விகடன் பேட்டி,கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஆனந்தவிகடனில் நீங்கள் பர்வீன் சுல்தானுக்கு அளித்த பேட்டியை பதிவேற்றிய சில நிமிடங்களில் சுடச்சுட பார்த்து முடித்தேன். உண்மையாகவே சூடாகத்தான் இருந்தது. ஆரம்பம் முதலே உங்களை சீண்டும் விதமாக உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே கேள்விகள் இருந்தன.ஆனால் நீங்கள் அதற்கு அளித்த ஒவ்வொரு பதிலும் பரந்த அறிதலையும் உள்விரிவுகளையும் கொண்டிருந்தது.அதுவும் வாஉசி தொல்லியல்துறை என்றதற்கு நீங்கள் அளித்த பதில் கூடுதல் சிறப்பு.

வழக்கமாக எப்போதுமே வரும் வசைச் சொற்கள்தான் கமெண்டில் வந்திருந்தது.நான் சென்னையில் சில ஆண்டுகள் தோழர்களுடன் தொடர்பில் இருந்தேன்.அவர்கள் எதற்கெடுத்தாலும் பார்ப்பனிய திமிர் உலகளாவிய சதித்திட்டம் என்று பேசுவார்கள்.இந்த டீக்கடையில் டீ நல்லா இல்ல என்பதற்கு கூட ஒரு சர்வதேச காரணம் இருக்கு தோழர் என்று சொல்வார்கள் என்று நீங்கள் சொன்னதை நினைத்து ஒரு முறை மௌனமாக புன்னகைத்துக் கொண்டேன்.அடுத்த காணொளியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன்

பிரகதீஷ்.

***

அன்புள்ள ஜெ

பர்வீன் சுல்தானா பேட்டி நிதானமாக இருந்தது. முதல்பகுதியிலுள்ள எல்லா கேள்விகளும் உங்கள் தளத்தையோ, உங்கள் எழுத்துக்களையோ சற்றும் அறிந்துகொள்ளாதவர்கள் முகநூல் வழியாக பொதுவாக உங்களை அறிந்துகொண்டு கேட்பவை. அங்கே அதிகம் கூச்சல்போடுபவர்களும் ஒன்றும் தெரியாதவர்கள்தான்.

கொஞ்சநாள் முன்னாடி ஒரு பார்ட்டியில் ஒருவன் எல்லாம் தெரிந்தவன் போல ஜெயமோகனைத்தான் தெரியுமே, அந்தாள்… என்றெல்லாம் பேசினான். நான் அவனிடம் பேச்சுக்கொடுத்தேன். அவன் ஒன்றுமே படிக்கவில்லை, விஷயமே தெரியாது, பூச்சுதான் என தெரிந்தே பேசினேன். சட்டென்று ஒரு தார்மீகக் கோப டிராமா போட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அந்த பேட்டிக்குக் கீழே வந்த எதிர்வினைகளைப் பார்த்தால் அந்தப் பேட்டியிலுள்ள கேள்விகள் எவருக்கானவை என புரிந்தது. அந்த பதில்களைக் கேட்டு அவர்களில் நூறுபேர் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தால்கூட நல்லதுதான்

அமர்

அன்புள்ள ஜெ

விகடன் பேட்டிக்குக் கீழே இருக்கும் பதிவுகளைப் பார்த்தேன். தமிழ்நாட்டில் இன்றைக்கு ஓர் உண்மையான அறிவுஜீவிக்கு இருக்கவேண்டிய துணிவு இந்த அறியாமையின் மாஸ் ஹிஸ்டீரியாவை எதிர்கொள்வதுதான். உண்மையான கலகம் இதற்கு எதிராக உண்மையைச் சொல்வதுதான். ஃபூக்கோ என்பார்கள், தெரிதா என்பார்கள், நீட்சே என்பார்கள், ஆனால் இந்த கும்பலைப் பார்த்ததும் நம்மூர் சூடோ அறிவுஜீவிகள் பம்மிவிடுவார்கள்.

ஆனந்த்

முந்தைய கட்டுரையானைடாக்டரும் உயர்நீதிமன்ற ஆணையும்
அடுத்த கட்டுரைஅரசியின் விழா- கடிதங்கள்