விகடன் பேட்டி -கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நான் உங்கள் விகடன் உரையாடலையும், அதன்கீழே வந்துள்ள எதிர்வினைகளையும் கண்டேன். அந்த எதிர்வினைகளில் ஒரு பொதுத்தன்மை உள்ளது. அத்தனை பேருக்குமே அந்த தன்மை உள்ளது. அவர்கள் நீங்கள்: கீழடி பற்றி பேசியதை மட்டுமே கேட்டிருக்கிறார்கள். அதையும் வேறெங்கோ கேட்டிருப்பார்கள். ஆனால் இங்கே வந்து திட்டுகிறார்கள். முழுப்பேட்டியையும் எவரும் பார்க்கவில்லை. அந்த குறிப்பிட்ட எபிசோடின் முப்பது நிமிடங்களைக்கூட பார்க்கவில்லை. நீங்கள் சொன்னது என்ன என்று ஒரு முறை கூகிள் பண்ணி பார்ப்பவர்கள்கூட ஒருவர் கூட கிடையாது. தாங்கள் நம்புவதற்கு எதிராக ஒன்று சொல்லப்படும்போது திட்டுகிறார்கள். ஆனால் எங்குமே சென்று எதையுமே மேலதிகமாக தெரிந்துகொள்வதில்லை. அங்கே குமுறிக்கொண்டிருப்பவர்களில் நாலைந்துபேர்கூட உங்கள் தளத்துக்கு வரமாட்டார்கள். நீங்கள் யார், என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று பார்க்க மாட்டார்கள்.

ஏனென்றால் அந்தப்பேட்டியிலேயே நீங்கள் தனித்தமிழியக்கம் உள்ளிட்ட தமிழியக்கங்களின் தீவிர ஆதரவாளர் என்று சொல்கிறீர்கள். தமிழாய்வுகளை கவனிப்பதைச் சொல்கிறீர்கள். தமிழறிஞர்களின் பெயர்களைச் சொல்கிறீர்கள். தூயதமிழில் எழுதுவதைச் சொல்கிறீர்கள். ஆனால் அங்கே குமுறிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலும் அனைவருமே உங்களுக்கு சரியாகத் தமிழ் தெரியாது, நீங்கள் மலையாளி என்கிறார்கள். ஆச்சரியமான மனநிலை. ஃபனட்டிசம் என்று ஒன்று உண்டு. இந்த எல்லைக்கு அது இருக்கும் என இப்போதுதான் கண்கூடாகக் காணமுடிகிறது.

இரா.முருகவேல்

அன்புள்ள ஜெ,

பர்வீன்சுல்தானா பேட்டியின் இறுதிப்பகுதி அருமை. அவர் கொற்றவை, கன்யாகுமரி பற்றி கேட்ட இரு கேள்விகளுமே அற்புதமானவை. ஒரு பெண்ணின் வாசிப்புக்கோணம் வெளிப்படுபவை. ஆண் வாசகர் அதைக் கேட்டிருக்க முடியாது. ஆத்மார்த்தமான தீவிர வாசிப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி அது. அதற்கு நீங்கள் சொன்ன பதில்களும் நேர்மையானவை. கன்யாகுமரியின் ரவிக்கு கதையாசிரியர் எந்த உதவியும் செய்ய முடியாது அவனுக்கு விதி அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது. ஆசிரியரே கொஞ்சம் வருத்தப்படலாம், அவ்வளவுதான். எனக்கு கன்யாகுமரி பிடித்தமான நாவல். அதிகமாகப் பேசப்படாத நாவல். பர்வீன் சுல்தானா பேட்டிக்குப்பின் அந்த நாவல் பேசப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பர்வீன் அந்த நாவலில் இருந்து கேட்டதுபோன்ற கேள்விகளால் மொத்த பேட்டியையும் அமைத்திருக்கலாம். தொடக்கத்திலுள்ள கேள்விகளை விஷயமறியாத வேறெவரோ எழுதி கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அனேகமாக நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் எழுதியிருக்கலாம். பர்வீன் அவருடைய வாசிப்பிலிருந்து கேட்டதுபோன்ற கேள்விகளை கேட்டிருந்தால் பேட்டி இவ்வளவு ஹிட் பெற்றிருக்காது. ஆனால் என்றும் நீடிக்கும் ஒரு நல்ல உரையாடலாக அமைந்திருக்கும். இப்போதைக்கு அந்தக் கடைசிப்பகுதி மட்டும்தான் அழகான உரையாடல்

சேதுபதி மாணிக்கம்

தேவநேயப் பாவாணர் விக்கி

முந்தைய கட்டுரைஇலக்கணவாதிகளும் இலக்கியமும்
அடுத்த கட்டுரைஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு