இந்தமுறை மதுரை மீனாட்சி திருமணத்துக்குச் சென்றாகவேண்டும் என்னும் முடிவில் இருந்தேன். நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி பரவி கடைசியில் பதினெட்டுபேர் உடன் வருவதாக ஆகிவிட்டது. ஆனால் இறுதியில் ஓர் இக்கட்டு. 17 ஆம் தேதி கன்யாகுமரியில் நான் பேசவேண்டும், கவிதைப்பட்டறை நிறைவுரையாக. 16 ஆம் தேதி அழகர் ஆற்றிலிறங்குவதை கண்டுவிட்டு திரும்பலாம். ஆனால் கொஞ்சமேனும் இளைப்பாறவேண்டும். ஆகவே அடுத்த முறை அழகரை காணலாமென முடிவுசெய்துவிட்டு மீனாட்சி கல்யாணத்துக்குச் செல்ல முடிவெடுத்தோம்.
மதுரையின் வெயில் பற்றிய கடுமையான தொன்மங்கள் மிரட்டின. கொஞ்சம் கொஞ்சமாக நான் வெயில்தாள முடியாதவனாக ஆகிவிட்டிருக்கிறேன். ஏஸியிலேயே பெரும்பாலான பொழுதுகள் கழிகின்றன. உடல் அதற்கு பதப்பட்டிருக்கிறது.
13 ஆம் தேதி மாலை கிளம்பி இரவு மதுரை சென்றேன். நண்பர்கள் வந்து ரயில்நிலையத்தில் காத்திருந்தார்கள். ராஜா லாட்ஜ் என்னும் சிறிய விடுதிக்குச் சென்றோம். மீனாட்சி கோயில் வாசலிலேயே அறைபோடவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன். எவராவது நண்பர்களின் வீடு அமைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் விடுதிக்கு திருச்செந்தாழை வந்திருந்தார். நண்பர்களுடன் இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தேன்.
காலையில் எழுந்து மீனாட்சி கோயிலுக்குச் சென்றோம். மொத்த மதுரையுமே இன்னொன்றாக தெரிந்தது. மதுரைக்கு எப்போதுமே ஒரு திருவிழா நெரிசல் உண்டு. இது உபரி நெரிசல். எங்குபார்த்தாலும் மலர்சூடிய பெண்கள். பதினாறு பதினேழு வயது பையன்கள்கூட உற்சாகமாக பீப்பீ ஊதினார்கள். ஒன்று வாங்கி ஊதலாம் என நினைத்து அடக்கிக்கொண்டேன்.
ஆச்சரியமாக 14 அன்று மதுரையில் வெயில் மிகக்குறைவு. வானம் மூட்டமிட்டிருந்தது. அபாரமான வானவில்லை மாலையில் காணமுடிந்தது. எங்கு பார்த்தாலும் புதிய மஞ்சள்கயிறு தரித்த பெண்கள். ஆனால் அத்தனைபேருக்கும் வெயில் பழகிவிட்டிருந்தது. மதுரையில் பெண்கள் எல்லாருமே வெயிலுகந்த அம்மன்கள்தான்போல.
மதுரையில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. திருவிழாவில் பெரும்பாலானவர்கள் எங்கோ உணவருந்துகிறார்கள் என்று தோன்றியது. நாங்கள் திரும்பத் திரும்ப ஒரே ஓட்டலில்தான் சாப்பிட்டோம். ஆனால் ஒருமுறைகூட சுவை குறைவான உணவைச் சாப்பிடவில்லை. சைவ உணவிலும் உறுதியான சுவையை மதுரையில் எதிர்பார்க்கலாமென தெரிந்தது. அசைவ உணவில் மதுரை மெஸ்களை நெருங்குவதைப் பற்றி தமிழகம் இன்னும் கற்பனைகூட செய்யமுடியாது.
மாலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருள்வதைப் பார்க்கச் சென்று நின்றிருந்தோம். நெரிசல் மிகுந்து மேலும் நெரிசல். தலைகள். மேலே மிதந்தபடி மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் செல்வதை தொலைவிலிருந்து கண்டோம். பெருவாயிலில் இருந்து ஒளியுடன் சப்பரம் தோன்ற, பல்லாயிரம் தொண்டைகளில் இருந்து வாழ்த்தொலிகள் எழும் தருணம் காலாதீதமானது. பாண்டியர்செல்வி, நாயக்கர்களின் அரசி. என்றுமுள தென்னகத்திறைவி.
என்னென்னமோ விற்றுக்கொண்டிருந்தார்கள். இத்தனை கடைகள் வந்தபின்னரும் தேர்த்திருவிழாக்களில்தான் இரும்பு வாணலியும், இடிகல்லும் குழவியும் வாங்குகிறார்கள். ஊதா, ரத்தச்சிவப்பு வண்ணங்களில் சீனிமிட்டாயும் சவ்வு மிட்டாயும் வாங்கி தின்றோம். கிருஷ்ணனுக்கு சவ்வுமிட்டாயில் வாட்ச் வாங்கி தரவா என்று கேட்டேன். கொஞ்சம் சபலப்பட்டாலும் சுதாரித்துக்கொண்டு மறுத்துவிட்டார்.
என்ன இல்லாமலாகியிருக்கிறது? சவுரிமுடி! அதை எங்குமே காணவில்லை. மரிக்கொழுந்துக்கு இது சீசன் இல்லையா? எங்குமே காணவில்லை. ஆனால் எங்குபார்த்தாலும் ‘மதுரைமல்லி’. தோவாளையில் கிலோ மூவாயிரம் ரூபாய்க்கு போகிறது. மதுரையில் பாதிப்பெண்கள் அரைக்கிலோ சூடியிருந்தனர். அரசு மானியம் ஏதாவது கொடுக்கப்படுகிறதா என விசாரிக்கவேண்டும்.
சாப்பிட்டுவிட்டு கிளம்பி அழகர்கோயில் சாலைக்குச் சென்றோம். அங்கே மண்டகப்படிகளை ஏற்றுக்கொண்டு வந்துகொண்டிருந்த அழகரை வழியில் சென்று சந்தித்தோம். களிவெறிதான் எங்கும் நிறைந்திருந்தது. அழகரின் பல்லக்கு அசைந்து எழுந்தபோது கல்தூண்கள்கூட வாழ்த்தொலியுடன் அதிர்வதாகத் தோன்றியது.
திரும்பி வந்து படுத்தபோது பின்னிரவு மூன்று மணி. காலையில் எழுந்து குளித்து ஓடிச்செல்வதற்குள் மீனாட்சியின் தேர் கிளம்பிவிட்டிருந்தது. நகரின் சந்துகளில் சுற்றிச்சுற்றி சென்று முனைகளில் கூடிய கூட்டத்தில அலைக்கழிந்தபடி நின்று தேர் நகர்வதைப் பார்த்தோம். ஒரு மாபெரும் ஆலயக்கோபுரம் உயிர்கொண்டு வீதியில் இறங்குவதுபோல. அதிர்வுகளும் குலுக்கங்களுமாக பூத்த மலர்க்குன்று ஒன்று ஊர்ந்து செல்வதுபோல. குரல்களின் விசையே அவற்றை இழுத்துச் செல்கிறதென்று தோன்றியது.
வெயில் எரித்து எரித்து உடலையே உருகச்செய்வது போலிருந்தது. ஒரு தொப்பி போட்டிருக்கலாம். என் வழுக்கைத் தலை பொசுங்கி கருமையாகிவிட்டது. ஆனால் எங்களூர் வழக்கப்படி தெய்வத்தின் முன் தலையில் ஏதும் அணிந்திருக்கக்கூடாது.
வயலில் வெந்த கரிய முகங்களில் வழியும் வியர்வையின் ஆவி. மண்ணில் இருந்து எழுந்து மண்ணால் ஆனவர்கள் போன்ற மக்கள். வெயிலில் திளைக்கும் கைக்குழந்தைகளை இங்குதான் காண்கிறேன். இந்த மக்களுடன் இருக்கையில்தான் நான் என் இடத்தில் மிச்சமில்லாமல் பொருந்தியிருக்கிறேன் என்றும், விராடரூபன் என்றும், அழிவற்றவன் என்றும் உணர்கிறேன்.
இரண்டுநாட்கள் அலைந்துகொண்டே இருந்தோம். சிரித்துக்கொண்டு, கூச்சலிட்டுக்கொண்டு. சுற்றிலும் எல்லா முகங்களிலும் சிரிப்பு. யாரோ யாரையோ அழைக்கிறார்கள். எல்லாரும் எல்லாரையும் ’ஏண்ணே’ என்கிறார்கள். தோள்களாலேயே முட்டி முட்டி மனிதர்களை உணர்ந்துகொண்டே இருந்தோம்.
திரும்பி வந்தபின் கிருஷ்ணனிடம் சொன்னேன். “இரண்டுநாட்கள் கொண்டாட்டமாக இருந்தோம். அப்படி பல இடங்களில் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறோம். ஆனால் மற்ற எல்லா இடங்களிலும் அறிந்துகொள்ளுதல் என்று ஒன்று நடந்தது. மூளை விழித்திருந்தது. இங்கே எந்த அறிதலும் இல்லை. மூளையென ஒன்றே இல்லை. உடலென்று மட்டுமே இருந்தோம். நீண்டநாளைக்கு பின் இரண்டுநாட்கள் மூளைக்கு முழு ஓய்வு அளித்திருக்கிறோம்”
மாலை நான்கரை மணிக்கு குருவாயூர் ரயிலில் ஏறிப்படுத்தேன். ஏஸியின் குளிரில் ஐந்தரை மணிநேரம் அசைவில்லாமல் தூங்கினேன். ஒன்பதரைக்கு நாகர்கோயில். பத்து மணிக்கு வீடு. பத்தரைக்கு படுத்து மறுநாள் ஏழரைக்கு எழுந்தேன். காலையுணவுக்குப்பின் மீண்டும் படுத்து மதிய உணவுக்கு எழுந்தேன். கண் எரிந்துகொண்டிருந்தது. நல்லெண்ணை தேய்த்துவிட்டு குளிக்க அமர்ந்திருக்கிறேன்.
வெயிலில் எரிவதும் கொண்டாட்டமே. பெருந்திரளில் எஞ்சாமல் கரைந்தாடும் களியாட்டு. திருவிழாக்களினூடாக நான் என்னை மீண்டும் மீண்டும் கண்டடைகிறேன்.
இந்தச் சமகாலம் எனக்குச் சலிப்பூட்டுகிறது. இந்த அரசியல், இந்தச் சில்லறைச் சழக்குகள், இந்த நுகர்வுவணிகம். எனக்கு வேண்டியவை இன்றுள்ளவை அல்ல, என்றுமுள்ளவை. அவை இத்தனை பிரம்மாண்டமாக பரிமாறப்படுகையில் நான் ஏன் என் நிகழ்காலத்தின் வெட்டவெளியில் நின்றிருக்கவேண்டும்?