எழுதுக, விலையில்லா நூல் பெற!

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

எங்கள் வாழ்நாளுக்கான ஆசிரியத் துணையாக உங்களை அகமேற்றுப் பயணிக்கும் இச்சமகாலத்திற்கு எல்லாவகையிலும் நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். தனிவாழ்வு சார்ந்தும், செயல்வழி சார்ந்தும் குக்கூ நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் உங்கள் படைப்புகளின் அர்த்தச்சொற்கள் பேராதாரமாய் உள்ளிருக்கின்றன. நீங்கள் காட்டித்தந்த நேர்மறைப் பாதைகளும், தத்துவார்த்த சிந்தனைத் தெளிவுகளும், உடனிருந்து உறுதுணையளிக்கும் நட்புறவுகளும்தான் எங்களை இயக்கி முன்செலுத்தும் நற்பெருவிசை.

கருப்பட்டிக் கடலைமிட்டாய் தயாரித்து தொழிற்படுத்தும் ஸ்டாலின் பாலுச்சாமியின் மதர்வே, கைத்தறி நெசவு மீட்பில் முழுமூச்சாக இயங்கும் சிவகுருநாதனின் நூற்பு, வாழ்வனுபவக் கல்வி குறித்து ஆளுமைகளின் நேர்காணலைப் பதிவுசெய்யும் பாரதி கோபாலின் சுயகல்வியைத் தேடி ஆவணப்பயணம், கழிவு மேலாண்மை சார்ந்து களமியங்கும் விஷ்ணுப்ரியாவின் மீள் இயக்கம், கிராமத்துக் கிணறுகளைத் தூர்வாரி மீட்கும் மதுமஞ்சரியின் ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம், பிறந்த குழந்தைகளுக்கான பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்யும் அருண்குமாரின் அம்பரம், துணிசார்ந்த பொம்மைகள் மற்றும் பொருட்கள் தயாரிக்கும் பொன்மணியின் துவம், மைவிழி செல்வியின் வீதிநூலகம், குழந்தைகளுக்கான மாத இதழான தும்பி, தேர்ந்த அச்சுத்தரத்தில் புத்தகங்களை உருவாக்கும் தன்னறம் நூல்வெளி… என இம்முயற்சிகள் அனைத்தையும் முன்னெடுக்கும் இளையவர்களுக்கு நீங்களளித்த நம்பிக்கைச் சொற்களே செயற்தீவிரம் அளிக்கின்றன.

நாங்கள் பெற்றடைந்த இதே உளத்தீவிரத்தையும் நேர்மறை எதிர்கொள்ளலையும் இச்சமூகத்தின் பிற இளையவர்களுக்கும் நாங்கள் அகமளிப்பதை நிச்சயம் செய்தாகவேண்டிய அகக்கடமை. காரணம், இன்றைய இளையோர்கள் சந்திக்கும் வாழ்வுச்சூழலில் இருண்மையும் வெறுப்பும் அவர்களுடைய அகச்சமநிலையை சமன்குலைப்பதாக உள்ளது. குக்கூ காட்டுப்பள்ளியின் நியதி கூடுகையில் பங்குகொள்ளும் இளையோர்கள் பலர் அத்தகைய சலனங்களை கடந்துவருவதைத் தங்களது அனுபவங்களாகப் பகிர்கிறார்கள். நேர்மறையான லட்சியவாத உணர்வு என்பது எக்காலத்தும் எவர்மீதும் காழ்ப்பையோ வெறுப்பையோ உமிழாதது.

இதேபோலொரு மனநிலையில்தான் முதன்முதலில் ‘தன்மீட்சி’ நூலினை எண்ணற்ற இளையவர்களுக்கு விலையில்லா பிரதிகளாக அனுப்பினோம். அந்நூல் உருவாக்கிய நேர்மறையான விளைவை இப்பொழுதுவரை நாங்கள் கண்கூடாகக் காண்கிறோம். ஓர் படைப்பு எவ்வாறு ஆத்மத்துணையாக நிலைகொள்ள முடியும் என்பதற்கான சமகால புத்தகச்சாட்சிகளில் முதன்மையானது தன்மீட்சி.

ஏதோவொரு துயர்மனம் தற்கொலை எண்ணத்தைக் கைவிடக் காரணமாகவும், கனவையும் நடைமுறை வாழ்வையும் ஒருசேர விரும்பி வழிநடத்தத் துணைசெய்வதாகவும், அகச்சோர்வுகளை மீட்டெடுத்து செயல்தீவிரம் தரும் அகவூக்கியாகவும் இப்புத்தகம் பொதுவெளியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தும்பி பிரெய்ல் அச்சுப் புத்தகங்களைப் பெறுவதற்காக தேசிய பிரெய்ல் அச்சகம் சென்றிருந்தோம். அங்கு பார்வையற்ற ஓர் பேராசிரியர் ‘தன்மீட்சி’ நூலை ஆடியோ வடிவில் கேட்பதாகச் சொல்லி மிகுந்த மனவெழுச்சியுடன் உரையாடினார். தன்மீட்சி வாயிலாக தன்னறத்திற்கு நிகழ்ந்த நல்விளைவுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

அதேபோல, கடந்த வருடம் நீங்கள் பிரசுர அனுமதியளித்த ‘எழுதுக’  எனும் நூலினை, தன்னறம் நூல்வெளிக்கு நிகழ்ந்திட்ட ஓர் நல்லூழ் என்றே கருதுகிறோம். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி புதிதாக எழுதவரும் இளம் மனங்களுக்கு விளக்கிச்சொல்லும் வகையில் நீங்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் எழுத்துலகத்தில் நுழைபவர்களுக்கான ஓர் சிறந்த வாசல். அவ்வகையில், எழுத்தை வாழ்வுப்பாதையாக ஏற்கத் துணியும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. கடித விவாதங்களின் வழியாக நிகழ்ந்த இந்த அறிவுச்சேகரம் இளையோர்களுக்கு படைப்புலகு சார்ந்த ஒரு புதிய திறப்பை நல்கும்.

அறுபது வயதைத் தொடுகிற உங்கள் வாழ்க்கைக்கும், நீங்கள் சாத்தியமாக்கிய படைப்புலகிற்கும் நன்றிசெலுத்த நாங்கள் ஓர் முன்னெடுப்பை உத்தேசிக்கிறோம். ஆகவே, புதிதாக எழுதவரும் இளையோர்களுக்காக நீங்கள் எழுதிய ‘எழுதுக’ புத்தகத்தை விலையில்லா பிரதிகளாக 500 இளையோர்களுக்கு அனுப்பும் ஓர் செயலசைவை உங்களிடம் முதலறிவுப்பு செய்வதில் பெருமகிழ்வு கொள்கிறோம். படைப்பாளுமையின் அறுபதாண்டுகால வாழ்வின் நல்லசைவுகளில் ஒன்றாக தன்னறத்தின் இம்முன்னெடுப்பு தன்மைகொள்ளட்டும். மேலும், உங்களது பிறந்தநாளுக்கு எங்களால் இயன்ற கூட்டுப் பிரார்த்தனையாகவும் இதைக் கருதுகிறோம். சமகாலத்தில் தாக்கமுண்டாக்கும் நிறைய படைப்பாளிகளுக்கு உங்கள் வழிகாட்டல் பெருந்துணையாக அமைவதால், எழுத்துலகு மீதான நம்பிக்கையை இளையோர்களிடம் மீண்டும் துலங்கச்செய்யும் இம்முயற்சிக்கு விஷ்ணுபுரம் நண்பர்களின் ஆசியையும் நாங்கள் வேண்டுகிறோம்.

“எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது” குரு நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகள் இக்கணம் தன்னிச்சையாக அகமெழுகின்றன. நீங்களிளக்கும் சொற்களே எங்களுக்கான உள்ளொளி. படைப்புச்சூழலிலும், பலரது தனிவாழ்விலும் இதுவரை நிகழாத நிறைய திறப்புகளை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். எக்காலத்தும் எங்களுக்கு செயற்துணையாக உடன்வரும் உங்கள் ஆசிரியமனதை வணங்கி அருகமர்கிறோம்.

‘எழுதுக’ விலையில்லா பிரதிகள் பெறுவதற்கான இணைப்பு: https://forms.gle/nUN8U3kYy9gybZ9g9

***

நன்றிகளுடன்,

சிவராஜ்

தன்னறம் நூல்வெளி

www.thannaram.in

முந்தைய கட்டுரைகணிக்கொன்றை
அடுத்த கட்டுரைஅரசியின் விழா