எந்தவகை எழுத்து?

மதிப்பிற்குரிய ஆசானே,

நான் சில கதைகளை எழுதியுள்ளேன். எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் fantasy கதைகளாக மட்டுமே உள்ளது. எவ்வளவு முயன்றும் என்னால் சக மனிதர்களை எழுத முடியவில்லை அல்லது அவர்களுக்குள் ஆழ்ந்து அவர்களது மனங்களை எழுத முடியவில்லை. மாறாக மாயம் நிறைந்த உலகை என்னால் வண்ண மயமாக உருவாக்கிட முடிகிறது. பொழுதுப் போக்கு கதையாக என்னால அதை எளிதில் வடிவமைத்திட முடிகிறது.

நான் உங்களை அண்மையிலிருந்து தான் வாசித்து வருகிறேன். குறிப்பாக உங்களது எழுத்து மற்றும் வாசிப்பு சார்ந்த கட்டுரைகளை. அவற்றை வாசித்தபின் நான் எழுதுபவை வெறும் கூச்சல்களாகத் தோன்றுகிறது. மனிதனை எழுதாத, என் மண்ணை எழுதாத, என் வாழ்வை எழுதாத என் எழுத்து எதற்கென்று தோன்றுகிறது. இந்த எண்ணங்களை என்னால் கையாள முடியவில்லை. ஆகையால், இவற்றை எனை நோக்கி எய்த உங்களிடமே வேண்டுகிறேன். இந்த நிலையை நான் எவ்வாறு கையாள்வது? உதவுங்கள் ஆசானே!

தினேஷ்

சேலம்

அன்புள்ள தினேஷ்

இலக்கியத்தில் இன்னவகையான எழுத்துதான் சரியானது இலக்கியத்தன்மை கொண்டது என்று எவரேனும் சொல்வார்கள் என்றால் அவருக்கு இலக்கியத்தின் அடிப்படையே தெரியவில்லை என்று தான் பொருள். வாழ்க்கையின் யதார்த்தத்தை அப்படியே சொல்வதுதான் இலக்கியம் என்று எவரும் வகுக்கவில்லை. சொல்லப்போனால் யதார்த்தத்தை அப்படியே சொல்ல எந்த இலக்கியப்படைப்பாலும் முடியாது. இலக்கியப்படைப்பு இலக்கியத்தை அப்படியே சொல்வதான ஒரு பாவனையை மேற்கொள்கிறது. நுண் தகவல்கள் வழியாக காட்சி சித்தரிப்புகள் வழியாக நம்பகமான உணர்வுநிலைகளை உருவாக்குவதன் வழியாக வாசகனை அப்படி நம்பச் செய்கிறது அது ஒரு புனைவு உத்தி மட்டுமே.

இந்த யதார்த்தவாதமென்பது உலக இலக்கியத்தில் தோன்றி இருநூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் இலக்கியத்திற்கு மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை இருக்கிறது. உலக இலக்கியத்தில் மிகப்பெரும் பகுதி  மனிதனுடைய கனவுகளையும் கற்பனைகளையும் லட்சியங்களையும் சொல்வதாகத்தான் இருக்கிறதே ஒழிய யதார்த்தத்தை சொல்வதாக இல்லை. யதார்த்தவாதம் என்பது அச்சுப்பொறி உருவான பிறகு, சரளமாக அதிகமான பக்கங்களைப் படிக்கக்கூடிய வாய்ப்பு மனிதனுக்கு வந்தபிறகு, உருவான ஒரு எழுத்து முறை. அது பல்வேறு கிளைகளை விரித்து பலவகையாக பரவி சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. அது இந்த இலக்கியத்தின் ஒரு முதன்மையான உத்தி என்பதிலும் ஐயமில்லை. ஆனால் அது ஒன்றே இலக்கியம் என்று எந்த இலக்கிய விமர்சகனும் சொல்ல மாட்டான்.

சொல்லப்போனால் யதார்த்தவாத எழுத்துக்கு மிகப்பெரிய எல்லைகள் உள்ளன. முதலில் அது தான் சொல்வது யதார்த்தம் என்று நம்பவைக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய சுமை. வாசகனை இதை நம்பு என்று சொல்ல ஆரம்பித்தபிறகு அவன் சற்று நம்பிக்கையிழந்தால் கூட அந்த இலக்கியம் தோற்றுவிடக்கூடிய அபாயத்திலிருக்கிறது. அதைவிட யதார்த்தத்தை உருவாக்குவதன் பொருட்டு வெளியே உள்ள புற உலக யதார்த்தத்தை பெருமளவுக்கு நம்பி இருக்கவேண்டிய கட்டாயம் யதார்த்தவாத இலக்கியத்திற்கு இருக்கிறது. நூறாண்டுகளுக்குள் அந்த புறவய யதார்த்தம் மாறிவிட்டிருக்கும். இலக்கியம் எதை நம்பி செயல்பட்டதோ அது காலாவதியாகிவிட்டிருக்கும். அந்த இலக்கியம் அந்தரத்தில் நிற்கும்

பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் மன்னராட்சியும் பிரபு குலங்களின் ஆட்சியும் இருந்த காலகட்டத்தில் அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான யதார்த்தவாதப் படைப்புகளில் மிகப்பெரும்பாலானவை எதைச் சுட்டுகின்றன என்பதே இன்றைய வாசகனுக்குப் புரியவில்லை. அவை வேறேதோ ஓர் உலகை, சம்பந்தமில்லாத பிரச்சினைகளைப் பேசுவனமாக மாறிவிட்டிருக்கின்றன. அன்றைய இலக்கியங்களில் மிகக்குறைவானவையே அந்தக்காலகட்டத்தை அறிந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்னும் எல்லையைத் தாண்டி இன்றைய வாசகனிடம் தங்களைத் தொடர்புறுத்துகின்றன.

தொன்மங்களில், மிகைக் கற்பனைகளில் நிகழும் கதைகளுக்கு இந்தச் சிக்கலில்லை. அவை என்றுமுள்ள ஒரு அக யதார்த்தத்தை, என்றுமுள்ள ஒரு கற்பனை உலகை, கனவுலகை உருவாக்குகின்றன. அக்கனவுலகுக்கு வெளியுலகம் சார்ந்த நிபந்தனைகள் இல்லை. இன்று ஒரு யதார்த்தவாதக் கதையை எழுத நீங்கள் முயன்றால் அது இன்றைய சென்னையில் நிகழ்வதாக  எழுதவேண்டும். இன்றைய சென்னைக்கு மிக அணுக்கமாக அதனுடைய யதார்த்த சித்தரிப்பு இருக்கும்போது மட்டும்தான் அதற்கு இலக்கிய மதிப்பு இருக்கிறது, வாசகன் அதை நம்புவான். நூறாண்டுகளுக்குப்பிறகு இன்றைய சென்னை இதன் வாழ்க்கை முறை அனைத்துமே அன்றைய வாசகனுக்கு முற்றிலும் அந்நியமாக இருக்கும்போது நீங்கள் எழுதுவதை அவன் எப்படி புரிந்துகொள்ள முடியும்? நீங்கள் எழுதுவதிலிருந்து அவன்  எந்த யதார்த்தத்தை எடுத்துக்கொள்ள முடியும்?

டால்ஸ்டாய் உருவாக்கிய புறவுலகு முற்றிலும் இன்றில்லை. ஆனால் அது இன்று நிலைகொள்வதற்கு காரணம் அதனுடைய உணர்வுநிலைகள் இன்றும் நிடிப்பவை என்பதனால் தான். அவர் காட்டும் அந்த புறவுலக யதார்த்தத்தை மெய்யா பொய்யா என்று பரிசோதிப்பதற்கு இப்போது என்னிடம் எந்த தரவுகளும் என்னிடம் இல்லை. ஆனால் அந்த உணர்வுகளை இன்றும் நம் வாழ்க்கையில் நாம் பார்ப்பதனால் அந்த இலக்கியத்துக்கு மதிப்பிருக்கிறது.

அவ்வாறன்றி அலெக்ஸி டால்ஸ்டாயின் நாவல்களில் அந்த உணர்வு நிலைகள் வலுவாக இல்லை. அந்த யதார்த்தவாதம் அன்றைய புறயதார்த்தத்திற்கு மிக நெருக்கமானது. இன்று படிக்கையில் அது மிக மேலோட்டமானதாக தெரிகிறது. இன்று ஒருவன் மாபெரும் யதார்த்தப் படைப்பாகிய டான் அமைதியாக ஓடுகிறதைப் படித்தான் என்றால் அவனுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறு ஏதோ ஒரு உலகத்தை வெறும் சொற்களாகவே படித்துக்கொண்டிருக்கும் சலிப்பூட்டும் அனுபவத்தையே அடைவான்

ஆகவே யதார்த்தம் என்பதல்ல இலக்கியத்தின் நிபந்தனை என்பதை உணருங்கள். இலக்கியம் எதுவாக இருக்கமுடியும். குழந்தைக்கதைகளாக எழுதப்பட்ட லூயிஸ் கரோலின் ஆலிஸின் அற்புத உலகம், அல்லது வெறும் சாகசக்கதையாகிய டேனியல் டூஃபோவின் ராபின்சன் குரூஸோ, ஹெர்மன் மெல்வில்லின் கடல் சாகச நாவலாகிய மோபி டிக் போன்றவை எல்லாமே உலக இலக்கியத்தின் சாதனைப்படைப்புகளாகவே கருதப்படுகின்றன.

நீங்கள் மிகை கற்பனைகளை எழுதுகிறீர்கள் என்றால், வெறும் கனவுகளை எழுதுகிறீர்கள் என்றால், அது உங்களுக்கு நிறைவும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என்றால், அதுவே உங்களுடைய இலக்கியப்பாணி ,அதைவிடுத்து பிறிதொன்றை நீங்கள் முயலவேண்டிய தேவை இல்லை. அது உங்களுக்கு அந்நியமாக இருக்குமெனில் அது உங்கள் எழுத்துமுறையே அல்ல. அதை எவர் குறை சொன்னாலும் நான் எழுதும் உலகம் இது என்பதே பதிலாக இருக்கவேண்டும்.

ஆனால் நீங்கள் எழுதவரும்போது நீங்கள் எழுதுவது என்ன என்பதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். நீங்கள் எழுதுவது ஏற்கனவே பலமுறை பலரால் எழுதப்பட்ட மாயக்கதைகளின் மறுவடிவங்களையா என்று பார்க்கவேண்டும். பெரும்பாலான ஃபேண்டஸி கதைகள் அத்தகையவை. அமெரிக்காவில் ஒரு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதியில் நான் சென்று பார்த்தபோது அடுக்கடுக்கான நூல்கள் அனைத்துமே வெவ்வேறு வகையான டைனோசர்களைப்பற்றி இருந்தன. பிறிதொருமுறை சென்று நூலகத்தில் பார்த்தபோது பெரும்பாலான நூல்கள் தோர் முதலிய கெல்டிக் தொன்மங்களைச் சார்ந்தவையாக  இருந்தன. அவையனைத்தும் நகல்கள். அப்படி  ‘டிரெண்டி’யான நகல்களை எழுதி வாசகர்களை கவர்ந்தால் நீங்கள் எழுதுவது இலக்கியமல்ல

நீங்கள் எழுதுவது  முழுக்க அசல் என்றால், இதற்கு முன் எவராலும் எழுதப்படாதது என்றால் , இலக்கியத்தில் அதற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இதற்கு முன் எழுதப்படாத ஒன்றென்றால் அது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி ஒன்று உண்டு. அது எங்கிருந்து வரக்கூடும்? அது ஏற்கனவே மனிதன் கண்ட ஒரு கனவிலிருந்துதான் வரும். தொன்மமாக, ஐதீகமாக ,செவி வழிச்செய்தியாக, மிக எளிய நாட்டார்ப் படிமமாக எங்கோ இருந்துகொண்டிருக்கும். அது ஏன் சொல்லப்பட்டது, ஏன் கற்பனை செய்யப்பட்டது என்பதில் இருக்கிறது நுட்பம். வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் அது பிரதிநிதித்துவப்படுத்துவதனால், வாழ்க்கையை அது விளக்குவதனால், வாழ்க்கையின் ஒரு நுட்பத்தை சுட்டிக்காட்டுவதனால்தான் அது கற்பனை செய்யப்பட்டது, சொல்லப்பட்டது, நீடிக்கிறது ஆகவே அதைப் புனைவாக்கும்போது வாழ்க்கையைப் பற்றித்தான் பேசுகிறீர்கள்.

முற்றிலும் கற்பனையான ஒரு கதையை எடுத்துக்கொண்டால் கூட அது வரலாற்று உண்மைக்கு மிக நெருக்கமாக வேறு கோணத்தில் சென்று அமைவதைப்பார்க்கலாம். ஹாரி பாட்டர் குழந்தைகளுக்கான மிகைக் கற்பனைக்கதை .ஆனால் நவநாகரீக லண்டனில் ஒரு ரயில் நிலையத்திலிருந்து ஹாரி பாட்டர் சென்றடையும் அந்த மாய உலகம் ஐரோப்பா பதிமூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில் செமிட்டிக்  பண்பாட்டால் (கிறிஸ்தவத்தால்) தோற்கடிக்கப்பட்டு, மறைக்கப்பட்டு விட்ட உலகம். ஐரோப்பா தன்னுடைய மறதிக்குள் தள்ளிவிட்ட ஒரு வரலாறு. அது பேசுவது கோத்திக் காலகட்டம் பற்றி. ஒருவன் தன்னுடைய நிகழ் காலத்தில் இருக்கும் சின்ன கனவு போன்ற ஒரு திறப்பினூடாக ஆயிரம் வருட இறந்தகாலத்திற்கு, மறைந்த ஓர் உலகத்திற்கு செல்வதும்; அந்த உலகத்தில் அவன் வேறு ஒருவனாக திகழ்வதும் என்பதும் வெறும் கற்பனையா என்ன?

ஐரோப்பாவின் வரலாற்றின் இரண்டு அடுக்குகளை நீங்கள் ஹாரிபாட்டரில் பார்க்கலாம். ஒன்று நிஜம், ஒன்று அவர்கள் புதைத்துவைத்த கனவுலகம். அந்நாவல் குழந்தைகளுக்குரிய சாகசக்கற்பனை, அதேசமயம் ஐரோப்பாவின் வரலாற்று யதார்த்தத்திற்கு மிக அண்மையில் நிற்கக்கூடிய ஒரு புனைவு. அத்தகைய எவ்வளவோ புனைவுகளுக்கு மாயப்புனைவின் சாத்தியம் உள்ளது. அது அசலாக இருக்கவேண்டும். அதில் எழுதும்போது உங்களுடைய ஆழம் வெளிப்படவேண்டும். உங்களுடைய கனவுக்கு எந்த அளவுக்கு மிகை கற்பனை நெருக்கமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது ஆழமானது என்று கொள்க. ஏனெனில் கனவுகளைப்போல நம்மை வெளிப்படுத்தக் கூடிய ஆழமான படிமங்கள் வேறெங்கும் இல்லை.

முந்தைய கட்டுரைகுகை- வாசிப்பனுபவம்
அடுத்த கட்டுரைதிபெத், கடிதம்