வரலாற்றில் கோபாலகிருஷ்ண பாரதியை வசைபாடி ஏராளமான பாடல்கள் புனையப்பட்டன என்று  சொல்கிறார். அவருடைய நூலுக்கு ஒரு பாயிரம் வழங்க மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறுத்துவிட்டார். பிடிவாதமாக ஒவ்வொரு நாளும் வந்து பார்த்து, வணங்கி, பாடிக்காட்டி பாயிரம் பெற்றார் கோபால கிருஷ்ண பாரதி. ஆனால் நோயுற்று சாகக்கிடக்கையில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை உ.வே.சாமிநாதையரிடம் பாடும்படி கேட்டது தேவாரமோ திருப்புகழோ அல்ல, கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்களைத்தான்.

சில களங்களில் பொருள்மயக்கம் இருக்கவே கூடாது. செய்திகளில் பொருள்மயக்கம் என்பது பிழை.சட்டத்தில், வணிகத்தில் மொழி மாறாப்பொருளையே அளிக்கவேண்டும். அங்கே இலக்கணநெறிகள் இரும்பாலானவையாகவே திகழமுடியும். இங்கே பல முட்டாள்கள் செய்திமொழியின் இலக்கணத்தை புனைவுமொழிக்கு கொண்டுவந்து பிராண்டிக்கொண்டே இருக்கிறார்கள். செய்திமொழியில் எழுதப்படுவது இலக்கியமாக ஆகாது. வார இதழ் கதைகளுக்கு சரிப்படலாம்.

உதாரணமாக ‘ராஜன் ஓடிப்போய் கண்ணனை அடித்தான், அவன் கூச்சலிட்டுக்கொண்டிருந்தான்’ என்ற வரி நீதிமன்ற மொழியில் அமைய முடியாது. செய்திமொழியிலும் அமைய முடியாது. அவன் என்ற சொல் எவரைக் குறிக்கிறது, ராஜனையா கண்ணனையா என தெளிவுபடுத்தியாகவேண்டும். ஆனால் புனைவுமொழியில் அந்த புரிதல் வாசகனுக்கு இயல்பாகவே அமையும். அப்புனைவுக்களம், அதில்செயல்படும் ஆசிரியனின் அகம் வாசகனுக்கு தெரிந்திருக்கும்.

சரி, தெரியாதவனுக்கு? அவனுக்குத்தான் புனைவுக்களமே பிடிகிடைக்கவில்லையே. பிறகு என்ன கருமத்துக்கு அவன் அதை படிக்கவேண்டும்? போய் தினத்தந்தியே படிக்கலாமே?

*

இலக்கணவாதி மரபறிந்தவனாக இருக்கவேண்டும், மனப்பாடக்காரனாக அல்ல. மரபறிந்தவன் இதுகாறும் மரபு எவ்வண்ணம் நிகழ்ந்தது என அறிந்திருப்பான். நாலைந்து நூலை புரட்டிப்பார்த்துவிட்டு பொதுவெளியில் எளிய அடையாளத்துக்காக சலம்பிக்கொண்டிருப்பவன் ஒருவகை அப்பாவிதானே ஒழிய இலக்கணவாதி அல்ல.

நான் முன்னரும் எழுதியிருக்கிறேன், இங்கே பேசும் பலர் அ.கி.பரந்தாமனாரின் ’நல்ல தமிழ் எழுதுவது எப்படி ’என்னும் ஒரே நூலை கையில் வைத்துக்கொண்டுதான் ’சவுண்டு’ விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது கல்லூரிகளில் கட்டுரைக் கேள்விகளுக்கு விடை எழுத மட்டுமே பயன்படும் உரைநடைக்குரிய இலக்கணம். அது ஒரு சராசரித் தமிழை வரையறை செய்கிறது. அந்த தமிழில் ஒரு சராசரிச் செய்தியை எழுதலாமே ஒழிய, இலக்கியம் எழுத முடியாது.தமிழின் நல்ல உரைநடையாளர் ஆயிரம் பேரின் பெயர்களை பட்டியலிட்டால்கூட அ.கி.பரந்தாமனாருக்கு அதில் இடமில்லை. ஆனால் அவர் மிகச்சிறந்த தமிழாசிரியர்.

பரந்தாமனாரின் ‘தரப்படுத்தலுக்கு’ நேர் எதிரான ஒரு தரப்படுத்தல் சி.பா.ஆதித்தனாரின் ‘நாள்தாள் எழுத்தாளர் கையேடு’ வழியாக நிகழ்ந்தது. ஆங்கிலக்கலப்போ, மொழித்திரிபோ எதுவானாலும் செய்தி அனைவருக்கும் சரியாகப் புரியவேண்டும் என்பதே அதன் நோக்கம். தினத்தந்தி அதன் அடிப்படையில் அமைந்தது. அதன் செல்வாக்கே இன்று சமூகவலைத்தளங்களின் உரைநடை வரை நீடிக்கிறது.

எந்த சராசரி இலக்கணமும் இலக்கியத்திற்குச் செல்லுபடியாகாது. பொதுமொழியில், சராசரி மொழியில், இலக்கியம் எழுதப்பட முடியாது. இலக்கிய உரையாடல்கள் கூட நிகழ முடியாது. சராசரி இலக்கணம் அன்றாடமொழியை வரையறுக்க  மட்டுமே உதவும். எந்த எழுத்தானாலும் அனைவருக்கும் பொதுவான , தரப்படுத்தப்பட்ட சராசரி மொழியில் எழுதப்படுவது இலக்கியத்தகுதி கொண்டது அல்ல. மொழி என்பது இலக்கியத்தில் ஆசிரியரின் கைரேகை போல தனித்துவம் கொண்டது.எளிய சராசரி இலக்கணத்துடன் படைப்பிலக்கியத்தை அளவிட வருபவர்களை நோக்கித்தான் ‘போடா மயிரே’ என்றார் பஷீர். அந்தச் சொல் எழுத்தாளனின் நாவில் என்றும் இருக்கவேண்டும்.

இங்கே இலக்கணவாதிகள் அவர்கள் செய்தாகவேண்டிய செயலைச் செய்வதில்லை. அவர்கள் மக்கள்பேசும் மொழியை உள்வாங்கி, இலக்கணத்தின் நெடியமரபில் இணைத்து, புத்திலக்கணத்தை உருவாக்கி கொண்டே இருக்கவேண்டும்.  சில்லறைகள் அதைச் செய்யாமல் இலக்கியப்படைப்புகள் மேல் சொறிய வந்துகொண்டே இருப்பார்கள். ஏனென்றால் இலக்கியப்படைப்புகள் கவனிக்கப்படுகின்றன, அவற்றைச் சொறிந்தால் தாங்களும் கவனிக்கப்படலாம் என எண்ணுகிறார்கள்.

அத்துடன் இலக்கணம் பேசுபவர்களில் பலர் கற்பனைவீச்சு இல்லாத, வாழ்வனுபவச் செறிவு இல்லாத, சிந்தனைக்கூர் இல்லாத கீழ்நிலை படைப்பாளிகளாகச் சிலகாலம் இருந்திருப்பாரகள். செய்யுட்களை எழுதி பார்த்திருப்பார்கள். இலக்கணத்தை கையிலெடுத்ததும் இலக்கியவாதியை ‘சொல்லித்திருத்தும்’ பொறுப்பு கொண்ட, ஒரு படி மேலான ஆளாக தன்னை கற்பனைசெய்துகொள்ளும் கிளுகிளுப்பு அவர்களுக்கு அமைகிறது.

*

இன்றைய சூழலில் இலக்கணம் பேசும் எவரை கருத்தில்கொள்ளலாம்? என்ன தகுதிகள் இருக்கவேண்டும்?

அ. அவர் முறையாக தமிழ் கற்றிருக்கவேண்டும். தற்குறிப்புலவர்கள் பெருந்தீங்கு இழைப்பவர்கள். ஏன் முறையான தமிழ்க்கல்வி தேவை என்றால் அதில் தமிழிலக்கிய மரபின் எல்லா பகுதிகளும் கற்பிக்கப்பட்டிருக்கும். காப்பியங்கள், நெறிநூல்கள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தும். ஒரு ‘சரிவீத’ கல்வி இல்லாமல் தமிழின் மரபை புரிந்துகொள்ள முடியாது.

ஆ. இலக்கணத்தை அறிந்திருப்பது அல்ல, இலக்கணம் தொடர்ந்து உருமாறி வளர்ந்து வந்த பாதையை அறிந்திருப்பதே முக்கியமானது.  அதன் வழியாகவே இலக்கணம் என்பது மாறாவிதிகளின் தொகுப்பு அல்ல என்றும், இலக்கணமென்பது தொடர்ச்சியாக நிகழும் ஓர் அறிவுச்செயல்பாடு என்றும், அதன் பணி உள்ளிழுத்தல் மற்றும் முறைப்படுத்தல் என்னும் இரண்டு தளங்கள் கொண்டது என்றும் தெளிவு உருவாகும்

இ. இன்றைய சூழலில் ஆங்கிலம் போன்ற வளர்ந்த, வாழும் மொழியின் இலக்கண அறிஞர்கள் செயல்படும் முறையென்ன என்ற தெளிவு இலக்கணவாதிக்கு இருந்தாகவேண்டும். ஆகவே மிக விரிவான ஆங்கில அறிவு இல்லாத எந்த தமிழறிஞரையும் ஒரே  சொல்லி அப்பால் போகச் சொல்லிவிடலாம்.

நான் இலக்கணம் மீது பேரார்வம் கொண்டவன். பாவலர் ச.பாலசுந்தரம் அவர்களின் தென்னூல் பற்றி என் திருப்பூர் உரையில் சொன்னேன். அவரே இலக்கண அறிஞர். நாம் கற்கவேண்டியதும், கடக்கவேண்டியதும் அவரைப்போன்றவர்களைத்தான். பைபிள் புதிய ஏற்பாட்டின் இருநூறு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உலகுக்கே மெய்ஞானம் வழங்கப் புறப்படும் உள்ளூர் உபதேசிகளின் மனநிலை கொண்டவர்களை அப்பால் ஒதுக்கிவிடவேண்டும். நமக்கு இலக்கணம் தேவை என்றால் அதற்கான அறிஞர்களிடமிருந்து கற்போம். அரைவேக்காடுகளை எதற்குச் சார்ந்திருக்கவேண்டும்?

ஜெ

முந்தைய கட்டுரைஅரசியின் விழா- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிகடன் பேட்டி -கடிதங்கள்