உரையாடும் காந்தி வாங்க
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். நான் இங்கு நலம். தாங்களும் நலம்தானே?
சமீபத்தில் தங்களின் ‘உரையாடும் காந்தி’ நூலை இரண்டாம் முறையாக வாசித்தேன். அது குறித்த எனது பதிவு.
பெரும்பாலானவர்களைப் போலவே காந்தி எனக்கு பள்ளி செல்லும் வயதில் அறிமுகமாகினார். நினைவிருக்கிறது நான் நான்காம் வகுப்பு படிக்கையில் என் பள்ளியில் ‘Pick & Talk ‘ எனும் ஒரு போட்டி. தேசத்தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களை ஒரு சிறு காகிதத்தில் எழுதி குலுக்கி வைத்துவிடுவார்கள். அவரவர் எடுக்கும் சீட்டில் வரும் நபரை பற்றி ஓரிரு நிமிடம் பேச வேண்டும். நன்றாக பேசுபவர் வெற்றியாளர். நான் எடுத்த சீட்டில் இருந்தது ‘காந்தி’. அச்சமயம் வரலாற்று பாடத்தில் காந்தி குறித்து படித்திருந்தேன். அவரை குறித்த ஒரு 10 மதிப்பெண் வினாவும் இருந்தது. அதை அப்படியே நினைவில் இருந்து முழுவதுமாக ஆங்கிலத்தில் சொன்னேன். நான் படித்தது தஞ்சாவூரில் உள்ள ஒரு நடுத்தர ஆங்கில வழிக்கல்வி பள்ளியில். 1998ம் வருடம் என் பள்ளியில் வேறெந்த சிறுவனும் அவ்வாறாக ஆங்கிலத்தில் பேசியது கிடையாது. இதன் காரணமாக நான் வெற்றியும் பெற்றேன். அத்தோடு நிற்கவில்லை , அவ்வருடம் தொடங்கி நான் அப்பள்ளியில் படித்து முடித்த காலம் வரை அனைத்து ஆண்டு விழா ஆங்கில நாடகங்களிலும் மாற்றமே அன்றி நான் தான் கதாநாயகன். இவ்வாறாக காந்தி என் வாழ்வில் ஆர்பாட்டத்துடனேயே நுழைந்தார்.
அதன் பிறகு பத்தாம் வகுப்பு துவங்கி நான் கல்லூரி படித்து முடித்த காலம் வரை காந்தியை நான் எவ்வகையிலும் கண்டடைய வில்லை. தேடி வாசிக்கவுமில்லை. ஓரிரு வரலாற்றுத் தகவல்கள், அவர் கடைபிடித்த அகிம்சை முறை அன்றி பிற எதுவும் தெரியாது. நான் இருந்த சூழலில் அவரை குறித்த ஒரு சிறு உரையாடல் கூட நிகழவில்லை. அக்காலத்தில் மெல்லிதாக என்னிடம் வாசிக்கும் பழக்கம் துவங்கியது. இந்திய விடுதலை போராட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது. தேடி வாசிக்க துவங்கினேன். முதலில் படித்தது ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’. தலைப்பிற்காகவே அப்புத்தகத்தை எடுத்தேன். அன்று காந்தி மீண்டும் என் வாழ்வில் நுழைந்தார்.
ராமச்சந்திர குஹா தர்க்க ரீதியிலாக ஒவ்வொரு நிகழ்வுகளாக சொல்லிச் செல்வார். வாசிப்பின் துவக்க காலத்தில் இருந்த எனக்கு அது மிகப்பெரும் ஆச்சர்யத்தை அளித்தது. தெளிவாக வரலாற்றை புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்த காலம். அப்போது நான் வாசித்தவற்றை பற்றி என் உற்ற நண்பர்கள் இருவரிடம் பேசினேன். அதில் ஒருவர் தொடக்கத்திலேயே ‘நான் காந்தியை மகாத்மாவாக ஏற்றுக்கொள்ளவில்லை’ என்றார். இன்னொருவர் ‘ பிரம்மச்சரிய பரிசோதனைக்காக வயது வித்தியாசம் பாராமல் பெண்களை பயன்படுத்திய காந்தியை எவ்வாறு தேச தந்தை என்று கூறமுடியும். மேலும் அவரும் காலன்பேக்கும் ஓரின சேர்க்கையளர்கள் என ஒரு சொல் இருக்கிறது ’ என அடுக்கடுக்காக வாதங்களை அடுக்கிச் சென்றார். இறுதியாக ‘உனக்கு தெரியுமா காந்தி அவரின் வாரிசுகளுக்காக எவ்வளவு சொத்து சேர்த்து வைத்து சென்றிருக்கிறார் என’ என்றார். நான் அப்பொழுது முழுவதுமாகவே சொல்லற்று போனேன். கல்லால் அடிபட்ட நாய் ஒருவாறு வீலிட்டுக்கொண்டு ஓடுமே அவ்வாறு மனம் ஓடிக்கொண்டிருந்தது. ‘அது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. எவ்வளவு இருக்கும்’ என்றேன் பரிதாபமாக. ‘அது இருக்கும் பல ஆயிரம் கோடிகளுக்கு மேல். அனைத்தும் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பத்து தலைமுறைகளுக்கு கவலை இல்லை. இது எதுவும் அறியாமல் அவரை பற்றி தெரிந்து கொள்ள கிளம்பிவிட்டாயா. போ, போய் உன் வாழ்க்கையை பார் முதலில்’ என்று முடித்தார்.
அன்று இரண்டு பாதைகள் என் முன் இருந்தன. ஒன்று தர்க்க ரீதியில் வரலாற்று உணர்வோடு அவரை அணுகுவது, இன்னொன்று இது போன்ற உதிரி தகவல்கள், செவிவழிச் செய்திகள் வழியாக அணுகுவது. இரண்டாவது பாதையில் நான் பார்த்தது வெறும் காழ்ப்பே ஆனாலும் கேட்பவரின் சிந்தனையை தீவிரமாக சீண்டக்கூடியவை இவை. உண்மை தானோ என மயக்குவதும் கூட. Online-னிலும் இரண்டாவது வகையைசேர்ந்த தகவல்களே உடனடியாக கண்ணில் பட்டது. இவை எல்லாம் நடந்தது 2014ல். இருந்தும் ஒன்றை மிக ஆழமாக நம்பினேன். இந்நாடு தன் பல ஆயிரம் வருட வரலாற்றில் பல துறவியரை , ஞானியரை பார்த்திருக்கிறது. மூன்று பெரும்மதங்கள் தோன்றியிருக்கின்றன. பல ஆயிரம் வருட ஞான மரபுத் தொடர்ச்சி இருக்கிறது. இவ்வாறிருக்க இம்மண்ணில் முழுவதுமாக ஒரு பிம்பத்தை போலியாக கட்டமைத்துவிட முடியாது. அப்படியே செய்தாலும் அதை இத்தனை வருடங்களாக நிலை நிறுத்தியிருக்க முடியாது. இதை அன்று வாசிப்புப் பழக்கம் இல்லாத என் இயல்பான இந்திய மனம் சொன்னது. அன்று முடிவெடுத்தேன் முதலில் காந்தியை அறிந்து கொள்ள சத்திய சோதனையில் இருந்து துவங்கவேண்டும் என்று.
சத்திய சோதனை வாசிப்பு எனக்கு உண்மையான காந்தியை காட்டியது. அதை ஆத்மாவுடனான ஒரு உரையாடலைப் போல, காந்தியே அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போல உணர்ந்தேன். பல பகுதிகளை கண்ணீர் இன்றி படிக்க முடியவில்லை. எனினும் என் நண்பர்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லத்தெரியவில்லை. அதாவது நான் நன்கு உணரக்கூடிய ஒன்று ஒரு கருத்தாக, மொழியாக திரளாமல் எண்ணமாக மட்டுமே எஞ்சியிருந்தது. இந்த இடைவெளியை நிரப்பியது தங்களின் ‘இன்றைய காந்தியும்’, ‘உரையாடும் காந்தியும்’.
இவ்விரு புத்தகங்களிலும் நான் எதிர்கொண்டதை விட தீவிரமான , பல தளங்களில் இருந்து எழுந்த விரிவான கேள்விகளும் அவற்றுக்கான தங்களின் பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘இன்றைய காந்தி’ வாசித்ததன் பிற்பாடு ‘உரையாடும் காந்தி’யை எடுத்தேன். துவக்கத்திலேயே சொல்லிவிட்டீர்கள் காந்தியை எவ்வாறு அணுகவேண்டும் என்று. விவாதம் மற்றும் உரையாடலுக்கான வேறுபாட்டை ஓரிரு வரியில் மட்டுமே சொல்லியிருந்தாலும் அந்தப் பதிவு இந்நூலை வாசிக்கையில் முழுவதுமாக என்னோடு பயணித்து வந்தது. அனைத்து பதில்களும் வரலாற்று தரவுகளோடு, இந்திய பெருமரபின் பல்வேறு கிளைகளை தொட்டு தெளிவாக அளிக்கப்பட்டிருந்தது. பதில்களின் இறுதியில் தங்களின் பதிவு அல்லது காணோட்டம். ஒரு சராசரி இந்தியனுக்கு அந்தக் கடைசி பதிவே போதும். கிட்டதட்ட அனைவருமே வெவ்வேறு வகையில், வெவ்வேறு அகமொழியில் அறிவது இது. எனினும் பிற தகவல்களுக்கான தேவை இக்காலத்தில் மிக அதிகமாக இருப்பதாக எண்ணுகிறேன். இணையத்தின் வளர்ச்சியில் அனைத்து ஆளுமைகளும் வெட்டவெளியில் நிற்கின்றனர்.அவ்வழியே வருவோரும் போவோரும் அவர்களின் மீது ஏதோ ஒன்றை உதிர்த்துவிட்டோ இல்லை வீசிவிட்டோ செல்கின்றனர். இவை அனைத்தையும் மீறி அந்த ஆளுமையை புரிந்து கொள்வதற்கு பிற தகவல்கள் தேவை ஆகின்றன.
ஓஷோ, மார்ட்டின் லூதர் கிங் , மார்ஸ் மற்றும் காந்தி என இவர்களின் சிந்தனை போக்குகள், அதன் முரணியக்கங்கள் குறித்த பதில்களும் சிறப்பானவை. ஒவ்வொருவரைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கி கொள்வதற்கும், மேலதிகமாக தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தையும் வழங்குகின்றன.
இந்நூலை வாசிக்கையில் மனித மனம் செயல் படும் விதம் பற்றி தான் யோசித்துக்கொண்டிருந்தேன். யாராக இருந்தாலும் மனம் அவர்களை எதிர்மாறையாகவே அணுகுகிறதோ? காந்தி என்றால் மேற்சொன்னது உட்பட இன்னும் பிற காழ்ப்புகள், நேரு என்றால் ‘பெரும் செல்வந்தர், பெண் பித்தர்’, வல்லபாய் படேல் என்றால் ‘அவர் ஒரு இந்துத்துவர்’, விவேகானந்தர் என்றால் ‘அவரால் விந்தணுவை வாய் வழியாக துப்பி விட முடியும்’ , சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங்க் என்றவுடன் மாற்றுச் சிந்தனை இன்றி அவர்கள் மேல் உடனடியாக பதிந்துவிடும் நாயக பிம்பம். இவ்வாறாக எண்ணி எண்ணி ஒரு இந்தியன் அடைவது தான் என்ன. நம்மை சுற்றிலும் உள்ள நாடுகள் பொருளாதாரத்தில், பாதுகாப்பில், பல உட்சிக்கல்களில் இன்னும் தத்தளித்துக்கொண்டிருக்க நாமோ சௌகரியமாக அமர்ந்து தேவையில்லாத வீண் அவதூறுகளை மட்டும் பகிர்ந்து வருகிறோம்.
‘உரையாடும் காந்தி’ அளிப்பது காந்தி குறித்த புரிதல்களை மட்டும் அல்ல, சிந்திக்கும் முறையையும், பயிற்சியையும் கூடத் தான். மனம் இனி ஒருபோதும் காரணமற்ற வீண் விவாதங்களில் சிக்கிக்கொள்ளாது. அடிப்படை தரவுகள் அன்றி ஒரு ஆளுமையை உயர்த்திப்பிடிக்கவோ, மட்டம்தட்டவோ செய்யாது. எவ்வித நிலையை எடுத்திருந்தாலும் அது உரையாடலுக்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கும்.
இவையனைத்திற்கும் மேலாக சொல்வதற்கு ஒன்றுள்ளது. ஒரு கனவு. அதில் நானும், நண்பர் பாலசுந்தரும் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்துக்கொண்டிருந்தோம். ஒரு நிறுத்தத்தில் காந்தியும் , கஸ்துரிபாவும் ரயில் ஏறினர். நான் அமர்ந்திருந்ததால் எழுந்து காந்தி உட்கார இடம் கொடுத்தேன். என்னை பார்த்து மெல்லிதாக புன்னகைத்தார். பின்னர் அவர் அமர்ந்துகொள்ள நான் அவர் அருகில் நின்று கொண்டேன். ரயில் சென்றுகொண்டிருந்தது.
காந்தி இன்னும் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்ற எண்ணமே ஒவ்வொரு கணமும் என் கண்களில் நீர்கோர்க்கிறது. ஆசிரியரே, காந்தியை பற்றி புரிந்து கொள்வதற்கு உதவிய தங்களுக்கு என் நன்றிகள்.
பி.கு : ஒரு வருடத்திற்கு முன் தங்களை மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடந்த ‘கல் எழும் விதை’ நிகழ்வில் சந்தித்து ‘இன்றைய காந்தி’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். எதேச்சையாக இன்று ‘உரையாடும் காந்தி’ குறித்து உங்களுக்கு எழுதுகிறேன்.
இப்படிக்கு,
சூர்ய பிரகாஷ்
பிராம்ப்டன்