வாசிப்புப் போட்டி பரிசு

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் இணையதளம் வழியே பல்வேறு வாசிப்பு போட்டிகள் நடைபெறுகின்றன. Books&readers குழு நடத்திய வாசிப்பு போட்டியில் கலந்து கொண்டு நானும் பரிசு பெற்றேன். இயக்குநர் திரு.ஞான ராஜசேகரன் IAS அவர்களிடமிருந்து பரிசு பெற்றது கூடுதல் சிறப்பு. உங்கள் தீவிர வாசகன் என்கிற முறையில் வாசிப்பின் அதீத ஈடுபாட்டால் பெற்ற பரிசு என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

நமது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் இது போன்ற வாசிப்பு போட்டி நடத்தி, பரிசை விஷ்ணுபுரம் விழாவில் நீங்கள் வழங்கினால், இன்னும் நிறைய வாசகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்களே! இதை நீங்கள் பரிசீலிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

மாறா அன்புடன்,

செல்வா

திசையெட்டும்தமிழ்

பட்டுக்கோட்டை

***

அன்புள்ள செல்வா

நல்ல எண்ணம்தான். இன்று வாசிக்கத் தொடங்குவதுதான் கடினம். நம் சூழலில் வாசிப்புக்கு எதிரான மனநிலைகள் நிறைந்துள்ளன. வாசிப்பது வீண், வாசிக்காமலேயே அறிவு வரும், இப்போதெல்லாம் யாரும் வாசிப்பதில்லை, சீரியல்களை பார்த்தாலும் அறிவு பெருகும், டெக்னாலஜி வந்தபின் வாசிப்பே தேவையில்லை — இன்னபிற பிலாக்கணங்கள் இங்கே பெருகியிருக்கின்றன. ‘நானெல்லாம் வாசிக்கிறதே இல்லை’ என்பதையே ஒரு பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்களை வேறெங்கும் பார்க்கமுடியாது.

இது வாசிக்க நினைப்பவர்களை பின்னடையச் செய்கிறது. தங்களால் வாசிக்க முடியாது என எண்ணச் செய்கிறது.  அத்துடன் பலவகையான திசைதிரும்பல்கள். ஐந்து நிமிடத்துக்கு ஒரு குறுஞ்செய்தி. அரைமணிநேரத்துக்கு ஓர் அழைப்பு. ஓயாமல் எவராவது அழைத்து எதையாவது சொல்லிக்கொண்டிருப்பதை எங்களூரில் நொச்சு பண்ணுவது என்போம். எங்கள் இளமையில் நொச்சு பண்ணும் ஆட்களைக் கண்டு ஓடி ஒளிவோம். இன்று நொச்சு பண்ணிக்கொண்டே இருக்கும் கருவியை கையிலேயே வைத்திருக்கிறோம்.

இதேபோல ஏதேனும் போட்டியில் கலந்துகொண்டு படிக்க ஆரம்பிப்பவர்கள் தங்களால் மிக எளிதாக படிக்க முடியும் என, அதில் அவ்வளவு தீவிரமாக ஈடுபட முடியும் என கண்டுகொள்கிறார்கள். அதன்பின் அச்சுவை அவர்களை ஆட்கொள்கிறது. அப்படி வாசிக்க ஆரம்பித்த பலரை நான் அறிவேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஉரைத்தல்
அடுத்த கட்டுரைஅளவை, இதழ்