என் குறைபாடுகள்

அன்பான ஆசானுக்கு.

தங்கள் இணைய தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். நான் பெரிய வாசகன் அல்ல, இருப்பினும் உங்கள் அனைத்து கருத்துகளும் எனக்கு மிகவும்  பிடிக்கும். உங்களின் சில நாவல்களையும், குறு நாவல்களையும் வெண்முரசு முழுவதையும் படித்து உள்ளேன். என் ஆதர்சமான ஆளுமை நீங்கள்.

சமீபத்தில் படித்த குமரித்துறைவி இப்பொழுது எப்போதும் மனதில் மகிழ்ச்சி தருகின்றது. நன்றி

சிறு ஐயம்:

மிகப்பெரிய ஆளுமைகளின் நிறைகளையும் குறைகளையும் துல்லியமாக வகுத்து அளிக்கும் நீங்கள், உங்களின் குறைகளாக என்னென்ன உள்ளன என்று உங்களை எவ்வாறு விமர்சனம் செய்வீர்கள்?

அவ்வாறு குறைகள் இருந்தால் நம்மையே நம்மால் (என்னையே என்னால்) அவ்வாறு அவதானிக்க முடியுமா? அல்லது அவ்வாறு எதிர்மறையாக சிந்திக்க கூடாதா? பெரிய ஆளுமைகள் தங்களைத் தாங்களே விமர்சனம் செய்து ஏதாவது புத்தகம் அல்லது கட்டுரைகள் எழுதியது உண்டா.

ஏதாவது தவறாக கேட்டிருப்பின் மன்னியுங்கள்.

நன்றி

விக்னேஷ் குமார்

அன்புள்ள விக்னேஷ்,

என்னுடைய குறைகள் என்ன என்று கேட்கும்போது எனக்குத்தெரிந்த என்னுடைய குறைகள் என்ன என்றுதான் அது பொருள்படுகிறது. தெரியாமல் இருக்கும் குறைகளை பிறர் தான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பிறர் என்னைப்பற்றி சொல்வதிலிருந்து நானே எனக்கென உணர்ந்து வைத்திருக்கும் குறைகள்  என்ன என்று வேண்டுமென்றால் இப்படிப் பட்டியலிடலாம்.

முதன்மையாக ஒருவகையான தன்னலம். The Selfish Gene என்று ரிச்சர்ட் டாக்கின்ஸின் நூலின் தலைப்பு ஒன்று உண்டு. ஒரு ஜீன் தன்னை பிறப்பிக்கவும், நிலைநிறுத்திக்கொள்ளவும், முடிந்தவரை பெருக்கிக்கொள்ளவும் இடைவிடாது  முயன்றுகொண்டிருக்கிறது. அதனுடைய மொத்த இருப்பே அந்தத் தன்னலம் சார்ந்ததுதான். அதற்கு அளிக்கப்பட்டுள்ள முதன்மைக்கட்டளையை அது வாழ்ந்து நிறைவேற்றுகிறது.

அதுபோன்று எல்லாவிதமான படைப்பூக்க சக்திக்கும் ஆவேசமான ஒரு தன்னலம் உண்டு. தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் வெளிப்படுத்திக்கொள்ளவும் கொள்ளும் வெறி என்று அதைச் சொல்லலாம். அதன்பொருட்டு எந்தத் தடையையுயும் உடைக்கவும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவும் அந்த சக்தி முயல்கிறது.

கிட்டத்தட்ட அது தீ போலத்தான். தொடும் அனைத்தையுமே பற்றி இழுத்து உணவாக்கிக்கொண்டு தன்னைப் பெருக்கிக்கொண்டே இருக்கிறது. அருகிலுள்ள அனைத்தையும் நோக்கி எழுந்து தவித்தபடியே உள்ளது. உடலே நாவாக துள்ளுகிறது. அந்த விசையால் உருவாகும் அழிவுகள் அதற்கு ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. பிறவற்றின்  இருப்பு கூட பொருட்டாகத் தெரிவதில்லை.

எல்லா உயிர்களுக்கும் அந்த உயிர்விசை உண்டு. சிறுகுழந்தைகளில் நாம் காண்பது அதை மட்டுமே. ஆனால் சாதாரண  உயிரிகளைப் பொறுத்தவரை ஒன்றின் இருப்பு என்பது அதனுடைய கூட்டு இருப்பின் ஒரு பகுதிதான். எறும்பாயினும் மனிதனாயினும் அத்திரளின் ஒரு பகுதியாகவே அதன் இருப்பு அடையாளமாகிறது. ஆகவே அதன் தனிவாழ்வு என்பது பொதுநலம் சார்ந்ததாக இருக்கிறது.

எளிய உயிர்களைப் பொறுத்தவரை திரளின் நெறிகளை, ஆணைகளை கடைப்பிடித்தாலொழிய அவற்றால் நிலைகொள்ளவும் பரவவும் இயலாதென்பதனால் அவற்றின் உயிர்வாழும் விசை தங்கள் திரளிலுள்ள உயிர்வாழும் விசைகளுடன் இணைந்து ஒற்றைப்பெருவிசையாக வெளிப்படுகிறது. எறும்புகள் முதல் மனிதர்கள் வரை கூட்டாக வெளிப்படும் போராடும் வெறி, வெல்லும் வேகம் அதன் விளைவே. தன்னியல்பாகவே உயிர்த்தியாகங்கள் அத்திரளில் நிகழ்கின்றன.

சமூகங்கள் தங்கள் திரள் அடையாளத்தை முன்னிறுத்துகின்றன. அதன்பொருட்டே நெறிகளை, ஒழுக்கங்களை, விழுமியங்களை கட்டமைத்து உணர்ச்சிகரமாக நிலைநிறுத்துகின்றன. தியாகம்தான் எந்த சமூகத்திலும் உச்சகட்ட விழுமியமாகச் சொல்லப்படுகிறது. ஒத்திசைதல் அடுத்தபடியாக. ‘என்பும் உரியர் பிறர்க்கு’ ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என இரண்டு விழுமியங்களையும் எல்லா மரபுகளும் வலியுறுத்துகின்றன.

இச்சொற்களத்தில் தன்னலம் என்று உத்தேசிக்கப்படுவது அந்த திரளிருப்புக்கு எதிராகத் தன்னை மட்டுமே கொண்டு செல்லும் தன்மை. அது சமூகநோக்கில் அழிவுத்தன்மை கொண்டது. எறும்பாயினும் மனிதனாயினும். அந்த எறும்புக்கும் அந்த மனிதனுக்கும் மட்டும் அல்ல, அந்த சமூகத்துக்கும் அது எதிரானது. அத்தகைய தன்னலத்தை அந்தச் சமூகம் கூட்டாக மறுக்கும், தன்னலம் கொண்டவனை அழிக்கும்.

எறும்புகள் தேனீக்கள் முரண்படுவனவற்றைக் கொன்று வெளியே வீசுவதைப் பார்க்கலாம். பழங்குடிகள் ஒவ்வாதவனை உடனே ஒழித்துவிடுகிறார்கள். நாகரிகச் சமூகங்களில் கூட அத்தகைய தன்னலம் கொண்டவர்கள் மீது மொத்த சமூகத்தின் முழுஎதிர்ப்பும் வந்தமைகிறது. குற்றவாளிகள், மிகைநடத்தை கொண்டவர்கள் (Eccentrics) தனியர்கள்.

எழுத்தாளனும் அவர்களில் ஒருவனே. அவனுடைய படைப்புசக்தி அவனை தன்னலம் கொண்டவனாக ஆக்குகிறது. தன்னலம் அவனை தனியனாக ஆக்குகிறது. தனியனாக அவன் மொத்தச் சமூகத்தையும் எதிர்கொள்கையில் ஒன்று ஆற்றல் மிக்கவனாக ஆகிறான், அல்லது சிதைவுகொண்டு கசப்பும் தன்னிரக்கமும் நிறைந்தவனாக எஞ்சுகிறான்.

எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் திரளில் ஒன்றென முழுதமையும் தன்மை இருப்பதில்லை. தன்னைநோக்கி திரும்பிக்கொண்ட தன்மையில் இருந்தே கலையும் இலக்கியமும் உருவாகிறது. அன்றுவரை வந்தடைந்த ஒன்றில் இருந்து அவன் ஓர் அடி முன்னெடுத்து வைத்தாகவேண்டும். அனைவரும் நம்புகிற, சொல்கிற தளத்தில் இருந்து சற்றேனும் வெளியேறியாக வேண்டும். ஆகவே அவன் தனித்தவனாகிறான். தனித்தவனை சமூகம் முரண்கொண்டவனாகப் பார்க்கிறது. அவன்மேல் எரிச்சலும் ஒவ்வாமையும் கொள்கிறது.

எழுத்தாளனாக நான் தன்னலம் கொண்டவனா என்று கேட்டால் ஆம் என்றுதான் நான் சொல்வேன். எந்நிலையிலும் எழுதுவது, வெளிப்படுவது மட்டுமே எனக்கு முதன்மையானது. அதில் மட்டுமே என் இன்பமும்  இருத்தலின் பொருளும் உள்ளது. ஆகவே என் சூழலை முழுக்க முழுக்க எனக்காகப் பயன்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பயன்படாதவற்றின் மேல் அக்கறை அற்றிருக்கிறேன்.

படைப்பின்போது உச்சமும் அதன் இடைவெளிகளில் எழும் கொந்தளிப்பும் என் நடத்தையை தீர்மானிப்பவையாக இருந்துள்ளன. இடைவெளிகளில் உடல் தீப்பற்றி எரிபவன் போல முட்டி மோதி அலைக்கழிந்திருக்கிறேன். குடி போன்ற பழக்கம் இல்லாதவன் என்பதால் அந்த எரிதலின் முழு வலியையும் அனுபவித்தேன். ஆனால் குடி இல்லாததனால்தான் மீண்டும் படைப்பூக்கத்துடன் எழ முடிந்தது.

முடிந்தவரை என் தன்னலத்தை கட்டுப்படுத்தி, என் கொந்தளிப்புகளை எனக்குள் நிறுத்திக்கொண்டு, அவை பிறருடைய வாழ்க்கையை அழிக்காமலிருக்க முயல்கிறேன். அந்தத் தொடர்போராட்டம் என் வாழ்க்கையின் திசைகளை தீர்மானிக்கும் விசைகளில் ஒன்று.

இதுநாள் வரை பொருளியல் சார்ந்து பிறரை உறிஞ்சி என்னை படைப்பாளனாக நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழல் எனக்கு வரவில்லை. நான் நாடோடியாக அலைந்த காலத்திலும் என் மொழியறிவு எனக்கு கையில் பணம் குறையாமல் பார்த்துக்கொண்டது. அன்றுமின்றும் பணத்தை எண்ணாமல் அலைந்ததுண்டு. பணம் இல்லாத நிலையே இருந்ததில்லை.

எப்போதும் எனக்கு அடிப்படையான பொருளியல் வாய்ப்புகள் அமைந்தன. அதன்பொருட்டே தொலைபேசித் துறைக்கும், சினிமாவுக்கும் நன்றியுடையவனாக இருக்கிறேன். இவை அமையாவிட்டால் நான் திருடியோ, கொள்ளையடித்தோ எழுதியிருப்பேன். கைநீட்டியிருப்பேன். எனக்கு எழுதுவதே முதன்மையானது, அதன்பொருட்டு செய்யப்படும் எதுவுமே சரிதான்.

பொருளியல் சார்ந்து எவரிடமும் பெற்றுக்கொண்டதில்லை. நேர் மாறாக என் இருபது  வயது முதல் இன்றுவரை கொடுப்பவனாகவே இருந்து வந்துள்ளேன். எல்லா காலத்திலும் என் வருவாயில் ஒரு பெரும்பகுதி கொடையாகச் சென்றிருக்கிறது. ஆனால் இரக்கத்தால் கொடுக்கவில்லை, பெருமதிப்பால்தான் கொடுத்திருக்கிறேன். என்னைப்போலவே படைப்பூக்கம் கொண்டவர்கள் உலகை எதிர்கொள்ள முடியாமலிருக்கும் சூழலிலேயே கொடுத்திருக்கிறேன். அது ஒருவகை அடையாளம் காணுதல் மட்டுமே. இன்று அக்கொடை ஆண்டுதோறும் லட்சங்களை எட்டிவிட்டிருக்கிறது. ஆனால் நான் கண்ட ஒன்றுண்டு, கொடுக்கக் கொடுக்க என் கையில் பணம் பெருகியது.

என்னுடைய உணர்வுநிலை மாற்றங்கள் ஊகிக்க முடியாதவை.  மிக விரைவிலேயே உச்ச நிலைகளுக்குப்போகும் விசை, வெகு விரைவாக பெரிய கற்பனைகளை உருவாக்கிக்கொண்டு உணர்வுகளை அதற்கேற்ப பெருக்கிக்கொள்ளும் தன்மை எனக்குண்டு. முதன்மையாக இவையே என் எதிர்மறைக் குணங்கள்.

இவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டே இருக்கிறேன். இந்த கிறுக்குகளை எல்லாம் கூடுமானவரை எழுத்துக்குள் வைத்துக் கொள்கிறேன். என்னை நான் கைவிட்டுவிடும் தருணங்கள், எல்லைமீறும் சொல்லோ செயலோ அமைந்தால் அகங்காரம் நோக்காது மன்னிப்புகோரி விடுகிறேன். அக்கணமே அதைக் கடந்து மேலே செல்ல அது மிக உதவுகிறது என கண்டடைந்துள்ளேன்.

இன்று எனக்கு அறுபதாண்டு நிறைவு. எண்ணிப்பார்க்கையில் இதுவரை இலக்கியச்சூழலில் எவரிடமும் தனிப்பட்ட முறையில் கடுமையான முறையில் நடந்துகொண்டதில்லை, கடுஞ்சொற்களைச் சொன்னதில்லை என்ற நிறைவு எஞ்சுகிறது. ஒரே ஒருமுறை கறாராக ஒருவரிடம் ஓர் அவையில் இருந்து அகலும்படிச் சொன்னேன். அது தவிர்க்கமுடியாதது என்று இப்போதும் உணர்கிறேன். அவர் அதை நிரூபிக்கும்படித்தான் மேலும் நடந்துகொண்டார்.

இலக்கியத்தில் கறாரான விமர்சனங்களை முன்வைத்ததுண்டு – அது ஓர் அறிவுச்செயல்பாடு என நினைக்கிறேன். பலமுறை சொல்மிஞ்சியதுண்டு. அது என் பெரும் குறைபாடு என்றே எண்ணுகிறேன். விமர்சனங்களில் கடுமை என்பது தேவையற்றது என்று இன்று தோன்றுகிறது. ஆயினும் அவ்வப்போது கடுமையாகக் கூறும்படியும் நேர்கிறது. அதை முற்றாக நிறுத்திவிட்டு கடக்கவேண்டும் என நினைக்கிறேன்.

நான் மிகையாக நடந்துகொண்டதெல்லாம் எனக்கு அணுக்கமான குடும்பத்தினரிடமும், குடும்பத்துக்கு வெளியே லக்ஷ்மி மணிவண்ணனிடமும் மட்டுமே. அவர்களுடன் என் உறவு வேறொரு தளத்தில் நிகழ்வது. அவர்களிடம் அதை அன்பால், கடமையால் ஈடுகட்டியிருக்கிறேன் என நினைக்கிறேன். அதை மீறியும் அவர்களிடம் என்மேல் கொஞ்சம் கசப்பு எஞ்சக்கூடும் என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை.

இந்த நிலையின்மை, கொந்தளிப்பு அனைத்துமே நான் இலக்கியவாதி என்பதுடன் இணைந்தவை. அவற்றை என்னால் முழுக்கச் சீர் செய்துவிட முடியாது. ஏனெனில் சீர் செய்ய வேண்டுமென்றால் எழுதுவதை நிறுத்த வேண்டும். நிறுத்தினால் மட்டும் போதாது, எழுத்தாளன் அல்லாமல் ஆகவேண்டும். அது இனிமேல் சாத்தியமில்லை. எழுத்தாளனாக நான் ‘ஆகவில்லை’ – அவ்வாறு பிறந்திருக்கிறேன். என்றுமே வேறொன்றாக இருந்ததில்லை. ஆகவே சாகும்வரை அவ்வாறுதான் இருக்க இயலுமென்று தோன்றுகிறது.

எழுத்தாளர்கள் பொதுவாக பிறர்மேல் ஒவ்வாமை கொண்டவர்கள், தன்னை மையமாக்கியே எப்போதும் எண்ணுபவர்கள் என்பதனால் அது இயல்பானதே. நான் தனிமையை நாடுபவன், பெரும்பாலும் தனிமையில் இருப்பவன் என்றாலும் இன்னொரு பக்கம் செழுங்கிளை சூழவே எப்போதும் இருந்திருக்கிறேன். அதன்பொருட்டு என்னால் இயன்றவரை சமரசம் செய்துகொண்டிருக்கிறேன். என்னைப்போல இத்தனை நண்பர்கள் புடைசூழ இருக்கும்  இன்னொரு எழுத்தாளன் தமிழில் இருந்திருக்க மாட்டான் என்றே சொல்வேன். எனக்கு முன் இவ்வாறு இருந்தவர் சுந்தர ராமசாமி.

எனக்கு ஊர் தோறும் நண்பர்கள் இருக்கிறார்கள், நலம் நாடுவோர் இருக்கிறார்கள். சென்ற இடமெல்லாம் பெருந்திரளென என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள், எனக்கு உகந்தவர்கள். என் ஒன்றாம் வகுப்பில் அருகிலிருந்த படித்த நண்பர்கள் இன்றும் நண்பர்களே. மறைந்தவர்கள் தவிர. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை இயல்பும் ஒவ்வொரு வாழ்க்கை முறையும் கொண்டவர்கள். அவர்களுடன் இணைந்து இது வரை வந்திருக்கிறேன். பல நட்புகள் அரைநூற்றாண்டை நெருங்கிவிட்டன. முப்பது நாற்பது ஆண்டுக்கால நட்புகள் இன்றும் அதே நெருக்கத்துடன் தொடர்கின்றன.

இத்தனை ஆண்டுகளில் நானே தேவையில்லை என்று விலக்கி வைத்த மிகச்சிலரே இருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆறே ஆறுபேர். அணுக்கமானவர்கள் என்று சொல்லத்தக்க கிட்டத்தட்ட ஆயிரம் நட்புகளில் ஆறுபேர் என்பது ஒப்புநோக்க மிகக்குறைவு. அவ்வண்ணம் விலக்கும் முடிவை மிகமிக யோசித்து, மிகமிக வருந்திய பின்னரே எடுத்திருக்கிறேன்.

தங்களுடைய செயல்களால் ஏதோ ஒரு வகையில் என்னை ஆன்மிகமாக கீழிழுக்கிறார்கள் என உணர்ந்தவர்களை மட்டுமே அவ்வண்ணம் விலக்கியிருக்கிறேன். அதன் வழியாக என்னுடைய படைப்பியக்கத்திற்கு தொந்தரவாகிறார்கள் என்று நான் ஐயமற எண்ணியவர்களை மட்டுமே அவ்வண்ணம் விலக்கியிருக்கிறேன். எழுத்தாளனாக அதைச் செய்யாமலிருக்கவே முடியாது.

மற்றபடி பிறரது அத்தனை ஆளுமைக் குறைபாடுகளையும், பிழைகளையும் பிறரிடம் பொறுத்துக் கொள்ளவே முயல்கிறேன். அதன் பொருட்டு என்னுடனிருக்கும் நண்பர்கள் பலர் என்னைக் குறை சொல்வதும் உண்டு. நான் விலக்கியவர்களைப் பற்றி எண்ணுகையில் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வண்ணம் உள்ளுணர்வால் எடுத்த முடிவு எத்தனை சரியானது என அவர்கள் தொடர்ந்த செயல்பாடுகளால் நிரூபித்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

அது இயற்கையின் விசைகளில் ஒன்று. படைப்புத்திறன் செயல்படும்போது அதற்கெதிரான அனைத்து ஆற்றல்களையும் இயற்கை கொண்டு வந்து எதிரே நிறுத்துகிறது. அத்தனை சபலங்களையும் கண்முன் காட்டுகிறது. சற்றே தோற்றுவிட்டால்,  ஏதாவது ஒன்றில் சற்று சமரசம் செய்து கொண்டால், ஒரு சிறு பலவீனம் வெளிப்பட்டால் அந்த படைப்பியக்கம் முற்றாக அழியும்.

ஏனென்றால் இது ஒரு போர். ஒரு படைப்புசக்தி அதற்கு எதிராக உள்ள நிலைத்த அமைப்புக்கள் அனைத்துடனும் தனித்து நின்று போரிடுகிறது. படைப்பு என்பது முன்னோக்கிய இயக்கம். அதில் தகுதியுடையது மட்டும் வெளிப்பட்டால் போதுமென இயற்கை எண்ணுகிறது. விந்துவில் ஒவ்வொரு உயிர்த்துளிக்கும் எதிராக இயற்கையின் பேருரு தடைச்சுவர் என நின்றிருக்கிறது. வென்று முன்செல்வதே உருவம் கொள்கிறது

தொடங்கிய படைப்புவிசைகளில் பலவகையிலும் தொடக்கநிலையிலேயே அழிந்துவிட்ட,  நிகழாமல் போய்விட்ட பல்லாயிரத்தில் ஏதோ ஒன்றுதான் வென்று முன்சென்று படைப்பாகி வென்று நம்மை வந்தடைந்துள்ளது. ஆயிரம் சிலப்பதிகார முயற்சிகளில் ஒன்றுதான் சிலப்பதிகாரம். நம்மைச் சூழ்ந்து கிடப்பது இலக்கு எய்தாமல் முறிந்த கணைகளின் பெருங்குப்பை. அவற்றை எய்து இலக்குபிழைத்தவர்களின் ஆற்றாமையும், கோபமும், வஞ்சமும், புலம்பலும்.

ஆகவே என்னுடைய குறைபாடுகளென நான் உணரும் எதையுமே அவை என் படைப்பியக்கத்துடன் தொடர்புடையவை எனில் எனக்கு நானே மன்னித்துக்கொள்கிறேன். என்னைச் சூழ்ந்திருப்பவர்களிடம் எனது படைப்புகளைக்காட்டி இதன் பொருட்டு மன்னித்துவிடுங்கள் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கொண்டிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஒருதுளி காடு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேலும் ஒரு நாள்