முக்தியின் வழி…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

புத்தாண்டு நல்வாழ்த்துகள். நான் ஒரு நடுத்தர வயது ஆண் வேலை செய்துவருகிறேன். சிறு வயது முதல் கடவுள் வழிபாடு என்றால் ஸ்லோகங்கள் சொல்வது , கோவில்களுக்கு செல்வது என்று இருக்கிறேன். கெட்ட பழக்கங்கள் இல்லை. இந்து மரபில் இதே வழியில் சென்றால் முக்தி கிடைக்குமா , என்னால் அளவற்ற பக்தி செலுத்த முடியாது இதனால் பக்தியோகம் கைகூடுமா என்று தெரியவில்லை. அளவற்ற ஞானத்தை பற்றி சிந்திக்கவும் முடியாது இதனால் ஞானயோகமும் சரிவருமா என்று தெரியவில்லை. ராஜ யோகி அளவு மனதை அடக்குபவனும் அல்ல. சிலர் மெய்வழிசாலை போன்ற மறுப்புகளை பரிந்துரைக்கின்றனர் ஆனால் என்னால் நான் வணங்கிவரும் கடவுள்களை அருவமாக மட்டும் என்ன முடியாது. ஒரு சராசரி வேலை செல்லும் ஒரு தற்கால இந்து கடவுள்களில் , நம்பிக்கைகளில் உள்ள ஒருவன் எப்படி முக்தி அடைவது அல்லது அதனை நோக்கி பயணிப்பது ? தயவு செய்து விளக்குங்களேன்

நன்றி,

இராமகுமரன்

***

அன்புள்ள இராமகுமரன்,

மிக எளிமையான ஒரு களங்கமின்மையுடன் கேட்கப்பட்ட இந்தக்கேள்வி என் வரையில் மிக முக்கியமானது.  ஏனெனில் இப்படி எளிமையாகவும்  நேரடியாகவும் கேட்பதற்கான துணிவின்றி பல சமயம் மிகச் சிக்கலான சொற்களால் இதே கேள்வியைக் கேட்போம்.  ஒருவர் தன்னுடைய மீட்சியை அடையவேண்டுமெனில் அவர் ஐயம் திரிபற அனைத்து நூல்களையும் ஆழ்ந்து கற்றாக வேண்டுமா? மூச்சை அடக்கி சிந்தையை அடக்கி செயலடக்கி யோகம் புரிந்தாகவேண்டுமா? எளிய பக்தியால் மீட்படைய இயலாதா அவ்வண்ணம் எளிய பக்தி நோக்கிச் செல்லும்போது அதை மறுக்கும் ஞானமும் யோகமும் பெரிய தடைக்கல்லாக ஆகின்றனவா?

ஏதோ ஒரு வகையில் இந்த வினாக்களை வெவ்வேறு கட்டங்களில்  எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் சோர்வூட்டும் ஒரு கூறு உண்டு. தத்துவத்திற்கும் சரி ,யோக மரபிற்கும் சரி, அவற்றின் மறுப்பாளர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திராணி உண்டு. மிக வலுவான தர்க்கங்களின் மூலம் யோகம் பயில்பவர்களும் வேதாந்திகளும் அவர்களின் எதிர்ப்பாளர்களை நொறுக்கி மேலே செல்வதைக் காணலாம். ஒரு நாத்திகனைக்கண்டு சொல்லின்றி தயங்கி நிற்கும் ஒரு வேதாந்தியையோ யோகம் பயில்பவனையோ நீங்கள் ஒருபோதும் கண்டிருக்க இயலாது.

ஆனால் எளிய பக்தன் திகைத்துவிடுகிறான். சிவன் தலையிலிருந்து கங்கை வருகிறதென்றால் கங்கோத்ரிதான் சிவனுடைய  தலையா என்று ஒரு நாத்திகன் கேட்டால் சிவபக்தன் ’தெரியலிங்க என்னமோ என் நம்பிக்கை அது’ என்று சொல்லி அமைதியாவதே வழக்கம். ஒவ்வொரு மறுப்புக்கும் எள்ளலுக்கும் பதிலாக என்னுடைய நம்பிக்கை இது, நான் விவாதிக்க விரும்பவில்லை என்பதையே பக்தனால் சொல்ல முடியும். ஆகவே தான் முழு நாத்திகர்களும் பக்தர்களுக்கு எதிராகவே களமாடுகிறார்கள். ஏனெனில் எளிய இரை அவர்களே.

இந்து மரபில் இந்த மூன்று வகையான மரபுகளும் ஒரே புள்ளியையே சென்றடைகின்றன என்பதை மீண்டும் மீண்டும் நூல்களும் ஞானிகளும் வரையறுக்கிறார்கள். மெய்யான  அத்வைதிகள், மெய்யான ஞானிகள், யோகிகள் வழிபாடுகளை மறுத்தவர்களல்ல. அது எவருக்கானவை, அவற்றின் நிகர் பயன் என்ன என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

ஒருவன் முதலில் நோக்கி அறியவேண்டியது தன்னைத்தான். தன்னுடைய இயல்பை, தன் அகத்தை. ஆன்மீகமான பாதையில் மிகப் பிழையான திசையில் நெடுந்தொலைவு செல்பவர்கள் யார், வீண் அலைச்சலுக்கு உள்ளாகி அழிப்பவர்கள் யார் என்று பார்த்தால் தன்னைப்பற்றிய பிழையான அல்லது தவறான மதிப்பீடுகள் கொண்டவர்கள்தான் என்பதைக்காணலாம்.

ஒருவன் தன்னை மிகக் கூர்மையானவன்,  நுண்மாண் நுழைபுலம் கண்டு  எதையும் தெளியும் தன்மை கொண்டவன் என்று பிழையாக எண்ணிக்கொள்கிறான் என்று கொள்வோம்.உண்மையில் அவன் உணர்ச்சிகரமானவன், அறிவார்ந்த தேடலை தொடர்ந்து வாழ்நாள் முழுக்கச் செய்யும் ஆற்றலற்றவன் எனில் அவன் சென்றடைவது ஒரு விந்தையான குழப்ப நிலை. அவன் உள்ளே அவன் நாடுவது ஆழ்ந்த நம்பிக்கையை. அவன் தனக்கென தேர்வது அறிவின் சமரசமின்மையை. அது அவனை இரட்டைநிலை கொள்ளச்செய்கிறது.

அறிவின் பாதையில் ‘குறிக்கோள் எய்தும்வரை நில்லாமல் செல்வது’ மிக அடிப்படையான பண்பு. உணர்ச்சிகரம் என்பது அறுபட்டு அறுபட்டு நீள்வது. தீவிரமான தொடக்கம், உச்சம், கீழிறங்கி அறுபடல், இடைவெளி, மீண்டும் மற்றொரு தொடக்கம் என நீள்வது. உணர்ச்சிகரமானவன் அறிவின் பாதையை தெரிவுசெய்தால் அதை விரைவிலேயே ஒரு மிகைவெளிப்பாடாக ஆக்கிக் கொள்வான். அறிவார்ந்த விஷயங்களை உணர்ச்சிகரமாக கையாண்டு சிதைப்பான், தானும் சிதைவான்.

அல்லது அகத்திலொன்றும் புறத்திலொன்றுமாக அவன் நடிப்பா, தனது அறிவார்ந்த தகைமையின்மையை தனக்குத்தானே மறைத்துக்கொள்ளும் பொருட்டு மிகையாக வாதிடுவான். எந்த இடத்திலும் சென்று எதையும் எதிர்கொண்டு பேசுவான். பெரும்பாலான மார்க்சியர்களிடம் இந்த இயல்பு உண்டு. நானறிந்த பெரும்பாலான மார்க்சியர்கள் அறிவார்ந்த தகுதி கொண்டவர்களல்ல. எளிமையான நம்பிக்கை கொண்ட தொண்டர்கள். ஆனால் கட்சி அவருக்கு அறிவுஜீவி என்னும் பாவனையை அளிக்கிறது.  அந்தப்பாவனையை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் தொடர்ச்சியாக எதிலும் எங்கும் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதன் வழியாக தங்கள் சொற்களை தங்களுக்கே சொல்லி நிறுவி அதைத் தங்களுக்கே ஒரு ஆணையாக மாற்றிக்கொள்கிறார்கள்.

ஒருவன் குறிப்பிட்ட வயதில் தன்னை எவரென்று ஓரளவு  வகுத்துக்கொள்ள முடியும். மிக இளமையில் தன்னை எல்லாமாகவும்  வகுத்துக்கொள்ளும் ஓர் எண்ணம் அவனிடம் இருக்கும். தன்னை சிந்தனையாளராக, கவிஞனாக ,யோகியாக ,கலகக்காரராக எல்லாமாகவும் மாறி மாறி சித்தரித்துக்கொண்டே இருப்பான். பின்னர் தான் இயல்வது இது அல்லது எது என்ற தெளிவை வந்தடைவான். தன்னால் செல்லக்கூடிய தூரமும் தெளிவடைந்திருக்கும். அதன்பின்னர் அவர் தனது பாதையை எளிதில் வகுத்துக்கொள்ள முடியும்.

உணரச்சிகரமானவர், கவித்துவமானவர், உலகியல் சார்ந்தவர் மூவருக்கும் உரியது பக்தியே.பக்தியென்பது மூன்று படிகள் கொண்டது. முதல்படி உலகியல் சார்ந்த பக்தி. அதுவே பக்தியின் கடைநிலை. வாழ்வில் தனக்கு வேண்டியதை தெய்வங்களிடம் கேட்டுப் பெறுதல். ஆனால் அதுவும் பிழையானதல்ல. ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்பதும் ஆன்மிகத்தின் கோரிக்கையே.

அதற்கு அடுத்த படிநிலை ஆசார அனுஷ்டானங்களாலானது. அவை வாழ்க்கையை ஒரு நெறிக்குள் நிறுத்துகின்றன. அனைத்துச் செயல்பாடுகளையும்  வகுத்து, ஒன்றுடன் ஒன்று சரியாக பிணைத்து, சிதைவுகளற்ற திசை திரும்பலற்ற சீரான வாழ்க்கை ஒன்றை உருவாக்குகின்றன அனுஷ்டானங்கள். ஆன்மீகமான அல்லது அறிவார்ந்த அலைபாய்தல் இல்லாத ஒருவருக்கு ஆசாரவாழ்க்கை என்பது ஒரு பெருங்கொடை.

எந்த ஒரு மதமரபையும் சார்ந்து அவ்வண்ணம் தெளிவாக வகுக்கப்பட்டுவிட்ட ஒரு வாழ்க்கை கொண்டிருத்தல் என்பது உலகியலாளனுக்கு மிக சிறப்பானதே. இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய மதங்களும் இந்த ஆசாரநிலையையே உச்சகட்டமாக வாக்களிக்கின்றன.

பெரும்பாலும் நாம் காணும் பக்தியென்பது இவ்விரு நிலைகளைச் சார்ந்ததே. இதனூடாக ஒருவன் அடையக்கூடியதென்ன எனில் இங்கு உலகியல் சார்ந்த அனைத்துக்கும் ஆதாரமாக நிலைகொள்வதாக, நம் கோரிக்கைகளைக் கேட்பதாக இறைச்சக்தி ஒன்று உள்ளது என்ற நம்பிக்கை உலகை எதிர்கொள்ளும் நம்பிக்கையை பக்தனுக்கு அளிக்கிறது.இழப்புகளிலிருந்து எளிதில் மீளச்செய்கிறது. சோதனைகளை துணிவுடன் சந்திக்கச் செய்கிறது. தன்னை மீறிய எதையும் என்ணி எண்ணி சோர்வுறாது செய்கிறது.

இதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். தன்னை மீறிய  நிகழ்வுகள், இழப்புகளின்போது பக்தி கொண்ட மனிதர்கள் அதை இறைவனுக்கு அளித்து எளிதில் அடுத்த கட்டத்திற்கு வருகிறார்கள். பக்தி இல்லாதவர்கள் பழியை தங்கள் மேல் சுமத்திக் கொள்கிறார்கள். பிறர் மேல் சார்த்துகிறார்கள். தன்னையும் வதைத்து பிறரையும் வதைக்கிறார்கள் .மீளமுடியாமல் பெரும் சுழலுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.  சோர்விலும் தத்தளிப்பிலும் வாழ்வை அழிக்கிறார்கள்.

ஆகவே இவ்வாறு வகுத்துரைக்க எந்த தயக்கமும் இல்லாமல் துணிவேன்.  ‘பக்தி இல்லாத உலகியலாளன் துயர் மிக்கவனாகவே இருக்க முடியும்’. ஏனெனில் இந்தப் பிரபஞ்ச இயக்கம் ஒரு உலகியளாளனின் எளிய புரிதலுக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. பிறப்பும் இறப்பும், எய்தலும் இழத்தலும் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதவை. இங்கு நிகழ்வன ஒன்றும் இன்னொன்றும் எவ்வகையிலும் அர்த்தபூர்வமாக இணையாதவை. பக்தி அளிக்கும் உறுதியான விடை உலகியலாளனை  அடிப்படைத் தெளிவொன்றைச் சார்ந்து நிலைகொள்ளச் செய்கிறது.

பக்தி இல்லாமலிருக்க வேண்டும் என்றால் பக்திக்கும் மேலான மெய்ஞானத் தேடலோ ஊழ்கப்பயிற்சியோ இருந்தாகவேண்டும். பக்தி அளிக்கும் விடைகளை நிராகரித்தால் அதற்கு நிகரான முழுமையான தத்துவத்தரிசனம் அந்த விடைகளுக்கு இணையான விளக்கங்களை அளிக்கவேண்டும். அல்லது, வினாக்கள் கரைந்தழியும் ஊழ்கநிலை அமையவேண்டும்.

பக்தி இல்லாதிருக்கும் உலகியலாளன் அதற்கு மாற்றாக அறிவார்ந்த பெரும் தேடல் அல்லது ஊழ்கம் அற்றவன் எனில் வெற்றுக்கூச்சலிடுபவனாக, தன்னையும் பிறரையும் வதைப்பவனாக, உளச்சோர்வின் ஆழங்களுக்கு மிக எளிதில் செல்பவனாக இருப்பான் .இருபத்து நான்கு மணிநேரமும் நாத்திகம் பேசும்  என் நண்பர் ஒருவரை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். அவர் இன்றிருக்கும் உளச்சோர்வு நிலை இவ்வாறு அமையுமென்பதை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே உறுதியாக நான் கணித்துவிட்டிருந்தேன். ஒன்றும் செய்ய இயலாதென்றும் அப்போதே தெளிந்துவிட்டிருந்தேன். கடவுளை அவர் அகற்றிவிட்டார். அங்கே வைக்குமளவுக்கு தத்துவக்கல்வியும் அவருக்கு இருக்கவில்லை.

ஆசாரங்கள் உலகியல் மனிதனுக்கு ஏன் தேவை?ல் நமது உலகியல் வாழ்க்கை என்பது இயற்கையின் நெறி ஒன்றால் வகுக்கப்பட்டது.  அத்தனை உயிர்களும் அந்த நெறியில் ஒழுகுகின்றன. அவை பசிக்கும்போதெல்லாம் உணவு தேடி அலைகின்றன. உணவுண்டபின் ஓய்வெடுக்கின்றன. மீண்டும் இரை தேடித் திரள்கின்றன.  இது இயற்கையின் ஓர் ஒழுங்கு—இது ஓர் அனுஷ்டானம். இந்த ஆசாரத்தால் அவற்றின் வாழ்க்கையும் இயல்பும் வகுக்கப்பட்டிருக்கின்றன.

மனிதன் தேவைப்படும்போது தேவையான உணவு வந்தடையும் எனும் உறுதிப்பாடு கொண்ட வாழ்க்கையை உருவாக்கிவிட்டான்.  இயற்கையின் அந்த ஆசாரத்தை நிறைவு செய்துவிட்டான். அந்த இயற்கை நெறி இல்லையேல் எந்த ஒழுங்குமற்ற ஒரு வாழ்க்கையே  நமக்கு எஞ்சுகிறது. எதையும் எப்போதும் செய்யலாமெனும் நிலை எதையும் ஒழுங்காகச் செய்யாத நிலையாக மாறிவிடுகிறது.

இன்று நமது கல்விநிலையங்கள் ஒரு ஆசாரத்தை வகுத்து நமக்கு அளித்திருக்கின்றன. பத்து மணிக்கு அலுவலகம் சென்றாக வேண்டும், ஐந்து மணிக்கு  அலுவலகம் முடியும் என்பதே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு வகையான அன்றாடக் கட்டமைப்பை அளிக்கிறது என்பதைக் காணுங்கள். கொரோனா காலகட்டத்தில் அந்த கட்டமைப்பு இல்லாதானபோது இரவும் பகலும் மயங்கி, துயிலும் விழிப்பும் மயங்கி ஆழ்ந்த உளச்சோர்வையும் கசப்பையும் அடைந்து சிதைந்த பலருடைய கதைகள் எனக்குத் தெரியும்.

ஏதேனும் ஒருவகை ஆசாரம் இல்லாத மனிதன் உலகியலில் வாழமுடியாது. அப்படி வாழவேண்டுமென்றால் அதற்கு அப்பாற்பட்ட சலியாத அறிவுத்தேடலும் ஊழ்கமும் தேவை. உலகியலாளன் வெவ்வேறு ஆசாரங்களை நம்பி தன் வாழ்க்கையை பகுத்து வகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவேதான் ஐவேளைத் தொழுகையோ, அல்லது வாரமிருமுறை தேவாலயத்திற்குச் செல்வதோ, நாள் தோறும் ஆலயம் தொழுவதோ, அந்திக் கடன்களை நிறைவேற்றுவதோ, அவ்வகையான பிற ஆசாரங்களோ மிக இன்றியமயாதவை என்பேன்.

ஒருவன் உலகியல் சார்ந்த பக்தி, ஆசாரங்கள் சார்ந்த பக்தி இரண்டினூடாகவே தன் விடுதலையை அடைய முடியுமா? அவனுடைய தரம் என்ன என்பதே அதற்கான கேள்வி. அவற்றை இயற்றி ஒருவன் முழுமையாகவே தன்னை நிறைவென உணர்வானெனில் அவனுக்கு அது போதுமானது. அவன் விடுதலை அடைந்தவனே. உலகியல் பக்தி மட்டுமே கொண்டவர்களில் முழுதுறக் கனிந்தவர்களை நான் கண்டிருக்கிறேன். ஆசாரங்களினூடாக ஒழுகிச்சென்று நிறைவடைந்தவர்களையும் கண்டிருக்கிறேன்.

அதற்கு அப்பால் இருப்பது மூன்றாம் நிலையான ஃபாவ பக்தி. ஃபாவம் என்பது தன் வாழ்வைத் தன் உணர்வு நிலையால் வகுத்துக்கொள்வது.  தான் அறிந்த யதார்த்தத்தை முற்றிலுமாக மறுபுனைவு செய்து கொள்வது. அதற்கு சராசரிக்கு மேலான கற்பனை வளமும், சராசரிக்கு  பல மடங்கு மேலான உணர்ச்சித்தீவிரமும் தேவை. அது உங்களிடம் இருக்கிறதென்று மெய்யாகவே தோன்றினால் அதற்கு செல்லலாம். கண்ணனை தன் காதலனாக நினைத்துருகும் ஒரு பக்தை, சிவபெருமானை தன் தந்தையென்றே எண்ணி அருகிருப்பை உணரும் ஒரு பக்தன் ஃபாவ பக்தியில் இருக்கிறான். அது அவனை விடுதலை செய்யும். மெய்ஞானிகள் பலருடைய பாதை அது.

ஆகவே பக்தி எவ்வகையிலும் குறையானதல்ல. வீடுபேறு அளிக்காததும் அல்ல. ஒருவனின் இயல்பு என்ன  என்பது மட்டுமே கேள்வி. உங்கள் இயல்பு பக்திக்குரியதெனில் இம்மூன்று பக்தியில் நீங்கள்  ஏதேனும் ஒன்றில் நிறைவு கொள்ள முடியுமெனில் அதை கைக்கொள்ளுங்கள்.

அதை உங்களுக்கு வழிகாட்டக்கூடியவர் யார்? உங்களுக்கு மெய்யாசிரியர், குரு என ஒருவர் இருந்தால் அவர் உங்களுக்கு ஆணையிடுவார்- இது உன்னது என்று. அவ்வண்ணம் ஒரு மெய்யான குரு அமையாவிடில் உங்கள் அகமே உங்களுக்கு குரு. ஆத்மகுரு என்று அதைக் கூறுவார்கள். உங்கள் அக ஆழம் உங்களை  மிக நன்கறியும் .அது எதைச் சொல்கிறதோ அதைக்கேளுங்கள். ஆணவமோ வெற்றுக்கற்பனைகளோ அந்த அகத்தின் வழிக்காட்டல்களை மறைக்காமலிருக்க நீங்கள் உளம் கொண்டால்  மட்டு போதும்.

அதற்கப்பால் ஒருவனுக்கு அறிவார்ந்த தேடலும், இறுதி வரை அதைக்கொண்டு செல்லும் அறிவுத்திடமும் இருப்பின் மெய்ஞானத்தின் வழியை நாடலாம். மெய்மையின் பொருட்டு பிறிதனைத்தையும் துறக்கும் மனநிலை இருந்தால் தன்னில் ஆழ்ந்து இவ்வுலகை அகற்றும் தன்மை இருந்தால் யோகத்தின் வழியை நாடலாம். யோகம் முறையான ஆசிரியரின்றி அமையலாகாது.

ஞானமார்க்கம் மெய்நூல்களைச் சார்ந்து நிகழ்வேண்டும் ஒருகட்டத்திலேனும் அதற்கு ஆசிரியர் அமையவேண்டும். ஒருவர் உலகியல் பக்தியில் மிக எளிய நிலையிலிருந்தால் அதற்கு அடுத்த ஆசார அனுஷ்டானங்களின் பக்தி நிலை நோக்கி மேலெழ முடியும்.  அதிலிருந்து ஃபாவ பக்தி நோக்கி நகர முடியும். அல்லது ஆசார அனுஷ்டாங்களிலிருந்து அறிவார்ந்த தேடல் நோக்கி செல்ல முடியும். அறிவார்ந்த தேடலிலிருந்து மெய்யுசாவல் நோக்கிச் செல்ல முடியும்

அதே போல மெய்யுசாவல், ஊழ்கம் என்று சென்ற ஒருவர் திரும்பி எளிய ஃபாவ பக்தியை நோக்கி வருவதும் நிகழ்ந்திருக்கிறது. பல மெய்ஞானிகளின் கதையை உதாரணமாக சொல்ல முடியும்

உங்களை நீங்களே உசாவிக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு அப்பால் உங்கள் கேள்விக்கு பதிலொன்றுமில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைபறவை -கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தியை அறிதல்